25 Nov 2022

ஒப்பனையில்லாத முகத்துடன் பல நாட்கள்

ஒப்பனையில்லாத முகத்துடன் பல நாட்கள்

கல்யாணம் ஆகும் போது கொஞ்சமாவது ஒப்பனை செய்து கொள்ள சொன்னார்கள். எனக்கென்னவோ அந்தக் கருமத்தை எல்லாம் செய்து கொள்ள பிடிக்காததால் நான் வழக்கம் போலவே வந்து நின்றேன்.

அப்பாடா பெண் பார்த்து விட்டுப் பயந்து விடப் போகிறாள் என்று நண்பர்கள் சேர்ந்து தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவி தலை வாரி விட்டு, முகத்துக்குக் கொஞ்சம் புட்டா மாவு பூசி விட்டார்கள்.

நீ ஏனடா தலையில் எண்ணெய் தடவிக் கொள்வதில்லை என்றால், அதை ஏன் தலையில் தடவிக் கொண்டு என்று ஓர் அலுப்பு. இதனால் என் தலை முடிகளில் சில செம்பட்டையாகத் தெரிந்ததெல்லாம் வேறு.

ஏனடா புட்டா மாவு பூசிக் கொள்வதில்லைஎன்றால் அது வேறு கருமத்தை முகத்தில் பூசிக் கொண்டு, அதென்ன வெட்டி வேலை என்று இருந்து விட்டேன்.

பிறகெப்படிடா அந்தப் பெண் உன்னை கட்டிக் கொள்ள சம்மதித்தாள் என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தக் கேள்வியை நானே ஒரு நாள் அவளிடம் கேட்டேன். ‘அப்பாதான் உங்களைக் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று சொன்னார்கள். பண்ணிக் கொண்டேன்.’ என்றாள்.

இது போன்ற அப்பா இல்லையென்றால்,  அப்பா சொல்வதைக் கேட்கும் அது போன்ற மகள் இல்லை என்றால் என் நிலையை நினைத்துப் பாருங்கள்.

நானும் யாருக்கும் காதல் கடிதம் கொடுத்திருக்க முடியாது. எந்தப் பெண்ணும் எனக்குக் காதல் கடிதமும் கொடுத்திருக்க மாட்டார்கள். வாலிப பருவத்தில் சிங்காரமாய் அலையாமல் காட்டுமிரண்டியாக அலைந்தால் யார்தான் கடிதம் கொடுப்பார்கள்?

அதனால் நான் எப்போதும் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். கல்யாணம் ஆக வேண்டும் என்று இருந்திருக்கிறது, இல்லையென்றால் நடந்திருக்குமா சொல்லுங்கள்.

இப்போதுதான் தலைக்குக் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் வைக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கத் தொடங்கியிருக்கிறேன். இதென்ன திடீர் மாற்றம் என்றால் முடிகள் ரொம்பவே வெளுத்து விட்டன. அத்துடன் கொட்டிக் கொண்டும் இருக்கின்றன. அதைக் கொஞ்சம் மறைப்பதற்கு தேங்காய் எண்ணெய் தேவைத்தான் படுகிறது.

தேங்காய் எண்ணெய்தான் என்ன ஓர் அற்புதமான பொருள். இருக்கின்ற கொஞ்ச முடிகளின் வெளுப்பு போக்கி தலையோடு தலையாகப் பசையைப் போல ஒட்ட வைத்துக் கொள்வதற்கு ரொம்பவே உதவுகிறது. அது பார்ப்பதற்கு நிறைய முடிகள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தருகின்றது.

அத்துடன் இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தலையில் இருக்கும் கொஞ்ச நஞ்ச முடிகளும் இருக்காது. அப்போது நானே ஆசைப்பட்டாலும் தலையில் தேங்காய் எண்ணெயைத் தடவிக் கொள்ள முடியாது. அதனால் சில நாட்களாக அலுப்புப் பார்க்காமல் தலைமுடிக்குத் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறேன்.

எதற்கும் நீங்களும் உங்களுடைய ஆலோசனைகளையும் சொல்லுங்கள்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...