வறுமை, போர் மற்றும் சில ஆபத்துகள்!
உலகம் உருண்டை என்று சொன்னார்கள். இப்போதுதான்
தெரிகிறது அது ஒரு டென்னிஸ் பால் என்று. யாரோ எங்கே இருந்தோ அடிக்கிறார்கள், வந்து
நம் வயிற்றில் விழுகிறது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது
ஒரு போரைத் தொடுத்திருக்கிறார்கள். எட்டு வாரங்கள் ஆகிவிட்டன. இன்னும் சில வாரங்கள்
இது நீடித்தால், உலகம் முழுவதும் 8.8 மில்லியன் மக்கள் வறுமை என்கிற கோரமான கிளப்பில்
உறுப்பினர்களாகப் போகிறார்கள் என்கிறது ஐ.நா. சபை.
அதில் இந்தியாவின் பங்கு மட்டும் 2.5 மில்லியன்.
ஆமாம், இருபத்தைந்து லட்சம் இந்தியர்கள் புதிதாக ஏழைகளாகப் போகிறார்கள். இந்தியர்களுக்கு
ஏற்கனவே வறுமை ஒன்றும் புதிய விஷயமல்ல, ஆனால் இந்த முறை அது இம்போர்ட்டட்.
ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடி விட்டது. உடனே
கச்சா எண்ணெய் விலை ராக்கெட் மாதிரி எகிறுகிறது. சரக்குக் கப்பல் கட்டணங்கள், உரப்
பற்றாக்குறை எனத் திருவிழா ஆரம்பமாகிவிட்டது.
இந்தியாவுக்கு இது பெரிய சிக்கல். ஏனென்றால்,
நாம் டீசல் முதல் உரம் வரை எல்லாவற்றுக்கும் பக்கத்து வீட்டுக்காரனைத்தான் தட் மீன்ஸ்
பக்கத்து நாட்டுக்காரனைத்தான் நம்பியிருக்கிறோம்.
நம்மவர்களுக்கு இது எதைப் பற்றியும் கவலை இருப்பதாகத்
தெரியவில்லை. ஒரு சின்ன மீட்டிங் கூடப் போட்ட மாதிரித் தெரியவில்லை. முந்தைய போர்களிலிருந்து
நாம் கற்றுக்கொண்ட ஒரே பாடம், பாடமே கற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான்.
நாம் விழித்துக்கொள்வதற்குள் இங்கே பல லட்சம்
பேருக்கு வேலை போயிருக்கும், பலருக்குச் சம்பளம் குறைந்திருக்கும். பட்டினி என்பது
வெறும் வார்த்தையாக இல்லாமல், பலரது சமையலறையின் எதார்த்தமாக மாறியிருக்கும்.
இப்போது செய்ய வேண்டியது என்ன?
முதலில் இந்த இறக்குமதி போதையிலிருந்து வெளியே
வர வேண்டும். எது எது எப்போது குறையும் என்று ஒரு லிஸ்ட் போட்டு, அதற்கு பிளான் - பி
தயார் செய்ய வேண்டும்.
விலைவாசி உயர்வு என்கிற சுனாமி மக்கள் மீது
மோதாமல் இருக்க ஒரு தடுப்புச் சுவர் கட்ட வேண்டும். உணவுப் பாதுகாப்புக் கொள்கையை தூசி
தட்ட வேண்டும்.
இல்லையென்றால், எங்கோ நடக்கும் போரின் நெருப்பு,
இங்கே ஓர் ஏழை இந்தியனின் வயிற்றில் எரிவதைத் தடுக்க யாராலும் முடியாது.
நாம் இப்போதும் மௌனம் காத்தால், நாளை அந்த
மௌனம் ஒரு பெரிய இடுகாட்டின் அமைதியாக மாறிவிடக்கூடும்.
நிச்சயமாக இது சுவாரஸ்யமான வாழ்க்கை கிடையாது,
இது ஒரு விபத்து.
அதனால்தான் திருவள்ளுவரும்,
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (குறள்,
435)
என்கிறார்.
நாம் என்ன செய்வோம்? என்ன செய்யப் போகிறோம்?
நாம் செய்ய வேண்டியது நம் கையில் மட்டுமில்லை,
நம்மை ஆள்வோர் கையிலும் இருக்கிறது. சேர்ந்து எதையாவது செய்துதான் ஆக வேண்டும். இல்லையென்றால்
சோத்துக்கே சிங்கி என்பது நிஜமானாலும் ஆனதுதான்.
*****

No comments:
Post a Comment