26 Nov 2022

குழந்தை சேவை மையங்கள்

குழந்தை சேவை மையங்கள்

இந்தக் குழந்தைகளை வைத்துக் கொண்டு பெற்றோர்கள் படுத்தும் பாடு இருக்கிறதே? அத்துடன் பெற்றோர்கள் படும் பாடும் இருக்கிறதே?

குழந்தைக்கு மம்மி சொல்ல வரவில்லை, டாக்டரிடம் காட்ட வேண்டும் என்கிறார்கள்.

பால் குடிக்கும் போது பாதி பால் வழிந்து விடுகிறது, குழந்தைக்கு என்ன பிரச்சனையோ என்று பயப்படுகிறார்கள்.

அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கை (அட்மிஷன்) கிடைக்க வேண்டுமே, உடனடியாக ஜாதகக் கட்டங்களைப் பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

பையனும் பாப்பாவும் இரண்டு பருவங்களாக (டேர்ம்களாக) தொண்ணூறுக்குக் (நைன்டிக்கு) கொஞ்சம் பக்கததில் மதிப்பெண்கள் (மார்க்) வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நல்ல மனநல மருத்துவரைப் (சைக்கியாட்ரிஸ்ட்டை) பார்க்க வேண்டும் என்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் படித்தால் ரொம்ப களைப்பாகி விடுவதாகக் குறைபட்டுக் கொள்கிறார்கள்.

அபாகஸ் வகுப்பிலும் நடன வகுப்பிலும் சோர்ந்து போய் விடுவதாகக் கவலைப்படுகிறார்கள்.

பிள்ளைகள் பெறுவதற்கு முன்னதாகவே பெற்றோர்கள் குழந்தைகளைப் பற்றிய ஒரு முன் முடிவுக்கு வந்து விடுகிறார்கள். அந்த முடிவுகளின் படியே பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் மருத்துவர்களை நாடியோ, ஆலோசனையாளர்களை நாடியோ கிளம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.

பிள்ளைகள் குறித்த ஒரு வார்ப்படமும் வரைபடமும் பெற்றோர்களைப் பாடாய்ப் படுத்துகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் பிறகு பொதுத்தேர்வுகள் இருக்கின்றன, நீட் போன்ற போட்டித் தேர்வுகள் இருக்கின்றன, வேலை வாய்ப்புக்கான தேர்வுகள் இருக்கின்றன. பிள்ளைகளின் கல்வி உலகம் ரொம்ப பெரிதாக இருக்கிறது. அதை விட ரொம்ப பெரிதாகப் பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

பிள்ளைகளின் இருப்பும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் இருவேறு திசையில் இயங்குகின்றன.

விளைவு, பெற்றோர்களுக்குப் பிடிக்காத, பெற்றோர்கள் விரும்பாத மற்றும் பெற்றோர்கள் எதிர்பார்க்காத குழந்தைகள் நாட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்கேற்ப பிள்ளைகளுக்கு ஒட்டுதல் வெட்டுதல் (பட்டி டிங்கரிங்) பார்க்கும் சேவை மையங்களும் ஆலோசனை மையங்களும் நாட்டில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

இது நாட்டில் இப்போது ஒரு தொழிலாகவே மாறிக் கொண்டு இருக்கிறது. இதற்காக ஆசிரமங்களை நாடுபவர்களும் இருக்கிறார்கள். அது போன்ற ஆசிரமங்களைத் தொடங்குபவர்கள் தொழில் முனைபவர்களாக மாறி இருக்கிறார்கள்.

இந்தப் பெற்றோர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளைப் பற்றி அதீதமாகக் கவலைப்படுவதை நிறுத்தினால் அவ்வளவுதான். அந்தத் தொழில்கள் அனைத்தும் நசிந்து போய் விடும்.

அவர்கள் எங்கே கவலைப்படுவதை நிறுத்துவது? ஊடகங்களும் சமூகத் தொடர்புகளும் அவர்களின் கவலைகளை அதிகப்படுத்தும் வண்ணம் இருக்கின்றன. அதற்கேற்ப புதுப்புது ஆராய்ச்சி முடிவுகள் வேறு வெளிவருகின்றன.

இந்தத் தலைமுறை குழந்தைகள் மட்டுமல்ல, இந்தத் தலைமுறை பெற்றோர்களும் பாவம்தான். எல்லாவற்றுக்கும் கவலைப்பட்டுக் கவலைப்பட்டே அவர்களின் காலம் கழிந்து கொண்டிருக்கிறது.

யாருக்காக யாரைக் குறை சொல்வது? பெற்றோர்களுக்காகக் குழந்தைகளையா? குழந்தைகளுக்காகப் பெற்றோர்களையா?

புதுப்புது தகவல்கள் சூழ் உலகம் பெற்றோர்களைக் குழப்பாமலும் அவர்களின் குழப்பம் குழந்தைகளைப் பாதிக்காமலும் இருக்க ஏதாவது செய்யத்தான் வேண்டும்.

*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...