ஷேக்ஸ்பியரை ஏன் கொண்டாட வேண்டும்?
இங்கிலாந்துக்கு
ஒரு ஷேக்ஸ்பியர் என்றால், இந்தியாவுக்கு ஒரு காளிதாசர். ஷேக்ஸ்பியர் இங்கிலாந்தின்
காளிதாசர் என்றால், காளிதாசர் இந்தியாவின் ஷேக்ஸ்பியர். இப்படிக் குழப்பினால்தான் இருவரின்
பெருமைகளும் உங்களுக்குக் கொஞ்சமாவது புரியும். இருவரும் நாடகம் எழுதுவதில் பலே கில்லாடி
ஆட்கள்.
காளிதாசரை
ஜெர்மனியின் கதே ரசித்த போது நாடக உலகின் சூப்பர் ஸ்டார் ஆனார். அதுவரை நம்மூர் ஆட்கள்
அவரை வைத்து குண்டுசட்டியில் குதிரைதான் ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஷேக்ஸ்பியரோ
நாடகம் எழுதிவிட்டு நாடக உலகின் முடிசூடா மன்னன் என்று ஒரு கற்பனை கிரீடத்தைச் சூட்டிக்கொண்டார்.
மனித
மனங்களின் ஆழத்தை அளக்கப்போவதாகச் சொல்லி, நம் எல்லோருடைய அந்தரங்கப் பொறாமைகளையும்,
பேராசைகளையும் காகிதத்தில் அம்பலப்படுத்தியவர் ஷேக்ஸ்பியர்.
ஷேக்ஸ்பியர்
எங்கே படித்தார், என்ன படித்தார் என்பது இன்றும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்தான். அவருடைய
அம்மா அவருக்கு தேவதைக் கதைகளைச் சொல்லியிருப்பார் போல. அதனால் தான் பின்னாளில் அவர்
எழுதிய நாடகங்களில் பேய்களும், மந்திரவாதிகளும், தேவதைகளும் அடிக்கடி வந்து விசிட்
அடித்துப் போகிறார்கள்.
பள்ளிக்கூடத்தில்
லத்தீன் மொழியை அரைகுறையாகப் படித்தது அவருக்குப் பெரும் உதவியாக இருந்திருக்கிறது
அதாகப்பட்டது, கதையைத் தழுவுவதற்கு. ஒரு சில விமர்சகர்கள் கதையைத் திருடுவதற்கு என்பார்கள்.
அதை நாம் கண்டுகொள்ள வேண்டாம். அப்படிப் புளூடார்க் போன்ற பழைய வரலாற்று ஆசிரியர்கள்
அவருக்கு வசதியாகப் போய்விட்டார்கள்.
ஷெல்லி
தனது கவிதையில் வானம்பாடியைப் பற்றிச் சொல்லும்போது, அது யாராவது காசு கொடுப்பார்கள்
என்றோ, யாராவது கைதட்டுவார்கள் என்றோ பாடுவதில்லை என்கிறார்.
ஷேக்ஸ்பியரும்
அப்படித்தான். யாரும் வற்புறுத்தாமலேயே 37 நாடகங்களை எழுதித் தள்ளினார். அவருக்குத்
தெரிந்ததெல்லாம் மனிதர்களின் மண்டைக்குள் இருக்கும் அன்பு, வெறுப்பு, துக்கம் எனும்
ரசாயனக் கலவைகள் மட்டும்தான்.
பிரிட்டிஷ்
சாம்ராஜ்யம் நம்மை ஆண்டபோது அவர்கள் மீது நமக்குக் கோபம் இருந்திருக்கலாம், ஆனால் ஷேக்ஸ்பியர்
மீது மட்டும் ஒரு சாப்ட் கார்னர் எப்போதும் உண்டு. விளைவு? அவரது 37 நாடகங்களில்
34 தமிழுக்கு வந்துவிட்டன.
விபுலானந்த
அடிகள் ஒரு படி மேலே போய், ஷேக்ஸ்பியர் என்ற பெயரை செகசிற்பியர் என்று மாற்றி ஒரு சுத்திகரிப்புச்
சடங்கே செய்துவிட்டார்.
தமிழர்கள்
மெக்பத்தை மகபதி என்றும், ரோமியோவை இரம்மியன் என்றும் தமிழ் முறைப்படி பெயர் சூட்டி
மகிழ்ந்தார்கள். ஷேக்ஸ்பியர் மட்டும் இப்போது உயிரோடு வந்து இதைப் பார்த்தால், இது
என் நாடகமா இல்லை ஏதோ சங்க காலத்துக் கதையா? என்று லத்தீனிலேயே குழம்பியிருப்பார்.
பென்
ஜான்சன் சொன்னது போல, ஷேக்ஸ்பியர் ஒரு காலத்துக்கு மட்டும் உரியவர் அல்ல. மனிதன் எப்போது
பொறாமைப்படுவதை நிறுத்துகிறானோ, எப்போது காதலிப்பதை நிறுத்துகிறானோ, அன்றுதான் ஷேக்ஸ்பியர்
அவுட் ஆப் டேட் ஆவார். அது நடக்கப்போவதில்லை என்பதால், இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு
இவரை நாம் கொண்டாடித்தான் ஆக வேண்டும்.
உலகெங்கும்
உள்ள மனிதர்களின் முட்டாள்தனங்களையும், மேன்மைகளையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டிய
அந்த மதங்க சூளாமணியை நாமும் கொஞ்சம் வாசித்துப் பார்க்கலாம். புரியவில்லை என்றால்
கவலையை விடுங்கள், ஷேக்ஸ்பியருக்கே பல இடங்களில் தான் என்ன எழுதினோம் என்று புரிந்திருக்காது!
அவர் அவருடைய பெயரையே நான்கைந்து வெவ்வேறு ஸ்பெல்லிங்கில் எழுதக் கூடியவராம்!
*****

No comments:
Post a Comment