31 Aug 2017

முடிவில்லாத முடிவாளன் ஒருவன்

முடிவில்லாத முடிவாளன் ஒருவன்
            எஸ்.கே.யின் முதன்மையான வாழ்வைச் சிதிலமாக்கி விட்டனர் அந்தப் பாக்குக்கொட்டைக் குடும்பத்தினர். இனியும் அவன் எப்படி பாக்குக்கோட்டை குடும்பத்தாரோடு கொஞ்சிக் கொண்டிருக்க முடியும்?
            எம்.கே. என்பவன் அடிக்கடி அவனிடம் வந்து நகையையும், பணத்தையும் திருப்பித் தந்து விடுவதாகக் கூறிச் செல்கிறான். "சரி! தாருங்கள்!" என்று எஸ்.கே. அவர்களிடம் மண்டியிட்டுக் கெஞ்சிப் பார்க்கிறான். ஆனால் அவர்கள் அதை ஒரு காமெடி போல் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது விளங்க எஸ்.கே.விற்கு இன்னும் நாட்கள் பிடிக்கும்.
            எஸ்.கே.வின் மனதை ஆழம் பார்ப்பதற்காக அதை அவர்கள் செய்கிறார்கள். அதை எஸ்.கே. புரிந்து கொள்ளாது, அவர்கள் எல்லாவற்றையும் தந்து எல்லாவற்றையும் முடித்துக் கொள்ளவே பார்க்கிறார்கள் என்ற மாய விநோத கற்பனையில் வாழ்ந்து வருகிறான். ஆக ஒரு எதிர்பார்ப்பை கருதிக் கொண்டு அது நடக்கவில்லையே என வருந்துகிறான் பாவம்!
            மேலும் சில விசயங்களில் அவன் மட்டும் எப்படி முடிவு செய்ய முடியும்? அவன் வீட்டு நாய், பூனை மற்றும் துடைப்பக்கட்டைகளைக் கலந்து ஆலோசித்து அதன்படிதான் ஒரு முடிவுக்கு வர முடியும். அதனால் இதில் அவசரப்பட்டு நான் முடித்துத் தருகிறேன் என்று வார்த்தையை விட முடியாமல் தவிக்கிறான்.
            எஸ்.கே.யைப் பொருத்த வரையில் இனி எதுவும் இல்லை. எல்லாம் அவரவர்களாகப் பார்த்து ஒரு முடிவு செய்யட்டும். அதுவும் இல்லாமல் அவன் யாருடைய ஆலோசனைகளும் இல்லாமல் இதுவரை எதுவும் செய்தது இல்லை. அவனுக்கு முடிவு என்றால் அலர்ஜி.
            மற்றவர்களிடம் அதை ஒப்படைத்து விட்டு அவர்களைக் கவலைக்கு ஆளாக்கி தப்பித்து விடுவான். எஸ்.கே. அப்படி நினைக்கவில்லை. அப்படி திட்டமிடவில்லை. என்றாலும் அப்படித்தான் நடக்கிறது. அவனது ஜாதகம் அப்படி!

*****

சிரிப்புப் படம்

சிரிப்புப் படம்
            "பர்ஸ்ட்லேர்ந்து லாஸ்ட் வரை ஆடியன்ஸை சிரிக்க வைக்குற மாதிரி ஒரு கதை சொல்லுங்க!" என்று தயாரிப்பாளர் சொன்னதும், "ஒரு பேய்ப்பட கதை இருக்கு சார்!" என்று ஆரம்பித்தார் டைரக்டர்.
*****
நிர்வாகம்
            "நல்லாத்தானே பாடம் நடத்துவாங்க அபி மிஸ்! அவங்கள எதுக்கு மேனேஜ்மென்ட்லேர்ந்து தூக்குனாங்க?"
            "இந்த வருஷம் அவங்களால பத்து அட்மிஷன் கூட கேன்வாஸ் பண்ண முடியலியாம்!"
*****
வேறு வழி
            நேரமாகி விட்டது என்று வேக வேகமாக கிளம்பிய ராஜா வேறு வழியின்றி டிராபிக் சிக்னலில் நின்று நின்று சென்று கொண்டிருந்தான்.
*****
இரு செய்திகள்
            தமிழ்நாட்டில் டெங்கு இல்லை என்ற நேர்காணலுக்குப் பிறகு, டெங்கு காய்ச்சலில் பலியான சிறுமியின் செய்தி ஒளிபரப்பாகிறது.

*****

எத்தனை பதில்கள் வைத்திருக்கிறாய் நீ?

எத்தனை பதில்கள் வைத்திருக்கிறாய் நீ?
            நீ நினைத்த மாதிரி காரியம் நடக்காத போது, உன் மனம் முழுதும் வெறுப்பு நிறையாமல் இருக்குமா? அந்த வெறுப்பை எப்படிக் களைவது என்பது உனக்குத் தெரியுமா?
            உன்னுடைய ஆசையை வைத்துதான் உன்னிடம் பலரும் விளையாடுகிறார்கள் என்பதை நீ அறிந்து இருக்கிறாயா? நீ ஆசைப்படலாம். அதை வெளிப்படையாகக் காட்டுவது என்பது உன் பலகீனத்தைக் காட்டுவது என்பதை புரிந்து கொண்டாயா?
            அதைத் தெரிந்து கொண்டால் அதை வைத்துதான் எதிரிகள் உன்னிடம் போக்குக் காட்டுவார்கள் மற்றும் போங்கு காட்டுவார்கள் என்பதை நீ உணர்கிறாயா?
            ஆக, அது எதிரிகளின் தவறல்ல, அது எதிரிகளின் சுபாவம்.
            இந்த உலகில் ஒவ்வொன்றிற்கும் ஒரு சுபாவம் இருக்கிறது. அந்தச் சுபாவத்தைப் புரிந்து கொள்ளாமல் நீ எதுவும் செய்ய முடியாது என்பதை ஒத்துக் கொள்கிறாயா?
            இதில் எத்தனை கேள்விகளுக்கு உன்னிடம் பதில் இருக்கிறது? நிறைய கேள்விகளுக்குப் பதில் இருக்கிறது என்றால் அது வேறு விசயம். பேசுவதற்கு ஒன்றுமில்லை. நீ இன்னும் மெளனத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்.
            பதில்கள் இல்லை என்றால் நீ நிறைய பதில்களைச் சேகரிக்க வேண்டும். அந்தக் குப்பைகளைச் சேகரித்து எரித்த பின்தான் உனக்கான திருநீற்றை நீ பூசிக் கொள்ள முடியும்.

*****

கடவுள் என்ன செய்கிறார்?

கடவுள் என்ன செய்கிறார்?
இங்கே நீங்கள் கட்டிய கோயில்
பல பேர் கைகளை வெட்டின
பல பேர் கால்களைத் துண்டித்தன
பல பேரைக் கொன்றன
ஒவ்வொரு திருவிழாவும்
அடிதடிகளுடன்
இரத்தச் சுவடுகளுடன் முடிகின்றன
எல்லாம் வல்ல என்று
நீங்கள் சொல்கின்ற
அந்தக் கடவுள்
என்னதான் செய்கிறார்
இவைகளைப் பார்த்துக் கொண்டு?!

*****

ஆகப் பெரும் கொள்கை!

ஆகப் பெரும் கொள்கை!
            எஸ்.கே. அவ்வளவு கோபப்பட்டதில்லை. வேலையை முடிக்க வேண்டும் என்ற வெறுப்பு. அது முடியாமல் இழுத்துக் கொண்டு போகும் நிலை. இவையெல்லாம் சேர்ந்து அவனை அத்தகைய ஒரு நிலைக்கு கொண்டு சென்று விட்டது.
            அன்று காலையில் இட்டிலி வாங்கச் சென்ற போது கோபம் உச்சிக்கேறிய நிலையில்தான் சென்றான். அவனுக்கு யாரேனும் எப்போதும் ஒரு வேலையைச் செய்யச் சொல்லி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அது அவனுக்கு வெறுப்பைத் தருகிறது. சட்னியாகி விடுகிறான்.
            தவிரவும் அவன் டென்ஷன் ஆகி விட்டதை அறிந்தால் சுற்றியுள்ளவர்களுக்குக் கொண்டாட்டம். அவனைச் சீண்டிப் பார்த்து ஆனந்தித்துக் (குஷியாகி) கொள்வார்கள்.
            அவனை இப்படி மன ரீதியாக நையப் புடைத்தால் அது அவனுக்கு வெறுப்பைத்தானே தரும். அப்படித்தான் அவன் வெறுப்புகிறான்.
            அளவுக்கு அதிகமாக நெருங்கினால் இப்படித்தான், அளவுக்கு அதிகமாக விலகிச் செல்வதற்கானப் பிரிவைத் தரும் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.
            ஒன்றில் வெற்றி பெற்று விட்டால் அதே மாதிரி இன்னொன்றில் வெற்றி பெற முடியும் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொள்கிறான்.
            தன்னம்பிக்கையை நம்பிச் செயல்படுவதை விட பொறுமையை நம்பி, அமைதியை நம்பிச் செயல்படுவது நன்று என்று அவன் நினைக்கிறான். நிதானம் என்பது முக்கியமானது அவனது ஆகப் பெரும் கொள்கை.

*****

30 Aug 2017

உங்களை நீங்களே புதிய புள்ளி நோக்கி நகர்த்துங்கள்

உங்களை நீங்களே புதிய புள்ளி நோக்கி நகர்த்துங்கள்
            நல்ல தூக்கத்தைப் போன்ற சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.
            நன்றாக தூங்கி எழுங்கள். மனம் பூஞ்சோலைப் போல் பூத்திருக்கும்.
            நன்றாக தூங்கி எழுந்தவர்கள்தான் நாம். நைட் ஷிப்ட், டே ஷிப்ட் என்று எப்போதோ வந்ததோ அப்போது ஆரம்பித்த வினை.
            நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி, நேரங்கெட்ட நேரத்தில் வேலை பார்த்து என்று வாழ்க்கை முறை மாற ஆரம்பித்தது. இயல்பாக தூங்கும் தன்மையை கிட்டதட்ட இழந்து விட்டோம்.
            டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலுக்கு அடுத்தபடியாக மண்டைக் காய்ச்சலோடு மனிதர்கள் அலைகின்றனர். இப்படி ஒரு பிராண அவஸ்தை தாளாமல் அலைவதற்கு சீரான தூக்கமின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
            தூக்கமின்மை‍ ‍போன்று இன்னொரு பிரச்சனை. எந்த ஒரு முடிவுக்கு வர முடியாத மனதின் முடிவின்மை.
            மனம் அவ்வபோது மாற்றத்திற்கு ஏங்கும். தானாகவே இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் அதே மனதின் இன்னொரு பக்கம் பழைய முறைகளையே விடாது கடைபிடித்தால் போதும் என்று அடம் பிடிக்கும்.
            மனதின் பழைய முறைகள் மனதின் ஒரு பகுதிக்கு சலிப்பாக இருக்கும். சலிப்பாக இருந்தாலும் மனதின் மற்றொரு பகுதிக்கு பழைய முறைகளே போதும் என்ற பிடிவாதமும் இருக்கும், ஒரு பெட்டிக்குள் அடைபட்ட பஞசும் நெருப்பும் போல.
            புதிய முறைகளுக்கு மனம் மாற வேண்டும் என்று நினைக்கும் போது மனதை மனதின் போக்கில் விட்டு விட வேண்டும். அப்போதுதான் அது உற்சாகமாக செயல்படும். புதுப்புது அனுபவங்களும் கிடைக்கும்.
            பழைய நினைவுகளின் இறுக்கங்களும், தோல்வி குறித்த எண்ணங்களும் பின்னோக்கி இழுக்கத்தான் செய்யும்.
            நாம் செல்ல வேண்டியது முன்னோக்கியா அல்லது பின்னோக்கியா என்ற முடிவுதான் நாம் பழக்கம் மாறாமல் அப்படியே இருக்கப் போகிறோமா அல்லது பழக்கத்தை மாற்றி புதிய பழக்கத்தை உருவாக்கிக் கொண்டு முன்னோக்கிப் போகப் போகிறோமா என்பதை முடிவு செய்யும்.
            நல்ல தூக்கம் நம்மை நல்ல முடிவுகளுக்கு இட்டுச் செய்யும். அது நமக்கேற்ற முடிவாக இருக்கும். தீர்க்கமாகவும் இருக்கும்.
            இன்றைய முடிவு குறித்து நேற்றிரவே நாம் சிந்தித்திருக்க வேண்டும். அப்போதுதான் சிந்தனைக்கும் முடிவுக்கு இடையே இயல்பான, இயற்கையான ஒரு நல்ல தூக்கம் வாய்த்திருக்கும்.

*****

அய்(!)டியா!

திடுக்கிடல்
            "ஒரு பேய்க் கதை சொல்லு!" என்று பேத்தி கேட்டதும் திடுக்கிட்டாள் பாட்டி.
*****
புகார்
            "நேத்தி ரேவதி மிஸ் ஹோம் ஒர்க் எதுவும் கொடுக்க!" ‍ஹெட்மிஸ்டரஸிடம் புகார் சொல்லிக் கொண்டிருந்தாள் கீர்த்தனாவின் அம்மா.
*****
அய்(!)டியா!
            "செலவானாலும் பரவாயில்ல. பாலீதீன் உறை வேணாம். துணி உறையில போடுவோம்!" ப்ளாஸ்டிக் அரிசி பீதியில் இருந்த மக்கள் மத்தியில் சூரியகாந்தி பிராண்ட் ரைஸ் ஓனரின் முடிவு பிரமாதமாக ஒர்க் அவுட் ஆனது.

*****

மெளனியாகி வாசகர்களைத் தக்க வைப்பவன்!

மெளனியாகி வாசகர்களைத் தக்க வைப்பவன்!
            பொதுவாக அண்மை காலமாக தமிழக அரசியல் சூழ்நிலையைப் பற்றிப் பேசுவதை பெரும்பாலும் எஸ்.கே. தவிர்த்து வருகிறான்.
            ஆதாயம் எந்தப் பக்கமிருந்து வரலாம் என்பதால்தான் எஸ்.கே. இப்படி நடந்து கொள்வதாக கண்டனங்கள் வந்து கொண்டிருப்பதால் அவன் அது குறித்து சில விளக்கங்களைச் சொல்ல கடமைப்பட்டவனாகிறான்.
            பிரிந்தவர் சேர்வதும், சேர்ந்தவர் பிரிவதும் ஆண்டாண்டு காலமாக அரசியலில் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அது பற்றி பேசி, அதனால் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் சண்டையாகி தனக்கும் வாசகர்களுக்கும் ஒரு பிரிவு ஏற்பட்டு விடக் கூடாது என அஞ்சுகிறான் எஸ்.கே.
            வாய் மூடி மெளனியாய் இருப்பதன் மூலம் வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறான் அவன்.
            மற்றடிப அரசியல் குறித்து நிறைய பேசலாம். ஆனால் மெளன விரதம் இருப்பதற்கு இது போன்ற உகந்த சூழல் எஸ்.கே.வுக்குப் பிறகு கிடைக்குமோ என்னவோ!

*****

பீட்சாப்பம்

பீட்சாப்பம்
ஓட்டப்பம் வீட்டைச் சுடும்
என்ற
பட்டினத்தடிகளுக்கு
பீட்சா தரப்பட
பீட்சாப்பம் வயிற்றைச் சுடும்
என்று
இளசுகளை நோக்கி தூக்கி
எறிந்து விட்டு
உலகமயமாக்கல் இல்லா
ஓர் இடத்தை நோக்கி
நடையைக் கட்டினார்.

*****

ஊடுருவியவன் சாவான்!

ஊடுருவியவன் சாவான்!
            "இந்தியா மீதான சீனாவின் ஊடுருவலைப் பொறுத்துக் கொள்ள முடியாது!" என்று சமத்து சம்புலிங்கத்திடம் வந்து அனைவரும் ஆதங்கப்பட்டனர்.
            "அது அவன் தலையெழுத்து! மண்ணாப் போகப் போறான்!" என்றார் சமத்து சம்புலிங்கம்.
            "நம்மல ஜெயிக்க முடியாதுதானே!" என்று கேட்டுக் கூட்டம் ஆர்ப்பரித்தது.
            "சண்டை போட்டா ஜெயிச்சிடுவான். ஊடுருவுனா தோத்துடுவான்!" என்று சம்புலிங்கம் சொல்ல கூட்டம் ஆச்சரியத்தில் புருவங்களை வளைத்து நெளித்து, "என்ன சொல்றீங்கன்னு புரியலையே!" என்று குழம்பியது.
            சம்புலிங்கம் தெளிவுபடுத்தினார், "ஊடுருவுனும்னு நினைச்சு நுழைஞ்சான்னா அங்கங்க இருக்குற டேல்கேட்டுல பணத்தைக் கட்டி கட்டியே செத்து சுண்ணாம்பாயிடுவான்!"

*****

29 Aug 2017

எதற்காக எழுதுகிறான் எஸ்.கே என்றால்...

எதற்காக எழுதுகிறான் எஸ்.கே என்றால்...

            எஸ்.கே. எழுதிக் கொண்டிருப்பது எல்லாம் பேச நினைத்து வாய்ப்பில்லாமல் போன அவனுடைய சங்கதிகள்தாம்.
            இடைவிடாது அவன் மனதோடு அவன் ஒரு மனமாக நின்று நிகழ்த்திய பேச்சுகள்தான் அவன் எழுத்துகள்.
            அவனைப் பொருத்த வரையில் சொல்வதில் புதுமை இருக்கிறது அல்லது இல்லை என்பது முக்கியமில்லை, சொல்லிக் கொண்டு இருப்பதுதான் முக்கியம்.
            உரையாடுவதையும், எழுதுவதையும் அவன் தன்னுடைய நோக்கமாக நினைக்கிறான்.
            அவன் தன் எழுத்துகள் மூலம் மனிதர்களின் மனதை அப்படியே ஓரிடத்தில் விமானம் தரையிறங்குவது போல தரையிறக்கி விட வேண்டும் என்று நினைக்கிறான்.
            உணர்ச்சிவசப்படுதலே மனதை பறக்கடிக்கிறது என்பது அவன் கருத்து. மனதை மாற்றி மாற்றிப் பல்வேறு நிலைகளுக்குப் போடுவதாக அவன் உணர்ச்சிவசப்படுதல் குறித்து விமர்சனம் செய்கிறான்.
            உணர்ச்சிவசப்படுதல் நின்று விட்டால் மனம் ஒரு நிலைப்படுகிறது. எஸ்.கே. சொல்வதைக் கேட்கும் போது நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால்... எஸ்.கே.வே உணர்ச்சிவசப்படுபவன்தான்!

*****

பலி

லி
ஆண்டுக்கொரு முறை நடக்கும்
சுடலைமாடன் திருவிழாவில்
ஆடுகள்
கோழிகள்
பலி கொடுக்கப்படும்.
வறட்சியால் இந்த ஆண்டு
பலி நின்று விடக் கூடாதென்று
விவசாயிகளையே
பலியாகக் கொடுத்து
திருப்தி செய்து விட்டோம்
சுடலைமாடஞ் சாமியை!

*****

நல்ல அரிசி

முதலும் முடிவும்
            "எவ்வளவு செலவானாலும் பராவயில்ல!" என்ற ராகவன் ஆஸ்பிட்டல் பில்லைப் பார்த்ததும் சண்டைப் போட தயாரானான்.
*****
சரி
            "காலம் பூராவும் சண்டை போட்டுகிட்டே சேர்ந்து வாழ்றதை விட, ஒற்றுமையா அமைதியா பிரிஞ்சுப் போறது பரவாயில்ல!" மாலினி சொன்னது சரியெனப் பட்டது மகேசுக்கு.
*****
நல்ல அரிசி
            "கடன்பட்டாவது விவசாயம் பண்றதாலதான் திங்குறதுக்கு ரெண்டு வாய் நல்ல அரிசியாவது கிடைக்குது! இல்லேன்னா ப்ளாஸ்டிக் அரிசிதான்!" நன்மாறன் சொல்ல விவசாயிகள் போராட்டத்தை இழிவாகப் பேசியதற்காக வெட்கப்பட்டான் நரேஷ்.

*****

இரத்தப்பாசி

இரத்தப்பாசி
காவிரி ஆற்றில்
தண்ணீர் மொண்டு குடித்து
பசியாறியிருந்த
பாமரர்களை
சுட்டுக் கொன்றான்
அண்டை மாநிலத்துக்காரன்
வறட்சி எனும் துப்பாக்கியெடுத்து
மாரடைப்பு எனும் குண்டு பொருத்தி.
சில டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க மறுத்து
எமனின் பாசக்கயிற்றை
அங்கிருந்தே வீசியெறிந்தான்
தற்கொலைச் சுருக்காய் விவசாய கழுத்தை நோக்கி.
பயிர்களை எரித்த சாம்பலை சிமெண்டாக
உயிர்களைக் கொன்ற எலும்புகளை கற்களாகக் கொண்டு
பிரமாண்ட அணைகளை எழுப்ப
தேங்கும் நீர் சிவக்கிறது ரத்தப்பாசி பிடித்து.
சில சொட்டுகளைத் தூவாது சென்ற வானத்திற்கும்
அண்டை மாநிலத்துக்காரனைப் போல்
அத்தனை பிடிவாதம்!

*****

ஜன்னல் இருக்கையில் சுழன்றபடி...

ஜன்னல் இருக்கையில் சுழன்றபடி...
            எத்தனையோ பேர் ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். பேருந்துகள் ஏற்றுகின்றன, இறக்குகின்றன. மாற்றி மாற்றி மனிதர்களைச் சுமந்து கொண்டு பயணிக்கின்றன.
            சிறிது நேரம் பயணிப்பதாயினும் அதற்கான கட்டணத்தை பேருந்துகள் வசூலிக்கின்றன. அதற்காக பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பவர்களுக்கு பயண அனுபவத்தைத் தராமல் அவைகள் ஏமாற்றி விடுவதுமில்லை.
            பயணச்சீட்டு வாங்குவதோ, வாங்காமல் இருப்பதோ அவரவர் சாமர்த்தியம். அதில் இதுவரை எந்தப் பேருந்தும் தலையிட்டதாகத் தெரியவில்லை.
            ஏறி அமர்ந்ததும் தூங்கி வழிபவர்கள், வாந்தி எடுப்பவர்கள், அரட்டை அடிப்பவர்கள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள், இடம் கிடைக்கவில்லை என்று சண்டையிடுபவர்கள் என்று பேருந்துகள் தினம் தினம் நிறைய பேர்களைப் பார்க்கின்றன.
            நோயாளிகள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என்று இன்னும் எத்தனையோ பேர். எல்லாரும் பேருந்துகளைப் பொருத்த வரை பயணிகள்.
            பயண தூரம் வரை அவர்களுக்கு ஓர் இலவச சினிமா போல பல காட்சிகளைக் காட்டிக் கொண்டே செல்கிறது. காண்பதும், காணாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அதையும் கண்டு கொள்வதில்லை பேருந்துகள்.
            இடங்களைக் கடப்பதன் எரிச்சலோடு கடப்பவர்களுக்குப் பேருந்துகள் காட்டும் காட்சிகள் முக்கியமற்றதாகப் படலாம். அவர்களையும் ஒரு காட்சியாக்கி காட்டுவதுதான் பேருந்துகளின் சிறப்பு.
            சென்னையிலிருந்து செங்கல்பட்டு என்று மாறி மாறி ஒரே பாதை, ஒரே பயணம் என்று பேருந்துகள் கடக்கின்றன. காலங்கள் மாறிக் கொண்டு இருக்கின்றன.
            பேருந்துகள் தொலைவையும், நேரத்தையும் ஒருங்கே கடக்கின்றன. கடந்து கொண்டிருந்தல் அவைகளின் இயல்பாகி விட்டன.
            தினம் தினம் பேருந்துகள் ஏறி கடக்கும் மனிதர்களுக்குக் கடத்தல் ஓர் இயல்பாகி விடுகிறது. பேருந்தேறி கடந்து கொண்டிருக்கலாம் என்று கடந்து கொண்டிருக்கிறார்கள்.
            நிலையான நகராத அவரவர் வீட்டிற்கும், அவரவர் அலுவலகத்துக்கும் பேருந்துகள் மாற்றாக இருக்கின்றன. பேருந்துகள் கடக்கின்றன.
            வீடு, அலுவலகம் என்று இரண்டு நிலையான புள்ளிகளுக்கு இடையேயான தொப்புள் கொடிகளாகப் பேருந்துகள் உரு பெறுகின்றன. அந்த இணைப்பின் இயக்கத்தில்தான் அறுபடாமல் மனிதர்களாக நாம் இருக்கிறோமா என்ற எண்ணமும் எழத்தான் செய்கிறது.
            அபூர்வமாக பயணங்களில், இந்தப் பயணச்சீட்டுக்கு ஜி.எஸ்.டி. உண்டா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு புருவங்களை உயர்த்தச் செய்வதும் நிகழ்கின்றன.
            ஒரு புன்னகையோடு பார்த்து விட்டு மனிதர்கள் தலைகுனிந்து கொள்கிறார்கள்.
            எதையும் பழகிக் கொள்வதே நல்லது என அவர்கள் நினைக்கிறார்கள் ஜி.எஸ்.டி. உட்பட. பழக்கங்களில் சிலவற்றையாவது மாற்றிப் போட முடியாதா என்ற நம்பிக்கையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன பேருந்துகளின் சக்கரங்கள்.

*****

28 Aug 2017

சூடான எழுத்து தயார்!

சூடான எழுத்து தயார்!
            யாரையும் பெயர் குறிப்பிட்டு நேரடியாக விமர்சனம் செய்வதில் எஸ்.கே.விற்கு உடன்பாடு கிடையாது. அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன,
            1. அது தரம் தாழ்ந்ததாக இருக்கிறது
            2. அது தனி மனித வெறுப்பைத் தூண்டுகிறது
            எஸ்.கே. அதை எளிதாக ஒரு புனைவியல் களத்துக்கு மாற்றி விடுவான். இலைமறை காயாக சொல்லி அதை உயர்ந்த படைப்பாக்குவான்.
            அத்துடன் சில புதுமையான செய்திகள், முடிக்கும் போது கொஞ்சம் நகைச்சுவை என்று நகாசு வேலைகள் செய்வான்.
            ஒரு பொருளின் தன்மையை எடுத்துக் கொண்டு அதை அப்படியே மனித உறவுகளோடு இணைப்பான். மனித உறவுகளின் மகத்துவத்தை பேச ஆரம்பிப்பான்.
            இப்போது உங்களுக்கு சூடான எஸ்.கே.வின் எழுத்து தயாராகி விடும்.

*****

மாற்றுக் கதை

குனிவு
            "இந்த விவசாயிங்க போராட்டம் பண்ணாமலே இருக்க மாட்டாங்களா?"
            "விவசாயம் பண்ண வாய்ப்பிருந்தா ஏன் போராட்டம் பண்ணப் போறாங்க?"
பதில் சொல்ல முடியாமல் தலையைக் குனிந்து கொண்டார் அமைச்சர் அருமைநாயகம்.
*****
அருகதை
            "நம்ம சாக்கடையை நாம சுத்தம் பண்ணணும். நம்ம டாய்லெட்டை நாம சுத்தம் பண்ணும்!"
            "பண்ணிட்டா...?"
            "இடஒதுக்கீட்டுக்கு எதிரா பேசுற அருகதை உனக்கு வந்துடும்!"
*****
மாற்றுக் கதை
            விடுமுறையில் வருவார்கள் என்று வை-பை வசதி செய்து வைத்திருந்த தாத்தாவை ஏமாற்றி, பாட்டியோடு கதையளந்து கொண்டிருந்தனர் பேரன் பேத்திகள்.

*****

காரணங்கள்

காரணங்கள்
வறுமையை ஒழிப்போம்
வேலைவாய்ப்பை உருவாக்குவோம்
விவசாயத்தைக் காப்போம்
ஏழ்மையை அகற்றுவோம்
பெண்மையைப் போற்றுவோம்
ஊழலை ஒழிப்போம்
மக்கள் நலனை மீட்போம் என்று
தலைவர்கள் சொல்லும்
பொய்களுக்குக் காரணங்கள்
இருக்கக் கூடும்.
உண்மை சொல்லி
நாட்டை இழந்த
அரிச்சந்திரன் கதை
அவர்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும்!

*****

தூரிகை போன்ற மனிதர்கள்

தூரிகை போன்ற மனிதர்கள்
            அழகான ஒவியங்களைத் தீட்டுகின்றன தூரிகைகள். ஓவியங்கள் புகழ் பெறுகின்றன. தூரிகைகளுக்கு எதுவும் கிடைப்பதில்லை. ஓவியங்களால் ஓவியர்கள் புகழ் பெறுகிறார்கள். தூரிகைகளுக்கு அப்போதும் எதுவும் கிடைப்பதில்லை. மென்மேலும் ஓவியங்களைத் தீட்டிக் கொண்டே செல்கின்றன தூரிகைகள்.
            வண்ணங்கள் ஓவியங்களோடு இருக்கின்றன. அதன் சிறப்பைப் பகிர்ந்து கொள்கின்றன. தூரிகைகளுக்கு அந்தப் பாக்கியமும் இல்லாமல் போகிறது.
            கடமையைச் செய்த திருப்தி மட்டுமே தூரிகைகளுக்கு இருக்கிறது. ஓவியனின் ஆழ்ந்த நேசிப்புக்கு உரியதாகவும் தூரிகை இருக்கிறது.
            மனித குலத்தைச் சுற்றி அன்பை மட்டும் பொழியும் அத்தனை பேரும் தூரிகைப் போன்றவர்கள்தான். அவர்கள் மனித குலத்தை அழகான ஓவியங்களாகக் காட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் எந்த பிரதிபலனையும் எதிர்பார்ப்பதில்லை. மென்மேலும் மனித குலத்தை அழகான ஓவியங்களாகத் தீட்டிக் காட்டுவதிலே முனைப்பாக இருக்கிறார்கள்.

*****

கோபத்திற்கு எதிரான எஸ்.கே.யின் டெக்னிக்

கோபத்திற்கு எதிரான எஸ்.கே.யின் டெக்னிக்
            மண்டை காய்ச்சல் அதிகமான ஒரு நாளில் எஸ்.கே. கோபப்பட்டான். அவன் யார் யாரிடம் கோபப்பட்டானோ அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஊரைக் கூட்டி, சொந்த பந்தங்களைக் கூட்டி அவனை அவமானப்படுத்தினார்கள். அத்தோடு நில்லாமல் பல பழிகளையும் தூக்கி அவன் மேல் போட்டார்கள்.
            "இனி காரியம் ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை. ஏதாவது ஒரு வழியில் பார்த்துக் கொள்ளலாம், யாரிடமும் கோபப்படக் கூடாது" என முடிவெடுத்துக் கொண்டான் எஸ்.கே.
            மனஇறுக்கம் கோபப்பட வைக்கிறது. அன்று அப்படித்தான் கோபப்பட்டான். அவர்களிடம் கோப்பட்டு ஆனது என்ன? இன்னும் மனஇறுக்கம் கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம் என்று வருத்தப்பட்டான் எஸ்.கே.
            அவர்கள் சுத்த சோம்பேறிகள். தங்கள் மனக்குகையில் வசிக்கும் ஆபத்தான மனிதர்கள். தங்கள் மேல் சிறு துரும்பு விழுந்தால் அதை ஊதி விட்டுப் போவதற்குப் பதிலாக கத்தியைத் தூக்கும் மோடுமுட்டிகள்.
            கோபத்தில் எதையாவது செய்து விட்டு மாட்டிக் கொள்வதை விட, கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பது எவ்வளவோ நல்லது என்பது அவனது அனுபவப் பாடம்.
            எஸ்.கே. சில நேரங்களில் நினைத்தது நடக்கவில்லை என்று கோபப்பட்டிருக்கிறான். இந்த நேரத்தில் இந்த வேலை முடிந்திருக்க வேண்டுமே என்று கோபப்பட்டிருக்கிறான். இது இப்படித்தானே இருந்திருக்க வேண்டும் என்று கோபப்பட்டிருக்கிறான்.
            இறுக்கம் அதிகமாகும் போது அதைத் தளர்த்திக் கொள்ள வேண்டும் என்பது புரியாமல் கோபப்பட்டிருக்கிறான்.
            காரியங்கள் எப்படியும் முடியும் என்பது புரியாமல், பொறுமையாக இருக்கத் தெரியாமல், அவசரம் காட்டாமல் இருப்பதன் அவசியம் அறியாமல், அவசரம் காட்டிக் கோபப்பட்டிருக்கிறான்.
            அவனது கோபத்திற்காக அவனது ஆளுமையைச் சிதைத்து அவனை அழிக்கின்ற வேலையைச் செய்யவும் தயங்கியதில்லை அவனது உயிரினும் மேலான சகாக்கள்.
            கடைசியாக சாக்கடையில் எறிந்த கல் என்ன செய்யுமோ, அதைத்தான் செய்யும் கோபம் என்பதை உணர்ந்து கொண்டான் எஸ்.கே.
            தவிர்க்க முடியாமல் கோபப்பட நேர்ந்தால், யாருமில்லாத அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டு கோபப்பட்டுக் கொள்கிறான்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...