28 Nov 2022

போடா அந்தப் பக்கம்!

போடா அந்தப் பக்கம்!

“சம்பளம் போதவில்லை!” என்றான் நண்டு குஞ்சு.

யார் இந்த நண்டு குஞ்சு? அவன் என் நண்பன். அவனது இயற்பெயர் வேறு. நான் வைத்து புனைப்பெயர் இந்த நண்டு குஞ்சு.

அவன் ‘அ’ – நிறுவனத்தில் வேலை செய்கிறான். அதென்ன ‘அ’ – நிறுவனம்? தெரியாத ஒன்றை ஆங்கிலத்தில் ‘x’ என்று குறிப்பிடுவதில்லையா? தமிழர்களாக இருந்து கொண்டு எதற்கு ஆங்கிலத்தில் குறிப்பிட வேண்டும்? அந்த ‘x’ க்குப் பதிலாக தமிழில் நான் உருவாக்கியிருப்பதுதான் ‘அ’.

அது ஏன் அகர முதல எழுத்தையே என்று நீங்கள் கேட்கலாம். எழுதுவது எதற்காக? பெயர் இடுவது எதற்காக? அனைவருக்கும் புரிவதற்காகத்தான் அல்லவா!

தமிழின் பிற எழுத்துகள் புரியாத, தெரியாத தமிழர்கள் இருக்கலாம். அவர்கள்தானே தமிழர்கள். முதல் எழுத்து புரியாத, தெரியாத தமிழர்கள் இருக்க வாய்ப்பில்லை. அவர்களின் வசதிக்காகவும் சொகுசுக்காகவும்தான் இந்த ‘அ’

நாமமது தமிழராய்த் தமிழ் உணர்வு பேசப் போய், சம்பளம் போதவில்லை என்று சொன்ன நண்டு குஞ்சுவை அந்தரத்தில் விட்டு விட்டோம் பாருங்கள்.

நான் நண்டு குஞ்சுவைப் பார்த்து,

“இவ்வளவு பக்க வியாபாரங்கள் (சைட் பிசினஸ்) இருந்துமா சம்பளம் போதவில்லை?” என்றேன்.

“அதற்கு (பக்க வியாபாரங்களுக்கு) முதலீடு (இன்வெஸ்ட்மென்ட்) செய்யத்தான் சம்பளம் போதவில்லை” என்றான்.

“என்னடா நண்டு குஞ்சு இப்படிச் சொல்கிறாய்?” என்றேன்.

“சம்பளம் வாங்குவது எதற்காக? சொந்த வேலையைப் பார்ப்பதற்குத் தேவையான முதலீட்டைத் திரட்டத்தானே?” என்றான்.

“சம்பளம் கொடுக்கும் அ – நிறுவனத்தை நினைத்துப் பார்த்தாயா?” என்றேன்.

“சொந்த (பக்க) வியாபாரத்தைப் பார்க்கவே நேரம் போதவில்லை. போடா அந்தப் பக்கம்.” என்றான் கோபம் வந்தவனாக.

நான் எந்தப் பக்கம் போவது என்ற யோசிக்க ஆரம்பித்தேன். எனக்கு யோசனை வரவே இல்லை. நீங்களே சொல்லுங்கள், நான் எந்தப் பக்கம் போகலாம்?

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...