31 Aug 2018

மனசு பலூன் மாதிரி


கோள் சொல்பவர்களை ரசிக்கும் போது வாழ்க்கை எவ்வளவு இனிமையாகி விடுகிறது.
*****
மனசு பலூன் மாதிரி. கடப்பாரையால் குத்த வேண்டியதில்லை, ஊசியால் குத்தினாலே போதுமானது.
*****
கேவலமாகப் பேசுபவர்களைப் பார்த்துச் சிரிக்கும் போது ‍அதை விட கேவலமாக வேறு எப்படி அவமானப்படுத்த முடியும்?
*****
நான் நினைத்தால் அஞ்சு நிமிசத்துல காலி பண்ணிடுவேன். அப்புறம் ஏன்டா காலி பண்ணாம இருக்கே? என்று கேட்டால் இடத்தைக் காலி பண்ணி விட்டு ஓடுகிறான்.
*****
டி வாங்குவதெல்லாம் சகஜம். அப்புறம் ஏனடா மறுபடியும் அடி விழுந்து விடுமோ என்று பயப்படுகிறாய்?
*****

ரகசியங்கள் சொல்லப் பட மாட்டாது!


ரகசியங்கள் சொல்லப் பட மாட்டாது!
பார்வையில் திருடியதை
கல்மிஷத்தில் களவாடியதைத்
திருப்பிக் கொடுக்க பிரியமில்லை எனக்கு
காதலைக் களவு என்றவனை
கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கத்
தோன்றும் எனக்கு
"என் அதீதச் செல்லக் கோபங்களை
எப்படிச் சமாளிக்கிறாய்?" என்று
அடிக்கடி ரகசியம் கேட்கும் உனக்கு
எப்போதும் சொல்ல மாட்டேன்
தொலைத்தவர்களுக்கும், தொலைந்தவர்களுக்கும்
கோபம் இருக்கும் என்பதை!
*****

30 Aug 2018

விதியை மீறுவதுதான் வாழ்க்கை


வாழ்த்தும் வாழ்க்கை தருகிறது, மரணமும் வாழ்க்கை தருகிறது பிளக்ஸ்காரர்களுக்கு.
*****
நாம் சொல்வதை நம் மனதே கேட்காது என்றாலும் நாம் எதிர்பார்க்கிறோம், நாம் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று.
*****
கொடுமையிலும் கொடுமை! இந்த நொடி தோன்றுவது அடுத்த நொடி மறந்து போவது!
*****
முடியவில்லை என்று சொன்னால் கேட்கிறார்களா? செய்தே ஆக வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள்.
*****
விதியை மீறுவதுதான் வாழ்க்கை. எந்த விதி என்பது அவரவர்க்கே வெளிச்சம்.
*****

கடலை நனைக்க நினைக்கும் மழை!


கடலை நனைக்க நினைக்கும் மழை!
குடை பிடிக்க வேண்டும் என்ற
எண்ணமில்லாமல்
மழையில் நனைந்து கொண்டிருக்கிறது கடல்
அம்மா திட்டுவாளோ
காய்ச்சல் வந்திடுமோ
பல வண்ண மாத்திரைகள் விழுங்க வேண்டுமோ எனும்
கவலைகள் ஏதும் இல்லை திக்கற்ற கடலுக்கு.
இவ்வளவு பெய்தும்
கடலை ஒரு சிறிதேனும் நனைக்க முடியவில்லையே என்று
'ச்சோ' என்று திட்டியபடியே
பெய்து கொண்டிருக்கிறது மழை.
*****

29 Aug 2018

மரண பயத்தைக் காட்டி...


இந்தியா பெண்களுக்குப் பாதுகாப்பான நாடு. மன்னிக்கவும், ஆண்களுக்குப் பாதுகாப்பான நாடு.
*****
வேலைக்குப் போகும் பெண்களைப் பற்றி ரொம்ப கேவலமாகப் பேசுகிறார்கள் வேலையில் இருக்கும் பெண்கள்.
*****
சர்க்கரை நோய் மட்டும் வந்து விடக் கூடாது. ஆளாளுக்கு பிரிஸ்கிரிப்சன் எழுதுகிறார்கள், Sorry, சொல்கிறார்கள்.
*****
மரண பயத்தைக் காட்டி ரொம்பவே பயமுறுத்துகிறார்கள் இன்ஷ்யூரன்ஸ் ஏஜென்டுகள்.
*****
ஏன் இரங்கற்பா எழுதவில்லை? எழுதினால் மட்டும் எழுந்து வந்து விடவா போகிறார்?
*****

பாக்கியவான்களாக நாட்கள் ஆகும்!


பாக்கியவான்களாக நாட்கள் ஆகும்!
யாரைச் சந்தேகப்பட்டால்
எதுவும் சொல்ல மாட்டாரோ
அவரைச் சந்தேகப்பட வேண்டும்
அவர் அதற்காக கோபிக்க மாட்டார்
அடிக்க முயற்சிகள் மேற்கொள்ள மாட்டார்
அடிக்கடி சந்தேகம் கொள்வதால்
சலிப்புக் கொள்ளவும் மாட்டார்
சந்தேகத்திற்கிடமான நபர்
தப்பித்து விட்டது குறித்து
கவலைப் படவும் மாடடார்
சந்தேகப்பட்டதைச் சந்தேகமாகவேனும்
பார்க்கத் தெரியாதவர்கள்
பாக்கியவான்கள் என
நாம் புரிந்து கொள்ள நாட்கள் ஆகும்.
*****

28 Aug 2018

'இடைத்தேர்தலில் வெற்றி பெற சுலபமான வழிகள்'


தவறு என்றால் திருத்திக் கொள்வேன். ஆனால் பாருங்கள், எது தவறு என்று புரிந்து கொள்ளும் அறிவு எனக்குக் கிடையாது.
*****
டிராக்டரில் இன்னோவா அல்லது ஸ்கார்பியோ ஸ்பீடுக்குப் போக முடியுமா என்பதை அறிய நீங்கள் கிராமத்தில் இருக்க வேண்டும்.
*****
'இடைத்தேர்தலில் வெற்றி பெற சுலபமான வழிகள்' என்ற தலைப்பில் நூல் எழுதலாம் என்றிருக்கிறேன். பிரதி வேண்டுவோர் முன்பணம் ரூ.2000/- (ஒரே நோட்டாக) அனுப்புக.
*****
தேர்தலில் வெற்றி பெற அழகிகளுக்குப் பணம் கொடுத்திருக்கிறார் டிரம்ப் என்ற செய்தி கேள்விபட்டேன். இந்த விசயத்தில் நம்மூர் அரசியல்வாதிகள்தான் பெஸ்ட். அழகிகள், அழகு இல்லாதவர்கள் என்று பேதம் பார்க்காமல் அனைருக்கும் பணம் கொடுக்கிறார்கள்.
*****
கர்நாடகத்தில் புதிது புதிதாக அணைகளைக் கட்டுகிறார்கள். தமிழகத்தில் இருக்கின்ற அணைகளை டிசைன் டிசைனாக உடைந்துப் போகச் செய்கிறார்கள்.
*****

எப்படியோ இருந்து கொண்டிருக்க வேண்டும்!


எப்படியோ இருந்து கொண்டிருக்க வேண்டும்!
சந்தோசமானது எது குறித்தும்
பகிர்ந்து கொள்ளக் கூடாது
உடன் அது பிடுங்கப்படும்
கவலையானது எது குறித்தும்
அறிகுறி காட்டி விடக் கூடாது
உடன் அது பரப்பப்படும்
எப்போதும் நடுநிலையோடு இருப்பது நல்லது
அதுவும் சுத்த சாம்பார்த்தனம்
என விமர்சிக்கப்படும்
எப்படி இருப்பது என்ற
குழப்பம் மட்டும் இருந்து விடக் கூடாது
எப்படியோ இருந்து கொண்டிருக்க வேண்டும்
*****

27 Aug 2018

மீ பாவம்!


நோட்டை வாங்கிய பின் ஓட்டை நோட்டாவுக்குப் போடு.
*****
வாய்ச்சொல் வீரர்கள்னா யாருப்பா? அடேய்... அடேய்... தலையில் அடித்துக் கொள்வதில் என்ன இருக்கிறது? எனக்குப் பிள்ளையாய் பிறந்து இதைக் கூட கேட்கலன்னா எப்படி?
*****
விரும்புவது ரொம்ப கஷ்டம்... அறம் செய விரும்பு.
அப்புறம் விரும்புவது யார்க்கும் எளிய... அரியவாம் விரும்பிய வண்ணம் செயல்.
*****
காத்திருப்புப் பட்டியல் எனப்படுவது யாதெனின்... கையூட்டுக் கொடுக்காதவர்களுக்காக வேலை மெனக்கெட்டு தயார் செய்யப்படுவது.
*****
சமீபத்தில் சினிமா என்ற பெயரில் இரண்டு சீரியல்களைப் பார்த்தேன்.
1. செம,
2. காளி.
மீ பாவம்!
*****

நாக்குக் கறிக்கு எச்சில் சொட்ட அலைபவர்கள்!


நாக்குக் கறிக்கு எச்சில் சொட்ட அலைபவர்கள்!
எல்லாரும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு
குறி பார்க்கும் போது
நீ மட்டும் ஏன் பறவைகளை ரசிக்கிறாய்?
விற்பனைக்காக வளர்க்கப்படும் பூக்களை
ரசனைக்கானதாய்ச் சொல்லி
பறிக்க விடாமல் ஏன் மறுதலிக்கிறாய்?
நீ நதியோட்டத்தை ஆவல் தீர
கண்களால் பருக வேண்டும் என்பதற்காக
கரைகளை மறித்து
ஏன் எதுவும் செய்யக் கூடாதென்கிறாய்?
உனக்கு இயற்கைப் பிடிக்கும் என்றால்
காசு கொடுத்து ரசி
கூறு போட்டு காசு பார்ப்பவர்களிடம்
எதுவும் பேசாதே
நாக்குக் கறிக்கு எச்சில் சொட்ட அலைபவர்கள் நாங்கள்!
*****

26 Aug 2018

வருங்காலத்தில் ரோபோட்டுகள்


படைப்பு என்பதே காமெடித்தனமானது. இங்கொன்று, அங்கொன்று என்று வேலை மெனக்கெட்டு பிச்சிப் பிதறி இணைத்தால் படைப்பு. வருங்காலத்தில் ரோபோட்டுகள் இந்த வேலையை சர்வ சாதாரணமாகச் செய்யப் போகிறது. படைப்பாளிகள் வேலையில்லா பட்டதாரிகளாய்த் திரிய வேண்டியதுதான்.
*****
பத்திரிகைகளில் படைப்பு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறார். அவர்களின் இட ஒதுக்கீடு சினிமாவுக்குத்தான் என்பதை அறியாதவர்.
*****
சந்தோஷ் என்பதை சன்தோஷ் என்று எழுதுகிறார்கள். அப்படியும் எழுதலாம் போலிருக்கிறது.
*****
இருவரும் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். பின் ஒருவரை ஒருவர் கொலை செய்து கொண்டனர்.
*****
கேரளாவில் படித்தவர்கள் அதிகம் என்கிறார்கள். கேரள மாந்திரீகர்களும் அதிகம் இல்லையா!
*****

எனக்குச் சில இல்லைகள்!

எனக்குச் சில இல்லைகள்!
சுடுவதற்கு முன்
வெடித்து விடும்
நீர்க்குமிழிகளை வைத்து
உங்களைப் பரிகாசம் செய்வதைத் தவிர
எனக்கு வேறு வேலையில்லை
பிடிக்கும் முன்
பறந்து விடும்
பட்டாம் பூச்சிகளை வைத்து
உங்கள் திறமையைக் கேலி செய்வதைத் தவிர
எனக்கு வேறு தொழில்லை
காண்பதற்கு முன
மறைந்து விடும்
மின்னலை வைத்து
உங்கள் கனவுகளைக் கலைப்பதைத் தவிர
எனக்கு வேறு கடமையில்லை
பிரியம் என்ற ஒற்றைச் சொல்லில்
உங்கள் கத்திகளையும், கபடாக்களையும்,
துப்பாக்கிகளையும் சுருட்டித் தந்தால்
உங்களை விட்டு விடுவதைத் தவிர
அதன் பின் எனக்கு வேறு வழியில்லை.
*****

25 Aug 2018

பேனாவில் உஜாலா


கவிதையின் மொழி பாசம். சமயங்களில் அசட்டுத்தனமாகவும் பேசும்.
*****
பிள்ளைகளின் ஆர்வமே தனி. இங்க் இல்லையென்றால் பேனாவில் உஜாலாவை எடுத்து ஊற்றி விடுகிறார்கள்.
*****
ரசியலில் பல வசதி. எதை வேண்டுமானாலும் பேசலாம். கொஞ்சம் காமெடியாகப் பேசினால்தான் கவனிக்கிறார்கள்.
*****
இலக்கியவாதிகள் என்று சொல்லிக் கொண்டு இலக்கியத்தை இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். இலக்கியத்தை எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.
*****
இலக்கியத்தில் என்ன மண்ணாங்கட்டி இருக்கிறது? சிறிதாகப் பினாத்துபவர் சிறிய எழுத்தாளர். பெரிதாகப் பினாத்துபவர் பெரிய எழுத்தளார்.
*****

கருணையற்ற கருணை

கருணையற்ற கருணை
பீரங்கிகளைப் பார்த்தால்
துப்பாக்கிகள் கருணையானவை என்பீர்கள்
அணுகுண்டுகளைப் பார்த்தால்
பீரங்கிகள் கருணையானவை என்பீர்கள்
ஒரு விலங்கு போல் அடித்துச் சாப்பிடுவதை விட
ஒன்றுக்கு மேல் ஒன்றாய்
கருணையற்ற ஒன்றைப் பிரசவித்து
முன்பிருந்ததே கருணை எனக் காட்டி
அச்சுறுத்துவது கருணையற்ற கருணைக் கொலை
துப்பாக்கிகள் சுடவில்லைதான்
பீரங்கிகள் வெடிக்கவில்லைதான்
அணுகுண்டுகள் எதுவும் செய்யவில்லைதான்
தினம் தினம் மனிதர்கள் சாகிறார்கள்
வெறுமனே சாகிறார்கள் என்பதல்லாமல்
செத்துச் செத்துக் சாகிறார்கள் என்பது புரியுமா
அவைகள் எதுவுமில்லாமல்
அவைகளின் அச்சம் சுமந்து!
*****

24 Aug 2018

ஏழைத் தாயின் மகன்


புரிந்து திருந்துவது அதுவாக நிகழ்வது. பயமுறுத்தினால் திருந்துவது உடனடியாக நிகழ்வது.
*****
அறம் என்பது புரியாமல் போகலாம். பயம் என்பது புரியாமல் போகாது.
*****
ஏழைத் தாயின் மகன், பணக்காரத் தாயின் மகன். நிறைய வித்தியாசங்கள்.
*****
எதையும் தாண்டி சிந்திக்க வேண்டும். அப்புறம் ஒன்றும் தோணாது. ஜாலியாகத் தூங்கலாம் பாஸ்!
*****
ஓடாத படங்களை ஓட்டுவது செம இன்ட்ரஸ்டிங். அப்படியாவது படம் ஓடுதுன்னே ஒரு சந்தோசமும் இருக்கிறது இதில்.
*****

நிலைமாற்றங்கள்


நிலைமாற்றங்கள்
நாம் கண்களால் பார்க்கும்
சிறு புள்ளி
நிலவில் கைகளால்
பிடிக்க முடியாத பெரிய மலை
கைகளால் பிடிக்க முடியாத
பெரும் மேகமாய்த் தெரிவது
கைகளில் அடங்கும்
துளிகளாய்ப் பொழியலாம்
சிறியதும் பெரியதுமாய்த் தெரியும்
தோற்றங்கள் எதுவும்
தோற்றங்களில் இல்லை
சிறியது பெரியதோ
பெரியது சிறியதோ
நிலைமாற்றங்களில்
எதுவும் எதுவுமாகலாம்.
*****

23 Aug 2018

மெளனம் மட்டுமே அழகான சொல்


சொல்வதன் கஷ்டம், சொல்பவருக்கு ஈஸி. செய்பவருக்கு கஷ்டம். யாரையும் கஷ்டப்படுத்தக் கூடாது.
*****
தளர்ந்து விழுபவரைத் தூக்க விட மட்டும் சொற்கள் போதும். மற்றபடி மெளனம் மட்டுமே அழகான சொல்.
*****
காட்டுக் கத்தலாக கத்தி விட்டு அப்புறம் என்ன சைலன்ஸ் ப்ளீஸ்! அவருக்கு மட்டும்தான் கத்தறதுக்கு அதிகாரம் இருக்குதாம்.
*****
சரியாக கேள்வி கேட்டு என்ன பிரயோஜனம்? ஏழைகளாக இருக்கிறார்கள்.
*****
உனக்குப் புரியாது என்று மொழியைப் பிரயோகிக்கிறேன். உனக்குப் புரியும் என்பது அறியாது என் பயத்தால் ஆன மொழி.
*****

காலத்தைக் கைது செய்யாதீர்கள்!


காலத்தைக் கைது செய்யாதீர்கள்!
காலத்தைக் கைது செய்து
சிறையில் அடைக்காதீர்கள்!
நான்கு சுவர்களுக்குள்
அடைபட்டுக் கிடக்கும் காலம்
பரிதாபகரமானது.
ஒரு நாள் விடுதலை அடையும் காலம்
புதிய காலத்தோடு பொருந்த முடியாது
விலகல் அடையும் ஒளி போல
இருவேறாகப் பிரிந்து நிற்கும்
காலத்தை எதிர்நோக்குவது போன்ற
துர்பாக்கியம் வேறு இருக்காது
காலத்தைச் சுருக்கவோ விரிக்கவோ
முடியாதென சொல்பவர்களே
காலத்தைப் பிரிக்க முடியும் என்பது
உங்களுக்குத் தெரியாது.
*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...