29 Oct 2017

கொலைக்கள காதை

கொலைக்கள காதை
சற்று முன் கொலை நடந்த இடம்
என்று சொன்னால் நம்புவது சிரமம்
ரத்தக் கறைகளின் பயமுறுத்தலைப்
பொருட்படுத்தாமல் விரைகின்றன வாகனங்கள்
போலீஸ் வரைந்து சென்ற சாக்கட்டி
கோட்டோவியத்தை
நக்கலடித்தபடி நடக்கின்றனர் பொது ஜனங்கள்
"ஒன்றரை மணி நேரம் வியாபாரம் போச்சு!"
என்று கொலை நிகழ்ந்த பிரதேசத்தைக்
கரித்து கொட்டி விட்டு
வருகின்ற வாடிக்கையாளரைத்
தக்க வைப்பதில் முனைகிறார் வியாபாரி
வாரத்துக்கு ஆறு கொலை விழும் பொதுவிடத்தில்
கொலை நிகழா ஒற்றை நாளை
அதற்கான விடுமுறை நாளாக பகடி செய்கின்றனர்
அதனொடு தொடர்பில்லாதவர்கள் போல்
காட்டிக் கொள்ளும் தொடர்பு கொண்டவர்கள்.
நேற்று நிகழ்ந்த ஒரு கொலையோடும்
நாளை நிகழப் போகும் ஒரு கொலையோடும் ஒப்பிட்டு
இன்று நிகழ்ந்த கொலையைப் பேசுவதோடு
முடிந்து போகுமிந்த
பெருநகரத்தின் அன்றாடக் கொலைகளின் ஊடே
மறுநாள் வீசுவதற்கான பட்டாக்கத்தியின்
சாணை பிடிக்கும் பொறியில் விடியும் சுலுவாக
அதிகாலையிலே சிவப்பைக் கக்கும் சூரியன்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...