30 Aug 2017

உங்களை நீங்களே புதிய புள்ளி நோக்கி நகர்த்துங்கள்

உங்களை நீங்களே புதிய புள்ளி நோக்கி நகர்த்துங்கள்
            நல்ல தூக்கத்தைப் போன்ற சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை.
            நன்றாக தூங்கி எழுங்கள். மனம் பூஞ்சோலைப் போல் பூத்திருக்கும்.
            நன்றாக தூங்கி எழுந்தவர்கள்தான் நாம். நைட் ஷிப்ட், டே ஷிப்ட் என்று எப்போதோ வந்ததோ அப்போது ஆரம்பித்த வினை.
            நேரங்கெட்ட நேரத்தில் தூங்கி, நேரங்கெட்ட நேரத்தில் வேலை பார்த்து என்று வாழ்க்கை முறை மாற ஆரம்பித்தது. இயல்பாக தூங்கும் தன்மையை கிட்டதட்ட இழந்து விட்டோம்.
            டெங்கு காய்ச்சல், பன்றிக் காய்ச்சலுக்கு அடுத்தபடியாக மண்டைக் காய்ச்சலோடு மனிதர்கள் அலைகின்றனர். இப்படி ஒரு பிராண அவஸ்தை தாளாமல் அலைவதற்கு சீரான தூக்கமின்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
            தூக்கமின்மை‍ ‍போன்று இன்னொரு பிரச்சனை. எந்த ஒரு முடிவுக்கு வர முடியாத மனதின் முடிவின்மை.
            மனம் அவ்வபோது மாற்றத்திற்கு ஏங்கும். தானாகவே இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். ஆனால் அதே மனதின் இன்னொரு பக்கம் பழைய முறைகளையே விடாது கடைபிடித்தால் போதும் என்று அடம் பிடிக்கும்.
            மனதின் பழைய முறைகள் மனதின் ஒரு பகுதிக்கு சலிப்பாக இருக்கும். சலிப்பாக இருந்தாலும் மனதின் மற்றொரு பகுதிக்கு பழைய முறைகளே போதும் என்ற பிடிவாதமும் இருக்கும், ஒரு பெட்டிக்குள் அடைபட்ட பஞசும் நெருப்பும் போல.
            புதிய முறைகளுக்கு மனம் மாற வேண்டும் என்று நினைக்கும் போது மனதை மனதின் போக்கில் விட்டு விட வேண்டும். அப்போதுதான் அது உற்சாகமாக செயல்படும். புதுப்புது அனுபவங்களும் கிடைக்கும்.
            பழைய நினைவுகளின் இறுக்கங்களும், தோல்வி குறித்த எண்ணங்களும் பின்னோக்கி இழுக்கத்தான் செய்யும்.
            நாம் செல்ல வேண்டியது முன்னோக்கியா அல்லது பின்னோக்கியா என்ற முடிவுதான் நாம் பழக்கம் மாறாமல் அப்படியே இருக்கப் போகிறோமா அல்லது பழக்கத்தை மாற்றி புதிய பழக்கத்தை உருவாக்கிக் கொண்டு முன்னோக்கிப் போகப் போகிறோமா என்பதை முடிவு செய்யும்.
            நல்ல தூக்கம் நம்மை நல்ல முடிவுகளுக்கு இட்டுச் செய்யும். அது நமக்கேற்ற முடிவாக இருக்கும். தீர்க்கமாகவும் இருக்கும்.
            இன்றைய முடிவு குறித்து நேற்றிரவே நாம் சிந்தித்திருக்க வேண்டும். அப்போதுதான் சிந்தனைக்கும் முடிவுக்கு இடையே இயல்பான, இயற்கையான ஒரு நல்ல தூக்கம் வாய்த்திருக்கும்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...