3 Sept 2019

108 என்பதன் பொருள்



            சின்ன சின்ன விசயங்கள் எழுதுவதில் ஒரு குஷி பிறந்து விட்டது. சின்ன சின்ன வெளிச்சங்கள் பெரிய சுடரையே ஏற்றுகின்றன எனும் போது சிறிது என்ன? பெரிது என்ன? இரண்டும் ஒன்றுதான். பாரதியும் அக்கினிக் குஞ்சை அவ்வளவு சிலாகித்து எழுதி தத்தரிகிடோம் போடுகிறாரே!
            சிறிய முள்தான் குத்தினால் வலி உயிர் போகிறதே!
            சிறிதளவு விடம்தான். உண்டால் உயிர் போய் விடுகிறதே!
            குண்டுமணித் தங்கம்தான். அந்த விலை போகிறதே!
            சிறிது என்ற எதை ஒதுக்கி விட முடியும் சொல்லுங்கள்.
            உருவு கண்டு எள்ளாமை என்று வள்ளுவர் வேறு சொல்கிறாரே!
            டைனசரோடும், நீலத்திமிங்கலத்தோடும் ஒப்பிடும் போது மனிதனே சிறுதுதான். அவன் படுத்துகிற பாடு இருக்கிறதே! நீலத்திமிங்கலமே தற்கொலை செய்து கொண்டு சாகிறது!
            ஆகவே மீண்டும் சிறிய விசயங்கள்.
எண் 1 :
            உலகில் மிக அதிகமான வாக்குகளுக்குச் சொந்தமான நாடு இந்தியா. ஆனால் பணப்பட்டுவாடா? அதை எவ்வளவு பக்காவாய்ச் செய்கிறார்கள்? அதைப் போல நலத்திட்டங்கள், மானியங்கள், உதவிகளைச் செய்ய முடியாதா? என்று ரொம்ப நாளாகவே மனதுக்குள் ஒரு கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது. இதில் நுட்பமான வேறுபாடு இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கான பட்டுவாடா என்பது வேறு. ஆட்சிக்கு வந்த பின்னே பட்டுவாடா என்பது வேறு என்பதுதானே அது.
எண் 2 :
            கடனுக்காக விவசாயி காத்திருக்கிறான். பின்பு அந்தக் கடன் விவசாயிக்காகக் காத்திருக்கிறது அவனை அள்ளிப் போட்டு விழுங்குவதற்கு. விவசாயிக்கும் கடனுக்குமான உறவு உடம்பும் உயிரும் கொள்ளும் உறவைப் போல. உடம்பு விவசாயி என்றால் கடன் அவன் உயிராகி விட்டது. கடனை உருவி விட்டால் அவன் செத்து விடுவான். கடனை உருவினாலும் சரிதான் கொடுக்காமல் விட்டாலும் சரிதான் அவனது இறப்பு நிச்சயம். இறக்கப் பிறப்பவர்கள் விவசாயிகளாகப் பிறக்கலாம்.
எண் 3 :
            108 என்பதற்கு 60 வருஷங்கள், 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் என்று ஒரு கூட்டுத்தொகை கணக்குச் சொல்கிறார்கள். நமக்குத் தெரிந்ததெல்லாம் 108 ஆம்புலன்ஸ்தான். அதுவும் சரிதான் 60 வருஷங்களாக இருந்தாலென்ன? 27 நட்சத்திரங்களாக இருந்தாலென்ன? 12 ராசிகளாக இருந்தாலென்ன? 9 கிரகங்களாக இருந்தாலென்ன? யோசித்துப் பாருங்கள். எல்லாம் 108 இல் அடக்கம். 108 ஆம்புலன்ஸ் என்பது கிரகச்சாரப்படி வைக்கப்பட்ட எண்ணாக இருக்க வேண்டும்.
எண் 4 :
            முன் வைத்த காலை பின் வைப்பவர்கள் ஹெல்மெட் போடாதவர்களாகவும் இருப்பார்கள். வழியே ஏகுக, வழியே மீளுக என்று போக வேண்டிய இடத்துக்குப் போகாமல் போலீஸைப் பார்த்ததும் போன வழியே திரும்பி வருபவர்கள் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு பின் பயணத்தைத் தொடர்பவர்கள். ஹெல்மெட் இன்றி அமையாது இருசக்கர வாகனப் பயணம்.
            இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் நம் கோசிகாமணி நண்பர் சொன்னது இது - ‍ஹெல்மேட் அணியாதவர்களுக்கு ஆயிரம், ரெண்டாயிரம் என்று ஏன் அபராதம் போட வேண்டும்? அதற்குப் பதில் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு ஒரு ஹெல்மெட்டைக் கொடுத்து விடலாம். நல்ல யோசனைதான். அப்படி ஹெல்மெட்டோடு வாகனச் சோதனை செய்யும் போலீஸைக் கண்டு "நீங்கதாம்ய்யா எங்கள் நண்பன்!" என்று கட்டித் தழுவி முத்தம் கொடுக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.
*****


No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...