2 Nov 2019

காக்காப்புள்ள அளந்த கதை!




செய்யு - 256
            "யத்தாம்! கதை தெரியுங்களா?"ங்றாரு காக்காப்புள்ள.
            அதென்ன காக்காப்புள்ள? நாட்டுல எத்தனையோ பேரு இருக்க இப்படி ஒரு பேரா அப்பிடின்னு நெனைக்குறீங்களா? ஆளு பாக்குறதுக்குக் கருப்பா காக்கா மாதிரி இருப்பாருங்றதால மட்டும் அவருக்கு அந்தப் பேரு வரல. வீட்டுல சோத்த சமைச்சா போதும் அதெ முன்னவங்களுக்குப் படையலு போட்டுட்டு காக்காவ தின்ன வெச்சிட்டுத்தாம் சோத்துல கை வைப்பாரு நம்ம காக்காப்புள்ள. வழக்கமா இந்த மாதிரி காரியங்கள வூட்டுல இருக்குற பொண்டுகத்தான் செய்யுங்க. படையல் போட்ட சாதத்துல ஒரு கையளவு எடுத்துக்கிட்டு, கொல்லைப்பக்கமா போயி, "கா...கா...கா..."ன்னு குரலு கொடுத்து காக்கவ வரவழைச்சு அது ஒரு வாயி திங்றத பாத்துட்டுத்தாம் பொண்டக வூட்டுக்குள்ள வந்து மத்தவங்களுக்கு இலையை விரிச்சி சோத்தைப் போடுங்க.
            காக்காப் புள்ள வீட்டுல இது அப்படியே தலைகீழா நடக்கும். படையல போட்டுட்டு காக்காப்புள்ளத்தாம் சோத்த உருட்டிக் கவளமா எடுத்துகிட்டு கொல்லைப்பக்கம் போவாம அதுக்கு மாறா தெருப்பக்கமா வந்து, "கா...கா...கா..."ன்னு கத்திச சோத்துருண்டையை வெச்சி காக்கவ தின்ன வெச்சிட்டு உள்ள போயி சாப்புட ஆரம்பிப்பாரு. அதாலயே கருப்பையாங்ற அவரு காக்காப்புள்ளயா ஆயிட்டாரு. யாரும் காக்காபுள்ளன்னு முகத்துக்கு நேரா சொன்னாலும் கோவிச்சிக்க மாட்டாரு. காலப்போக்குல அவருக்கே கருப்பையா புள்ளங்ற பேரு மறந்து போயி இப்ப காக்காப்புள்ளதாங்ற பேருதாம் மனசுல ஞாபவத்துல இருக்குன்னா பாத்துக்குங்களேன்.
            "யென்ன யத்தாம்! கதெ தெரியுங்களா?ன்னு கேட்டா ஆன்னு வாயைப் பொளந்துகிட்டு, சொல்லுடாம்பின்னு நாக்க ஏழு முழத்துக்குத் தொங்கப் போட்டுகிட்டு உக்காந்துடுவீங்க. இன்னிக்கு ஒண்ணுமே சொரத்தே இல்லையே! யம்பீ வந்த சோக்குல இருக்கீங்கன்னு நெனைக்குறேம். நாம்ம வேற குறுக்கே பூந்து இஞ்ஞ உக்கார வெச்சிட்டேமோ?" அப்பிடிங்கிறாரு காக்காப்புள்ள.
            "கதெ தெரியுங்களான்னு கேட்டா, சொல்லாம வுட மாட்டீயேன்னு நெனச்சா, நீயி புதுக் கதையால்ல புடிக்குறே. சொல்லு கேப்பேம்!"ங்றாரு பெரியவரு இப்பத்தாம் கொஞ்சம் சொரத்து வந்தவரு போல.
            "தென்னராயநல்லூருல டொய்லரு க‍டெ வெச்சிருக்கான்னே மருதையேம். துணி தைக்கிறங பேர்ல முன்னையும் பின்னையுமா தைச்சி ஊருல இருக்குறவனையெல்லாம் கோமாளி ஆக்கிட்டுத் திரியுறான்னே அந்தப் பயெ அவ்வேம் கதைதாம்!"ங்றாரு காக்காப்புள்ள.
            "அவ்வேங் கதையில்லாம் நல்லாத்தாம் இருக்கு! நம்ம கதைத்தாம்டாம்பீ சரியில்லே!"ங்றாரு பெரியவரு.
            "ம்ஹூம்! ன்னா நல்லா யிருக்கு? அவ்வேம் போண்டாட்டி சொந்த சனத்து எழவுக்குப் போறேன்னு கட்டவண்டிக் கட்டிகிட்டுப் போயி எதுத்தாப்புல வந்த பஸ்ஸூகாரங் வுட்டு வண்டி மாடுக ரெண்டும் போயிச் சேந்து இதுவும் போயிச் சேந்துச்சுல்ல!"ங்றாரு காக்காப்புள்ள.
            "அத்து நல்ல பொம்பளடாம்பீ! அதுக்கு அப்டி ஒரு கதி வரக் கூடாதுடாம்பீ!"ங்றாரு பெரியவரு.
            "இப்பத்தாம் யத்தாம்! கதைக்குள்ள வார்றீங்க! யத்தானுக்கு இப்பத்தாம் மனசு சரியா வந்திருக்குப் போலருக்கு! அத்து நல்ல பொம்பளத்தாம் யத்தாம்! நம்ம டொய்லரு ன்னா பண்ணாங்?"ங்றாரு காக்காபுள்ள.
            "ஆரம்பிச்சிட்டீயா?"ங்றாரு பெரியவரு.
            "ஒலகமே அதுலத்தாம் ஓடிட்டு இருக்கு! இவ்வேம் ன்னா பண்ணாம்? பொண்டாட்டி சமாதியில ஈர மண்ணு காயுறதுக்குள்ள கரும்பு வெட்ட வந்த பொம்பளய கரெக்ட் பண்ணாம்ல. அத்து ஞாயமாத்தாம்? அது செரி! ஒங்க யம்பீக்குக் கலியாணம் ஆயிட்டா இல்லியா? அத்த தெரியாம பச்சைப் பச்சையா பேசிட்டு இருக்கேம்? ஆவலன்னாலும் ன்னா? தெரிஞ்சிக்க வேண்டிய வயசுத்தாம் வந்துட்டுல்ல. அப்ப பேசலாம் யத்தாம்!" அப்பிடின்னு ஒரு சந்தேகத்த கெளப்பி விட்டுக்கிட்டு அவரே பதிலையும் சொல்லிக்கிறாரு. பெரியவரோட உம் கொட்டுறதையெல்லாம் எதிர்பார்க்காம இப்ப அவரே கதையைத் தொடறாரு.

            "கரும்புக் காட்டுல பொண்ண பிடிச்சான்ல டொய்லரு. அத்து ஓடிப் போயிட்டு யத்தாம்!"ன்னு சொல்லிட்டு பகபகன்னு சிரிக்கிறாரு காக்காப்புள்ள. சின்னவரும் அதைக் கேட்டுட்டுச் சிரிக்கிறாரு.
            "யாம்டாம்பீ! இத்துச் சிரிக்கிற வெசயமாடா?"ங்றாரு பெரியவரு.
            "அத்து எப்படித்தாம் சிரிக்காம இருக்குறது? எட்டு ஒம்போது வயசுல புள்ள ஒருத்தன வெச்சிகிட்டு அவ்வேம் அப்டிப் பண்ணலாமாத்தாம்?"ங்றாரு காக்காப்புள்ள.
            "டொய்லரு ன்னா பண்ணாம்?"ங்றாரு பெரியவரு.
            "அதெ ஏம்த்தாம் கேக்கறீங்க? பயெ நம்மகிட்ட பஞ்சாயத்துக்கு வந்து நிப்பான்னு பாத்தா... எங்கிருந்தாலும் வாழ்கன்னு இவனெ போயி இழுத்துகிட்டு ஓடுன பயலோடு சேத்து வெச்சிட்டு வந்திட்டாம் யத்தாம்! நமக்கு ஒரு சொலி யில்லாம போயிடுச்சுல்ல யத்தாம்! இப்டி ஊருல ஆளாளுக்குப் பண்ணிட்டுத் திரிஞ்சா ஊருல நாம்ம ஏதுக்கு யத்தாம் பெரிய மனுஷம், மெராசுன்னு இருந்துகிட்டு? சொல்லுங்க யத்தாம்!"ங்றாரு காக்காப்புள்ள.
            "அதுல ஒனக்கு ன்னாடாம்பீ வந்துக் கெடக்கு? அவ்வேம் பெரச்சனைய அவ்வனெ முடிச்சிகிட்டாம்! நமக்கு ஒரு வேலை மிச்சம்னு போ!"ங்றாரு பெரியவரு.
            "அதில்லாத்தாம்! இப்பெ அடுத்ததா ஒருத்திக்கு கணக்குப் பண்ணிட்டு இருக்காம் யத்தாம் டொய்லரு! வாழ்ந்தா அவனெப் போல வாழணும்த்தாம்! நாமள்லாம் பண்ணாடைக யத்தாம்!"ங்றாரு காக்காப்புள்ள.
            "ஏம்டாம்பீ! தங்காச்சி வூட்டுக்குள்ளத்தாம் இருக்கு? கூப்புட்டு வுடு. நாம்ம சொல்லி வுடுறேம், வூட்டக்காரனுக்கு ஒரு நல்ல பொண்ணா பாத்து கல்யாணத்த பண்ணி வையுன்னு!"ங்றாரு பெரியவரு. இப்போ பெரியவரு சொல்லிட்டுப் பகபகன்னு சிரிக்கிறாரு.
            "பாத்தீங்களா யத்தாம்! இதுக்குத்தாம் இந்த மாரி கதெயல்லாம் இஞ்ஞ வாணாம். கொளத்தாங்கரெ பக்கம் வாரென்னு சொன்னேம். நீஞ்ஞ சாமர்த்தியமா வாணாம்னு சொல்லிப்புட்டு இஞ்ஞ வெச்சு பேச வெச்சு நமக்கு வேட்டு வெச்சிட்டுப் போவ பாக்குறீயேளே? கெளம்புங்க யத்தாம் மொதல்ல. அடடா! யம்பீய வேற விருந்தாடியா மொத மொதல்லா அழச்சிட்டு வந்திருக்கீங்க. சித்தே இருங்க. உள்ள போயி அவ்வேகிட்ட டீத்தண்ணிய போட்டுட்டு வாரச் சொல்றேம்!"ங்றாரு காக்காப்புள்ள.
            "யாண்டாம்பீ! அதெல்லாம் வூட்டுல ஆயாச்சி! நாம்ம யிப்போ கெளம்புறேம். அஞ்ஞ புகழூர்லேர்ந்து அண்ணனப் பாக்கணும்னு நடந்தே வந்திருக்காம்! களைப்பா இருப்பாம். போயி நேரத்தோட ராச்சாப்பாட்ட போட்டு செரம பரிகாரம் பண்ண வைக்கிறேம்!"ங்றாரு பெரியவரு.
            "யப்பே டீத்தண்ணி வாணாங்றீங்களா?"ங்றாரு காக்காப்புள்ள.
            "கோவிச்சுக்காதேடாம்பீ! காத்தால காட்டுக்குப் போயிட்டு மொத வேலையா வர்றேம்டாம்பீ! போட்டு வெச்சிருக்க சொல்லு!"ங்றாரு பெரியவரு.
            "அத்தும் சரித்தாம் யத்தாம்! செரி கெளம்புங்க! இதுக்கு மேல உக்கார வைக்கக் கூடாது"ங்றாரு காக்காப்புள்ள.
            பெரியவரும், சின்னவரும் காக்காப்புள்ள வீட்டிலேர்ந்து கெளம்பி வீட்டுப்பக்கம் வர்றாங்க. அப்படி வர்றப்பவே தம்புசெட்டி வூட்டுப்பக்கம் பாக்குறாரு பெரியவரு. அவரு வேற பாத்துக் கூப்புட்டார்ன்னா இன்னும் ஒரு மணி நேரம் போயிடுங்றது அவருக்குத் தெரியுது. அவரு வூட்டுல ராச்சாப்பாடெல்லாம் முடிஞ்சி படுத்திட்ட மாதிரி தெரியுது. கிராமம்னே அப்போ அப்படித்தானே. ஏழு ஏழரைக்கெல்லாம் ராச்சாப்பாட்ட முடிச்சி எல்லாம் கண்ணு அசந்திடுங்க. பெரியவரு வூடு மட்டுந்தாம் இதுல வித்தியாசமானது. அவரு வூட்டுல தூங்க எப்டியும் ராவுல பத்து பதினொண்ணுன்னு ஆயிடும். அது வரைக்கும் மாடு கண்ணுகள ஒரு மேம்பார்வைப் பாத்துட்டு, உளுந்து, பயிறு, நெல்லுன்னு கல்லு கருக்கா இருக்குறதையெல்லாம் பாத்து பங்கிடு பண்ணிட்டு ராத்திரி எட்டு மணி வாக்குல செயா யத்தை ஒலைய வெச்சுதுன்னா அத்து சமைச்சி சோத்தப் போடுறதுக்கு எப்படியும் ஒம்போது மணிக்கு மேல ஆயிடும்.
            சாப்பாட்ட தட்டுலயோ, எலையிலயோ போட்டுகிட்டு பெரியவரு பேச ஆரம்பிச்சார்ன்னா ஒரு மணி நேரத்துக்கு ஒன்றரை மணி நேரத்துக்குப் பேசிகிட்டேத்தாம் ரவை ரவையா சாப்புடுவாரு. அவ்ளோ நேரம் தாக்குப் பிடிக்காம புள்ளைங்க எல்லாம் தூங்கிடும். சாப்பாடு ராப்பொழுதுல பெரும்பாலும் பெரியவங்களுக்குத்தாம். சின்ன புள்ளைங்கள எழுப்புனா, "வுடுங்கம்பீ! ஒழைக்கிற நாம்ம தெம்பா சாப்புடணும். நாம்ம தெம்பா இருந்தாத்தான்னே புள்ளைங்க திங்கறதுக்குச் சம்பாதிச்சப் போட முடியும். புள்ளைங்த்தான்னே. காலையில சாப்புட்டுகிடட்டும்!" அப்பிடிம்பாரு பெரியவரு. டவுனுப் பக்கம்னு போனா கால் கிலோ, அரை கிலோன்னு அல்வாவ வாங்கி ஒத்த ஆளா கடையிலயே தின்னுப்புட்டு வூட்டுக்குன்னு கொஞ்சம் கூட வாங்கி வர்றாத ஆளாச்சே பெரியவரு.
            அவரு டவுனுக்குப் போற சோக்கு எல்லாத்தையும்தாம் நாம்ம முன்ன பாத்திருக்கோமே. ஆளு இப்படி டவுனு கடையிலேந்து வாங்கி வர மாட்டாரே தவிர, அவரு மாதிரி பலகாரம் செஞ்சிப் போட ஊருல யாரு ஆளு இருக்கா? கோதுமைல பாலு புழிஞ்சி அல்வா கிண்டுனார்ன்னா சாப்புட்டுகிட்டே இருக்கலாம். வெள்ளைத் துணிய கொத்தா புடிச்சிகிட்டு அதுல சின்னதா ஓர் ஓட்டைய போட்டுகிட்டு அதுல உளுத்த மாவ ஜாங்கிரிக்குத் தோதா போட்டு புழிஞ்சு வுட்டார்ன்னா புழியறப்பவே நாக்குல எச்சிலு ஊறுமே. பலகாரம் பண்றதலயும், விருந்து சாப்பாடு பண்றதலயும் அவரு ஒரு கில்லி.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...