4 May 2026

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

ஏஐ மற்றும் எத்திக்ஸ் – ஒரு டேஞ்சர் ரிப்போர்ட்!

கொரோனா வைரஸை லேபில் வைத்து ஏதோ ஆல்டர் பண்ணப்போய், உலகம் முழுக்க மாஸ்க் போட்டுக்கொண்டு அலைந்தோம். அது ஒரு டிரெய்லர் தான்.

நிஜமான படம் ரொம்பப் பழையது. முதல் அணு குண்டை வெடித்தபோது அதன் பிதா ஓப்பன்ஹைமர் சொன்னார், நானே மரணம், உலகங்களை அழிப்பவன் என்று. அவர் சும்மா கவிதை சொல்லவில்லை, நிஜத்தைச் சொன்னார்.

மனுஷன் எதையாவது கண்டுபிடிப்பான், அப்புறம் அதை வைத்து அவனே அழிந்துபோவான். தொழில்நுட்பம் என்கிற புலிக்குக் கடிவாளம் போடத் தெரியாமல் அதன் வால் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறது உலகம்.

கம்ப்யூட்டர் வளர்கிறது, ஆனால் நம் அறிவு?

இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒருமுறை சொன்னார், யார் செயற்கை நுண்ணறிவில் கில்லாடியோ, அவர்தான் உலகத்தையே ஆளுவார். இது சும்மா சயின்ஸ் பிக்‌ஷன் கிடையாது, எதார்த்தம் அப்படித்தான் இருக்கிறது.

நாளைக்கு உங்களை யாருக்காவது பிடிக்கவில்லை என்றால், உங்களை எக்கனாமிக் சிஸ்டத்தில் இருந்தே டெலீட் பண்ணும் அதிகாரம் அந்த அல்காரிதத்திற்கு உண்டு. உளவு பார்ப்பது, சுதந்திரத்தைப் பறிப்பது என செயற்கை நுண்ணறிவு எனும் ஏஐயின் லிஸ்ட் நீளுகிறது.

சிக்மண்ட் பிராய்ட் ஒரு கேள்வி கேட்டார், நவீன வாழ்க்கை நம்மைச் சந்தோஷமாக வைத்திருக்கிறதா?

இவ்வளவு நவீன கண்டுபிடிப்புகள் வந்த பிறகும் நாம் ஏன் சந்தோசமாக இல்லை?

ஒவ்வொரு புது கண்டுபிடிப்புக்கும் ஒரு பின்விளைவு உண்டு.

டெலிபோன் வந்தது. தூரத்தில் இருப்பவர்களுடன் பேசினோம், ஆனால் பக்கத்தில் இருப்பவர்களைப் பிரிந்தோம்.

மருத்துவம் வளர்ந்தது. மக்கள் நீண்ட நாள் வாழ்கிறார்கள், ஆனால் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கின்றன.

ஏஐ வருகிறது. வேலைகள் எளிதாகிறது, ஆனால் நாம் வெறும் டேட்டா ஆகிக் கொண்டு இருக்கிறோம்.

சிக்கல் என்னவென்றால், இங்கே ஒரு பெரிய கேப் இருக்கிறது.

டெக்னாலஜி தெரிந்தவனுக்கு எத்திக்ஸ் தெரியாது. எத்திக்ஸ் தெரிந்த தத்துவவாதிக்கு டெக்னாலஜி தெரியாது.

கணினி விஞ்ஞானிக்கு அடுத்த கோட் எப்படி எழுதுவது என்பதுதான் குறி. தத்துவவாதிக்கோ காண்ட் சொன்னாரா, மில் சொன்னாரா என்ற தர்க்கம். இரண்டு பேரும் இரண்டு துருவங்கள்.

தத்துவவாதியிடம் பார்முலா இருக்கிறது, விஞ்ஞானியிடம் எண்கள் இருக்கின்றன. ஆனால் இரண்டு பேரையும் ஒரே ரூமில் உட்கார வைக்க யாருமே இல்லை.

அரசியல்வாதிகள் என்ன சொல்கிறார்கள்? கவலைப்படாதீர்கள், எத்திக்ஸ் கமிட்டி பார்த்துக்கொள்ளும், என்று கூலாகச் சொல்வார்கள். நிஜத்தில் அந்த கமிட்டிக்கே அங்கே என்ன நடக்கிறது என்று புரியாது.

ஓப்பன்ஹைமர், அதாகப்பட்டவர் அணுகுண்டின் தந்தை ஒரு விஷயம் சொன்னார், ஏதாவது ஒன்று தொழில்நுட்ப ரீதியாக இனிப்பாக இருந்தால், அதைச் செய்துவிடுவோம். அதன் பிறகுதான் அது சரியா தவறா என்று யோசிப்போம் என்று.

அணு குண்டு அப்படித்தான் வந்தது. இன்டர்நெட் அப்படித்தான் வந்தது. இன்டர்நெட்டை உருவாக்கியவர்கள் அது நாளைக்கு ஆபாசப் படங்கள் பார்க்கவும், கடத்தல்காரர்களுக்கும் பயன்படும் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

இப்போது ஏஐயை கட்டவிழ்த்து விட்டுவிட்டு, அய்யோ, தப்பு பண்ணிட்டோமோ? என்று பின்னால் யோசிப்பது கேலிக்கூத்து.

தொழில்நுட்பம் வார்ப் ஸ்பீடில் போகிறது. நம்முடைய தார்மீகச் சிந்தனையோ ஆமை வேகத்தில் நகர்கிறது.

இனிமேல் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கண்டுபிடித்துக்கொள்ளலாம் என்கிற ரிலேட்டிவிசம் வேலைக்கு ஆகாது. ஒரு பொதுவான, வலிமையான அறநெறி விவாதம் தேவை. அதுவும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் விவாதமாக இருக்க வேண்டும்.

யாரோ ஒரு கமிட்டி பார்த்துக்கொள்ளும் என்று விடுவதை விட, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எந்தத் தொழில்நுட்பத்தை அனுமதிக்கலாம், எதை நிராகரிக்கலாம் என்று முடிவெடுக்கும் பில்டர் நமக்குத் தேவை.

ஏனென்றால், சுவிட்ச் நம் கையில் இருக்கும்போதுதான் நாம் மனிதர்கள். அது அல்காரிதம் கைக்குப் போய்விட்டால் நாம் வெறும் ஜீரோக்கள்தான்!

*****

No comments:

Post a Comment