3 May 2026

மகுடம் சூட்டிக்கொள்ளும் மந்தைகள்!

மகுடம் சூட்டிக்கொள்ளும் மந்தைகள்!

தலைமைப்பண்பு என்பது ஒரு ரசாயன மாற்றம். அதாவது, ஒரு தலைமை நிர்வாகி நினைத்தால் தகரத்தையும் தங்கமாக்குவார். இரசவாதம் எல்லாம் அந்தக்காலத்தோடு போய்விட்டது என்று நினைத்து விடாதீர்கள். அது தலைமையேற்பவர்கள் நினைத்தால் சாத்தியமாகக் கூடியதுதான்.

நிர்வாகம் என்பது ஒரு தவம். ஆனால் நம் ஊரில் பலருக்கு அது ஒரு தப்பித்தல். பதவி வந்ததும் சிலர் தங்களைச் சுற்றி ஒரு பெரிய கோட்டையை எழுப்பிக்கொண்டு, உள்ளே ஒளிந்துகொள்வார்கள்.

நல்ல தலைமை இல்லாவிட்டால், மோசமான அல்லது செயல்படாத நிர்வாகம் உருவாகும். ஆகத் தலைமையிடங்களை வெற்றிடங்களாக நீடிக்க விடக் கூடாது.

தமிழ்நாட்டில் இன்சார்ஜ் என்ற பெயரில் பல இடங்கள் பல துறைகளில் காலியாக இருக்கின்றன.

ஒரு எம்.எல்.ஏ செத்துப்போனால் உடனே தேர்தல் நடத்திப் புது ஆளைப் போடுகிறார்களே, அதே வேகம் ஏன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்தில் இல்லை? ஒருவேளை, துணை இல்லாத வேந்தர்கள்தான் சுதந்திரமாகச் செயல்பட முடியும் என்று நினைக்கிறார்களோ என்னவோ!

அது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்தத் தலைமை குறித்துக் கொஞ்சம் தெரிந்து கொள்வோம். தலைமையில் மூன்று வகை உண்டு:

சிம்ம சொப்பனம் போல இருப்பவர் முதல் வகை.  இவர்களைப் பார்த்தாலே ஊழியர்கள் ஒளிந்து கொள்வார்கள். இவர்களுக்கு ஒழுக்கம் என்றால் மற்றவர்கள் பயந்து நடுங்குவது என்று அர்த்தம்.

கலந்தாலோசகர்கள் இரண்டாவது வகை. இவர்கள் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, கடைசியில் தான் நினைத்ததைச் செய்வார்கள். ஆனால் சுற்றியிருப்பவர்களுக்கு நாமும் ஏதோ செய்தோம் என்கிற திருப்தி இருக்கும்.

தோழமைத் தலைவர்கள் மூன்றாவது வகை. நம் மக்கள் பாஷையில் சொன்னால்,  இவர்கள்தான் ஆபத்தானவர்கள். அதாகப்பட்டது, அன்பாகப் பேசியே வேலையை வாங்கிவிடுவார்கள்.

சிலர் பதவிக்கு வந்தவுடன் தன் பயோடேட்டாவை மெருகேற்றுவதில் மட்டுமே குறியாக இருப்பார்கள். அலுவலக நேரத்தை ஆபிஸ் வேலைக்குத் தவிர மற்ற எல்லாப் புகழுக்கும் பயன்படுத்துவார்கள். இவர்களையெல்லாம் பார்த்தால் பிழைக்கத் தெரிந்தவர்கள், என்று உலகம் சொல்லும்.

ஆனால், தன் நிறுவனத்துக்காகத் தன்னையே உருக்கிக்கொள்பவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள், என்று உலகம் ஏளனம் செய்யும். ஆச்சரியம் என்னவென்றால், அந்தப் பிழைக்கத் தெரியாதவர்களின் பெயர்தான் காலத்துக்கும் நிற்கிறது. அவரால்தான் நிறுவனமும் நிலைக்கிறது.

ஒரு நிறுவனம் உருப்பட நிதியும் வசதியும் மட்டும் போதாது. அதை வழிநடத்தும் ஆளின் ஆளுமை முக்கியம். அதிகாரம் கையில் இல்லாதபோது குனிந்து கும்பிடு போடுபவர், பதவி வந்தவுடனும் அதே பணிவோடு இருந்தால், அது அந்தப் பதவிக்கே பெருமை. ஆனால், பதவி வந்ததும் முகம் மாறுபவர்கள் முகமூடி அணிந்த கோமாளிகள்.

கடைசியாகச் சொல்ல வேண்டிய ஒன்று இருக்கிறது. இது கொஞ்சம் காட்டமாக இருந்தாலும் இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.

உருப்படியாக எதையும் செய்ய விருப்பம் இல்லாதவர்கள், தயவுசெய்து அந்தத் தலைமைப் பதவியை ஏற்காதீர்கள். சும்மா இருக்கவே சம்பளம் தரும் இடங்கள் எத்தனையோ இருக்கின்றன. ஒரு நிறுவனத்தைத் தரம் உயர்த்தத் திறனில்லாதவர்கள், வழிவிட்டு ஒதுங்குவதுதான் அந்தப் பதவிக்குச் செய்யும் மிகப்பெரிய அறம்.

உங்கள் பெயர் கல்வெட்டில் இருக்க வேண்டுமா அல்லது சுவரில் கரிக்கோடுகளாக இருக்க வேண்டுமா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

*****

No comments:

Post a Comment