நினைக்கத் தெரிந்த மனமும் மறக்கத் தெரிந்த மூளையும்!
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு
மறக்கத் தெரியாதா?
1967
இல் வெளியான ஆனந்த ஜோதி திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசன் வரிகளில், பி. சுசீலாவின்
தேன் குரலில், விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் உருவான மிகச்சிறந்த பாடல் இது.
மனதுக்கு
மறக்கத் தெரியுமா? தெரியாதா? மறக்கத் தெரியாத மனமும் இருக்குமா என்ன? மனம் என்று சொன்னாலும்
இது மூளையின் செயல்பாடு. அது பற்றிய பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்துக்
கொஞ்சம் பார்ப்போமா?
அது
ஓர் அதிகாலை. காய்கறிச் சந்தை பரபரப்பாக இருக்கிறது. அங்கே ஒரு விசித்திரமான ஆராய்ச்சி.
அங்கே சிலரைப் பிடிக்கிறார்கள். உங்களைச் சில கடைகளுக்கு அழைத்துச் செல்வோம், அங்கே
சில உணவுகளை ருசி பார்க்கலாம், அப்புறம் அந்த இடத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். ஓகேவா?
என்கிறார்கள்.
அந்தப்
பரிசோதனை மனிதர்கள் ஒரு வளைந்து நெளிந்த பாதையில் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். ஆலிவ்
ஆயில், அவகேடோ, நட்ஸ் போன்ற கலோரி அதிகமான கடைகளில் ருசி பார்க்கிறார்கள். இன்னொரு
பக்கம், சத்து குறைந்த கீரைக் கடைகள்.
கடைசியில்
அவர்களை ஒரு மையப் புள்ளியில் நிறுத்தி, அந்தக் கடைகள் எங்கே இருந்தன? என்று கேட்கிறார்கள்.
அந்த
மனிதர்கள் ஆலிவ் ஆயில் கடையையும், நட்ஸ் கடையையும் துல்லியமாக அடையாளம் காட்டுகிறார்கள்.
பாவம், அந்தப் பச்சை இலைக் கீரைகள் இருந்த இடம் மட்டும் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.
ஏன்?
இங்கேதான்
டார்வின் உள்ளே வருகிறார். நம் மூளை ஒரு பழைய மாடல் கம்ப்யூட்டர். அதற்கு இப்போதும்
நாம் ஆப்பிரிக்கக் காடுகளில் அலைந்து திரியும் வேட்டைக்காரர்கள் என்றே நினைவு. எங்கே
அதிக சக்தி கிடைக்கிறதோ, அந்தப் பாதையை மட்டும் ஞாபகம் வைத்துக்கொள். அப்போதுதான் உயிர்
பிழைக்க முடியும் என்று அது இப்போதும் நமக்குக் கட்டளையிடுகிறது.
ஆக ஒரு
மொக்கையான ரெஸ்டாரண்ட்டுக்குப் போகும் வழியை உங்கள் மூளை சேமித்து வைக்காது. அது அதற்கு
டைம் வேஸ்ட்!
நமது
மூளை ஒரு விசித்திரமான மெஷின். ஒரு கணக்கீட்டின்படி, மனித மூளையின் சேமிப்புத் திறன்
சுமார் 2.5 பெட்டா பைட். அதாவது, 30 கோடி மணிநேரம் ஓடக்கூடிய டிவி நிகழ்ச்சிகளை உள்ளே
திணித்து வைக்கலாம்.
ஆனால்,
இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ராஷோமோன் படம் பார்த்திருக்கிறீர்களா? ஒரே சம்பவத்தை
நான்கு பேர் நான்கு விதமாகச் சொல்வார்கள். தமிழ் படம் என்றால் விருமாண்டி. இங்கே இரண்டு
பேர் கதையை இரண்டு விதமாகச் சொல்வார்கள். நம் நினைவாற்றலும் அப்படித்தான். அது ஒரு
க்ரியேட்டிவ் ரைட்டர் போல, உண்மையைச் கொஞ்சம் மாற்றித்தான் எழுதும்.
ஜெர்மன்
தத்துவஞானி நீட்சே ஒரு சுவாரஸ்யமான விஷயம் சொன்னார். அது மறதியின் செயல்திறன் பற்றியது.
உன் மனசாட்சியின் ஜன்னல்களையும் கதவுகளையும் மூடி வை. அப்போதுதான் புதிய விஷயங்களுக்கு
உள்ளே இடம் கிடைக்கும் என்கிறார் அவர். ஒரு வகையில், மகிழ்ச்சியாக இருக்க மறதி அவசியம்.
மனசாட்சி கண்டதையும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும்.
ஞாபகம்
என்பது நாம் பிறந்த பிறகு வருவதல்ல. ஒரு பரிசோதனையில் 30 வாரக் கர்ப்பிணிகளின் வயிற்றில்
ஒரு சத்தமிடும் கருவியை வைத்தார்கள். அந்தச் சத்தம் கேட்டதும் கருவில் இருக்கும் குழந்தை
முதலில் துடித்தது. ஆனால், பத்து நிமிடம் கழித்து மீண்டும் அதே சத்தம் கேட்டபோது, அது
அலட்டிக்கொள்ளவில்லை. ஓ, இது ஆபத்தில்லாத சத்தம் என்று அது அப்போதே ரெக்கார்ட் செய்துகொள்கிறது.
அதாவது,
பாதுகாப்பான மற்றும் ஆபத்தான விஷயங்களை இனம் காண்பதுதான் நினைவாற்றலின் முதல் படி.
குழந்தையாக
இருக்கும்போது நமக்கு எக்கச்சக்க நினைவுகள் இருக்கின்றன. ஆனால், 7 வயது ஆகும்போது,
முதல் மூன்று வருட நினைவுகள் முழுவதுமாக டெலிட் செய்யப்படுகின்றன.
ஆஸ்கார்
வைல்ட் சொன்னது போல, நாம் எல்லோருமே நமக்குள் ஒரு டைரியைச் சுமந்து கொண்டிருக்கிறோம்.
அதில் எதை எழுதுவது, எதை அழிப்பது என்பதைத் தீர்மானிப்பது நம் உயிர்வாழும் உள்ளுணர்வுதான்.
அடுத்த
முறை உங்கள் வீட்டுச் சாவியை எங்கே வைத்தீர்கள் என்று மறந்தால் கவலைப்படாதீர்கள். உங்கள்
மூளை ஏதோ ஒரு முக்கியமான ஆப்பாயில் அல்லது ஆம்லேட் போடும் கடையைத் தேடிக்கொண்டிருக்கிறது
என்று அர்த்தம்!
*****

No comments:
Post a Comment