29 Aug 2017

ஜன்னல் இருக்கையில் சுழன்றபடி...

ஜன்னல் இருக்கையில் சுழன்றபடி...
            எத்தனையோ பேர் ஏறுகிறார்கள், இறங்குகிறார்கள். பேருந்துகள் ஏற்றுகின்றன, இறக்குகின்றன. மாற்றி மாற்றி மனிதர்களைச் சுமந்து கொண்டு பயணிக்கின்றன.
            சிறிது நேரம் பயணிப்பதாயினும் அதற்கான கட்டணத்தை பேருந்துகள் வசூலிக்கின்றன. அதற்காக பயணச்சீட்டு வாங்காமல் பயணிப்பவர்களுக்கு பயண அனுபவத்தைத் தராமல் அவைகள் ஏமாற்றி விடுவதுமில்லை.
            பயணச்சீட்டு வாங்குவதோ, வாங்காமல் இருப்பதோ அவரவர் சாமர்த்தியம். அதில் இதுவரை எந்தப் பேருந்தும் தலையிட்டதாகத் தெரியவில்லை.
            ஏறி அமர்ந்ததும் தூங்கி வழிபவர்கள், வாந்தி எடுப்பவர்கள், அரட்டை அடிப்பவர்கள், பிக்பாக்கெட் அடிப்பவர்கள், இடம் கிடைக்கவில்லை என்று சண்டையிடுபவர்கள் என்று பேருந்துகள் தினம் தினம் நிறைய பேர்களைப் பார்க்கின்றன.
            நோயாளிகள், குழந்தைகள், ஆண்கள், பெண்கள், முதியோர்கள் என்று இன்னும் எத்தனையோ பேர். எல்லாரும் பேருந்துகளைப் பொருத்த வரை பயணிகள்.
            பயண தூரம் வரை அவர்களுக்கு ஓர் இலவச சினிமா போல பல காட்சிகளைக் காட்டிக் கொண்டே செல்கிறது. காண்பதும், காணாமல் இருப்பதும் அவரவர் விருப்பம். அதையும் கண்டு கொள்வதில்லை பேருந்துகள்.
            இடங்களைக் கடப்பதன் எரிச்சலோடு கடப்பவர்களுக்குப் பேருந்துகள் காட்டும் காட்சிகள் முக்கியமற்றதாகப் படலாம். அவர்களையும் ஒரு காட்சியாக்கி காட்டுவதுதான் பேருந்துகளின் சிறப்பு.
            சென்னையிலிருந்து செங்கல்பட்டு என்று மாறி மாறி ஒரே பாதை, ஒரே பயணம் என்று பேருந்துகள் கடக்கின்றன. காலங்கள் மாறிக் கொண்டு இருக்கின்றன.
            பேருந்துகள் தொலைவையும், நேரத்தையும் ஒருங்கே கடக்கின்றன. கடந்து கொண்டிருந்தல் அவைகளின் இயல்பாகி விட்டன.
            தினம் தினம் பேருந்துகள் ஏறி கடக்கும் மனிதர்களுக்குக் கடத்தல் ஓர் இயல்பாகி விடுகிறது. பேருந்தேறி கடந்து கொண்டிருக்கலாம் என்று கடந்து கொண்டிருக்கிறார்கள்.
            நிலையான நகராத அவரவர் வீட்டிற்கும், அவரவர் அலுவலகத்துக்கும் பேருந்துகள் மாற்றாக இருக்கின்றன. பேருந்துகள் கடக்கின்றன.
            வீடு, அலுவலகம் என்று இரண்டு நிலையான புள்ளிகளுக்கு இடையேயான தொப்புள் கொடிகளாகப் பேருந்துகள் உரு பெறுகின்றன. அந்த இணைப்பின் இயக்கத்தில்தான் அறுபடாமல் மனிதர்களாக நாம் இருக்கிறோமா என்ற எண்ணமும் எழத்தான் செய்கிறது.
            அபூர்வமாக பயணங்களில், இந்தப் பயணச்சீட்டுக்கு ஜி.எஸ்.டி. உண்டா? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு புருவங்களை உயர்த்தச் செய்வதும் நிகழ்கின்றன.
            ஒரு புன்னகையோடு பார்த்து விட்டு மனிதர்கள் தலைகுனிந்து கொள்கிறார்கள்.
            எதையும் பழகிக் கொள்வதே நல்லது என அவர்கள் நினைக்கிறார்கள் ஜி.எஸ்.டி. உட்பட. பழக்கங்களில் சிலவற்றையாவது மாற்றிப் போட முடியாதா என்ற நம்பிக்கையில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன பேருந்துகளின் சக்கரங்கள்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...