மனிதக் கழுகுகளின் சரணாலயம்
பறவைகள் சரணாலயம்
பல்லாயிரம்
பறவைகளை
நீருக்காக
வரவழைத்து
பேருந்து நிலையமான
பிறகு
பல்லாயிரம்
மனிதர்களை வரவழைத்தது.
பெட்டிக்கடை
புட்டி நீர் வாங்க முடியாத
பறவைகள் தங்கள்
வரவை
நிறுத்திக்
கொண்ட போது
ஒரு குடம்
நீர்
பத்து ரூபாய்க்கு
விலை போனது.
அதில் கல்லெடுத்துப்
போட்டு
நீர் பருக
வெட்கப்பட்ட காக்கை
அமாவாசைக்
கணக்கை
அழித்துக்
கொண்டு பரதேசம் போயிருந்தது.
சுற்றுலாத
தலமான அதில்
பாடம் செய்யப்பட்ட
பறவைகளும்
கடைகள் தோறும்
பறவை பொம்மைகளும்
ஏமாற்றம் தணிக்க
வாட்டர் பாட்டிலோடு
வந்து வந்து
போய்க் கொண்டிருக்கின்றன
மேகப் பறவைகளையும்,
மரச் சிறகுகளையும் அழித்த
மனிதக் கழுகுகள்.
*****
No comments:
Post a Comment