கோபத்திற்கு எதிரான எஸ்.கே.யின் டெக்னிக்
மண்டை காய்ச்சல் அதிகமான ஒரு நாளில் எஸ்.கே.
கோபப்பட்டான். அவன் யார் யாரிடம் கோபப்பட்டானோ அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஊரைக்
கூட்டி, சொந்த பந்தங்களைக் கூட்டி அவனை அவமானப்படுத்தினார்கள். அத்தோடு நில்லாமல்
பல பழிகளையும் தூக்கி அவன் மேல் போட்டார்கள்.
"இனி காரியம் ஆகவில்லை என்றாலும்
பரவாயில்லை. ஏதாவது ஒரு வழியில் பார்த்துக் கொள்ளலாம், யாரிடமும் கோபப்படக் கூடாது"
என முடிவெடுத்துக் கொண்டான் எஸ்.கே.
மனஇறுக்கம் கோபப்பட வைக்கிறது. அன்று
அப்படித்தான் கோபப்பட்டான். அவர்களிடம் கோப்பட்டு ஆனது என்ன? இன்னும் மனஇறுக்கம்
கொஞ்சம் அதிகமானதுதான் மிச்சம் என்று வருத்தப்பட்டான் எஸ்.கே.
அவர்கள் சுத்த சோம்பேறிகள். தங்கள் மனக்குகையில்
வசிக்கும் ஆபத்தான மனிதர்கள். தங்கள் மேல் சிறு துரும்பு விழுந்தால் அதை ஊதி விட்டுப்
போவதற்குப் பதிலாக கத்தியைத் தூக்கும் மோடுமுட்டிகள்.
கோபத்தில் எதையாவது செய்து விட்டு மாட்டிக்
கொள்வதை விட, கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருப்பது எவ்வளவோ நல்லது என்பது அவனது
அனுபவப் பாடம்.
எஸ்.கே. சில நேரங்களில் நினைத்தது நடக்கவில்லை
என்று கோபப்பட்டிருக்கிறான். இந்த நேரத்தில் இந்த வேலை முடிந்திருக்க வேண்டுமே என்று
கோபப்பட்டிருக்கிறான். இது இப்படித்தானே இருந்திருக்க வேண்டும் என்று கோபப்பட்டிருக்கிறான்.
இறுக்கம் அதிகமாகும் போது அதைத் தளர்த்திக்
கொள்ள வேண்டும் என்பது புரியாமல் கோபப்பட்டிருக்கிறான்.
காரியங்கள் எப்படியும் முடியும் என்பது
புரியாமல், பொறுமையாக இருக்கத் தெரியாமல், அவசரம் காட்டாமல் இருப்பதன் அவசியம் அறியாமல்,
அவசரம் காட்டிக் கோபப்பட்டிருக்கிறான்.
அவனது கோபத்திற்காக அவனது ஆளுமையைச் சிதைத்து
அவனை அழிக்கின்ற வேலையைச் செய்யவும் தயங்கியதில்லை அவனது உயிரினும் மேலான சகாக்கள்.
கடைசியாக சாக்கடையில் எறிந்த கல் என்ன
செய்யுமோ, அதைத்தான் செய்யும் கோபம் என்பதை உணர்ந்து கொண்டான் எஸ்.கே.
தவிர்க்க முடியாமல் கோபப்பட நேர்ந்தால்,
யாருமில்லாத அறைக்குள் புகுந்து கதவைப் பூட்டிக் கொண்டு கோபப்பட்டுக் கொள்கிறான்.
*****
No comments:
Post a Comment