31 Oct 2017

உழைப்பை உறிஞ்சும் கலை

உழைப்பை உறிஞ்சும் கலை
            எஸ்.கே. ரெபரன்ஸ் அடிப்படையில் எழுதுபவன். அவனாக எழுதினால் அது அது அவனது சக்தியை உறிஞ்சி விடுவதாக கூறுவான்.
            ஒரு வகையில் அவனுக்கு உழைப்பதற்கு ஆர்வம் கிடையாது. ஆனால் சமூகத்தில் எதாவது ஒரு வகையில் ஒவ்வொரு மனிதனும் எதையாவது ஒன்றைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதற்காக அவன் உழைப்பது போல் நடிக்க வேண்டியிருக்கிறது என்று சொல்வான்.
            மற்றபடி உழைப்பினால் என்ன பயன் என்பதுதான் எஸ்.கே.வின் கேள்வி. அவன் உழைக்க, அதற்கானப் பயனை எவனோ ஒருவன் தட்டிப் பறித்துக் கொண்டு போய் விடுவதாக அவன் நினைக்கிறான்.
            எஸ்.கே.வைப் பொருத்த வரையில் உழைப்பது என்பது முக்கியமன்று. உழைப்பை எப்படிச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் முக்கியமானது.
            அது சில தந்திரங்களில் இருப்பதாக அவன் கருதுகிறான். பணம், தந்திரம், ஆசையூட்டுதல், உசுப்பி விடுதல் ஆகியவற்றின் மூலம் பிறரிடமிருந்து உழைப்பை உறிஞ்சிக் கொள்ள முடியும் என்று அவன் நினைக்கிறான்.
            சமூகத்தின் நிலைகளும், நிலைக்களன்களும் அப்படித்தானே அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சக் கூடிய வகையில்தானே இருக்கின்றன.
            அந்த அமைப்பு நிலையில் அவனும் ஒருவனாக இடம் பெற்று விட்டால் பிறரது உழைப்பை அதன் மூலம் எளிதில் பெற்று விடலாம் என்று நினைக்கிறான் எஸ்.கே. இப்படி எஸ்.கே. கெட்டுப் போவதைப் பார்த்து நமக்கு என்ன கவலை? எஸ்.கே.வைப் பார்த்து அரசியல் செய்பவர்கள் கெட்டுப் போய் விடுவார்களோ என்றுதான் கவலையாக இருக்கிறது!

*****

வன்புணர்ச்சியாளர்களுக்கு மனதார நன்றி

வன்புணர்ச்சியாளர்களுக்கு மனதார நன்றி
அந்த வன்புணர்ச்சிக்குப் பின்
டிராகுலாக்களை நேசிக்கத் தொடங்கி விட்டாள்
மென்மைக்கு உவமிக்கப்பட்ட அவள்
மனம் முழுதும் இருளின் கோரப் பிசாசுகள்
தன்னோடு சிநேகம் பாராட்டுவதாக சொல்கிறாள்
கத்திகளை ஸ்பூன் போல் உபயோகித்து
சாப்பிட பழகி விட்டதாக
அன்றாட நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறாள்
இந்த மிருகங்களுக்காகத்தான்
இருக்கிறது போலும்
மிருக வதைத் தடுப்புச் சட்டம் என்று
அடிக்கடி சத்தம் போட்டுச் சிரித்துக் கொள்கிறாள்
கருணையற்ற நீதிமன்றங்களின்
குறுக்கு விசாரணையில் நிகழ்ந்த
வார்த்தைகளின் வன்புணர்ச்சிக்குப் பின்
கூண்டில் நின்ற வன்புணர்ச்சியாளர்களை
கருணையோடு பார்த்த அவள்
இவ்வளவு நீண்ட நேரம் வன்புணர்ச்சி செய்யாத
அவர்களுக்கு மனதார நன்றி சொல்லிக் கொண்டாள்.

*****

அழுகையின் கரு

அழுகையின் கரு
ஒரு கருத்தரிப்பு மைய
மருத்துவமனைக்கு
வெளியே உள்ள
குப்பைத் தொட்டியிலிருந்து
நெடுநேரம்
கேட்டுக் கொண்டே இருக்கிறது
உருக்கொள்ள முடியாத
ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம்.

*****

30 Oct 2017

அநீதியின் அரச வடிவங்கள்

அநீதியின் அரச வடிவங்கள்
            அரசு என்பது அனைவர்க்கும் பொது. அது தன்னை விரும்புபவர்கள், விரும்பாதவர்கள் என அனைவர்க்கும் காப்பாக இருக்க வேண்டும். ஆப்பாக இருக்கக் கூடாது.
            ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் வரை அனைவர்க்கும் நல்லாட்சியை வழங்குவோம் என்ற வாக்குறுதியை வழங்குபவர்கள், ஆட்சிப் பொறுப்பேற்றதும் மதவாத அல்லது இனவாதத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஆட்சியையே வழங்குகிறார்கள்.
            அரச முகம் இப்படித்தான் நாரகாச கோர முகமாக மாறுகிறது.
            அது எப்படி அப்படி மாறுகிறது என்றால்...
            அரசுகளின் அதிகாரப் பிடியிலான அசுர வளர்ச்சி தற்போது தனக்குப் பிடிக்காதவர்களை அகதிகளாக வெளியேற்றுகிறது. அதற்கு எதிர்ப்புக் கிளம்பும் போது அகதிகளாக வெளியேற்ற வேண்டியவர்களை தன் நாட்டிலே தங்க வைத்து கமுக்கமாக குடும்பக் கட்டுபாடு செய்ய வைக்கின்றன.
            மியான்மரில் ரோஹிங்கியா இனத்தவருக்கு தற்போது இதுதான் நேர்கிறது.
            இன ஒழிப்பு,
            ரசாயன குண்டு வீச்சு,
            அணுகுண்டு வீச்சு,
            குடும்பக் கட்டுபாட்டு வதை இவைகள் எல்லாம் வடிவங்களால் வேறுபட்டிருக்கலாம். வன்முறையின் வன்கொடுமை குணாதிசயத்தால் ஒன்றே!
            மக்கள் அனைவரும் ஓரினம் என்ற பார்வை மாறி ஓரினத்தைச் சார்ந்தவர்களே மக்கள் என்ற எதேச்சதிகாரத்தோடு மற்ற இனத்தைச் சார்ந்தவர்கள் சாவின் விளிம்பில் தள்ளப்படுவதற்கும், நாம் காட்டுமிராண்டிகளாய் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்ததற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்?!

*****

புதிய புத்தனின் நிர்வாண நடனம்

புதிய புத்தனின் நிர்வாண நடனம்
பெரிய தோட்ட அரண்மனையின்
சொகுசுகள், வசதிகள், பாதுகாப்புகள்,
அந்தஸ்துகள் அனைத்தையும்
பார்த்த பின்பு
வெளியேற மறுத்து விட்டான்
புதிய புத்தன்.
கமிஷன் ஏஜெண்டுகள் புழங்க,
வஞ்சப் புகழ்ச்சி பாடும் பச்சோந்திகள் விளங்க
நகை, கரன்சிகள், பங்குப் பத்திரங்கள் துலங்க
நள்ளிரவு வேளையில்
தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வதற்கென
நள்ளிரவில் மட்டும் யாருக்கும் தெரியாமல்
நிர்வாண நடனம் ஆடிக் கொள்கிறான்.

*****

சாட்சி பாவம்

சாட்சி பாவம்
கத்தியால் குத்தி விட்டு
தப்பிக் கொண்டிருந்தனர்
 கொலைகாரர்கள்
ஒவ்வொருவரையும்
சாட்சிப் பூர்வமாகப்
பார்த்துக் கொண்டிருந்தது
காக்கி உடுப்பிலிருந்த
ஒரு கருப்புத் துப்பாக்கி.

*****

29 Oct 2017

மனத்தளைகளுக்கு ஒரு பரிகாரம்

மனத்தளைகளுக்கு ஒரு பரிகாரம்
            யாரிடமும் அந்தரங்க ஆசைகளைக் கேட்காமல் இருப்பது ஒரு பக்குவமான மனநிலை. அது ஒரு மடத்தனம் என்று தெரிந்தும் அந்த மடத்தனத்தைப் பக்குவமற்ற மனநிலை செய்ய வைத்து விடுகிறது.
            அந்த ஆசைகள் நிறைவேறுவதால் மனம் இலகு ஆவதாக மனது நினைத்துக் கொள்கிறது. எந்த ஆசைகள் நிறைவேறிய போதும் மனம் சோர்வாகத்தான் இருக்கும். அதற்குக் காரணம் மனத்தளைகளில் சிக்கிக் கொள்ளும் மனம்தான். அதுவே அப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனை என்பதே ஒரு மனத்தளைதான்.
            மனத்தளைகளே மனச்சோர்விற்குக் காரணம். இந்தத் தளைகளிலிருந்து எப்போது வெளிவருகிறோமோ அப்போதே அந்தத் தளைகளும் தகர்ந்து விடுகிறது.
            மனத்தளைகள் அவரவர் உருவாக்கிக் கொள்ளும் மனப்பான்மைகளாலும், மனோ உலகத்தாலும் ஏற்படுபவைகள். ஒரு எளிய விதி என்னவென்றால் நாமாக ஏற்படுத்திக் கொண்டவைகள் எவைகளோ, அவைகளை நாமாக அழிக்கவும் முடியும்.

*****

கருணை

கருணை
துரு பிடிக்காத கத்தியைச் செருகும்
இவன்
கருணையுள்ள கொலைகாரன்.
துருபிடித்த கத்தியைச் செருகும்
அவன்
கருணையற்ற கொலைகாரன்.
கத்தியால் குத்தும்
கொலைகாரர்கள் பெருகி விட்ட
பெரு நகர வீதியில்
நாலு மூலை முக்கில்
வீற்றிருக்கும் விநாயகரிடம்
கண்ணீர் மல்க
வேண்டிக் கொள்ளுங்கள்
தக்கன தப்பி பிழைப்பதற்கு
கருணையுள்ள கொலைகாரனின் கத்தியில்
குத்துப்படுவதாக என்று.

*****

கொலைக்கள காதை

கொலைக்கள காதை
சற்று முன் கொலை நடந்த இடம்
என்று சொன்னால் நம்புவது சிரமம்
ரத்தக் கறைகளின் பயமுறுத்தலைப்
பொருட்படுத்தாமல் விரைகின்றன வாகனங்கள்
போலீஸ் வரைந்து சென்ற சாக்கட்டி
கோட்டோவியத்தை
நக்கலடித்தபடி நடக்கின்றனர் பொது ஜனங்கள்
"ஒன்றரை மணி நேரம் வியாபாரம் போச்சு!"
என்று கொலை நிகழ்ந்த பிரதேசத்தைக்
கரித்து கொட்டி விட்டு
வருகின்ற வாடிக்கையாளரைத்
தக்க வைப்பதில் முனைகிறார் வியாபாரி
வாரத்துக்கு ஆறு கொலை விழும் பொதுவிடத்தில்
கொலை நிகழா ஒற்றை நாளை
அதற்கான விடுமுறை நாளாக பகடி செய்கின்றனர்
அதனொடு தொடர்பில்லாதவர்கள் போல்
காட்டிக் கொள்ளும் தொடர்பு கொண்டவர்கள்.
நேற்று நிகழ்ந்த ஒரு கொலையோடும்
நாளை நிகழப் போகும் ஒரு கொலையோடும் ஒப்பிட்டு
இன்று நிகழ்ந்த கொலையைப் பேசுவதோடு
முடிந்து போகுமிந்த
பெருநகரத்தின் அன்றாடக் கொலைகளின் ஊடே
மறுநாள் வீசுவதற்கான பட்டாக்கத்தியின்
சாணை பிடிக்கும் பொறியில் விடியும் சுலுவாக
அதிகாலையிலே சிவப்பைக் கக்கும் சூரியன்.

*****

28 Oct 2017

மனத்துக்குள் வாழ்தல்

மனத்துக்குள் வாழ்தல்
            இந்த லோகத்தில் நாம் ஒன்று சொன்னால் அவர்கள் ஒன்று செய்வார்கள். அதாவது அவர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்ததான் செய்வார்கள். யார் சொல்வதைச் செய்யவும் யாரும் பிரியப்படுவதில்லை.
            அவர்கள் செய்வதைச் செய்கிறார்கள். சொன்னதை ஏன் செய்யவில்லை என்றால் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். அவர்கள் செய்ததுதான் சரி என்று உலக மகா வாதங்களை அடுக்குவார்கள். இப்படிப்பட்டவர்களிடம் எதுவும் சொல்லாமல் இருப்பதுதான் நல்லது. நாமும் எதுவும் சொல்லவில்லை, அவர்களும் அதனால் செய்யவில்லை என்ற மனநிம்மதியாவது இருக்கும்.
            எஸ்.கே. இப்படித்தான் காலத்தை ஓட்டி வருகிறான். யாரிடமும் எதுவும் சொல்லாமல் அவன் காலம் ஓடுகிறது.
            மனதிற்குள் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்கிறான். கோபப்பட்டுக் கொள்கிறான். திட்டிக் கொள்கிறான். கேவலமாக கருதிக் கொள்கிறான். பரிகாசம் பண்ணிக் கொள்கிறான். எல்லாம் மனதிற்குள்ளாக, மனதிற்குள்ளாக மட்டுமே. எதையும் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. அதை ஒரு காரணமாக வைத்துக் கொண்டு பகை கொள்ளவும், பழி தீர்க்கவும் இந்த மனிதர்கள் மிக மோசமாக தயாராக இருப்பதாக எஸ்.கே. கருதிக் கொண்டு இருக்கிறான்.

*****

பரம்பரை ஜீனிலிருந்து ஒரு சம்பவம்

பரம்பரை ஜீனிலிருந்து ஒரு சம்பவம்
தள்ளாடி மயங்கி
குறை ரத்த அழுத்தத்தால்
கண்கள் சொருக
கையில் பூவட்டோடு
நடந்து செல்லும்
குண்டு மல்லியோடு முல்லைச் சரமுமாக
பூவிற்கும் மூதாட்டியின்
அருகே ஓரம் கட்டி
காரில் ஏற்றிச் செல்லும் அவன்
பாரியின் பரம்பரையாகவும் இருக்கலாம்.

*****

பூவை வெறுத்த பூவையர்கள்

பூவை வெறுத்த பூவையர்கள்
ஒரு குடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ  பூத்துச்சாம்!
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி
ரெண்டு பூ பூத்துச்சாம்!
மூணு குடம் தண்ணி ஊத்தி
மூணு பூ பூத்துச்சாம்!
பத்து ரூபாய் கொடுத்து வாங்கி
ஒரு பூவுக்காக
ஒரு குடம் தண்ணி ஊத்த
ஒரு ரூபாய் கொடுத்து
ஒரு ப்ளாஸ்டிக் பூவைச் சூடும்
எந்த மகராசிக்கும் மனசு வராமல் போச்சுதாம்.
அந்த ஊர்ல பூ பூக்குறதே
இல்லாமல் ஆச்சுதாம்.

*****

27 Oct 2017

சதியைக் கட்டமைக்கும் திட்டமிடல்கள்

சதியைக் கட்டமைக்கும் திட்டமிடல்கள்
            காற்றில் பரவும் நச்சு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எவ்வளவு நச்சுப் பரவினாலும் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம். சுற்றுச்சூழல் மாசுபாடு என்று கவலையும் கொள்கிறோம்.
            கிராமங்களை விட நகர்ப்புறங்களில் காற்றின் நச்சு அதிகம் என்று தெரிந்தும் அங்குதான் மக்கள்தொகை குவிந்த வண்ணம் இருக்கிறது. நகரங்களை விட மாநகரங்களில் அது இன்னும் அதிகம் என்று தெரிந்தாலும் அங்கு குவியும் மக்கள் தொகை அங்கு குவியும் குப்பைகளை விட அதிகம்.
            நகர்ப்புறங்கள் வீங்குகின்றன. கிராமப் புறங்கள் சுருங்குகின்றன. இந்த இடம் பெயர்வே வளர்ச்சி என்று சிலாகிக்கப்படுகிறது.
            கிராமங்கள் கைவிடப்படுவதும், நகரங்கள் வளர்க்கப்படுவதும் தன்னிறைவான வாழ்க்கை என்ற வாழ்வியல் முறையிலிருந்து மனிதர்களைப் பிரித்தெடுக்கிறது. தண்ணீர் குடித்தல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் என்ற வாழ்வியல் அடிப்படை ஒவ்வொன்றிற்கும் ஒரு தொகையை எடுத்து வைத்தப் பின்னரே அங்கு நிம்மதியாக சுவாசிக்க முடிகிறது.
            நகரங்களில் அலையும் மனிதர்களுள் சிறுநீரை அடக்கிக் கொண்டு திரியும் மனிதர்கள் எத்தனை? மலத்தை அடக்கிக் கொண்டு அலையும் மனிதர்கள் எத்தனை? தாகத்தைப் போக்கிக் கொள்ள முடியாமல் சகித்துக் கொண்டு செல்லும் மனிதர்கள் எத்தனை? என்று கணக்கெடுத்துப் பார்த்தால் நமது நகரத் திட்டமிடல் நன்கு விளங்கும்.
            நகரங்கள் உருவாவதில் திட்டமிடல் இருக்கிறது. அது இவ்வளவு மோசமாக காசு பண்ணுவதை மட்டும் குறியாகக் கொண்டு அமைவதை எப்படி நமக்கு மேலிருக்கும் நிர்வாக அமைப்புகள் மற்றும் அவைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அமைப்புகள் அனுமதிக்கின்றன என்பதுதான் புரியவில்லை.

*****

மாபெரும் வணக்கம்

மாபெரும் வணக்கம்
எழுநூறு ரூவா சிலிண்டர்க்கும்
பத்து ரூவா கொடுத்து வாங்கும்
நூறு மில்லி மண்ணெண்ணெய்க்கும்
வக்கில்லாத போது
சீமைக் கருவேல முள்ளே
விலையில்லா விறகாயிருந்தது.
நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சும்
சீமைக் கருவேல மரங்களைப்
பிடுங்கிப் போடும் ஊருக்குள்
ஆழ்துளை கிணறு போட்டு
நீர் உறிஞ்சும் ராட்சச எந்திரங்கள்,
மீத்தேன் என்றும் ஹைட்ரோ கார்பன் என்றும்
உறிஞ்சித் தள்ளும் குழாய்களின் வேர்கள்
இருப்பது தெரிந்தும்
நாம் எதைப் பிடுங்க வேண்டும் என்று
அவர்கள் முடிவு செய்ய
இப்போதைக்கு அவர்கள் சொன்னபடி
உதட்டுக்கு மேல் இருக்கும்
அவரவர் முடிகளை அவரவர்கள்
பிடுங்கிக் கொண்டே
நட்ட மரங்களுக்கு ஊற்ற
நீரில்லாத சோகத்தில்
நீருற்ற தேவையில்லாத
மரங்களையும் பிடுங்கி எறிந்து விட்டு
அவர்களுக்கு ஒரு மாபெரும் வணக்கம் வைப்போம்
மைக்ரோ வேவ் அவனிலும்
மின் அடுப்பிலும்
யூனிட்டுக்கு நூறு ரூபாய் கொடுத்து
கஞ்சி சமைக்கலாம் என்ற வாக்குறுதியை ஏற்றுக் கொண்டு.

*****

மாபெரும் சகிப்புத் தன்மை

மாபெரும் சகிப்புத் தன்மை
உன் காதல் என்னை விரும்பச் செய்யும்
நான் சுயநலமுள்ள மனித மிருகம் என்று
தெரிந்த பின்னும்.
டாஸ்மாக் வெறியனாகி
வேளைதோறும் குடிப்பதும்
குடிகாரனின் ஆணவத்தோடு
உன்னை அடிப்பதும்
அன்றாட நிகழ்வுகள் ஆன பின்னும்
என்றோ ஒரு நாள் திருந்து விடுவேன்
என்ற நம்பிக்கை
என்னை உன்னில் ஏற்கச் செய்யும்.
மனைவியென்ற உரிமையில்
வன்புணர்ச்சி செய்த நாட்களிலும்
உன் அன்பு என்னை திக்குமுக்காடச் செய்யும்.
பொறுமைக்கென்றே பிறந்தவளான நீ
அடிக்கடிச் சொல்லிக் கொள்கிறாய்
ஒரு சுமங்கலியின் ஆசை துறந்து
"நான் முந்தி போய்ட்டா
அவருக்கு அடிப்பதற்குக் கூட ஆளிருக்காது!"
அந்த அக்கறையில் நீ காட்டுவதெல்லாம்
ஒட்டு மொத்த டாஸ்மாக்குகளையும்
ஒரு புருஷ மிருகத்தையும்
பொறுத்துக் கொண்ட மாபெரும் சகிப்புத் தன்மை.

*****

26 Oct 2017

பிழைப்புக்கு சில மார்க்கங்கள்!

பிழைப்புக்கு சில மார்க்கங்கள்!
            அன்று எஸ்.கே. தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினார். அது மற்றவர்களுக்குப் பயன்படலாம் என்பதால் அவரின் அனுமதியின்றி இங்கு அப்படியே பிரசுரிக்கப்படுகிறது.
            ஒரு சிலர் செய்வதெல்லாம் கோபப்படுத்துவது போலத்தான் உள்ளது. ஆனால் கோபப்படக் கூடாது. பிறகு உன் கோபத்தால்தான் எல்லாம் தவறாக நிகழ்ந்தது என்று எல்லாவற்றையும் திருப்பிப் போட்டு விடுவார்கள். கோபப்படுவதில் இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கிறது.
            சிலர் அப்படித்தான். ஆனால் ஏன் கோபப்பட நேரிடுகிறது? யாருக்கு உன் கருத்தோட்டம் பிடிக்கவில்லையோ அவர்களிடம் போய் உன் கருத்துகளைக் கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. குறிப்பாக உனக்கும் உன்னோடு தொடர்புடைய ஏழாம் பொருத்தம் உள்ள ஒருவருக்கும் அப்படித்தான் நேரும். அப்படிப்பட்ட ஒருவர் உன் எந்தக் கருத்தையும் ஏற்கப் போவதில்லை. அப்படிப்பட்டவர் அவர் மனம் போன போக்கில்தான் நடக்கப் போகிறார். அவரிடம் போய் ஏன் கருத்துகளைக் கூறிக் கொண்டு இருக்க வேண்டும்? அதனால் உன்னை ஏன் நீயே கோபப்படுத்திக் கொள்ள வேண்டும்?
            எத்தனையோ சம்பவங்களில் உண்மையென நிரூபணம் ஆன உண்மை இது. இப்போது இருக்கும் நிலையை கோபம் ஒரு போதும் சீர்குலைத்து விடக் கூடாது. மாற்ற நினைக்கிறேன் என்று இருக்கின்ற சுமூகமானச் சூழ்நிலையைக் குட்டிச் சுவராக்கி விடக் கூடாதே.
            சில நேரங்களில் நிலைமை நேர்மாறாகி அப்படித்தான் நேர்கிறது. அவர்களைப் பாட்டுக்கு அவர்களின் போக்குக்கு விட்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டு இருக்காது. அவர்களைச் சீர்திருத்தப் போகிறேன் என்று ஆரம்பித்து இருந்த சூழ்நிலையும் நிலைகெட்டுப் போனதுதான் மிச்சமாக ஆவதும் உண்டு.
            உண்மையில் சக்தி வாய்ந்தவர்கள் செய்வதெல்லாம் அமைதியாக இருப்பதுதான். அமைதியாக இருப்பதுதான் சக்தி வாய்ந்த செயல்.
            நீ மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாய். அது ஏமாற்றமாகி விட்டால் கோபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் நீ ஏன் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று கோபப்பட்டு என் உடல்நிலையைப் பாதித்துக் கொள்ள வேண்டும்? நிகழ்கின்ற மாற்றங்கள் தானாக நிகழும். அலட்டிக் கொள்ளவே வேண்டியதில்லை.
            நீ சொல்கின்றபடி, நீ நினைக்கின்றபடி அவர்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய். அவர்கள் அப்படி நடக்காத போது உனக்குக் கோபம் ஏற்படுகிறது. அதனால் யாருக்கும் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காதே. அவர்கள் போக்கிற்கு நடக்கட்டும். உனக்கும் கோபம் ஏற்படாமல் இருக்கட்டும். அதுவே போதுமானது. ஏனென்றால் அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் நீ குறுக்கிட முடியாது. ஏதோ சில நேரங்களில் சில ஆலோசனைகளைச் சொல்லலாம். மற்றபடி அவர்களின் முழு வாழ்க்கைக்கும் அவர்களே பொறுப்பு.
            ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. அதில் புகுந்து மாற்றங்களை விதைப்பது என்பது சாமான்யப்பட்ட வேலை இல்லை. அவர்களை மாற்றுவதாக நினைத்துக் கொண்டு அவர்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளும் சம்பவங்கள்தான் உன்னைப் பொருத்த வரையில் நிறைய நிகழ்கின்றன. அவர்களை அவர்களின் போக்கிற்கு விட்டு விட்டால் யாரும் உன்னைப் பகைத்துக் கொள்ளப் போவதில்லை. உனக்கும் தேவையற்ற மன இறுக்கமும் ஏற்படப் போவதில்லை.
            அவர்களின் சூழ்நிலை, மனநிலை அவர்களுக்குத்தான் தெரியும். அதை அவ்வளவு சுருதி சுத்தமாகப் புரிந்து கொண்டோம் என்று சொல்லி விட முடியாது. மேலும் தேவையில்லாமல் அவர்களின் வாழ்வில் புகுந்து கருத்துச் சொல்லி அவர்களைச் சிரமத்துக்கும் ஆளாக்க வேண்டியதுமில்லை.
            உன்னைச் சுற்றியுள்ளவர்கள் மேல் உனக்குக் கோபம் ஏற்பட முதன்மையான காரணம், அவர்கள் நீ சொல்கின்ற எதையும் கேட்பதில்லை. அது தேவையுமில்லை. ஏன் அவர்கள் நீ சொல்வதைக் கேட்க வேண்டும்? நீ சொல்வதைக் கேட்டால் அவர்களுக்கு நன்மை நடக்கும் என்று நினைக்கிறாய். அவர்கள் அப்படி நினைக்கிறார்களா? நீ சொல்வதைக் கேட்டால் அவர்களுக்குத் தேவையில்லாத சிரமங்கள் ஏற்படும் என்று அல்லவா நினைக்கிறார்கள்.
            அவர்களுக்கு அறிவுரை சொல்லி நீ டென்சன் ஆவதற்கு அவர்களுக்கு அறிவுரைச் சொல்லாமல் நான் ரிலாக்ஸ்டாகவாவது இருக்கலாம். பொதுவாக அறிவுரை சொல்பவர்க்கு இப்படிப்பட்ட நிலைதான் ஏற்படும். அதனால்தான் நீ பெரும்பாலும் முன்பெல்லாம் யாருக்கும் அறிவுரை சொல்லாமல் இருந்த போது மிகுந்து மகிழ்ச்சியாக இருந்தாய். உன் கிரகம், இப்போது உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு  அறிவுரை சொல்கிறேன் என்று பேர்வழி என்று ஆரம்பித்து நரக வேதனையை அனுபவிக்கிறாய்.
            இறுதியாக இந்த நாட்குறிப்பைத் தவறுதலாக யாரேனும் படித்து விட்டிருந்தால் படித்தவுடன் கிழித்து விடவும் என்று எஸ்.கே. எழுதியிருந்தார்.
            நீங்கள் எது வேண்டுமானால் செய்யலாம். அது உங்கள் விருப்பம். இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் அதுவும் ஓர் அறிவுரை ஆகி விடலாம் அல்லவா!
*****

மனிதக் கழுகுகளின் சரணாலயம்

மனிதக் கழுகுகளின் சரணாலயம்
பறவைகள் சரணாலயம்
பல்லாயிரம் பறவைகளை
நீருக்காக வரவழைத்து
பேருந்து நிலையமான பிறகு
பல்லாயிரம் மனிதர்களை வரவழைத்தது.
பெட்டிக்கடை புட்டி நீர் வாங்க முடியாத
பறவைகள் தங்கள் வரவை
நிறுத்திக் கொண்ட போது
ஒரு குடம் நீர்
பத்து ரூபாய்க்கு விலை போனது.
அதில் கல்லெடுத்துப் போட்டு
நீர் பருக வெட்கப்பட்ட காக்கை
அமாவாசைக் கணக்கை
அழித்துக் கொண்டு பரதேசம் போயிருந்தது.
சுற்றுலாத தலமான அதில்
பாடம் செய்யப்பட்ட பறவைகளும்
கடைகள் தோறும் பறவை பொம்மைகளும்
ஏமாற்றம் தணிக்க
வாட்டர் பாட்டிலோடு
வந்து வந்து போய்க் கொண்டிருக்கின்றன
மேகப் பறவைகளையும், மரச் சிறகுகளையும் அழித்த
மனிதக் கழுகுகள்.

*****

அழைப்பிதழின் வெளிப்பாடு

அழைப்பிதழின் வெளிப்பாடு
தன் மகளின் பிறந்த நாள் அழைப்பிதழை
அனுப்பியிருந்தாள் அவள்
அவள் திருமணத்துக்கு அழைக்காததைப்
பொருட்படுத்த முடியாது
காதலனே அட்சதைத் தூவுவதை
அவள் விரும்பாதிருந்திருக்கலாம்
தன் மகளின் முதலாவது பிறந்த நாளுக்கு
மறக்காது அவள்
அனுப்பியிருக்கும் அழைப்பிதழ்
மகளைப் போல
நான் அவளை நேசித்ததன் வெளிப்பாடாக இருக்கலாம்.
அவள் பிரசவித்த
என் பிரியமான குட்டிக் காதலியைக் காண்பதற்கான
அழைப்பாகவும் இருக்கலாம்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...