3 Sept 2019

கிரகச்சார தகப்பன்!



செய்யு - 196
            "இதெ கொஞ்சம் ஆறப் போடணும்யா! எம் அண்ணம் பெத்த மவனே! தேடி வந்த மவராசா! எங்களுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுய்யா! ஒண்ணு இவ்வே உன்னோட இருக்கணும். இல்லே பொணமா போவணும். அதாம்யா முடிவு. இவ்வளுக்கு ஒடம்பு சரியில்லே, அதால இஞ்ஞ கொண்டாந்து விட்டதா இருக்கட்டும். நீ கெளம்புய்யா! நாம்ம பாத்துக்கிறேம்." என்கிறது சரசு ஆத்தா.
            "ஒன்னயல்லலாம் நம்பித்தாம் கட்டிக்கிட்டேம். பாரு இப்ப நம்ம நெலமைய. இத்தே ஊருல வெச்சிகிட்டா எந்த நேரத்துல வேணாலும் நம்ம மானம் சந்திச் சிரிக்கலாம். அதாங் கொண்டாந்து விட்டுருக்கேம். நம்ம வாழ்க்க இப்படியா போவணும்? எல்லாம் நம்ம தலயெழுத்து. ஓம் வூட்டுல பொண்ணெடுத்து நாம்ம இப்பிடி சிக்கிச் சின்னாபின்னமாவணும்னு எழுதிருக்கு! மாமா வாரட்டும். ஒரு வார்த்த சொல்லிட்டுப் போறேம்!" என்கிறது சித்துவீரன்.
            "அய்யோ! நீயி நல்லாயிருப்பே. மொதல்ல கெளம்பு." என்கிறது சரசு ஆத்தா.
            "இல்லே! இருந்து சொல்லிட்டுதாம் போவணும். சொல்லிட்டுதாம் போவேம்!" என்கிறது சித்துவீரன்.
            பாக்குக்கோட்டை தாத்தா வந்தால் என்னென்ன நடக்கும் என்று அது வேறு பயமாக இருக்கிறத சரசு ஆத்தாவுக்கு. நல்லா இருக்கற நாளிலேயே கெரகம் சரியில்லாம நடந்துக்குற நாளு, கெரகம் சரியில்லாத நாளுன்னா எப்படி நடந்துப்பாரோன்னு திக் திக்னு நெஞ்செல்லாம் அடிச்சிக்குது அதுக்கு. சித்துவீரன் கிளம்பினாலாவது அது இது என்று ரெண்டு நாளைக்குச் சமாளித்து பிறவு விசயத்தை மெல்ல அவிழ்த்து விடலாம் என்பது அதோட கணக்கு.
            ஆளுக்கொரு மூலையைப் பிடித்துக் கொண்டு சரசு ஆத்தா, சுந்தரி, சித்துவீரன் என முழங்காலை மேலே நீட்டியபடி குத்துக்காலிட்டு உட்கார்ந்திருக்கின்றனர். எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தனர் என்று தெரியாத அளவுக்கு ஒவ்வொருத்தருக்கும் யோசனை ஓடிக் கொண்டே இருக்கிறது. வந்த மருமவனுக்கு ஒரு காப்பி தண்ணிப் போட்டுக் கொடுக்கணும்ங்ற யோசனை கூட சரசு ஆத்தாவுக்கு இல்லாமப் போயிடுச்சுங்றது இப்பதாம் அதுக்கு ஞாபவம் வருது.
            எழுந்துப் போயி ஒரு தூக்குவாளியை எடுத்துக்கிட்டு டீக்கடை பக்கமா போவுது. ரெண்டு பிஸ்கட் பாக்கட்டையும், தூக்குவாளி நெறைய டீயுமா வாங்கி வந்து டம்பளர்ல ஊத்திக் கொடுத்து ஆளுக்கு நாலு ரொட்டியை பாக்கெட்டைப் பிரிச்சுக் கொடுக்குது. கொடுக்குற டீயை மறுக்கணும்னு யாருக்கும் தோணல. பசின்னா பசி அப்படி ஒரு பசி. அந்த டீயில பிஸ்கட்ட நனைச்சு தின்ன தின்ன வெடவெடன்னு இருக்குற ஒடம்பு கொஞ்சம் அசமடங்குது. டீத்தண்ணி உள்ளேப் போகப் போக மயக்கம் வர்ற இருக்குற ஒடம்புக்குக் கொஞ்சம் தெம்பு கெடைக்குது.
            அரண்மனைத் தெருவுல ஜோசிய ஆபீஸூ வெச்சு ஜாதகம் பாக்குற பாக்குக்கோட்டை தாத்தா ராசாமணி அப்பதாம் வர்றாரு. சித்துவீரனைப் பார்த்ததும், "அடடே மாப்ளே! எப்போ வந்தீங்க? ஏட்டிச் சுந்தரி நீயி எப்படி வந்தே? மொகர கட்டையெல்லாம் ஒரு தினுசா இருக்கே?" அப்படிங்குது.
            சரசு ஆத்தாவுக்கு திகுதிகுன்னு வருது. என்ன நடக்கப் போவுதோ? ஏது நடக்கப் போவுதோன்னு நினைக்கறப்ப அதுக்கு ஈரக் கொலையே அறுந்து விடும் போலருக்கு. ராசாமணி தாத்தா இருக்காருல்ல, நல்லா பேசுறப்ப நல்ல மனுஷன்தான். மோசமா பேச ஆரம்பிச்சிட்டா அவரப் போல ஒரு கெட்ட மனுஷனப் பார்க்க முடியாது. நாறடிச்சுடுவாரு.
            சித்துவீரன் ஆத்திரத்துல பேசுறதுக்குள்ள, சுந்தரி உளறிக் கொட்டுறதுக்குள்ள நாமலே நயமா எடுத்துச் சொல்லிப்புடலாம்னு தோணுது சரசு ஆத்தாவுக்கு.
            அது மெதுவா பேச ஆரம்பிக்குது. "நம்ம பொண்ணு சரியில்லே..." என ஆரம்பித்து ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பிக்கிறது. சொல்வதைக் கேட்க கேட்க ராசாமணி தாத்தா முகத்துல சிரிப்பு மாறல. சிரிச்ச முகத்தோட பொண்ணோட போக்கைக் கேட்டுகிட்டு இருக்கு. இதுக்குல்லாம ஒரு மனுஷன் முகத்தைப் பெருமிதமா வெச்சிருப்பான்? இப்படியும் ஒரு அப்பன் கேட்பானான்னு சித்துவீரனுக்கு ஆத்திரமா இருக்குது.
            சரசு ஆத்தா எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும், "மாப்ளே! நல்ல வேலத்தாம் பண்ணிருக்கே! அவளுக்குக் கெரகம் சரியில்லே. அஞ்ஞ வெச்சிருந்தே அவ இந்நேரம் ஓடிப் போயிருப்பா. சரியான நேரத்துல கொண்டு வந்திருக்கே. நாம்ம கணக்குப் போட்டுத்தாம் வெச்சிருந்தேம். ஒண்ணுமில்லே. சில பரிகாரம் பண்ணாச் சரியாப் போயிடும்!" என்கிறது அசால்ட்டாக ராசாமணி தாத்தா.
            இதையெல்லாம் சொல்வது தன் புருஷனா? இல்ல வேற யாருமா? என்று இப்போது ஆச்சரியமாக இருக்கிறது சரசு ஆத்தாவுக்கு.
            "என்னங்க இவ்வே இப்பிடி பண்ணிட்டு வந்திருக்கா? நீஞ்ஞ இப்பிடிச் சொன்னா அதுக்கு ன்னா அர்த்தம்?" என்று சரசு ஆத்தா ஆத்திரம் காட்டுகிறது.
            "நேரஞ் சரியில்லன்னடி அப்படித்தாம்டி. அதெயல்லாம் ஒண்ணும் பண்ண முடியாது. கெரக சஞ்சாரத்தே நீயி மாத்திப் புடுவீயா புடுங்கி? தெனம் எவ்ளோ ஜாதகம் பாக்குறேம். ஒண்ணும் பண்ண முடியாது. பரிகாரம் பண்ணா எல்லாம் சரியாயிடும். சரி பண்ணிப்புடலாம். சரிபண்ணிடறக் கூடிய பெரச்சனைதாம். யாரும் ஒண்ணும் கவலெபடாதீங்க. எல்லாத்தையும் சரிப் பண்ணிப்புடறேம். அவ்வே ஜாதகம் உள்ளே இருக்கும். எடுத்துட்டு வா!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "போய்யா கெழட்டு மூதி! ஓம் வூட்டுல வந்து இதெச் சொல்லி ஒம் பொண்ண கொண்டாந்து வுட்டேம் பாருய்யா! கொன்னுப் போட்டு கொண்டாந்து இருக்கணும். அப்டியே ஒன்னையும், ஒம் பொண்டாட்டியையும் கொன்னு போட்டுருக்கணும். ஒண்ணாம் நம்பரு கேடி, பொறுக்கி, முடிச்சவிக்கி, மொள்ளமாரியா இருப்பே போலருக்கே! ஒன்னய மாரித்தாம்யா இருக்கும் ஒம் பொண்ணும். நீயி எத்தன வூட்ட மேஞ்சியோ? ஒம் பொண்ணும் அப்டியே மேயுது!" என்கிறது சித்துவீரன்.
            "இந்தாரு மாப்ளே! நீயி ஆத்திரப்படுறதுல, அவரசப்படுறதுல அர்த்தமிருக்கு. ஆனா ஆத்தரப்படப்புடாது, அவரசப்படப்புடாது. இது கெரகச்சாரம். கெரகங்கள சாந்திப் பண்ணித்தாம் சரி பண்ணணும். அவசரப்பட்டீன்னா அலங்கோலமாப் போயிடும். ஆத்திரப்பட்டீன்னா போயி ஜெயில்லத்தாம் உக்காந்துக்கணும் பாத்துக்கோ. இத்தெ என்கிட்ட வுடு. நாம்ம சரிப்பண்ணித் தர்றேம்!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "யோவ் சொம்புநக்கீய்! ஒம் பொண்டாட்டி இது மாரி ஊரு மேய்ஞ்சா அத்தோட வேதனெ ஒனக்குத் தெரியும்! ஒனக்கென்ன ஊரு மேய்ஞ்சா மேயட்டும். சம்பாதிச்சுப் போடுற காசு மிச்சம், அப்டியே அதுல ஒரு பங்கும் வாங்கிட்டு காலத்த ஓட்டிக்கிடலாம்னு நெனைக்கிற ஆளுதானே நீயி! சாமியாருப் பயதானே நீயி! வேறென்னப் பேசுவே நீயி! குடும்பத்துல இருக்குற எந்த கம்மு...டா இத்து மாரி காவி வேட்டிக் கட்டுவாம்? ஒனக்கு ஒம் மவ்வே போனா ன்னா? ஒம் பொண்டாட்டியே போனா ன்னா? காவி வேட்டிய கட்டிகிட்டு ஊரு ஊரா போயி வழிச்சி நக்கிக்கிட்டு கெடப்பே! பேசுறாம் பாரு பேச்சு! ஒன்னய கொல்லணும்டா மொதல்ல." என்கிறது அதுக்கு சித்துவீரன்.
            "மாப்ளே! ஒங் கோவத்துல ஞாயம் இருக்கு. இத்தே நீயி நாம்ம காவி வேட்டி கட்டுறதுக்கு முன்னாடி பேசியிருந்தே நடக்குறதே வேற. இந்தாரு இப்பதாம் நாம்மலாம் கொஞ்சம் திருந்தி வந்திருக்கேம். அட்டாதுட்டி ஆளு நாம்ம. ரெளடித்தனம், மொள்ளமாரித்தனம் இதுதாம் பொழப்பு. இருந்தாலும் எதுக்கும் ஓர் அளவு இருக்கு. அளவே மீறுனா நடக்குறது வேற. காவி வேட்டிய அவித்து எறிஞ்சுபுட்டு எதுக்கும் எறங்க யோசிக்க மாட்டேம்!" என்கிறது ராசாமணி தாத்தா.
            "ன்னா பாக்குக்கோட்டை ஒம் ஊருன்னு நெனச்சிப் பேசுறீயா? விசயத்த வெளில சொன்னோம்னு வெச்சிக்க நாறிப் பூடுவே! இந்த மெரட்டுற வேலயெல்லாம் வெச்சிக்காதே. நாண்டுகிட்டு சாவுற மேட்டர சொன்னா நக்கிகிட்டு வந்து நிக்குறே தெரு பொறுக்கி நாயே!" என்றபடி சித்துவீரன். அதுக்கு வர்ற ஆத்திரத்துக்குப் பேச்சோடு நிப்பாட்டிக்க முடியாம இப்போது ராசாமணி தாத்தாவின் தாடியைப் பிடித்து நாலு அறை வைக்கிறது. அப்படியே கீழே தள்ளி விட்டு மிதிமிதியென்று மிதிக்கிறது.
            "டேய் வயசான மனுஷம்டா! செத்துப் போயிட்டா நீந்தாம் ஜெயில்ல கெடக்ணும்டா!" என்று எழுந்துப் போய் சித்துவீரனோட காலைப் பிடித்துக் கொண்டு கெஞ்சுகிறது சரசு ஆத்தா.
            "ஒம் பொண்ணுக்கு எதாச்சிம் இருக்கா? அப்டியே உக்காந்து இருக்குப் பாரு. இதுக்கு வந்து வக்காலத்து வாங்குறீயேடா சாமியாருப் பயலே!" என்று கைகளால் நாலு சாத்து சாத்துகிறது சித்துவீரன்.
            "வெளில போடா பொட்டப் பயலே! நாமளும் பாக்குறேம். தப்புப் பண்ணா நம்மள இழுத்துப் போட்டு அடிச்சதோட நிறுத்து. ஆளாளுக்குப் போட்டு இழுத்துப் போட்டு அடிக்கிறே. இந்தாருடா ஒனக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்ல. இந்தாடா நாயே நீயி கட்டுனத் தாலி. இந்தப் பக்கம் வந்தே நீயி ஒரு ஒம்போதுன்னு ஊரெல்லாம் தமுக்கு அடிச்சி விட்டுடுவேம் பாரு. இந்தாடா நீயி கட்டுனத் தாலி!" என்று அவிழ்த்து வீசுகிறது சுந்தரி.
            "அடிப் பாதகத்தி! ன்னா காரியம்டி பண்றே?" என்று சரசு ஆத்தா கத்துவதற்குள், "போடா பொட்டப் பயலே! போடா ஒம்போது பயலே! போடா எம் மூஞ்சுல முழிக்காதாடா போடா!" என்று செருப்பை எடுத்து சித்துவீரன் மேல் வீசுகிறது சுந்தரி.
            "அய்யோ அய்யோ இவ்வே பண்றத நிறுத்துச் சொல்லுங்க! ன்னா இந்த மாரிப் பண்றா? என்னாடி ஆச்சு ஒனக்கு பைத்தியங்கூழிச் சிறுக்கி!" என்று கத்துகிறது சரசு ஆத்தா.
            செருப்பை வீசியதோடு இப்போது விளக்குமாற்றையும் எடுத்து வீசுகிறது சுந்தரி. சரசு ஆத்தா ஓடிப் போய் சுந்தரியோட கையைப் பிடித்துக் கொள்கிறது.
            "குடும்பமே சேர்ந்துல்ல அவமானம் பண்றீங்க? வடவாதியில ஒம் பொண்ண நாறடிச்சி இஞ்ஞ கொண்டாந்திருக்கணும். நல்ல வெதமா கொண்டாந்து விட்டதுக்கு நீங்க பண்ற நல்லது இதானா? இஞ்ஞ நாறடிச்சிட்டுப் போறதுக்கு எவ்ளோ நேரம் ஆகும்? நாறடிக்கிறேம்டி!" என்கிறான் சித்துவீரன்.
            "நாறடிடா நாறடி. எனக்கு மட்டுமா நாத்தம். ஒனக்குந்தாம். நாறடி. ரண்டு பேருமா சேர்ந்து நாறுவோம்!" என்கிறது சுந்தரி.
            அதுக்கு மேல் ஒண்ணும் சொல்ல முடியாமல் வேக வேகமாக வீட்டை விட்டு வெளியை நோக்கி நடையைக் கட்டுகிறது சித்துவீரன்.
            "ன்னடா ஊரு இது? ஒரு வூட்டக்குள்ளே ஒரு பூகம்பமே நடக்குது. அக்கம் பக்கத்துல ஒரு நாயி கூட வந்து கேட்க மாட்டேங்றாம். வந்து பார்க்க மாட்டேங்றாம். இதாம் டவுனு நாத்தங்றது போலருக்கு." என்று மனசில் நினைத்தபடி நடக்கிறது சித்துவீரன். இவன் அங்கிருந்து நகர நகர அக்கம் பக்கத்தில் இது குறித்து குசுகுசுவெனப் பேசத் தொடங்குகின்றனர்.
*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...