24 Nov 2022

கவிதைகளின் உள்ளார்ந்த அனுபவங்கள்

கவிதைகளின் உள்ளார்ந்த அனுபவங்கள்

சில வறட்சியான கவிதைகளைப் படிக்கும் போது தாகம் முட்டிக் கொண்டு வந்து விடுகிறது.

படிக்கின்றவருக்கே நிலைமை இப்படி ஆகிறது என்றால் எழுதியவரின் நிலை எழுதிய போது எப்படி இருந்திருக்கும்?

கடும் வறட்சியைத் தாண்டித்தான் எழுதியிருக்க வேண்டும். வியர்வை ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியிருந்திருக்கலாம்.

கவிஞர்கள் எப்படி இப்படி வறட்சியைத் தாங்கிக் கொள்ள சம்மதிக்கிறார்கள்? அது கவிதைக்காகத்தான் இருக்க முடியும்.

இந்தப் பூமியில் வறட்சியான பாலைவனங்கள் இருப்பதில்லையா? இந்தியாவில் தார் பாலைவனம் இருக்கிறது. ஆப்பிரிக்காவில் சகாரா பாலைவனம் இருக்கிறது. அரபு நாடுகள் பல பாலைவனமாகவே இருக்கின்றன.

உலகமே இப்படி இருக்கும் போது அது கவிதையிலும் பிரதிபலிக்கத்தான் செய்யும். கவிஞர்கள் கவிதைகளில் பாலைவனங்களைப் பிரசவிப்பதற்கு அதுதான் காரணமாக இருக்க முடியும்.

நான் பாலைவனங்களைக் கடக்க ஆசைப்படும் போதெல்லாம் அது போன்ற கவிதைகளை எடுத்துப் படித்துக் கொள்வதுண்டு. நிஜமாகவே பாலைவனத்தைக் கடந்து வந்தது போன்ற அனுபவத்தை அந்தக் கவிதைகள் தருகின்றன.

அந்தக் கவிதைகளை எங்களுக்கும் சொன்னால் நாங்களும் பாலைவனத்தைக் கடக்கும் முயற்சியில் ஈடுபட்டுப் பார்ப்போம் என்று நீங்கள் சொல்லலாம்.

எனக்குப் பாலைவனமாக இருக்கும் கவிதைகள் உங்களுக்குப் பனிமலையாகக் கூட இருக்கலாம். கவிதைகளை உள்வாங்கும் அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டது.

உங்களுக்கான பாலைவனக் கவிதைகளை நீங்கள்தான் தேடிக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும்.

அவ்வபோது மழை பெய்து வெள்ளக்காடாகி விடும் சூழ்நிலைகளில் அது போன்ற பாலைவனக் கவிதைகளைக் கண்டுபிடித்து வைத்துக் கொண்டால் வெள்ளக்காட்டிலிருந்து வறட்சிக் காட்டிற்குப் பயணித்து ஒரு மாறுதலான அனுபவத்தைப் பெற்று வந்து விடலாம்.

அதற்காகவேனும் சில பாலைவனக் கவிதைகளைக் கண்டுபிடித்து வைத்துக் கொள்வது எப்போதும் நல்லது.

நான் கண்டுபிடித்து வைத்திருக்கிறேன். நீங்களும் கண்டுபிடித்து வைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து பகிர வேண்டாம்.

******

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...