19 Jun 2018

அடைபட்ட வீடுகளின் அடைக்கலங்கள்


அடைபட்ட வீடுகளின் அடைக்கலங்கள்
            அந்தக் காலத்துக் குழந்தைகள் பெரும்பாலும் அக்கம் பக்கத்து வீடுகளில்தான் வளர்ந்தார்கள்.
            எந்தக் குழந்தையும் வீடு தங்காது.
            இரா தூக்கத்துக்கு மட்டும் வீடு வரும். விடிந்ததும் எழுந்து சேக்காளி வீடுகளாகப் பார்த்து ஓடி விடும். அல்லாது போனால் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் வந்து தூக்கிக் கொண்டு போய் விடுவார்கள்.
            அங்கேயே சாப்பாடு, அங்கேயே வேடிக்கை, அங்கேயே விளையாட்டு.
            தம் வீட்டுக் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டால் அக்கம் பக்கத்தில் யார் வீட்டில் குழந்தை பிறக்கும் என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள். எதாவது ஒரு வீட்டில் குழந்தை பிறந்து விட்டால் தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு வந்து கொஞ்சா விட்டால் தூக்கம் வராது.
            குழந்தைகளைத் தலைக்கு மேலே தூக்கிக் கொஞ்சும் போது உச்சா போய் விட்டால் அதைச் சொல்லிச் சொல்லியே ஒரு வாரத்துக்கு ஆனந்த கூத்தாடி விடுவார்கள்.
            இப்படியே குழந்தைகள் வளர்ந்து விடும். குழந்தைகள் பிறப்பதும் தெரியாது, வளர்வதும் தெரியாது.
            இந்தக் காலத்துக் குழந்தைகள் அப்படி அக்கம் பக்கத்து வீடுகளுக்கு எல்லாம் போக முடியாது. ஒவ்வொரு வீட்டிலும் உள் தாழ்ப்பாள், உள் பூட்டு போட்டு விடுகிறார்கள்.
            அக்கம் பக்கத்து வீடுகளில் ஹைஜீனிக் இல்லை என்கிறார்கள். அவர்கள் எதையாவது கொடுத்து வாந்தி, வயிற்றுப் போக்கு என்று ஆஸ்பத்திரிக்குத் தூக்கிக் கொண்டு அலைய முடியாது என்கிறார்கள்.
            அதுவும் இல்லாமல் தற்போது குழந்தைகளைக் கடத்துபவர்கள் அதிகமாகி விட்டார்கள் என்கிறார்கள். யாராவது குழந்தைகளைத் தூக்கி ஆசையாகக் கொஞ்சினால் பயமாக இருக்கிறது என்கிறார்கள். அவர்கள் அநேகமாக அல்லது சர்வ நிச்சயமாக குழந்தைத் திருடர்கள்தான் என்கிறார்கள்.
            அண்மையில் ஆசையாக குழந்தைக்கு சாக்லேட் கொடுத்த அம்மணி ஒருவரை குழந்தைக் கடத்துபவர் எனக் கருதி விரட்டி விரட்டி அடித்தே கொன்றிருக்கிறார்கள் நம் தமிழ் நாட்டு மக்கள்.
            குழந்தைகளைப் பார்க்கும் போது பாவமாக இருக்கிறது. தங்கக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கும் பஞ்சவர்ணக் கிளிகள் போல் உள்பூட்டுப் போடப்பட்ட வீட்டிலிருந்து குழந்தைகள் தோற்றம் தருகிறார்கள்.
            பாவம்தான் குழந்தைகள். அடைபட்ட வீட்டில் அடைக்கலமாகி தங்கள் குழந்தைமைகளை இழப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாமல் போய் விட்டது.
*****

18 Jun 2018

காலா - திரை விமர்சனம்


காலா - திரை விமர்சனம்
            இப்போதெல்லாம் திரைப்படங்களைக் குறித்து எதுவும் எழுதுவதில்லையே என்கிறார்கள்.
            திரைப்படம் பார்த்தே நாளாகி விட்டது.
            பேஸ்புக், டிவிட்டர் சமயங்களில் வாட்ஸ் அப்பில் வரும் விமர்சனங்களைப் படிக்கும் போதே திரைப்படம் பார்த்த உணர்வு வந்து விடுகிறது. அதற்கு மேல் திரைப்படம் பார்க்கத் தோணுவதில்லை.
            அப்படியே தோன்றித் திரையரங்கம் சென்றாலும் நேத்தியே அந்தப் படத்தைத் தூக்கிட்டோம்பா என்கிறார்கள். அப்புறம் அங்கே ஓடுகின்ற ஏதாவது ஒரு படத்தைப் பார்த்து விட்டு வர வேண்டியிருக்கிறது.
            அந்தப் படத்தைப் பார்த்து முடிப்பதற்குள் டூவீலர் நிறுத்துவதற்குக் கட்டணம் செலுத்தி, பத்து ரூபாய் பாப் கார்னை இருபது ரூபாய்க்கு வாங்கி, இடைவேளை வருவதற்குள் எடுக்கும் தாகத்துக்கு முப்பது ரூபாய்க்கு தண்ணீர் பாட்டில் வாங்கி மொத்தத்தில் பாக்கெட்டைக் காலி பண்ணி அனுப்புகிறார்கள். படம் பார்த்த மூடே பல நேரங்களில் வருவதில்லை.
            படம் பார்க்கத்தானே டூவீலரில் வருகிறார்கள். தியேட்டரில் வந்து பார்க்கிங் பண்ணவா வருகிறார்கள். அதற்கு ஏன் கட்டணம் வசூலிக்கிறார்கள்? டூவீலருக்குப் பத்து ரூபாய் என்றால் கார் வைத்திருப்பவர் நிலைமை மோசம். முப்பது ரூபாய்.
            டாய்லெட்டுகளைப் படுமோசமாக வைத்திருக்கிறார்கள், படம் பார்க்க வந்ததற்கு தண்டனை என்பதைப் போல. ஒரு வழியாக முடித்துக் கொண்டு போய் உள்ளே அமர்ந்தால் அசுத்தம் செய்யாதீர்கள் என்று ஸ்லைட் போடுகிறார்கள். சமயங்களில் தூய்மை இந்தியா விளம்பரத்தையும் போடுகிறார்கள். ரொம்ப மனசாட்சி உள்ளவர்கள் போலும்.
            இவ்வளவையும் சொன்ன பிறகு எதற்கு இதெல்லாம் என்று திரைப்படங்கள் பற்றி எழுதச் சொன்ன நண்பர் கேட்டார்.
            பிறகு என்னதான் எதிர்பார்க்கிறீர்கள் என்றதற்கு காலா படம் பற்றிச் சொல்லுங்கள் என்றார்.
            ஓர் இயக்குநர் நடிகர்களை நன்றாக இயக்கியிருக்கிறார் என்றதற்கு இது என்ன விமர்சனம் என்றார்.
            நாம் நடிகர்களை இயக்கச் சொல்லியல்லவா பிராது கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்றதற்கு நண்பர் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டார்.
            இனிமேல் சினிமா பற்றி எதுவும் பேச மாட்டேன் என்பது போலிருந்தார் அவர்.
*****

தர்ம யுத்தங்களின் கதை

தர்ம யுத்தங்களின் கதை
தொடரும் தர்ம யுத்தத்திற்கு
பணமே தலைவன்
ஒரு பக்கம் சாய்வதையும்
எதிர்த்து நிற்பதையும்
தலைவனே தீர்மானிக்கிறான்
பண மாற்ற மதிப்பில்
தர்ம யுத்தங்கள் தடமாறலாம்
அணிகள் திசை மாறலாம்
பணமும் பதவிகளும் இருக்கும் வரை
தர்ம யுத்தங்கள் நிகழ்வதை
தடுக்க முடியாது
இதுவரை பூமியில் நடந்த
தர்ம யுத்தங்களின் கதைகளோ
இனிமேல் நடக்கப் போகும்
தர்ம யுத்தங்களின் கதைகளோ
மாறப் போவதில்லை
மனிதர்கள் மட்டுமே மாறப் போகிறார்கள்
என்பது தெரிந்த பின்
தன் கக்கத்தில் செருகிய சங்கை எடுத்து
அருங்காட்சியகத்தில் வைக்கட்டும்
கிருஷ்ண பரமாத்மா.
*****

காபி குடிப்பவர்கள் இங்கிலீஷ் பேப்பர் படிப்பார்கள்!


காபி குடிப்பவர்கள் இங்கிலீஷ் பேப்பர் படிப்பார்கள்!
            டீக்கடைகள் நகரம், கிராமம் என்று பொதுவாக ஒரே மாதிரித்தான் இருக்கிறது. நகரத்து டீக்கடைகளிலும் தினத்தந்திதான் படிக்கிறார்கள். கிராமத்து டீக்கடைகளிலும் தினத்தந்திதான் படிக்கிறார்கள்.
            ஏம்பா ஒரு தினத்தந்தி வாங்கிப் போய் வீட்டில் படிக்கக் கூடாதா என்று கேட்டுப் பாருங்கள். டீக்கடையில் போய் ஒரு டீ வாங்கிக் குடித்துக் கொண்டே அடித்துப் பிடித்துப் படித்தால்தான் அதில் ஒரு கிக் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
            நாட்டில் யாரும் தமிழ் வழியில் படிக்க வைப்பத்தில்லை என்பதால் டீக்கடையில் ஏன் இங்கிலீஷ் பேப்பரை வாங்கிப் போடக் கூடாது என்று ஒரு முறை கடைக்காரரைப் பார்த்துக் கேட்டேன்.
            அதெல்லாம் காபி குடிக்கிறவன் படிக்கிறதுங்க! இங்க யாரும் காபி குடிக்க வர்றா? எல்லாம் டீ குடிக்கத்தானே வர்றாங்க! அவங்களுக்கு இதான் செட்டாகும்! என்றார் டீக்கடைக்காரர்.
            டீ குடிப்பவர்கள் தினத்தந்தி படிக்கிறார்கள், காபி குடிப்பவர்கள் இங்கிலீஷ் பேப்பர் படிக்கிறார்கள் என்று குடிக்கும் டீ, காபியிலும் பேப்பர் படிப்பதில் ஓர் அரசியல் ஒளிந்திருக்கிறது என்பதைக் கண்டு சொன்ன அந்த டீக்கடைக்காரரை விட ஓர் அரசியல் ஞானி நாட்டில் இருக்க முடியுமோ என்ன!
            நாட்டில் இப்படி நிறைய அரசியல் உள் விசயங்கள் இருக்கின்றன. கண்டுபிடித்து வெளிப்படுத்த வேண்டும்.
*****

17 Jun 2018

உச்சம் பார்ப்பவன்

உச்சம் பார்ப்பவன்
விசாரணைக்குச் செல்வதற்கு முன்
ஜட்ஜூக்கு ஜாதகம் பார்க்கப் போவதாக
ஊரெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தான்
நீண்டு வழிந்த தாடியை
ஒரு கையால் உருவிக் கொண்டு
மறு கையில் பீடியை வழித்துக் கொண்டு
கஞ்சா கேஸில் சிக்கிய
துண்டுபீடிக்காரன் என்ற மதனமுத்து
அப்படி இப்படிப் போய் வருவது
மனதுக்கு இதமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டவன்
நாலு இடங்களுக்குப் போய் வந்தாத்தான்
நாலு விசயங்களை எடுத்துப்
பையில் போட்டுக் கொள்ளலாம் என்றான்
நாலு அனுபவங்கள் கிடைத்தால்தான்
நாலு பேரை மடக்கலாம் என்றான்
ஜெயிலுக்குப் போகாமல்
பெரிய மனுசன்களின் தொடர்பு கிடைக்காது என்றவன்
என் ஜாதகத்தில் எல்லாம் உச்சம் என்றான்
நல்லது கெட்டதுகளில் உச்சம் பார்த்தவன் என
ஒரு மழை நாளில் அவனைத் தேடிய போது
எட்டாண்டு கடுங்காவல் சிறையில் இருப்பதாக
அவனைப் பற்றி பேசிக் கொண்டார்கள்
அச்சோவெனப் பெய்து கொண்டே இருந்தது
நெடுநாளைக்குப் பின் நிற்காத மழை
*****

16 Jun 2018

ஒரு எட்டு போய் வாருங்கள்!


ஒரு எட்டு போய் வாருங்கள்!
            மன்னார்குடி பொருட்காட்சி மைதானத்தில் முதன் முதலாக புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதற்கு முன்னும் அங்கே புத்தக் கடைகள் பொருட்காட்சிக் கடைகளில் ஒன்றாக இருந்ததுண்டு. இம்முறை அனைத்துக் கடைகளும் புத்தக அரங்குகள்.
            கூட்டம்தான் குறைவாக வருவதாக கவலைபட்டுக் கொண்டார்கள் புத்தக அரங்க அமைத்திருந்தவர்கள். புத்தகக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டப் பிறகு அந்தச் சாலை கூட வாகன நெரிசல் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது போலதான் இருந்தது.
            இரவு சுமார் ஏழு மணி வாக்கில் சிலர் வருகிறார்கள். மற்ற நேரங்களில் தனிமையில் இருப்பதைப் போல உணர்வதாக அவர்கள் சொன்னது வருத்தமாக இருந்தது.
            வரும் ஒரு சிலரிலும் புத்தகம் வாங்காமல் செல்பவர்களைக் கணிசமாகப் பார்க்கக் கிடைத்தது. புத்தகம் வாங்காவிட்டாலும் பார்க்கவாவது ஆளிருக்கிறார்களே!
            கனமான வாசிப்பிலிருந்து, இலேசான வாசிப்பு வரைக்குமான அனைத்துத் தரப்பு புத்தகங்களும் அரங்கில் இருக்கிறது.
            நான் சென்ற நேரம் நல்ல இடி, மின்னல், மழை. அத்தி பூத்தாற் போல் ஆட்கள் சென்றால் இப்படித்தான் ஆகும் போலிருக்கிறது.
            மழைக்காகப் பள்ளிக்கு ஒதுங்கியவர்கள் போல மழைக்காகவேனும் எவரேனும் ஒதுங்குவார்களா என்று பார்த்தால் ம்ஹூம்!
            வாங்கியப் புத்தகங்களையெல்லாம் மழையில் நனையாத வண்ணம் பதாகைகளை வைத்து சுற்றிப் பண்டலாக் கட்டி அவர்களே கொடுத்தார்கள்.
            புத்தகங்களை எடுத்துக் கொண்டு கிளம்பிய பிறகு மழையில்லை. அரங்கிலும் ஆளில்லை.
            இன்று 16.06.2018 சனி, நாளை 17.06.2018 ஞாயிறு. இன்னும் இரண்டு நாட்கள் புத்தகக் கண்காட்சி இருக்கிறது.
            மன்னார்குடி மக்கள் மனது வைத்தால் ஒரு எட்டு பார்த்து விட்டு வரலாம்.
*****

ப்ளூவேல் விளையாட்டு


ப்ளூவேல் விளையாட்டு
டீமானிட்டைசேஷன்
நீட் தேர்வு
வாராத காவிரி
வந்து விட்ட ஹைட்ரோ கார்பன்
மெரினாவுக்குப் பூட்டு
ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ்
செத்தாலும் ஆதார் எண்
மானியம் ரத்து
இட்டிலிக்கும் ஜி.எஸ்.டி.
ப்ளூவேல் விளையாட்டு
*****