26 Oct 2017

பிழைப்புக்கு சில மார்க்கங்கள்!

பிழைப்புக்கு சில மார்க்கங்கள்!
            அன்று எஸ்.கே. தன் நாட்குறிப்பில் இப்படி எழுதினார். அது மற்றவர்களுக்குப் பயன்படலாம் என்பதால் அவரின் அனுமதியின்றி இங்கு அப்படியே பிரசுரிக்கப்படுகிறது.
            ஒரு சிலர் செய்வதெல்லாம் கோபப்படுத்துவது போலத்தான் உள்ளது. ஆனால் கோபப்படக் கூடாது. பிறகு உன் கோபத்தால்தான் எல்லாம் தவறாக நிகழ்ந்தது என்று எல்லாவற்றையும் திருப்பிப் போட்டு விடுவார்கள். கோபப்படுவதில் இப்படி ஒரு பிரச்சனையும் இருக்கிறது.
            சிலர் அப்படித்தான். ஆனால் ஏன் கோபப்பட நேரிடுகிறது? யாருக்கு உன் கருத்தோட்டம் பிடிக்கவில்லையோ அவர்களிடம் போய் உன் கருத்துகளைக் கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. குறிப்பாக உனக்கும் உன்னோடு தொடர்புடைய ஏழாம் பொருத்தம் உள்ள ஒருவருக்கும் அப்படித்தான் நேரும். அப்படிப்பட்ட ஒருவர் உன் எந்தக் கருத்தையும் ஏற்கப் போவதில்லை. அப்படிப்பட்டவர் அவர் மனம் போன போக்கில்தான் நடக்கப் போகிறார். அவரிடம் போய் ஏன் கருத்துகளைக் கூறிக் கொண்டு இருக்க வேண்டும்? அதனால் உன்னை ஏன் நீயே கோபப்படுத்திக் கொள்ள வேண்டும்?
            எத்தனையோ சம்பவங்களில் உண்மையென நிரூபணம் ஆன உண்மை இது. இப்போது இருக்கும் நிலையை கோபம் ஒரு போதும் சீர்குலைத்து விடக் கூடாது. மாற்ற நினைக்கிறேன் என்று இருக்கின்ற சுமூகமானச் சூழ்நிலையைக் குட்டிச் சுவராக்கி விடக் கூடாதே.
            சில நேரங்களில் நிலைமை நேர்மாறாகி அப்படித்தான் நேர்கிறது. அவர்களைப் பாட்டுக்கு அவர்களின் போக்குக்கு விட்டிருந்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்பட்டு இருக்காது. அவர்களைச் சீர்திருத்தப் போகிறேன் என்று ஆரம்பித்து இருந்த சூழ்நிலையும் நிலைகெட்டுப் போனதுதான் மிச்சமாக ஆவதும் உண்டு.
            உண்மையில் சக்தி வாய்ந்தவர்கள் செய்வதெல்லாம் அமைதியாக இருப்பதுதான். அமைதியாக இருப்பதுதான் சக்தி வாய்ந்த செயல்.
            நீ மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாய். அது ஏமாற்றமாகி விட்டால் கோபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் நீ ஏன் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று கோபப்பட்டு என் உடல்நிலையைப் பாதித்துக் கொள்ள வேண்டும்? நிகழ்கின்ற மாற்றங்கள் தானாக நிகழும். அலட்டிக் கொள்ளவே வேண்டியதில்லை.
            நீ சொல்கின்றபடி, நீ நினைக்கின்றபடி அவர்கள் நடக்க வேண்டும் என்று நினைக்கிறாய். அவர்கள் அப்படி நடக்காத போது உனக்குக் கோபம் ஏற்படுகிறது. அதனால் யாருக்கும் இப்படி நடக்க வேண்டும், அப்படி நடக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காதே. அவர்கள் போக்கிற்கு நடக்கட்டும். உனக்கும் கோபம் ஏற்படாமல் இருக்கட்டும். அதுவே போதுமானது. ஏனென்றால் அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் நீ குறுக்கிட முடியாது. ஏதோ சில நேரங்களில் சில ஆலோசனைகளைச் சொல்லலாம். மற்றபடி அவர்களின் முழு வாழ்க்கைக்கும் அவர்களே பொறுப்பு.
            ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கிறது. அதில் புகுந்து மாற்றங்களை விதைப்பது என்பது சாமான்யப்பட்ட வேலை இல்லை. அவர்களை மாற்றுவதாக நினைத்துக் கொண்டு அவர்களின் பகைமையைச் சம்பாதித்துக் கொள்ளும் சம்பவங்கள்தான் உன்னைப் பொருத்த வரையில் நிறைய நிகழ்கின்றன. அவர்களை அவர்களின் போக்கிற்கு விட்டு விட்டால் யாரும் உன்னைப் பகைத்துக் கொள்ளப் போவதில்லை. உனக்கும் தேவையற்ற மன இறுக்கமும் ஏற்படப் போவதில்லை.
            அவர்களின் சூழ்நிலை, மனநிலை அவர்களுக்குத்தான் தெரியும். அதை அவ்வளவு சுருதி சுத்தமாகப் புரிந்து கொண்டோம் என்று சொல்லி விட முடியாது. மேலும் தேவையில்லாமல் அவர்களின் வாழ்வில் புகுந்து கருத்துச் சொல்லி அவர்களைச் சிரமத்துக்கும் ஆளாக்க வேண்டியதுமில்லை.
            உன்னைச் சுற்றியுள்ளவர்கள் மேல் உனக்குக் கோபம் ஏற்பட முதன்மையான காரணம், அவர்கள் நீ சொல்கின்ற எதையும் கேட்பதில்லை. அது தேவையுமில்லை. ஏன் அவர்கள் நீ சொல்வதைக் கேட்க வேண்டும்? நீ சொல்வதைக் கேட்டால் அவர்களுக்கு நன்மை நடக்கும் என்று நினைக்கிறாய். அவர்கள் அப்படி நினைக்கிறார்களா? நீ சொல்வதைக் கேட்டால் அவர்களுக்குத் தேவையில்லாத சிரமங்கள் ஏற்படும் என்று அல்லவா நினைக்கிறார்கள்.
            அவர்களுக்கு அறிவுரை சொல்லி நீ டென்சன் ஆவதற்கு அவர்களுக்கு அறிவுரைச் சொல்லாமல் நான் ரிலாக்ஸ்டாகவாவது இருக்கலாம். பொதுவாக அறிவுரை சொல்பவர்க்கு இப்படிப்பட்ட நிலைதான் ஏற்படும். அதனால்தான் நீ பெரும்பாலும் முன்பெல்லாம் யாருக்கும் அறிவுரை சொல்லாமல் இருந்த போது மிகுந்து மகிழ்ச்சியாக இருந்தாய். உன் கிரகம், இப்போது உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு  அறிவுரை சொல்கிறேன் என்று பேர்வழி என்று ஆரம்பித்து நரக வேதனையை அனுபவிக்கிறாய்.
            இறுதியாக இந்த நாட்குறிப்பைத் தவறுதலாக யாரேனும் படித்து விட்டிருந்தால் படித்தவுடன் கிழித்து விடவும் என்று எஸ்.கே. எழுதியிருந்தார்.
            நீங்கள் எது வேண்டுமானால் செய்யலாம். அது உங்கள் விருப்பம். இப்படித்தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் அதுவும் ஓர் அறிவுரை ஆகி விடலாம் அல்லவா!
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...