25 Nov 2022

தலைமுறைகளின் படிப்பு முறைகள்

தலைமுறைகளின் படிப்பு முறைகள்

எந்தப் புத்தகம் கொண்டு வந்தாலும் உடனடியாக புலனத்திலும், தொலைசெயலியிலும் (டெலிகிராமிலும் என்பதை இப்படித் தமிழ்படுத்திக் கொள்ளலாமா என்பதற்கு தங்களது மேலான அனுமதியை வழங்க தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறேன்) அதை ப.சு.வ. வாக (பி.டி.எப். என்பதற்கு இப்படித் தமிழ்ச் சொல் சுருக்கம் ப.சு.வ. – படிப்பதற்குச் சுலபமான வடிவம் என வைத்துக் கொள்ள ஒப்புதல் வழங்கவும்) மாற்றி பகிர்ந்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு சமீப காலமாக உலவி வருகிறது மற்றும் அதிகமாக முன் வைக்கப்படுகிறது.

மேற்படி வாக்கியமே வித்தியாசமாகத்தான் இருக்கிறது. இவ்வளவு வித்தியாசமான வாக்கியத்தை இதுநாள் வரை நானும் எழுதியதில்லை. அது இருக்கட்டும். விசயத்திற்கு வந்து விடுவோம்.

புலனத்திலும், தொலைசெயலியிலும் உலா வந்து விடுவதாலே ஒரு ப.சு.வ. படிக்கப்பட்டு விட்டதாக நினைத்து விடக் கூடாது.

அதைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். பதிவிறக்கம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை அதை விட அதிகமாக இருக்கலாம். படிப்பவர்களின் எண்ணிக்கை கோடிக்கு ஒன்று தேறுவது கடினம்.

வேலை வாய்ப்புத் தகவல்களை ப.சு.வ. வாக அனுப்பினால் அதைப் பார்ப்பவர்களில் பாதி பேரேனும் படித்துப் பார்க்கிறார்கள் வேலை வேண்டுமே என்ற ஆசையில். மீதி பேர் இத்தனை பக்கங்கள் படிக்கும் வேண்டும் என்றால் அந்த வேலையே வேண்டாம் என்று படிப்பதை விட்டு விடுகிறார்கள்.

போட்டித் தேர்வுக்கென ப.சு.வ. போட்டால் அதைப் பதிவிறக்கம் செய்பவர்களைக் கணக்கெடுத்து முடியாது. பதிவிறக்கம் செய்தவர்களில் கால் வாசி பேர் அதை முக்கால்வாசி அளவுக்குப் படித்துப் பார்க்கிறார்கள். மீதி முக்கால்வாசிப் பேர்கள் யூடியூப் (இதற்கு தமிழ்ச் சொல் தெரிந்தவர்கள் அவசியம் சொல்லவும்) தேடிப் போய் அதை கால்வாசி அளவுக்குப் பொறுமையோடு பார்த்து மீதி முக்கால்வாசியைப் பார்க்க பொறுமையில்லாமல் விட்டு விடுகிறார்கள்.

என்னையே எடுத்துக் கொள்ளுங்கள். என் புலனத்திலும் தொலைசெயலியிலும் தினம் பத்து பதினைந்து கவிதைத் தொகுப்புகளாகவது வந்து குவிகின்றன. எனக்குத்தான் எதைப் படிப்பது என்பது புரியவில்லை.

சில கவிதைத் தொகுப்புகளின் கவிதைகள் இப்படித்தான் இருக்கின்றன,

“மம்மி இங்கே வா வா

ஆசை கிஸ் தா தா”

பிறகு பொன்னியின் செல்வன் நாவல் வாரத்திற்கு முறை ப.சு.வ. வாக வந்து கொண்டிருக்கிறது. அது படமாக வர இருப்பதால் அல்லது இதை நீங்கள் படிக்கும் போது படமாக வந்து விட்டதால் அதைப் படமாகப் பார்த்துக் கொள்வோம் என்றோ படத்தையே பார்த்துக் கொள்வோம் என்றோ அதையும் விட்டு விடுகிறார்கள்.

ஒரு காலத்தில் பொன்னியின் செல்வன் நாவலைப் படிப்பதற்காக அலைந்த தலைமுறை குறித்து இன்றைய தலைமுறைக்கு ஏதாவது தெரியுமா சொல்லுங்கள்.

அது சரி, ஒவ்வொரு தலைமுறையும் ஒவ்வொரு விதமாகத்தான் இருக்கும். அதை நாம் குறை சொல்லக் கூடாது.

பொன்னியின் செல்வன் படித்த தலைமுறை பத்துப்பாட்டையும் பதினெண்கீழ்க்கணக்கையும் ஆர்வமாகப் படித்ததா என்ன?

எங்கள் ஊர் தெக்குடு தாத்தா, ‘நாவலையே படித்துக் கொண்டு கிடக்கிறாள் ராட்சசி!’ என்று மகளைத் திட்டுவார். அவருக்கு எல்லாரும் தேவாரமும் திருவாசகமும் படிக்க வேண்டும். அதை நாங்கள் கேட்டுக் கொண்டதோடு சரி. அதாவது அவர் படிக்க படிக்க நாங்கள் கேட்டுக் கொண்டதோடு சரி. அப்படி ராகம் போட்டுப் படிப்பார். ஆனால் அவர் அதை ராகமாகப் பாடுவதாகச் சொல்வார்.

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...