26 Feb 2026

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

எளிமை, நேர்மையின் ஊற்றுக்கண் தோழர் நல்லகண்ணு!

இந்த மனிதரைப் பார்த்தால் யாருக்குத்தான் ஆச்சரியமாக இருக்காது? அரசியலில் புனிதம் என்ற வார்த்தை இன்னும் உயிரோடு இருக்கிறது என்பதற்கு இவர்தான் ஆகச்சிறந்த சாட்சி.

வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை. நேர்மையின் ஒளி. எப்போதும் நிமிர்ந்த நடை. இவருடைய எளிமையைப் பார்த்தால், கார்ப்பரேட் கார்களில் பவனி வரும் இன்றைய இளம் அரசியல்வாதிகளுக்குக் காய்ச்சலே வந்துவிடும். இன்றைய அரசியல்வாதிகளின் ஒரு நாள் டீ செலவில், நல்லக்கண்ணு ஐயா ஒரு வருடம் குடும்பம் நடத்திவிடுவார். அவ்வளவு எளிமை. மனிதர்களுடன் பழகுவதில் அவ்வளவு இனிமை.

ஒரு முறை தஞ்சாவூரில் ஐயா நல்லக்கண்ணுவைப் பார்க்கும் வாய்ப்பு. அப்படியே அதே எளிமை 100 சதவீதம். பந்தா 0 சதவீதம். மிகப்பெரிய கம்யூனிஸ்ட் தலைவர் என்ற எந்தக் கோதாவும் இல்லை. அறிமுகமே இல்லாத என்னிடம் ஓர் ஆத்மார்த்தமான நண்பரிடம் பேசுவது போன்ற அத்தனைக் கனிவான பேச்சு. நான் அப்போதுதான் அவரை நேரில் பார்க்கிறேன். எனக்கு வெகுநாட்கள் பழகியது போன்ற ஓர் உணர்வு. இப்படி ஒரு ரசவாதத்தை உருவாக்குவது எல்லா தலைவருக்கும் சாத்தியம் இல்லை.

மதிய உணவு பொட்டலமாக வழங்கப்பட்ட போது தனக்கெனத் தனியிடம் எதுவும் தேடாமல், அங்கேயிருந்த ஒரு சிமிட்டு மேடையில் எல்லாரையும் போல பொட்டலத்தைப் பிரித்துச் சாப்பிட ஆரம்பித்து விட்டார். டைனிங் டேபிள், தலைவருக்கான ஸ்பெஷல் கவனிப்பு எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை.

அவர் அருகில் அமர்ந்து அருகில் சாப்பிட்ட நான்கு பேரில் அப்போது நானும் ஒருவன். அப்படி அவரோடு அமர்ந்து சாப்பிட வேண்டும் என்பது அப்போது எனக்கு ஒரு சின்ன ஆசை. இப்போதுள்ள தலைவர்களை நினைத்துப் பார்க்கையில் அது ரொம்ப பெரிய ஆசை. அதன்பின் வேறு எந்த தலைவர் அருகிலும் அமர்ந்து சாப்பிடும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. தோழர் தந்த அதிர்ஷ்டம் அது.

அது சரி என்னைப் போன்ற சாமான்யன் அருகே அமர்ந்து சாப்பிட எந்தத் தலைவர் விரும்புவார்? எல்லாரையும் போலத் தானும் ஒருவன்தான் என்பதை ஒரு தலைவர் பழகுவோரிடம் எல்லாம் ஏற்படுத்துவது சாதாரணமானதல்ல. தானும் சாமான்யன்களில் ஒரு சாமான்யன்தான் என்ற எண்ணம் ஒரு தலைவருக்கு வருவது நல்லகண்ணு போன்ற சில ஆபூர்வர்களுக்கே வாய்ப்பது. காமராசர், கக்கன் வரிசையில் நல்லகண்ணு ஓர் அரசியல் அதிசயம்.

தமிழக அரசு வழங்கிய அம்பேத்கர் விருதைப் பெற்றார். பரிசுத் தொகை ஒரு லட்சம். அதை அப்படியே கட்சிக்கும் விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்தார். தகைசால் தமிழர் விருது பெற்ற போது கிடைத்த பத்து லட்ச ரூபாயோடு தன் சொந்த நிதி ஐயாயிரத்தையும் சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி விட்டார். யாருக்கு வரும் அப்படி ஒரு மனசு?

அரசாங்கம் இவருக்கு ஒரு வீடு கொடுத்தது. ஒரு நோட்டீஸ் அனுப்பி அதைத் திருப்பிக் கேட்ட போது எவ்வித மறுப்பின்றி உடனே அதைத் திருப்பித் தந்தார். எனக்கு எதற்கு வீடு, மக்கள் இருக்கிறார்களே என்பது அவரது எண்ணம். ஓர் எளிமையான வாடகை வீடே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இன்றைய ரியல் எஸ்டேட் உலகில் இது ஒரு சயின்ஸ் பிக்சன் கதை போலத் தெரியலாம். ஆனால் நிஜம்.

தாமிரபரணி ஆற்றைப் பாதுகாக்க இவர் நடத்திய போராட்டங்கள், மணல் கொள்ளைக்கு எதிராக இவர் காட்டிய உறுதி, இதெல்லாம் ஏதோ பேப்பர் செய்திகள் அல்ல. மண்ணின் மீதான காதல். ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இவர் ஓர் இலக்கணம். அவரது வாழ்க்கை அதற்கான இலக்கியம்.

நேர்மையாக இருப்பது கஷ்டம் என்கிறார்கள். ஆனால், நேர்மையைத் தவிர வேறு எதையும் செய்யத் தெரியாத மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள். இப்போது அந்த மனிதர்களில் ஒருவர் இல்லை. மக்களோடு மக்களாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு 101 வயதில் இயற்கையோடு இயற்கையாகக் கலந்திருக்கிறார். அவருக்குப் பிறகு அந்த இடம் காலியாகவே இருக்கும் போலிருக்கிறது.

இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது எனும் பொருளில் Nature abhors a vacuum என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஆனால் இந்த வெற்றிடத்தை யாரால் நிரப்ப முடியும்?

கலைஞர் கருணாநிதி ஒரு முறை சொன்னார், எனக்கு ஒரு கண் போனாலும் இன்னொரு கண்ணாக நல்லகண்ணு இருக்கிறார் என்று. இப்போது நம்மிடம் அந்தக் கண்ணும் இல்லை.

காந்தியைப் பற்றிச் சொல்லும் போது ஐன்ஸ்டீன் இப்படிச் சொன்னார், இப்படி ஒரு மனிதர் இந்தப் பூமியில் வாழ்ந்தார் என்பதை வருங்கால உலகம் நம்பாது என்று. ஐன்ஸ்டீன் சொன்னது அப்படியே தோழருக்கும் பொருந்தும்.

*****

No comments:

Post a Comment