சதியைக் கட்டமைக்கும் திட்டமிடல்கள்
காற்றில் பரவும் நச்சு தொடர்ந்து அதிகரித்து
வருகிறது. எவ்வளவு நச்சுப் பரவினாலும் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அதை ஏற்றுக் கொள்கிறோம்.
சுற்றுச்சூழல் மாசுபாடு என்று கவலையும் கொள்கிறோம்.
கிராமங்களை விட நகர்ப்புறங்களில் காற்றின்
நச்சு அதிகம் என்று தெரிந்தும் அங்குதான் மக்கள்தொகை குவிந்த வண்ணம் இருக்கிறது. நகரங்களை
விட மாநகரங்களில் அது இன்னும் அதிகம் என்று தெரிந்தாலும் அங்கு குவியும் மக்கள் தொகை
அங்கு குவியும் குப்பைகளை விட அதிகம்.
நகர்ப்புறங்கள் வீங்குகின்றன. கிராமப்
புறங்கள் சுருங்குகின்றன. இந்த இடம் பெயர்வே வளர்ச்சி என்று சிலாகிக்கப்படுகிறது.
கிராமங்கள் கைவிடப்படுவதும், நகரங்கள்
வளர்க்கப்படுவதும் தன்னிறைவான வாழ்க்கை என்ற வாழ்வியல் முறையிலிருந்து மனிதர்களைப்
பிரித்தெடுக்கிறது. தண்ணீர் குடித்தல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல் என்ற வாழ்வியல்
அடிப்படை ஒவ்வொன்றிற்கும் ஒரு தொகையை எடுத்து வைத்தப் பின்னரே அங்கு நிம்மதியாக சுவாசிக்க
முடிகிறது.
நகரங்களில் அலையும் மனிதர்களுள் சிறுநீரை
அடக்கிக் கொண்டு திரியும் மனிதர்கள் எத்தனை? மலத்தை அடக்கிக் கொண்டு அலையும் மனிதர்கள்
எத்தனை? தாகத்தைப் போக்கிக் கொள்ள முடியாமல் சகித்துக் கொண்டு செல்லும் மனிதர்கள்
எத்தனை? என்று கணக்கெடுத்துப் பார்த்தால் நமது நகரத் திட்டமிடல் நன்கு விளங்கும்.
நகரங்கள் உருவாவதில் திட்டமிடல் இருக்கிறது.
அது இவ்வளவு மோசமாக காசு பண்ணுவதை மட்டும் குறியாகக் கொண்டு அமைவதை எப்படி நமக்கு
மேலிருக்கும் நிர்வாக அமைப்புகள் மற்றும் அவைகளை ஒழுங்குபடுத்த வேண்டிய அமைப்புகள்
அனுமதிக்கின்றன என்பதுதான் புரியவில்லை.
*****
No comments:
Post a Comment