5 Mar 2026

நாளைய தீர்ப்பு – ஒரு குறுங்கதை

நாளைய தீர்ப்பு – ஒரு குறுங்கதை

அந்த மினுமினுக்கும் கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார் கேட்டிற்குள் நுழைந்தது. மீடியாக்களின் ப்ளாஷ்கள் மின்னலைத் தோற்கடித்துக் கொண்டிருந்தன.

திரிஷ்யன் கரங்கள் ஸ்டியரிங்கைப் பிடித்திருந்தன. கண்கள் சிவந்திருந்தன. இது இரவு முழுவதும் பிசினஸ் மீட்டிங்கால் ஏற்பட்டது அல்ல, கடந்த மூன்று நாட்களாகத் தூக்கமில்லாத ஆலோசனைகள். அதைவிடக் கொடுமை, காலையில் லண்டனிலிருந்து வந்த அந்த வாட்ஸ்அப் மெசேஜ்.

விஜயலெட்சுமியிடமிருந்து. முடிவு பண்ணிட்டேன். மனு ரெடி. அதுதான் அந்த மெசேஜ்.

திரிஷ்யன் வானுயுயர்ந்த கட்டிடங்களைக் கட்டி உலகப் புகழ் பெற நினைக்கும் திரிஷ்யன் லக்ஸ்யூரி பில்டர்ஸின் சிஇஓ மற்றும் சரி பாதி நிறுவனர்.

விஜயலெட்சுமி ஒரு திரிஷ்யன் பிரியை மற்றும் மனைவி. அத்துடன் லண்டன் வெறியை. அமைதியானவள், ஆனால் புயலைக் கிளப்பத் தெரிந்தவள்.

பல வருட மௌனத்திற்குப் பிறகு அவள் வீசியிருக்கும் இந்த அஸ்திரம் திரிஷ்யனின் பிசினஸ் எதிர்காலத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது. காரணம் திரிஷ்யனின் சொத்தில் பாதி அவள் பெயரில் இருக்கிறது.

சார் திவ்யா மேடம் லைன்ல இருக்காங்க, பி.ஏ. நடுக்கத்துடன் போனை நீட்டினான்.

திரிஷ்யன் போனை வாங்கினான். அந்தப் பக்கம் எப்போதும் அவன் கேட்கும் அதே கணீர் குரல். அதே பிடிவாதம்.

என்ன நடக்குது திரிஷ்யன்? மறுபடியும் என் பேரை ஏன் உள்ளே இழுக்குறாங்க? விஜயலெட்சுமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அந்தப் புராஜெக்ட் முடிஞ்சாச்சு, அதுக்கப்புறம் நாம பார்த்ததே இல்லையே. திவ்யாவின் குரலில் கோபம் கலந்த ஏமாற்றம்.

சாரி திவ் இது பிசினஸ் கேம்ப்ளிங். என்னைத் தனிமைப்படுத்த நினைக்கிறாங்க. நீ ஒரு கேடலிஸ்ட். உன்னை வச்சு என்னைக் காலி பண்ணப் பாக்குறாங்க, திரிஷ்யன் குரல் தழுதழுத்தது.

ஆனா விஜயலெட்சுமி? அவங்க ஏன் டைவர்ஸ் வரைக்கும் போகணும்?

திவ்யா திரிஷ்யனின் கனவுகளுக்கு அவ்வபோது டானிக் ஊட்டி விடும் மேனகை. அவ்வபோது அவனுடைய ப்ராஜெக்டில் இணைந்து அதை ஜெட் வேகத்தில் கொண்டு போகும் கில்லாடி.

இது முக்கோணக் காதல் இல்லை. இது ஒரு முக்கோணச் சதி. ஒரு பக்கம் விஜயலெட்சுமியின் நியாயமான கோபம். இன்னொரு பக்கம் திவ்யாவை சந்திக்கு இழுத்து சிரிக்கும் வதந்தி. இந்த மூணு கோடும் ஒரு இடத்துல சந்திக்குது. திரிஷ்யன் மனசாட்சி திடீரென்று இப்படி பேசியது.  

விஜயலெட்சுமியைச் சமாதானப்படுத்த முடியுமா? – இது திவ்யா.

திரிஷ்யனிடமிருந்து பதில் வரவில்லை.

திவ்யாவே தொடர்ந்தாள், விஜயலெட்சுமிக்கு என் மேல கோபம் இல்லை திரிஷ்யன். உங்க மௌனத்தின் மேலதான் கோபம். நீங்க அந்த டிரிபிள் டவர் புராஜெக்ட்டுக்குப் போனது அவங்களுக்குப் பிடிக்கலை. என்னை ஒரு கருவியா அவங்க பயன்படுத்துறாங்க. நீங்க அந்த புராஜெக்டை விடுவீங்கன்னு அவங்க நினைக்கிறாங்க.

திரிஷ்யன் ஜன்னல் வழியாகப் பார்த்தான். வெளியே கேமராக்களுடன் ஒரு பட்டாளமே முட்டி மோதிக் கொண்டு நின்றது.

சார், வெளியே மீடியா காத்துட்டு இருக்கு. திவ்யா உள்ளே இருக்காங்களான்னு கேக்குறாங்க, என்றான் இடையில் குறுக்கிட்டு பிஏ.

திவ்யா நீ இப்போ எதுவும் பேசாதே. சைலண்டா இரு. மௌனம் தான் இப்போதைக்கு ஆக்ஸிஜன். போனை வைத்தான் திரிஷ்யன்.

உடனே விஜயலெட்சுமிக்கு ஒரு மெசேஜ் தட்டினான். மனுவை வைச்சுக்கோ. ஆனா ஜட்ஜ்மென்டை நான் எழுதறேன்.

சதுரங்கப் பலகையில் ராணி நகர்ந்துவிட்டது. ராஜா இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார். மந்திரி ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கிறார். திரிஷ்யனின் மனசாட்சி உருவகமாகப் பேசியது.

காதலுக்கும் பிசினஸ்க்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் என்றால், மூன்றாவது நபரை பலிகொடுத்துத்தான் ஆகவேண்டும். இங்கே பலி ஆடு விஜயலெட்சுமியா? திவ்யாவா? அல்லது திரிஷ்யனின் லட்சியமா? திரிஷ்யனின் மூளை வேறு விதமாக யோசித்தது.

அது வந்து… என ஆரம்பித்த மனசாட்சியை, ஒரு தடவை ஒரு முடிவு பண்ணிட்டா, அதை நானே கேட்க மாட்டேன் என்று அதன் தலையில் ஒரு குட்டு குட்டி கட் பண்ணினான்.

மறுநாள் மீடியாக்கள் பிரேக்கிங் நியூஸில் அலறின.

திரிஷ்யன் ட்ர்பிள் டவர் லக்ஸ்யூரி பில்டர்ஸ் கட்டுமான விபத்தில் சிக்கி 41 பேர் பலி.

*****

No comments:

Post a Comment