2 Sept 2019

நெஞ்சாங்கூட்டு ஊஞ்சல்



செய்யு - 195
            இந்த மனசு இருக்கே! அது ஒரு நேரம் இப்படிப் பேசும். ஒரு நேரம் அப்பிடிப் பேசும். மாறி மாறி பேசிகிட்டே இருக்கும். வாழ்க்கை முழுக்க அது ஒரு விவாதத்தை நிகழ்த்திகிட்டே இருக்கும். உலகத்துல ஒவ்வொண்ணுத்துக்கும் ஒவ்வொரு இயற்கை இருக்குதில்லையா! மனதோட இயற்கை அந்த விவாதம்தான். மாத்தி மாத்திப் பேசுற அந்தப் பேச்சுதான். மனுஷங்கள்ல சில பேரு அந்த மனசோட பேச்ச கேட்குறவங்களா இருப்பாங்க. சில பேரு தன்னோட பேச்ச மனசு கேக்குற அளவுக்கு வெச்சிப்பாங்க.
            ஒரு முடிவு எடுத்து முடிஞ்ச பிற்பாடு வந்து எனக்கு அந்த முடிவை மாத்திக் கொடுங்கன்னு சில பேரு நிக்குறதைப் பார்க்கலாம். எல்லாத்தியும் ஒங்கிட்ட கேட்டுதானடா முடிவெடுத்தோம்னா அவங்ககிட்ட சொன்னா அதை அவங்களால புரிஞ்சுக்க முடியாது. அதை அவங்க காதுல வாங்கிக்கவும் மாட்டாங்க. எடுத்த முடிவை மாத்தணும்னு ஒத்தக் கால்ல நிப்பாங்க. அவங்களோட மனசு அப்போ அப்பிடி இருக்கும். அவங்க மனசு சொல்றத அவங்களால மறுக்க முடியாது. ஒரு சிலரு முடிவு எடுத்தா முடிவுதான். அதுலேர்ந்து பெரள மாட்டாங்க. அது நல்லதோ, கெட்டதோ அதுதாங் அவங்க முடிவு. அஞ்சு வெரலும் ஒண்ணாவா இருக்குன்னு கிராமத்துல சொல்வாங்களே! அது மாதிரிதாம் எல்லாரு மனசும் ஒரே மாதிரியாவா இருக்கு?
            சித்துவீரனோட மனசு அப்படியும், இப்படியும் குழம்பிப் போவுது. அப்பாவும் அம்மாவும் பொண்ணுப் பார்த்து கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா இப்பிடியெல்லாம் நடந்திருக்காதோன்னு நினைச்சுப் பார்க்குறான். இந்தச் சேதி அப்பா அம்மாவுக்குத் தெரிஞ்சா நெலமைய நினைச்சுப் பார்க்கிறான். சுந்தரிய அங்க பாக்குக்கோட்டையில விட்டுட்டு மேற்கொண்டு என்ன பண்றதுன்னு அவனுக்கு யோசனையா இருக்கு.
            சித்துவீரனோட மனசு இப்படி இருந்தா, சுந்தரியோட மனசு அதுக்கு நேர்மாறா இருக்கு. இவனை விட்டுத் தொலைஞ்சா தேவலாம்னு இருக்கு அதுக்கு. சித்துவீரனுக்குத் தெரிஞ்சு ஆதிகேசவனோட இருந்து மாட்டிக்கிட்டது ஒரு விதத்துல வருத்தமா இருந்தாலும், இப்பயாவது தெரிஞ்சி இதுக்கு ஒரு விடுதலை கிடைக்குதுன்னே நெனைச்சுகிட்டு அது இன்னொரு பக்கத்துல சந்தோஷமா இருக்கு. பொண்ணுங்க மனசு அப்படித்தான். கட்டுன புருஷன் பிடிச்சுப் போச்சுன்னா அவன் எவ்ளோ பெரிய குடிகாரனா இருந்தாலும், அவன் நாயடி, பேயடி, சாவடி அடிச்சாலும் அவங் கூடத்தான் இருப்பாங்க. பிடிக்காம போயிட்டா அவன் எவ்வளவு பெரிய பருப்பு இருந்தாலும், அவனோட பருப்பு அவங்ககிட்ட வேகாது.
            ரெண்டு பேரும் மன்னார்குடிக்கு ரெண்டாம் நம்பரு பஸ்ஸ பிடிச்சு, அங்கேருந்து பாக்குக்கோட்டைக்குப் பஸ்ஸூ பிடிச்சுப் போறாங்க. பஸ்ஸூ போக போக சித்துவீரனுக்கு யோசனை மேல யோசனை ஓடுனாலும், சுந்தரிக்கு அப்படி எந்த யோசனையும் ஓடல. அதோட முகத்துல எந்த வித சலனமோ, கவலையோ இல்ல. நித்சலனமா இருக்கு. அதப் பாக்குறப்ப சித்துவீரனுக்கு எரிச்சலா இருக்குது. இங்க நம்ம மனசு இப்படிப் பொங்கிட்டு இருக்குறப்ப, இவ்வே மட்டும் எப்பிடி எதுவும் நடக்காத கணக்கா மூஞ்ச வெச்சிகிட்டு வர்றான்னு யோசிக்கிறான்.
            பாக்குக்கோட்டை டவுனுக்கு முன்னாடியே புதுக்கூர் முக்கத்துல எறங்கி, துபாய் காலனிப் பக்கமா நடந்து போனா அங்க ஒரு வூட்டுலதாம் இப்போ இருக்காங்க பாக்குக்கோட்டை ராசாமணி தாத்தாவும், சரசு ஆத்தாவும். அவங்கக் கூட இப்போ பிந்து இருக்கு. பாலாமணி சிம்மக்கல்லு ஆஸ்டல்ல தங்கி ஆயுர்வேத டாக்கடருக்குப் படிச்சிட்டு இருக்காங்ற சங்கதி உங்களுக்குத் தெரிஞ்சததான். ரெண்டு பேருமா எறங்கி அங்க வூட்டுக்குப் போனா, ரொம்ப பெரிய மெளனம் ரொம்ப நேரம் நீடிக்குது. கடைசியில ஒரு வழியா கொஞ்சம் கொஞ்சமா சித்துவீரன் சேதியைப் புட்டு வைக்குது. சரசு ஆத்தா செய்தியைக் கேட்டுகிட்டு வாயிலயும், வயித்துலயும் அடிச்சிகிட்டு அழுவுது.
            "ஏம்டி சுந்தரி நீயி இப்பிடி வந்து நின்னா ஒங் தங்காச்சிக்கு நாம்ம எப்பிடிக் கல்யாணம் பண்ணுவோம்? இதயெல்லாம் கேள்விப்பட்டான்னா எவ்வேம் வந்து ஒந்த தங்காச்சியா கட்டுவாம்? ஒனக்கு மேக்கொண்டு நாம்ம என்ன செய்வேம்? அடி குடி கெடுக்க வந்தவளே! நீயெல்லாம் ஏம்டி உசுரோ வந்தே? வர்ற வழியில ஆறு, கெணறு, குளமாயில்ல. வுழுந்து சாவ வேண்டியத்தானே?" என்று அழுகிறது சரசு ஆத்தா.
            சித்துவீரனுக்கு மனசு இப்போ ஒரு நிலைபட்ட மாரி இருக்கு. அப்படியும் இப்படியும் ஆடும் மனசு ஒரு சூழ்நிலையைப் பார்த்தவுடன் கெட்டிப் பட்டு விடும் சயத்துல. சித்துவீரன் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறான், "இந்தாரு அத்தே! ஒம் பொண்ண வெச்சு இனுமே குடித்தனம் பண்ண முடியாது. அது யாரோட குடித்தனம் பண்ணணும்னு அது ஒரு முடிவுல இருக்கு. பேசி முடிச்சிக்கிறதாம் நல்லது. ஓடுகாளிய வூட்டுல வெச்சிகிட்டு ஊருல மருவாதியா நாம்ம குடித்தனம் நடத்த முடியாது!"
            "யேய் யப்பா! யம் யய்யா! நடந்தத எதையும் நாம்ம ஞாயப்படுத்த முடியாது. ஒன்னய வுட்டா இந்தக் குடும்பத்துக்கு யாருய்யா இருக்கா? இப்பதாம்யா இந்தக் குடும்பம் தலையெடுக்குது. நீதாம்யா இந்தக் குடும்பத்துக்கு மூத்த மருமவேம். ஒன்னாலதாம்யா இந்தக் குடும்பம் தழைக்கணும். இந்தக் குடும்பத்தோட மூத்தப் புள்ளையே இனுமே நீதாம்யா. நீ சொல்றதுதாம்யா இந்தக் குடும்பத்துக்கு எல்லாமும். கொம்புல படறுற கொடிய வம்புல அறுத்து விட்டுடாதய்யா. ஒங் காலுல எங் குடும்பமே வுழுந்தாலும் இவ்வே பண்ண தப்புக்கு அது சமானம் ஆகாதுய்யா. எம் பொண்ண கைவுட்டுப்புடாதய்யா. இந்த வூட்டு மனுஷனுக்குத் தெரிஞ்சா கொல வுழுந்துப் போவும்யா. மனசு வையுய்யா. நல்ல நேரமா வூட்டுல யாரும் இல்லாத நேரமா வந்திருக்கீங்க. ஒனக்குப் புண்ணியமா போவட்டும்யா." என்று சித்துவீரனின் காலில் விழுகிறது சரசு ஆத்தா.
            "ன்னத்தே! எங் காலுல வுழுந்துகிட்டு? ஒங் குடும்பத்து அப்டில்லாம் நாம்ம வுட்டுட நெனைக்கல. பிடி கொடுக்கத்தாம் பாக்குறேம். பிடி பட மாட்டேங்குதே. நாம்ம யென்ன பண்ணுவேம்? வாரப்பயும் இதுகிட்டே கேட்டேம்த்தே! நடந்தது நடந்துப் போச்சி. எல்லாத்தியும் வுட்டுப்புட்டு எங் கூட மட்டும் குடும்பம் நடத்துன்னு. கேட்கலிய்யே. கேட்டுருந்தா நாம்ம ஏம் அழச்சிட்டு வார்ரேம்? நாம்மளா இருந்தவாச்சி அழச்சிக் கொண்டாந்து வுடுறேம். வேற ஒருத்தன்னா இருந்தா இந்நேரம் கொன்னுப் போட்டுருப்பாம் கொன்னு. கொல்லாட்டியும் அடிச்சாவது தொரத்திருப்பாம்." என்கிறது சித்துவீரன்.
            "உண்மதாம்யா! உண்மதாம்! அடி பாவி மவளே! ஒனக்கு வேறென்னடிக் கொறைச்சலு? போயிக் குடும்பத்த நடத்தித் தொலய வேண்டியத்தானே!" என்கிறது சரசு ஆத்தா.
            "இது கூடயெல்லாம் இனுமே ஒரு நிமிஷம் இருக்க முடியாது. நாம்ம ஒண்ணும் யாருக்கும் பாராமாயில்லே. நாம்ம எங்கப் போவணுமோ அங்கப் போறேம். நம்மளப் பத்தி யாரும் ஒண்ணும் கவலப்பட வாணாம்." என்கிறது சுந்தரி.
            சரசு ஆத்தாவுக்கு இதைக் கேட்க கேட்க ஆத்திரம் பீறிட்டு வருகிறது. அது ஓரமாய்க் கிடக்கும் விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு வந்து சாத்து சாத்தென சாத்துகிறது. சுந்தரி அசையாமல் அப்படியே நிற்கிறது. ஒரு புயலடிச்சு ஓஞ்ச கதையா ஆத்திரம் தீர அடித்து முடித்தப் பிறகு பார்த்தால் அதன் தலையில் உடம்பில் என்று ஆங்காங்கே ஈர்க்குச்சிகள் செருகிக் கொண்டு இருக்கின்றன. உடம்பின் சில இடங்களில் ஈர்க்குச்சிங்க கீறி ரத்தம் கோடிட்டு வருது.
            "கல்லு மனசுக்காரி! எப்பிடி ஆடாம அசையாம சிலை கணக்கா நிக்குறா? ன்னா நெஞ்சழுத்தம்? பெத்த ஆயிக்காரிகிட்டயே புருஷன வுட்டுப்புட்டு இன்னொருத்தங் கூட வாழப் போறேம்ங்றா? இவ்வே பொம்பளயே இல்ல. பெசாசு. எங் குடும்பத்த அழிக்க வந்த கொள்ளிக்கட்டே." என்று விளக்குமாற்றைக் கீழே போட்டு விட்டு சுந்தரியின் மார்பிலும், தலையிலும் சரசு ஆத்தா கைகளால் அடிக்கிறது.
            சுந்தரி சரசு ஆத்தாவின் கைகளை விலக்கி விட்டுட்டு, "சொல்லாம கொள்ளாம ஓடியிருக்கணும். அப்பத் தெரிஞ்சிருக்கும். சும்மா அடிக்கிறத நிறுத்து. சொல்ல வேண்டியத சொல்றதுக்குத்தான் வந்தேம். இல்லே அப்டியே போயிருப்பேம். வாரட்டா!" என்று சொல்லிவிட்டு தான் கொண்டு வந்த பையைத் தூக்கிக் கொண்டு விடுவிடுவென நடந்து வெளியே போகிறது.
            இதைப் பார்க்க பார்க்க சித்துவீரனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவன் ஓடிப் போய் சுந்தரியின் கையைப் பிடிக்கிறான். "ச்சீய் போடா பொட்டைப் பயலே!" என்று சித்துவீரன் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படிச் சொல்கிறது சுந்தரி. சுந்தரியைப் பிடித்த சித்துவீரனின் கைகள் இப்போது நழுவுகின்றன.
            "ன்னடா இது எங் குடும்பத்துக்கு வந்த சோதனே! ஏம்டா எங் குடும்பத்துக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?" என்று சரசு ஆத்தா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்தபடி ராகம் இழுப்பதைப் போல ஒப்பாரி வைக்கிறது.
            சித்துவீரனுக்கு வரும் ஆத்திரத்தில் அவன் இப்போது வூட்டுக்குத் திரும்ப வந்து சரசு ஆத்தாவின் நெஞ்சில் ஓங்கி ஒரு உதை உதைக்கிறான். சரசு ஆத்தா உருட்டிக் கொண்டு மல்லாக்க விழுகிறது. "ச்சீய்! ன்னாடி பொண்ணு வளத்துருக்கே? ஊர்ற மேய வுட்டுத்தான் குடும்பத்தெ நடத்திருக்கே? கொன்னே புடுவேம். த்துப்பூ!" என்று காறித் துப்பி விட்டு மூலையில் குந்தியபடி அழுகிறான் சித்துவீரன்.
            தடுமாறி விழுந்து கிடந்த சரசு ஆத்தா ஒரு நிலைக்கு வந்து எழுந்திரிக்கிறது. ஓடிப் போய் சுந்தரியின் கால்களைக் கட்டிக் கொண்டு, "போவாதடி! போவாதடி! எத்தா இருந்தாலும் ஒம் அண்ணன வாரச் சொல்றேம். அவ்வேம் வந்து பேசுன பெற்பாடு ஒரு முடிவுக்கு வாரலாம்டி. எங் குடிய கெடுத்திடாதடி பாவி மவளே! நீயி நல்லாயிருப்ப. கொஞ்சம் வூடு தங்கு. லாலு அண்ணனயும் வாரச் சொல்றேம். பேசி ஒரு முடிவுக்கு வந்த பின்ன நீயி ன்னா வாணாலும் பண்ணு. ஒங்க அப்பம்சாமியாரு இல்லாதப்ப ஒண்ணுகெடக்க ஒண்ணு பண்ணி நம்ம உசுர எடுக்காதே. அய்யோ எஞ் வீரஞ் சாமி! எந் நஞ்சு எறங்கிப் போவுதே! இதக் கேக்க ஒரு நாதியில்லயா!" என்று புலம்புகிறது.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...