30 Nov 2022

இந்தச் சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே!

இந்தச் சலுகை இன்று ஒரு நாள் மட்டுமே!

பத்தாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய் என்று நகரெங்கும் சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்.

மிகச் சரியாக பத்து முச்சக்கர வாகனங்களை (ஆட்டோக்களை) ஏற்பாடு செய்து நகரத்தின் சந்து பொந்து எங்கும் விளம்பரம் செய்ய வைத்திருந்தார்கள்.

கடையின் முன் பெரிய பதாகையும் (ப்ளக்ஸ்) வைத்திருந்தார்கள்.

பத்தாம் ஆண்டு துவக்க நாளன்று பத்து ஆண்டுகளில் பார்க்காத கூட்டத்தை அந்தக் கடை பார்க்க வேண்டியதாகி விட்டது.

கடையென்னவோ சாதாரண சொப்பு, செப்புச் சாமான்கள் விற்கும் கடையென்றாலும் எந்தப் பொருள் எடுத்தாலும் பத்து ரூபாய் அல்லவா!

மக்களின் கைகளிலும் பைகளிலும் பத்து ரூபாய் நோட்டுகளாக நிரம்பியிருந்தன. எங்கே போய், எப்படிப் போய் அவ்வளவு பத்து ரூபாய் நோட்டுகளையும் பத்து ரூபாய் நாணயங்களையும் சில்லரை மாற்றித் திரட்டியிருந்தார்களோ? யாரோ யாரோ அறிவார்?

காலை நேரக் கூட்டம் எப்படியும் பத்தாயிரத்துக்கு மேல் இருக்கும். மதிய நேரக் கூட்டம் நாற்பதாயிரம், அறுபதாயிரத்துக்கு எகிற வாய்ப்பிருந்தது.

போக்குவரத்துக் காவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பை மாலை மூன்று மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு கடைக்காரர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அதற்குப் பிறகு பள்ளி, கல்லூரி மாணவர்கள் வந்து விட்டால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போய் விடுமே என்று அவர்கள் யோசித்தார்கள். கடைக்காரர்கள் மறுத்து விட்டனர்.

எப்படியும் இரவு பனிரெண்டு மணி வரையிலும் அந்த அறிவிப்பு செல்லுபடியாகும் என்பதை அழுத்தம் திருத்தமாக ஒலிப்பெருக்கி வைத்துக் கடைக்காரர்கள் அறிவிப்பு செய்து கொண்டிருந்தனர்.

வேறு வழியின்று போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்து கூட்ட நெரிசலைச் சமாளித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் வியர்வை ஆறாய் சாலையோரமாய் ஓடிக் கொண்டிருந்தது.

பத்து ரூபாய்க்குப் பல விதமான பொருட்களை வாங்கியதில் மக்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

தாங்கள் வாங்கிய சொப்புச் செப்புப் பொருட்களோடு வீடு திரும்பிய பிறகுதான் அவர்களுக்குத் தெரிந்தது அவர்களது சங்கிலிகளும் மோதிரங்களும் அலைபேசிகளும் பணப்பைகளும் (பர்ஸ்களும்) காணாமல் போயிருந்தது.

பத்தாமாண்டு தொடக்க விழாவைத் தொடர்ந்து அந்தக் கடைக்காரர்கள் நகரின் பல இடங்களில் நகைக்கடைகளும், அலைபேசிக் கடைகளும், பை விற்கும் கடைகளும் ஆரம்பித்திருந்தனர்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...