26 Nov 2022

கடன் கொண்டார் கல்வி போல

கடன் கொண்டார் கல்வி போல

பழகுபவர்கள் பெரும்பாலும் கடன்  கேட்கத்தான் வருகிறார்கள்.

கடனுக்குப் பெரும்பாலானோர் சொல்லும் காரணம் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக என்பதுதான்.

இது எப்படியோ வங்கிக்காரர்களுக்கும் தெரிந்திருக்கிறது. எல்லா வங்கியிலும் கல்விக்கடன் கொடுக்கிறார்கள்.

வருங்காலம் இப்படி அமையும் என்று தெரிந்திருந்தால் ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே’ என்றே தமிழ்ப்புலவர் அதிவீரராம பாண்டியர் பாடியிருக்க மாட்டார்.

நன்றாக யோசித்துப் பார்த்தால், அவர் பாடியிருப்பதிலும் தவறொன்றுமில்லை. கடன் வாங்குவதினும் பிச்சைப் புகுவது எவ்வளவோ பரவாயில்லை.

வங்கிகள் கடன் வாங்குவதற்கு அப்படி அலையோ அலை என்று அலைய விடுகிறார்கள். பிறகெப்படி படிக்கிறவர்கள் கல்விக்கூடத்திற்கு அலைவது? வங்கிக்கு அலைந்து அலைந்தே படிக்கும் காலம் போய் விடுகிறது.

கடன் வாங்கிப் படித்து முடித்த பின் கடனைக் கட்டுவதற்கேற்றாற் போல் வேலை கிடைக்கிறதா என்றால் அப்படி ஏதும் கிடைக்கிறதா என்ன?

என் நண்பரின் மகன் ஒருவர் பொறியியல் படிப்பதற்காக பத்து லட்சம் வரை கல்விக் கடன் பெற்றிருக்கிறார். படித்து முடித்ததும் மூவாயிரத்தில் ஒரு வேலை கிடைத்தது. அந்தச் சம்பளத்தை வைத்து அவரால் வட்டிக் கட்ட முடியுமா என்பதை வங்கிக் கணக்காளர்கள்தான் சொல்ல வேண்டும்.

பத்து லட்சம் கல்விக் கடனில் ஒரு லட்ச ரூபாய்க்கு ஒரு பெட்டிக் கடை வைத்திருந்தால் கூட அதை இந்நேரம் முப்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள சூப்பர் மார்கெட்டாய் மாற்றியிருப்பேன் என்று அந்தப் பையன் புலம்புகிறார்.

இது சம்பந்தமாகக் கடன் கொடுக்கும் வங்கியாளர்களைக் கேட்டால் கல்விக்குத்தான் கடன் கொடுப்போம், பெட்டிக் கடை வைப்பதற்கெல்லாம் கடன் கொடுக்க மாட்டோம் என்கிறார்கள்.

நானும் பிள்ளைகள் படிப்பிற்காகக் கடன் கேட்டு வரும் பழக்கமானவர்களிடம் கறாராகச் சொல்லி விடுகிறேன், கல்விக்குக் கடன் என்றால் வங்கிகளைப் போய் பாருங்கள் என்று.

எல்.கே.ஜி., யு.கே.ஜி.க்கு எல்லாம் எந்த வங்கியில் கடன் கொடுக்கிறார்கள் என்று அவர்கள் கேட்கிறார்கள்.

இப்படி எல்.கே.ஜி., யு.கே.ஜி.யையே கடனில் ஆரம்பித்தால் மிச்ச சொச்ச படிப்பிற்கெல்லாம் உலக வங்கியிடம் நேரடியாக விண்ணப்பித்து கடன் வாங்குவதைத் தவிர வேறு வழிகள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதை இதைப் படிக்கும் நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

இராவணனைப் பற்றி அறிந்தவர்களுக்கு ‘கடன் கொண்டார் நெஞ்சம் போல’ என்ற உவமை அவ்வளவு பரிட்சயமாக இருக்கும். இன்றைய பெற்றோர்களைப் பற்றி ஆழக்கால் பட்டு அறிந்தவர்களுக்கு ‘கல்விக்கடன் கொண்டார் நெஞ்சம் போல’ என்பது கூடிய விரைவில் அவ்வளவு பரிட்சயமாகி விடும் என்றுதான் நினைக்கிறேன்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...