3 Nov 2019

வேலை தெரிஞ்சவரு வேலைக்குக் கிளம்புறாரு!




செய்யு - 257
            ஒரு வாரம், ரெண்டு வார காலத்துக்கு சின்னவரு பெரியவரு வூட்டுலயே இருந்தாரு. பெரியவரு வூட்டுல இருந்த மாடுகளப் பாக்குறது, கூட மாட தொணையா பெரியவரோட வயக்காட்டுக்குப் போறது, புள்ளைங்கள தூக்கி வைச்சிக்கிறதுன்னு இதுதாங் அவரோட வேலையா இருந்துச்சி. அவ்ளோ பொறுப்பா அந்த வேலைள பாக்க ஆரம்பிச்சாரு. அப்படியே நாட்கள் நகர நகர அவருக்குப் பழசெல்லாம் மனச விட்டு நகர ஆரம்பிச்சி, புதுசா வாழ்க்கையத் தொடங்குணுங்ற எண்ணம் உண்டாச்சி. அங்க புகழூர்ல சின்னவரு வேலங்குடியில இருக்கார்ங்ற சேதி தெரிஞ்ச பிற்பாடு அவர்ர அங்கயே இருக்கட்டும்னு விட்டுட்டாங்க.
            சின்னவருக்கு ரொம்ப காலத்துக்கு இப்படி வீட்டு வேலைகளப் பாத்துட்டுக் கெடக்குறது புடிக்கல. தச்சு வேலை தெரிஞ்சவரு இல்லியா. வேலைக்குப் போனா தேவலாம் போல இருந்திச்சி. அண்ணங்காரங்கிட்ட வந்து சொல்றாரு, "யண்ணே! யிப்பிடியேக் கெடக்குறது அலுப்பா இருக்குண்ணே! வேலைக்கிப் போவவா?"ங்றாரு. யோசிச்சுப் பார்த்த பெரியவருக்கும் அதுதாங் சரிதான்னு படுது. "செரிதாம்டாம்பீ! நம்மளளோட சாமாஞ் செட்டுல்லாம் பரண்லத்தாம் கெடக்குது. எடுத்துக்கிட்டுக் கெளம்பலாம். வேல எஞ்ஞ இருக்குன்னு விசாரிச்சுச் சொல்றேம்."ங்றாரு பெரியவரு. சொன்னபடியே தம்பு செட்டிகிட்டயும், காக்காப்புள்ளகிட்டயும் கலந்துகிட்டு தென்னராயநல்லூர்ல வேலை இருக்குற ஒரு வூட்டைப் புடிக்கிறாரு. அவங்க ரெண்டு பேரையும் கூட அழைச்சுகிட்டு அந்த வூட்டக்குப் போறாரு. புது ஆசாரின்ன ஒடனே அவங்க வேலைக்கி வெச்சிக்க யோசிக்கிறாங்க. "நானும் வேலைக்கி வர்றேம்! கூட வெச்சிக்குங்க!" அப்பிடின்னு சொல்ல முடியாது பெரியவரால. பெரியவருக்கு இந்த வேலை சுத்தமா தெரியாது. அவருக்கு வேலை தெரியாதுங்ற ரகசியம் ஊரறிஞ்சது.
            டக்குன்னு தம்பு செட்டித்தாம் அந்த யோசனைய எடுத்து விடர்றாரு. "வூட்டுக்காரங்களே! முழுச்சம்பளம் வாணாம். அரச் சம்பளம் போட்டுக் கொடுங்க. நாலு நாளைக்கி வேலை பாக்கட்டும். ஒங்களுக்குப் பிடிச்சிருந்தா வேல தொடர்ந்து ஆவட்டும். இல்லேன்னா நாலாம் நாளே சம்பளத்த கொடுக்காம தொரத்தி வுட்டுப்புடுங்க. நாஞ்ஞ ஒண்ணும் கேக்க மாட்டேம்!" அப்பிடிங்கிறாரு. தம்பு செட்டி குட்டையான ஆளு. நல்ல செவப்பு. இடுப்புல ஒரு வேட்டி மட்டுந்தாம் கட்டுவாரு. தோளுல ஒரு துண்டு மட்டுந்தாம் இருக்கும். வெட்டி மடிப்புல வெத்தலைப் பாக்கு, பணங்காசுன்னு அத்தனை சமாச்சாரத்தையும் வெச்சிருப்பாரு. அதால இடுப்புல இருக்கு வேட்டி மடிப்பு அவரோட தொப்பையைத் தாண்டி அது தனியா தெரியும்.
            அப்படியும் தயக்கந்தாம் வூட்டுக்காரங்களுக்கு. சம்பளம் அரைச்சம்பளம்னாலும் நாலு நாளு செய்யுற வேலையில வேலை சரியில்லன்னா சாமானுங்க வீணால்ல போயிடும்னு அவங்க யோசிக்கிறாங்க. பெரியவரு காக்காப்புள்ளயப் பாத்து லேசா கண்ண அடிக்கிறாரு. காக்காப்புள்ள புரிஞ்சிக்கிறாரு. "நம்ம வூட்டுல ஒரு முக்காலி செய்ய வேண்டியதாப் போச்சு. தம்பிய வெச்சி பண்ணுவோம்னு பாத்தா அம்புட்டு அம்சமா பண்ணிக் கொடுத்திருக்காரு. சந்தேகம்னா சொல்லு முக்காலிய தூக்கியாந்துப் போடச் சொல்றேம். பாத்துப்புட்டு வேலைய கொடுக்கறதா இல்லையான்னு முடிவு பண்ணு. தம்பீ மாரி ஒரு வேலைக்காரம் கொடுக்க கொடுத்து வெச்சிருக்கணும். ஊர்லேந்து மூணு பெரிய மனுஷங்க வந்து சொன்னா நம்போணும். இப்பிடிச் சந்தேகப்பட்டுகிட்டு இருந்தா வுடுங்க! யத்தாம் கெளம்புவேம். வேற எடத்தப் பாக்கலாம். நாளைக்கி நல்லது கெட்டதுன்னு நம்மகிட்ட வந்து நிக்க வேண்டிய ஒரு நெல வராமலா போயிடப் போவுது. அப்பப் பாத்துக்கலாம்."ன்னு அடிச்சி விடுறாரு காக்காப்புள்ள.
            காக்காப்புள்ள பேசுனதுல வூட்டுக்காரங்களுக்குக் கொஞ்சம் சொரேர்ங்றது. மூணு பேருமே ஊருக்குள்ள ஒண்ணா கெடந்துகிட்டு பெரியவங்க, மெராசுன்னு ரவுசு பண்ற ஆளுங்களாச்சே. ஒண்ணும் பிரச்சனை இல்லன்னாலும் ஒண்ணு கெடக்க ஒண்ணு பிரச்சனையை உண்டு பண்ணி விட்டுட்டு ஒதுங்கிப்பாங்கங்றது வேற வூட்டுக்காரங்களுக்குப் புரிபடுது.
            "செரி! நாலு நாளைக்குப் பாக்கலாம். பெறவு வேல திருப்தி இல்லன்னா திரும்ப வெச்சுக்குங்கன்னு சாலு சாப்பு பண்ணிகிட்டு வாரக் கூடாது!" அப்பிடிங்றாங்க வூட்டுக்காரங்க.

            "வேலங்குடி ஆளுங்களுக்கு ஒரு நாக்கு, ஒரு வாக்கு. வேல திருப்தி இல்லேன்னா பொடணியில நாலு போட்டு அனுப்புங்க. ஒண்ணும் கேக்க மாட்டேம்."ங்றாரு பெரியவரு.
            இப்படித்தாம் தென்னராயநல்லூர்ல மொத மொதலா பெரியவரோட சாமானுங்கள எடுத்துகிட்டு வேலைக்கிக் கெளம்புனாரு சின்னவரு. அப்பயும் சரி, இப்பயும் சரி ஒத்த ஆளா தச்சு வேலைய பாக்கறது செரமங்கறதால சின்னவரோட வேலை தெரியாம சில்லுண்டி வேலைகள செஞ்சிகிட்டு ஊரு சுத்திகிட்டுக் கெடந்தா ராமூர்த்திய சின்னவரோட சேத்து விட்டு வேலைக்கி அனுப்பி விடுறாரு பெரியவரு. அனுப்பி விட்டதோட அப்பைக்கப்போ வேற ஒரு மேம்பார்வையும் பாத்துட்டு வந்துகிட்டு இருந்தாரு.
            ஒரு பத்தாயம் பண்ற வேலைத்தாம் சின்னவரு பாத்த மொத வேலை. பலவையெல்லாம் திருவாரூர்ல கொண்டு போயி அறுத்து வந்து கெடக்குது. பலவைகள இழைக்கற வேலையே நாலைஞ்சு நாளைக்கு ஓடும். பெரிய இழைப்புளி, சின்ன இழைப்புளின்னு பலகைக்கும், சட்டத்துக்கும் தகுந்த மாதிரி ரெண்டு பேரா இழைப்பு போட்டுகிட்டே கெடக்கணும். சின்னவரோட வேகத்தையும், வேலை செய்யுற அம்சத்தையும் பாத்து ரெண்டே நாளுல்ல வூட்டுக்காரங்களுக்குப் பிடிச்சுப் போயிட்டு. நாலாவது நாளு, "ன்னா வூட்டுக்காரங்களே! யம்பீய அழைச்சிக்கவா? வேலைய பாக்க வுடவா?"ங்றாரு பெரியவரு கண்ண சிமிட்டுனபடியே.
            "ன்னா மாமா! இப்பிடிக் கேட்டுப்புட்டீங்க? இழைப்பப் பாருங்க. இந்த மாரி இழைப்பு இந்த ஏரியாவுல எந்த ஆசாரியும் இழைக்க மாட்டாம் மாமா! அதுவும் பத்தாயத்துக்கு. பீரோவுக்கு இழைக்குற கணக்கால்ல இழைக்குதுங்க யம்பீங்க. ஒங்க யம்பீக்கு அரச்சம்பளம்லாம் யில்ல. முழுச்சம்பளந்தாம்."ன்னு சொல்லிட்டு வூட்டுக்காரரு உள்ள போயி ரெண்டு பேருக்கும் முழுச் சம்பளத்த எடுத்தாந்து கையில நீட்டுறாரு. ஒரு அஞ்சு ரூவா தாளு, ரெண்டு ரூவா தாளு, ஒத்த ரூவா தாளு. எட்டு ரூவா இருக்கு. அதுதாம் அப்பச் சம்பளம். அத கையில வாங்குனதும் பெரியவருக்கு மனசு குளுந்து போவுது.
            "யப்பாடிகளா! பேர காபந்து பண்ணிட்டீங்க! நல்லா யிருப்பீங்டாம்பீ யப்பாடிகளா! வாங்கடாம்பீ! ரண்டு பேரும் சம்பளத்த பிடிங்கடா!" அப்பிடிங்கிறாரு பெரியவரு.
            "ன்னா யண்ணே! அத்து ஒங்ககிட்டயே இருக்கட்டும். கைச்செலவுக்கு மட்டும் பத்து பைசா கொடுத்துட்டுப் போங்க!" அப்பிடிங்கிறாரு சின்னவரு. பெரியவருக்கு இதெ கேட்க வானத்துல பறக்குறாப்புல இருக்கு. பையில கைய வுட்டு ஆளுக்கு இருபது பைசாவ எடுத்து நீட்டுறாரு. "வாரப்ப கடை கண்ணியில காப்பித் தண்ணி, பட்சணத்த சாப்புட்டுப்புட்டு தெம்பா வாங்கடா யப்பாடிகளா!"ன்னு சொல்லிட்டுக் கெளம்புறாரு.
            கெளம்புறப்ப, "நாமளும் இப்பிடித் தொழில கத்துகிட்டுயிருந்தா நல்லாத்தாம் இருந்திருக்கும். அதுல மனசு போனத்தான்னே. போவல வுட்டாச்சி."ன்னு நெனைச்சிப் பாக்குறாரு.
            பெரியவருக்குப் பொறந்து வளந்ததிலேந்து வூடுதாம் சொர்க்கம். வூட்ட வுட்டு வெளியில அதிகம் கெளம்ப மாட்டாரு. வூட்டுலயே இருந்துகிட்டு அம்மாவுக்கு அத்தனை அடுப்படி வேலைகளையும் பொட்ட புள்ள கணக்கா செஞ்சிக் கொடுப்பாரு. அதால அவங்க அம்மாவுக்கும் இவரு மேல ரொம்ப பிரியம். பெரியவருக்கு பொம்பள புள்ள மாதிரியே வளையலு போட்டு, கொலுசு போட்டு, பாவாடை சட்டை வரையும் போட்டு அழகு பாத்து தங் கூடவே வெச்சிகிட்டு அவங்க அம்மா. அதே நேரத்துல எந்த வூட்டுலயாவது ஒரு விஷேசம்னா பெரியவரு ஒரு வாரத்துக்கு முன்னாடியே அங்கப் போயி விஷேசம்லாம் முடிஞ்சி ஒரு வாரம் கழிச்சித்தாம் வூடு திரும்புவாரு. அங்க சமையலு வேலை அத்தனையையும் ஒத்த ஆளா இழுத்துப் போட்டுகிட்டுச் செய்வாரு. விஷேசம் பண்றவங்களும் வேலையில்லாம சமையலுகாரரு கிடைக்குறார்னு இவரக் கொண்டுகிட்டுப் போயிடுவாங்க. இவரும் விஷேசத்துல மாடு போல ஒழைச்சிட்டு அதுக்குக் கூலிங்கிற கணக்கா சாப்பாட்டா ஒரு பிடி பிடிச்சிடுவாரு.
            அப்பல்லாம் விஷேசம்னா மத்தியானம் ஒரு வேள மட்டுந்தாம் விருந்துச் சாப்பாடு. அந்த சாப்பாட்டையே ராத்திரிக்கும் வெச்சிப்பாங்க. ராத்திரியில இருக்குற சனங்களுக்குக் கணக்குப் பண்ணி சோத்த வடிச்சி ஆறுன பிற்பாடு தண்ணிய ஊத்தி வெச்சிடுவாங்க. அதுக்கு ஏத்த அளவுக்கு கெட்டித் தயிரையும் அங்க இங்க அலைஞ்சிப் பாலுக்குத் தயாரு பண்ணி ஏற்பாடு பண்ணிடுவாங்க. காலைச் சாப்பாடுங்றது ராத்திரி வடிச்ச சாதத்துல தண்ணிய ஊத்தி வைச்சாங்க இல்லையா! அந்த பழையச் சோறுதாம். கெட்டித் தயிர ஊத்தி ஆளாளுக்கு ஒரு பித்தாளைக் குண்டான்ல கொடுத்திடுவாங்க. அதுக்குக் கடிச்சிக்கிறதுக்குப் பொறிச்சு எடுத்த  மோரு மிளகாயும், கொத்தர வத்தலும், கிடாரங்காயில பண்ண ஊறுகாயும் கொடுப்பாங்க. இப்படி நடந்துகிட்டு இருந்த காலை நேரத்து விஷேசச் சாப்பாடு இட்டிலி, பொங்கல், கேசரின்னு மாற ஒரு இருவது வருஷம் ஆயிடுச்சி.
            சமையலு வேலைகளப் பொருத்த வரைக்கும் பெரியவர்ர கூப்டாந்து வெச்சிகிட்டு, பாத்திரம் பண்டம் வெலக்கிப் போட, காய்கறி அரிஞ்சித் தர நாலு விருந்தாடியா வந்த பொம்பள சனங்கள வுட்டாப் போதும். பெரியவரு சமையல முடிச்சிடுவாரு. சாப்பாட்டுச் சமையலு செய்யுறது அப்போ பெரிய விசயம் இல்லன்னாலும் பலகாரம் போடுறது அப்போ பெரிய வேல. கல்யாண விஷேசம்ன்னா பொண்ணு வூட்டுப் பலகாரங்களா முறுக்கு, அதிரசம், கெட்டி உருண்டைன்னு நாட்டுப் பலகாரங்களாவும், ஜாங்கிரி, அல்வான்னு டவுனு பலகாரங்களாவும் செஞ்சு கொடுத்து அசத்துறதுல பெரியவர்ர அடிச்சிக்க முடியாது. அதாலயே எங்க விஷேசம்னாலும் பெரியவர்ர வண்டி வெச்சி கெளப்பிக்கிட்டுப் போற அளவுக்குக் கிராக்கி இருந்துச்சு.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...