30 Nov 2022

வாடிய மனிதரைக் கண்ட போதெல்லாம் ஓடி ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம்

வாடிய மனிதரைக் கண்ட போதெல்லாம் ஓடி ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம்

“பசிங்க பசி! சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு!”

“தனி ஒரு மனிதருக்கு உணவில்லை என்றால்… தாங்க முடியவில்லை நண்பா! இந்த ஜகத்தை அழிப்பதற்கு முன்பாக உன் பசியை அழித்து விடுவோம். வா நண்பா! உணவகத்தில் (ஓட்டலில்) உணவுண்டு வரலாம்.”

“உங்களுக்கு ஏங்க கஷ்டம்? பணத்தைக் கொடுத்தா நானே போய்ச் சாப்பிட்டுக்குவேனுங்க.”

“ஏழையின் சிரிப்பினில் இறைவனைக் காண வேண்டும். புறப்படு நண்பா!”

“பசி வயித்தக் கிள்ளுதுங்க. தாங்க முடியலீங்க. வெரசா பணத்தைக் கொடுத்த வெரசா பசியாறிப்பேனுங்க.”

“பசி என்று வந்தால் புசி என்று தந்து பாரப்பான்னு கவிமணியும் சொல்லியிருக்கிறார் நண்பா! இதோ அருகிலே உணவகம்! வா நண்பா! வா!”

“பணம் கொடுக்க இஷ்டம் இருந்தா கொடு. இல்லன்னா ஆளெ விடு. கையைப் பிடிச்சு இழுக்குற வேலையெல்லாம் வெச்சுக்காதே.”

“அற்றார் அழிபசி தீர்த்தல் என்று வள்ளுவரும் பசிப்பிணி போக்க வேண்டும் என்று வள்ளலாரும்…”

“டேய் நொன்னை! இதுக்கு மேல பேசுன… மவனே வவுந்துடுவேன் வவுந்து. ஒரு குவார்ட்டருக்குப் பத்து ரூவா கொறையுது, அதெ கொடுப்பேன்னு பார்த்தா வள்ளுவர்ங்றே, வள்ளலாளர்ங்றே. இனுமே உன்னெ இந்த ஏரியாவுல பார்த்தேன். பாத்த எடத்துல குழி தோண்டிப் புதைச்சிடுவேன். நான் ஒரு தடவெ சொன்னா நூறு தடவெ சொன்ன மாதிரி. இந்த எடத்தெ விட்டு ஓடுறீயா? இல்லே தூக்கிப் போட்டு மிதிக்கவா!”

அதற்கு மேல் அந்தப் புண்ணிய பிரதேசத்தில் நிற்கவும் முடியுமோ?

வாடிய மனிதரைக் கண்ட போதெல்லாம் ஓடினேனே என்று ஓடுகிறேன், ஓடுகிறேன், ஓடிக் கொண்டிருக்கிறேன்.

என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க வேண்டும். என் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்.

யாராவது செய்தார்களா?

விளைவு?

நான் வேகமாக ஓடி ஓடி ஒலிம்பிக் வரை ஓடி ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வாங்கும் படியாகி விட்டது.

*****

இந்தச் சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே!

இந்தச் சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே!

பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய் என்று நகரெங்கும் சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்.

மிகச் சரியாக பத்து முச்சக்கர வாகனங்களை (ஆட்டோக்களை) ஏற்பாடு செய்து நகரத்தின் சந்து பொந்து எங்கும் விளம்பரம் செய்ய வைத்திருந்தார்கள்.

கடையின் முன் பெரிய பதாகையும் (ப்ளக்ஸ்) வைத்திருந்தார்கள்.

பத்தாம் ஆண்டு துவக்க நாளன்று பத்து ஆண்டுகளில் பார்க்காத கூட்டத்தை அந்தக் கடை பார்க்க வேண்டியதாகி விட்டது.

கடையென்னவோ சாதாரண சொப்பு, செப்புச் சாமான்கள் விற்கும் கடையென்றாலும் எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய் அல்லவா!

மக்களின் கைகளிலும் பைகளிலும் பத்து ரூபாய் நோட்டுகளாக நிரம்பியிருந்தன. எங்கே போய், எப்படிப் போய் அவ்வளவு பத்து ரூபாய் நோட்டுகளையும் பத்து ரூபாய் நாணயங்களையும் சில்லரை மாற்றித் திரட்டியிருந்தார்களோ? யாரோ யாரோ அறிவார்?

காலை நேரக் கூட்டம் எப்படியும் பத்தாயிரத்துக்கு மேல் இருக்கும். மதிய நேரக் கூட்டம் நாற்பதாயிரம், அறுபதாயிரத்துக்கு எகிற வாய்ப்பிருந்தது.

போக்குவரத்துக் காவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை மாலை மூன்று மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு கடைக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து விட்டால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் விடுமே என்று அவர்கள் யோசித்தார்கள். கடைக்காரர்கள் மறுத்து விட்டனர்.

எப்படியும் இரவு பனிரெண்டு மணி வரையிலும் அந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக ஒலிப்பெருக்கி வைத்துக் கடைக்காரர்கள் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

வேறு வழியின்று போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்து கூட்ட நெரிசலைச் சமாளித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் வியர்வை ஆறாய் சாலையோரமாய் ஓடிக் கொண்டிருந்தது.

பத்து ரூபாய்க்குப் பல விதமான பொருட்களை வாங்கியதில் மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தாங்கள் வாங்கிய சொப்புச் செப்புப் பொருட்களோடு வீடு திரும்பிய பிறகுதான் அவர்களுக்குத் தெரிந்தது அவர்களது சங்கிலிகளும் மோதிரங்களும் அலைபேசிகளும் பணப்பைகளும் (பர்ஸ்களும்) காணாமல் போயிருந்தது.

பத்தாமாண்டு தொடக்க விழாவைத் தொடர்ந்து அந்தக் கடைக்காரர்கள் நகரின் பல இடங்களில் நகைக்கடைகளும், அலைபேசிக் கடைகளும், பை விற்கும் கடைகளும் ஆரம்பித்திருந்தனர்.

*****

29 Nov 2022

சுதந்திர மிடுக்குடன் பார்த்தல்

சுதந்திர மிடுக்குடன் பார்த்தல்

பெண்களுக்கு எங்கே சுதந்திரம் இருக்கிறது சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுத் தன்னை ஒரு பெண்ணியவாதி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார் அவர்.

மாலை அவர் வீட்டுக்குச் சென்றேன்.

அவர் கணவர் வீட்டு வேலைகளை எல்லாம் பார்த்து வைத்திருந்தார். தேநீர் போட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.

எங்கள் பேச்சு எங்களுக்கே சலித்துப் போனது போல (போர் அடிப்பது போல) இருந்தது.

அவர் (பெண்ணியவாதி) நெடுந்தொடர்களைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது கணவரும் தேமேன அவர் பார்ப்பதையேப் பார்த்துக் கொண்டிருந்தார். நானும் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒரு கட்டத்திற்கு மேல் விடைபெற்றுக் கொண்டு வெளியேறினால் தேவலாம் போலத் தோன்றியது.

நான் விடைபெற்றுக் கொள்ள நினைத்த போது அவர் சொன்னார், “இந்த வீட்டில் ஒரு கோலம் போடக் கூட எனக்குச் சுதந்திரம் இல்லை”

அப்போது அவர் கணவர் அவ்வளவு மிடுக்குடன் என்னைப் பார்ப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

*****

எழுத்தின் முதல் புரட்சி

எழுத்தின் முதல் புரட்சி

எனது மற்றொரு நண்பன் சுடுகுஞ்சு. முகநூலுக்காக ‘அமென்டா’ என்ற பெயரை வைத்துக் கொண்டான்.

ஏன்டா இப்படி? என்றேன்.

“ரங்கராஜன் ‘சுஜாதா’ என்று பெயர் வைத்துக் கொள்ளவில்லையா? சுரேஷ், பாலகிருஷ்ணன் என்று இரண்டு ஆண் எழுத்தாளர்கள் சேர்ந்து கொண்டு ‘சுபா’ என்று ஒரு பெண் பெயரை வைத்துக் கொள்ளவில்லையா?” என்கிறான்.

எழுத்தாளர் ஆகி விட்டால் இப்படி ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. ஆண்பால், பெண்பால் பெயர்களை மாற்றும் முதல் புரட்சியில்தான் எழுத்துத் துவங்குகிறது என்று நினைத்துக் கொண்டேன்.

இதில் பாரதி வித்தியாசமானவர். ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் பொதுவான பாரதி என்ற பெயரில் அறியப்பட்டிருக்கிறார். ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாடியவர் அல்லவா!

*****

28 Nov 2022

போடா அந்தப் பக்கம்!

போடா அந்தப் பக்கம்!

“சம்பளம் போதவில்லை!” என்றான் நண்டு குஞ்சு.

யார் இந்த நண்டு குஞ்சு? அவன் என் நண்பன். அவனது இயற்பெயர் வேறு. நான் வைத்து புனைப்பெயர் இந்த நண்டு குஞ்சு.

அவன் ‘அ’ – நிறுவனத்தில் வேலை செய்கிறான். அதென்ன ‘அ’ – நிறுவனம்? தெரியாத ஒன்றை ஆங்கிலத்தில் ‘x’ என்று குறிப்பிடுவதில்லையா? தமிழர்களாக இருந்து கொண்டு எதற்கு ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்? அந்த ‘x’ க்குப் பதிலாக தமிழில் நான் உருவாக்கியிருப்பதுதான் ‘அ’.

அது ஏன் அகர முதல எழுத்தையே என்று நீங்கள் கேட்கலாம். எழுதுவது எதற்காக? பெயர் இடுவது எதற்காக? அனைவருக்கும் புரிவதற்காகத்தான் அல்லவா!

தமிழின் பிற எழுத்துகள் புரியாத, தெரியாத தமிழர்கள் இருக்கலாம். அவர்கள்தானே தமிழர்கள். முதல் எழுத்து புரியாத, தெரியாத தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லை. அவர்களின் வசதிக்காகவும் சொகுசுக்காகவும்தான் இந்த ‘அ’

நாமமது தமிழராய்த் தமிழ் உணர்வு பேசப் போய், சம்பளம் போதவில்லை என்று சொன்ன நண்டு குஞ்சுவை அந்தரத்தில் விட்டு விட்டோம் பாருங்கள்.

நான் நண்டு குஞ்சுவைப் பார்த்து,

“இவ்வளவு பக்க வியாபாரங்கள் (சைட் பிசினஸ்) இருந்துமா சம்பளம் போதவில்லை?” என்றேன்.

“அதற்கு (பக்க வியாபாரங்களுக்கு) முதலீடு (இன்வெஸ்ட்மென்ட்) செய்யத்தான் சம்பளம் போதவில்லை” என்றான்.

“என்னடா நண்டு குஞ்சு இப்படிச் சொல்கிறாய்?” என்றேன்.

“சம்பளம் வாங்குவது எதற்காக? சொந்த வேலையைப் பார்ப்பதற்குத் தேவையான முதலீட்டைத் திரட்டத்தானே?” என்றான்.

“சம்பளம் கொடுக்கும் அ – நிறுவனத்தை நினைத்துப் பார்த்தாயா?” என்றேன்.

“சொந்த (பக்க) வியாபாரத்தைப் பார்க்கவே நேரம் போதவில்லை. போடா அந்தப் பக்கம்.” என்றான் கோபம் வந்தவனாக.

நான் எந்தப் பக்கம் போவது என்ற யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு யோசனை வரவே இல்லை. நீங்களே சொல்லுங்கள், நான் எந்தப் பக்கம் போகலாம்?

*****

புல்லட் பிடிக்காது, புல்லட் பாடல் பிடிக்கிறதே!

புல்லட் பிடிக்காது, புல்லட் பாடல் பிடிக்கிறதே!

இப்போதும் ஆர்.ஆர்.ஆர். படத்தைப்பற்றிக் கேட்கிறார்கள்.

படம் வந்து ரொம்ப நாளாகி விட்டதே என்றால் கேட்கிறார்களா?

விட மாட்டேன் என்பவர்களுக்காகச் சொல்ல வேண்டியிருக்கிறது. லிங்குசாமியின் ‘வாரியர்’ என்ற திரைப்படத்துக்கு முன்பாகப் புல்லட்டைப் பிரபலபடுத்தியது ஆர்.ஆர்.ஆர்.தான். லிங்குசாமியின் ‘வாரியர்’ ஊற்றிக் கொண்டதற்கு இப்படியாக ஆர்.ஆர்.ஆர்.ம் ஒரு காரணமாக இருக்கலாம்.

இன்னொரு கொசுறு விசயம் குறித்தும் உங்களிடம் கேட்க வேண்டியிருக்கிறது.

எனக்குப் புல்லட் பிடிக்காது? ஆனால் புல்லட் பாடல் பிடிக்கிறதே. அது ஏன்? லிங்குசாமிதான் பாடல் பிடித்தால் போதும், படம் பிடிக்க வேண்டியதில்லை என்று ஏதோ செய்திருக்கவும் வாய்ப்பிருக்கிறதே.

இப்படித்தான் அவரின் ‘ரன்’ படம் வெளிவந்த போது பிசாசு பிடிக்காமல்போனது. ‘காதல் பிசாசு’ பிடித்திருந்தது.

அப்புறம் இன்னொரு கொசுறு என்றால் கொசுறுவில் எத்தனை கொசுறு என்கிறீர்களா? இதுமுக்கியமான கொசுறு.

புல்லட் பாடலைப் பாடும் போது சிம்பு ஏன் முகத்தை அப்படி அஷ்ட கோணலாக்கிக் கொள்கிறார்? அவரும் புல்லட் பிடிக்காமல் புல்லட் பாடல் பிடித்துப் பாடுவதால்தானா?

இதையெல்லாம் என்ன தைரியத்தில் எழுதுகிறார் என்று நீங்கள் கேட்கலாம். ராஜமௌலியும், லிங்குசாமியும் சிம்புவும் படிக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில்தான்.

*****

27 Nov 2022

ஆணின் வெற்றிக்கு முன்னால் பெண் நிற்கிறாள்!

ஆணின் வெற்றிக்கு முன்னால் பெண் நிற்கிறாள்!

மனைவி ஏன் முந்திக் கொண்டு பதில் சொல்கிறார் எனக்குத் தெரியவில்லை.

பொதுவாக மனைவிகள் ஏன் முந்திக் கொண்டு பதில் சொல்கிறார்கள் என்று கேட்டால் இந்தப் பிரச்சனைக்குள் நீங்களும் (ஆண்கள்) வந்து விடுவீர்கள்.

மனைவியாக ஆகி விட்டதன் அடையாளமாகவும் அது இருக்கலாம்.

குறிப்பாக அதில் பல சௌகரியங்கள் இருப்பது கவனிக்க வேண்டியது. நான் கவனித்தது இந்த நான்கு சௌகரியங்கள். இன்னும் பல சௌகரியங்கள் இருக்கலாம். அதை நீங்கள் சொன்னால்தான் நான் தெரிந்து கொள்ள முடியும்.

1.      அநாவசியமாக எல்லாவற்றுக்கும் நாமே யோசித்துக் களைப்படைய வேண்டியதில்லை.

2.      அவசரப்பட்டுப் பதில் சொல்ல வேண்டும் என்ற நெருக்கடியில்லை.

3.      நன்கொடை, வசூல் என்று நம்மை (ஆண்களை) நோக்கி யாரும் அடி வைக்க மாட்டார்கள்.

4.      செய்வினை, கொள்வினைகளில் நிற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிற்க வேண்டிய அவசியம் நேர்ந்தாலும் மனைவியின் பின்னால் நின்று கொள்ளலாம்.

ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்று சொல்கிறார்களே, என்னைக் கேட்டால் ஓர் ஆணின் வெற்றிக்கு முன்னால் ஒரு பெண்தான் நிற்கிறாள் என்று சொல்வேன்.

*****

செய்கூலிக்காகச் சேதாரத்தை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

செய்கூலிக்காகச் சேதாரத்தை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள்!

மாய்ந்து மாய்ந்து உழைக்கிறார்கள்.

எதற்காக என்றால், அப்போதுதான் ஓய்வுக் காலத்தில் சுகமாக ஓய்வெடுக்கலாம் என்கிறார்கள்.

நீங்கள் மேலே உள்ள கூற்றைக் கவனிக்க வேண்டும்.

கடந்த காலம், நிகழ் காலம், வருங்காலம் போல அவர்கள் ஓய்வுக்கென்று ஒரு காலத்தையே வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.

ஓய்வுக்காலம் வரும் போதுதான் ஓய்வெடுப்பார்களாம்.

ஓய்வுக்காலம் வந்து விட்டால் ஓய்வு எடுக்க வேண்டியதுதானே? அதிலென்ன சுகமாக ஓய்வு எடுப்பது?

அவர்களின் ஓய்வுக்காலம் அநேகமாக உடல் ஓய்ந்த முதுமைக் காலத்தில்தான் வரும்.

முதுமையில் யார் சுகமாக ஓய்வெடுக்க முடியும் சொல்லுங்கள்? அப்போதுதான் ஏகப்பட்ட உடல் உபாதைகள் வந்து சேரும்.

உடல் நன்றாக இருக்கும் போது நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டால்தான். உடல் உபாதைகள் வந்து சேரும் போது நீங்கள் ஓய்வு எடுத்துக் கொண்டுதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. அதற்காக ஓய்வுக்காலத்தையெல்லாம் நீங்கள் ஒதுக்க வேண்டியதில்லை.

ஓய்வுக்காலம் என்பது நீங்கள் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வந்துதான் சேரும்.

அப்படி வந்து சேரும் போது உடல் உபாதைகளைச் சுகமாக எதிர்கொள்ள மாய்ந்து மாய்ந்து உழைத்த பணம் வேண்டுமே என்றுதானே சொல்கிறீர்கள்.

நான் என்ன சொல்கிறேன் என்றால் நீங்கள் மாய்ந்து மாய்ந்து உழைத்ததால்தான் உங்களுக்கு அந்த உடல் உபாதை என்று சொல்கிறேன்.

அப்படியானால் உழைக்க வேண்டாம் என்றா சொல்கிறீர்கள் என்றுதானே கேட்கிறீர்கள்.

உழைக்க வேண்டாம் என்று யார் சொன்னது? மாய்ந்து மாய்ந்து உழைக்க வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

செய்கூலி இருக்கும் போது சேதாரமும் இருக்கிறது. நீங்களாகச் சேதாரத்தை அதிகப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்றுதான் சொல்கிறேன்.

*****

26 Nov 2022

குழந்தை சேவை மையங்கள்

குழந்தை சேவை மையங்கள்

இந்தக் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே? அத்துடன் பெற்றோர்கள் படும் பாடும் இருக்கிறதே?

குழந்தைக்கு மம்மி சொல்ல வரவில்லை, டாக்டரிடம் காட்ட வேண்டும் என்கிறார்கள்.

பால் குடிக்கும் போது பாதி பால் வழிந்து விடுகிறது, குழந்தைக்கு என்ன பிரச்சனையோ என்று பயப்படுகிறார்கள்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கை (அட்மிஷன்) கிடைக்க வேண்டுமே, உடனடியாக ஜாதகக் கட்டங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

பையனும் பாப்பாவும் இரண்டு பருவங்களாக (டேர்ம்களாக) தொண்ணூறுக்குக் (நைன்டிக்கு) கொஞ்சம் பக்கததில் மதிப்பெண்கள் (மார்க்) வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல மனநல மருத்துவரைப் (சைக்கியாட்ரிஸ்ட்டை) பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் படித்தால் ரொம்ப களைப்பாகி விடுவதாகக் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

அபாகஸ் வகுப்பிலும் நடன வகுப்பிலும் சோர்ந்து போய் விடுவதாகக் கவலைப்படுகிறார்கள்.

பிள்ளைகள் பெறுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் குழந்தைகளைப் பற்றிய ஒரு முன் முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அந்த முடிவுகளின் படியே பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் மருத்துவர்களை நாடியோ, ஆலோசனையாளர்களை நாடியோ கிளம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

பிள்ளைகள் குறித்த ஒரு வார்ப்படமும் வரைபடமும் பெற்றோர்களைப் பாடாய்ப் படுத்துகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் பிறகு பொதுத்தேர்வுகள் இருக்கின்றன, நீட் போன்ற போட்டித் தேர்வுகள் இருக்கின்றன, வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இருக்கின்றன. பிள்ளைகளின் கல்வி உலகம் ரொம்ப பெரிதாக இருக்கிறது. அதை விட ரொம்ப பெரிதாகப் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

பிள்ளைகளின் இருப்பும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் இருவேறு திசையில் இயங்குகின்றன.

விளைவு, பெற்றோர்களுக்குப் பிடிக்காத, பெற்றோர்கள் விரும்பாத மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்க்காத குழந்தைகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கேற்ப பிள்ளைகளுக்கு ஒட்டுதல் வெட்டுதல் (பட்டி டிங்கரிங்) பார்க்கும் சேவை மையங்களும் ஆலோசனை மையங்களும் நாட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இது நாட்டில் இப்போது ஒரு தொழிலாகவே மாறிக் கொண்டு இருக்கிறது. இதற்காக ஆசிரமங்களை நாடுபவர்களும் இருக்கிறார்கள். அது போன்ற ஆசிரமங்களைத் தொடங்குபவர்கள் தொழில் முனைபவர்களாக மாறி இருக்கிறார்கள்.

இந்தப் பெற்றோர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளைப் பற்றி அதீதமாகக் கவலைப்படுவதை நிறுத்தினால் அவ்வளவுதான். அந்தத் தொழில்கள் அனைத்தும் நசிந்து போய் விடும்.

அவர்கள் எங்கே கவலைப்படுவதை நிறுத்துவது? ஊடகங்களும் சமூகத் தொடர்புகளும் அவர்களின் கவலைகளை அதிகப்படுத்தும் வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்ப புதுப்புது ஆராய்ச்சி முடிவுகள் வேறு வெளிவருகின்றன.

இந்தத் தலைமுறை குழந்தைகள் மட்டுமல்ல, இந்தத் தலைமுறை பெற்றோர்களும் பாவம்தான். எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக் கவலைப்பட்டே அவர்களின் காலம் கழிந்து கொண்டிருக்கிறது.

யாருக்காக யாரைக் குறை சொல்வது? பெற்றோர்களுக்காகக் குழந்தைகளையா? குழந்தைகளுக்காகப் பெற்றோர்களையா?

புதுப்புது தகவல்கள் சூழ் உலகம் பெற்றோர்களைக் குழப்பாமலும் அவர்களின் குழப்பம் குழந்தைகளைப் பாதிக்காமலும் இருக்க ஏதாவது செய்யத்தான் வேண்டும்.

*****

கடன் கொண்டார் கல்வி போல

கடன் கொண்டார் கல்வி போல

பழகுபவர்கள் பெரும்பாலும் கடன்  கேட்கத்தான் வருகிறார்கள்.

கடனுக்குப் பெரும்பாலானோர் சொல்லும் காரணம் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக என்பதுதான்.

இது எப்படியோ வங்கிக்காரர்களுக்கும் தெரிந்திருக்கிறது. எல்லா வங்கியிலும் கல்விக்கடன் கொடுக்கிறார்கள்.

வருங்காலம் இப்படி அமையும் என்று தெரிந்திருந்தால் ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்றே தமிழ்ப்புலவர் அதிவீரராம பாண்டியர் பாடியிருக்க மாட்டார்.

நன்றாக யோசித்துப் பார்த்தால், அவர் பாடியிருப்பதிலும் தவறொன்றுமில்லை. கடன் வாங்குவதினும் பிச்சைப் புகுவது எவ்வளவோ பரவாயில்லை.

வங்கிகள் கடன் வாங்குவதற்கு அப்படி அலையோ அலை என்று அலைய விடுகிறார்கள். பிறகெப்படி படிக்கிறவர்கள் கல்விக்கூடத்திற்கு அலைவது? வங்கிக்கு அலைந்து அலைந்தே படிக்கும் காலம் போய் விடுகிறது.

கடன் வாங்கிப் படித்து முடித்த பின் கடனைக் கட்டுவதற்கேற்றாற் போல் வேலை கிடைக்கிறதா என்றால் அப்படி ஏதும் கிடைக்கிறதா என்ன?

என் நண்பரின் மகன் ஒருவர் பொறியியல் படிப்பதற்காக பத்து லட்சம் வரை கல்விக் கடன் பெற்றிருக்கிறார். படித்து முடித்ததும் மூவாயிரத்தில் ஒரு வேலை கிடைத்தது. அந்தச் சம்பளத்தை வைத்து அவரால் வட்டிக் கட்ட முடியுமா என்பதை வங்கிக் கணக்காளர்கள்தான் சொல்ல வேண்டும்.

பத்து லட்சம் கல்விக் கடனில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தால் கூட அதை இந்நேரம் முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள சூப்பர் மார்கெட்டாய் மாற்றியிருப்பேன் என்று அந்தப் பையன் புலம்புகிறார்.

இது சம்பந்தமாகக் கடன் கொடுக்கும் வங்கியாளர்களைக் கேட்டால் கல்விக்குத்தான் கடன் கொடுப்போம், பெட்டிக் கடை வைப்பதற்கெல்லாம் கடன் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள்.

நானும் பிள்ளைகள் படிப்பிற்காகக் கடன் கேட்டு வரும் பழக்கமானவர்களிடம் கறாராகச் சொல்லி விடுகிறேன், கல்விக்குக் கடன் என்றால் வங்கிகளைப் போய் பாருங்கள் என்று.

எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு எல்லாம் எந்த வங்கியில் கடன் கொடுக்கிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

இப்படி எல்.கே.ஜி., யு.கே.ஜி.யையே கடனில் ஆரம்பித்தால் மிச்ச சொச்ச படிப்பிற்கெல்லாம் உலக வங்கியிடம் நேரடியாக விண்ணப்பித்து கடன் வாங்குவதைத் தவிர வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை இதைப் படிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இராவணனைப் பற்றி அறிந்தவர்களுக்கு ‘கடன் கொண்டார் நெஞ்சம் போல’ என்ற உவமை அவ்வளவு பரிட்சயமாக இருக்கும். இன்றைய பெற்றோர்களைப் பற்றி ஆழக்கால் பட்டு அறிந்தவர்களுக்கு ‘கல்விக்கடன் கொண்டார் நெஞ்சம் போல’ என்பது கூடிய விரைவில் அவ்வளவு பரிட்சயமாகி விடும் என்றுதான் நினைக்கிறேன்.

*****

25 Nov 2022

ஒப்பனையில்லாத முகத்துடன் பல நாட்கள்

ஒப்பனையில்லாத முகத்துடன் பல நாட்கள்

கல்யாணம் ஆகும் போது கொஞ்சமாவது ஒப்பனை செய்து கொள்ள சொன்னார்கள். எனக்கென்னவோ அந்தக் கருமத்தை எல்லாம் செய்து கொள்ள பிடிக்காததால் நான் வழக்கம் போலவே வந்து நின்றேன்.

அப்பாடா பெண் பார்த்து விட்டுப் பயந்து விடப் போகிறாள் என்று நண்பர்கள் சேர்ந்து தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவி தலை வாரி விட்டு, முகத்துக்குக் கொஞ்சம் புட்டா மாவு பூசி விட்டார்கள்.

நீ ஏனடா தலையில் எண்ணெய் தடவிக் கொள்வதில்லை என்றால், அதை ஏன் தலையில் தடவிக் கொண்டு என்று ஓர் அலுப்பு. இதனால் என் தலை முடிகளில் சில செம்பட்டையாகத் தெரிந்ததெல்லாம் வேறு.

ஏனடா புட்டா மாவு பூசிக் கொள்வதில்லைஎன்றால் அது வேறு கருமத்தை முகத்தில் பூசிக் கொண்டு, அதென்ன வெட்டி வேலை என்று இருந்து விட்டேன்.

பிறகெப்படிடா அந்தப் பெண் உன்னை கட்டிக் கொள்ள சம்மதித்தாள் என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தக் கேள்வியை நானே ஒரு நாள் அவளிடம் கேட்டேன். ‘அப்பாதான் உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பண்ணிக் கொண்டேன்.’ என்றாள்.

இது போன்ற அப்பா இல்லையென்றால்,  அப்பா சொல்வதைக் கேட்கும் அது போன்ற மகள் இல்லை என்றால் என் நிலையை நினைத்துப் பாருங்கள்.

நானும் யாருக்கும் காதல் கடிதம் கொடுத்திருக்க முடியாது. எந்தப் பெண்ணும் எனக்குக் காதல் கடிதமும் கொடுத்திருக்க மாட்டார்கள். வாலிப பருவத்தில் சிங்காரமாய் அலையாமல் காட்டுமிரண்டியாக அலைந்தால் யார்தான் கடிதம் கொடுப்பார்கள்?

அதனால் நான் எப்போதும் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். கல்யாணம் ஆக வேண்டும் என்று இருந்திருக்கிறது, இல்லையென்றால் நடந்திருக்குமா சொல்லுங்கள்.

இப்போதுதான் தலைக்குக் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறேன். இதென்ன திடீர் மாற்றம் என்றால் முடிகள் ரொம்பவே வெளுத்து விட்டன. அத்துடன் கொட்டிக் கொண்டும் இருக்கின்றன. அதைக் கொஞ்சம் மறைப்பதற்கு தேங்காய் எண்ணெய் தேவைத்தான் படுகிறது.

தேங்காய் எண்ணெய்தான் என்ன ஓர் அற்புதமான பொருள். இருக்கின்ற கொஞ்ச முடிகளின் வெளுப்பு போக்கி தலையோடு தலையாகப் பசையைப் போல ஒட்ட வைத்துக் கொள்வதற்கு ரொம்பவே உதவுகிறது. அது பார்ப்பதற்கு நிறைய முடிகள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.

அத்துடன் இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தலையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச முடிகளும் இருக்காது. அப்போது நானே ஆசைப்பட்டாலும் தலையில் தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ள முடியாது. அதனால் சில நாட்களாக அலுப்புப் பார்க்காமல் தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

எதற்கும் நீங்களும் உங்களுடைய ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.

*****

தலைமுறைகளின் படிப்பு முறைகள்

தலைமுறைகளின் படிப்பு முறைகள்

எந்தப் புத்தகம் கொண்டு வந்தாலும் உடனடியாக புலனத்திலும், தொலைசெயலியிலும் (டெலிகிராமிலும் என்பதை இப்படித் தமிழ்படுத்திக் கொள்ளலாமா என்பதற்கு தங்களது மேலான அனுமதியை வழங்க தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்) அதை ப.சு.வ. வாக (பி.டி.எப். என்பதற்கு இப்படித் தமிழ்ச் சொல் சுருக்கம் ப.சு.வ. – படிப்பதற்குச் சுலபமான வடிவம் என வைத்துக் கொள்ள ஒப்புதல் வழங்கவும்) மாற்றி பகிர்ந்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக உலவி வருகிறது மற்றும் அதிகமாக முன் வைக்கப்படுகிறது.

மேற்படி வாக்கியமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு வித்தியாசமான வாக்கியத்தை இதுநாள் வரை நானும் எழுதியதில்லை. அது இருக்கட்டும். விசயத்திற்கு வந்து விடுவோம்.

புலனத்திலும், தொலைசெயலியிலும் உலா வந்து விடுவதாலே ஒரு ப.சு.வ. படிக்கப்பட்டு விட்டதாக நினைத்து விடக் கூடாது.

அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம். படிப்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கு ஒன்று தேறுவது கடினம்.

வேலை வாய்ப்புத் தகவல்களை ப.சு.வ. வாக அனுப்பினால் அதைப் பார்ப்பவர்களில் பாதி பேரேனும் படித்துப் பார்க்கிறார்கள் வேலை வேண்டுமே என்ற ஆசையில். மீதி பேர் இத்தனை பக்கங்கள் படிக்கும் வேண்டும் என்றால் அந்த வேலையே வேண்டாம் என்று படிப்பதை விட்டு விடுகிறார்கள்.

போட்டித் தேர்வுக்கென ப.சு.வ. போட்டால் அதைப் பதிவிறக்கம் செய்பவர்களைக் கணக்கெடுத்து முடியாது. பதிவிறக்கம் செய்தவர்களில் கால் வாசி பேர் அதை முக்கால்வாசி அளவுக்குப் படித்துப் பார்க்கிறார்கள். மீதி முக்கால்வாசிப் பேர்கள் யூடியூப் (இதற்கு தமிழ்ச் சொல் தெரிந்தவர்கள் அவசியம் சொல்லவும்) தேடிப் போய் அதை கால்வாசி அளவுக்குப் பொறுமையோடு பார்த்து மீதி முக்கால்வாசியைப் பார்க்க பொறுமையில்லாமல் விட்டு விடுகிறார்கள்.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். என் புலனத்திலும் தொலைசெயலியிலும் தினம் பத்து பதினைந்து கவிதைத் தொகுப்புகளாகவது வந்து குவிகின்றன. எனக்குத்தான் எதைப் படிப்பது என்பது புரியவில்லை.

சில கவிதைத் தொகுப்புகளின் கவிதைகள் இப்படித்தான் இருக்கின்றன,

“மம்மி இங்கே வா வா

ஆசை கிஸ் தா தா”

பிறகு பொன்னியின் செல்வன் நாவல் வாரத்திற்கு முறை ப.சு.வ. வாக வந்து கொண்டிருக்கிறது. அது படமாக வர இருப்பதால் அல்லது இதை நீங்கள் படிக்கும் போது படமாக வந்து விட்டதால் அதைப் படமாகப் பார்த்துக் கொள்வோம் என்றோ படத்தையே பார்த்துக் கொள்வோம் என்றோ அதையும் விட்டு விடுகிறார்கள்.

ஒரு காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலைப் படிப்பதற்காக அலைந்த தலைமுறை குறித்து இன்றைய தலைமுறைக்கு ஏதாவது தெரியுமா சொல்லுங்கள்.

அது சரி, ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். அதை நாம் குறை சொல்லக் கூடாது.

பொன்னியின் செல்வன் படித்த தலைமுறை பத்துப்பாட்டையும் பதினெண்கீழ்க்கணக்கையும் ஆர்வமாகப் படித்ததா என்ன?

எங்கள் ஊர் தெக்குடு தாத்தா, ‘நாவலையே படித்துக் கொண்டு கிடக்கிறாள் ராட்சசி!’ என்று மகளைத் திட்டுவார். அவருக்கு எல்லாரும் தேவாரமும் திருவாசகமும் படிக்க வேண்டும். அதை நாங்கள் கேட்டுக் கொண்டதோடு சரி. அதாவது அவர் படிக்க படிக்க நாங்கள் கேட்டுக் கொண்டதோடு சரி. அப்படி ராகம் போட்டுப் படிப்பார். ஆனால் அவர் அதை ராகமாகப் பாடுவதாகச் சொல்வார்.

*****

24 Nov 2022

பிள்ளைகள் படிக்கும் அழகு

பிள்ளைகள் படிக்கும் அழகு

இன்றைய பிள்ளைகள் பரீட்சைக்குப் படிக்கும் அழகே தனிதான்.

தொலைக்காட்சியைப் போட்டு விட்டுப் படிக்கிறார்கள்.

அலைபேசியைப் பார்த்துக் கொண்டே படிக்கிறார்கள்.

ஏதாவது தின்பண்டம் தின்று கொண்டே படிக்கிறார்கள்.

நம்மிடம் கதை பேசிக் கொண்டே படிக்கிறார்கள்.

அவர்கள் படிப்பதை நம்மிடம் கேள்விக் கேட்டுக் கொண்டே படிக்கிறார்கள்.

புலனத்தில் அழைத்துக் கொண்டே படிக்கிறார்கள்.

முகநூலில் குழு ஆரம்பித்து வைத்துக் கொண்டு படிக்கிறார்கள்.

கூகுள் மீட்டில் ஏற்பாடு செய்து கொண்டும் படிக்கிறார்கள்.

புத்தகமே இல்லாமல் பி.டி.எப்.பில் படிக்கிறார்கள்.

அப்புறம் என்ன செயலிகளில் வேறு படிக்கிறார்கள்.

நாங்கள் எல்லாம் அந்தக் காலத்தல் சத்தம் போட்டு மட்டும்தான் படித்தோம். அதற்கே ‘என்னடா படிக்கிறாய்? நல்லா ராகம் போட்டு படிடா மூதேவி!’ என்பார் தெக்குடு தாத்தா.

அவர் இன்றிருந்தால் இந்தப் பிள்ளைகள் படிப்பதைப் பார்த்து உயிரையே விட்டிருப்பார். அவர் அதிர்ஷ்டம் செய்தவர். நல்லவேளை அதற்கு முன்பே உயிரை விட்டு விட்டார்.

*****

கவிதைகளின் உள்ளார்ந்த அனுபவங்கள்

கவிதைகளின் உள்ளார்ந்த அனுபவங்கள்

சில வறட்சியான கவிதைகளைப் படிக்கும் போது தாகம் முட்டிக் கொண்டு வந்து விடுகிறது.

படிக்கின்றவருக்கே நிலைமை இப்படி ஆகிறது என்றால் எழுதியவரின் நிலை எழுதிய போது எப்படி இருந்திருக்கும்?

கடும் வறட்சியைத் தாண்டித்தான் எழுதியிருக்க வேண்டும். வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியிருந்திருக்கலாம்.

கவிஞர்கள் எப்படி இப்படி வறட்சியைத் தாங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்கள்? அது கவிதைக்காகத்தான் இருக்க முடியும்.

இந்தப் பூமியில் வறட்சியான பாலைவனங்கள் இருப்பதில்லையா? இந்தியாவில் தார் பாலைவனம் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனம் இருக்கிறது. அரபு நாடுகள் பல பாலைவனமாகவே இருக்கின்றன.

உலகமே இப்படி இருக்கும் போது அது கவிதையிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். கவிஞர்கள் கவிதைகளில் பாலைவனங்களைப் பிரசவிப்பதற்கு அதுதான் காரணமாக இருக்க முடியும்.

நான் பாலைவனங்களைக் கடக்க ஆசைப்படும் போதெல்லாம் அது போன்ற கவிதைகளை எடுத்துப் படித்துக் கொள்வதுண்டு. நிஜமாகவே பாலைவனத்தைக் கடந்து வந்தது போன்ற அனுபவத்தை அந்தக் கவிதைகள் தருகின்றன.

அந்தக் கவிதைகளை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுப் பார்ப்போம் என்று நீங்கள் சொல்லலாம்.

எனக்குப் பாலைவனமாக இருக்கும் கவிதைகள் உங்களுக்குப் பனிமலையாகக் கூட இருக்கலாம். கவிதைகளை உள்வாங்கும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது.

உங்களுக்கான பாலைவனக் கவிதைகளை நீங்கள்தான் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வபோது மழை பெய்து வெள்ளக்காடாகி விடும் சூழ்நிலைகளில் அது போன்ற பாலைவனக் கவிதைகளைக் கண்டுபிடித்து வைத்துக் கொண்டால் வெள்ளக்காட்டிலிருந்து வறட்சிக் காட்டிற்குப் பயணித்து ஒரு மாறுதலான அனுபவத்தைப் பெற்று வந்து விடலாம்.

அதற்காகவேனும் சில பாலைவனக் கவிதைகளைக் கண்டுபிடித்து வைத்துக் கொள்வது எப்போதும் நல்லது.

நான் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். நீங்களும் கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து பகிர வேண்டாம்.

******

23 Nov 2022

மழை நினைவுகள்

மழை நினைவுகள்

மழைகள் பல விதம். மழையைப் பற்றி அறிந்த போது இரண்டு விதமான மழைகள் இருப்பதாக அறிந்தது நினைவு இருக்கிறது. ஒன்று கோடைக்கால மழை. மற்றொன்று மழைக்கால மழை.

படிக்க நேர்ந்த போது இருவகை மழைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. ஒன்று தென்மேற்குப் பருவமழை. மற்றொன்று வடகிழக்குப் பருவமழை.

இப்போது பெய்து கொண்டிருக்கின்ற மழைகளை இப்படி இரண்டு விதமாகச் சொல்கிறார்கள். ஒன்று வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியினால் பெய்யும் மழை. மற்றொன்று பருவநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை.

எப்போதும் மழை இப்படி இரண்டு வகையாகத்தான் பிரிந்து பெய்யுமா?

திருவள்ளுவரும் மழையை இரண்டாகப் பிரித்துதான் சொல்கிறார். ஒன்று பெய்யாமல் கெடுக்கும் மழை. இரண்டு பெய்து காக்கும் மழை.

எனக்கு வறட்சியையும் வெள்ளத்தையும் பார்க்கும் போது மழை இரண்டாகத்தான் தெரிகிறது. ஒன்று பெய்யாமல் இருந்து விட்ட மழை. மற்றொன்று பெய்து கொண்டே இருந்து விட்ட மழை.

வெறொன்றும் மழையைப் பற்றிச் சொல்ல இருக்கிறது. அதுவும் இரண்டு இருக்கிறது. ஒன்று, அப்போது மழை பெய்தால் காகிதத்தில் கப்பல் செய்து விட்டு வேடிக்கைப் பார்ப்பது. இரண்டு, இப்போது மழையைப் பார்த்து விடுமுறை விட்டு விடுவதால் மழையைப் பார்க்காமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது. 

தொலைக்காட்சியில் மழை பெய்வதை நன்றாகக் காட்டுகிறார்கள்.

*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...