வாடிய மனிதரைக் கண்ட போதெல்லாம் ஓடி ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம்
“பசிங்க பசி! சாப்பிட்டு
ரெண்டு நாளாச்சு!”
“தனி ஒரு மனிதருக்கு உணவில்லை
என்றால்… தாங்க முடியவில்லை நண்பா! இந்த ஜகத்தை அழிப்பதற்கு முன்பாக உன் பசியை அழித்து
விடுவோம். வா நண்பா! உணவகத்தில் (ஓட்டலில்) உணவுண்டு வரலாம்.”
“உங்களுக்கு ஏங்க கஷ்டம்?
பணத்தைக் கொடுத்தா நானே போய்ச் சாப்பிட்டுக்குவேனுங்க.”
“ஏழையின் சிரிப்பினில் இறைவனைக்
காண வேண்டும். புறப்படு நண்பா!”
“பசி வயித்தக் கிள்ளுதுங்க.
தாங்க முடியலீங்க. வெரசா பணத்தைக் கொடுத்த வெரசா பசியாறிப்பேனுங்க.”
“பசி என்று வந்தால் புசி
என்று தந்து பாரப்பான்னு கவிமணியும் சொல்லியிருக்கிறார் நண்பா! இதோ அருகிலே உணவகம்!
வா நண்பா! வா!”
“பணம் கொடுக்க இஷ்டம் இருந்தா
கொடு. இல்லன்னா ஆளெ விடு. கையைப் பிடிச்சு இழுக்குற வேலையெல்லாம் வெச்சுக்காதே.”
“அற்றார் அழிபசி தீர்த்தல்
என்று வள்ளுவரும் பசிப்பிணி போக்க வேண்டும் என்று வள்ளலாரும்…”
“டேய் நொன்னை! இதுக்கு மேல
பேசுன… மவனே வவுந்துடுவேன் வவுந்து. ஒரு குவார்ட்டருக்குப் பத்து ரூவா கொறையுது, அதெ
கொடுப்பேன்னு பார்த்தா வள்ளுவர்ங்றே, வள்ளலாளர்ங்றே. இனுமே உன்னெ இந்த ஏரியாவுல பார்த்தேன்.
பாத்த எடத்துல குழி தோண்டிப் புதைச்சிடுவேன். நான் ஒரு தடவெ சொன்னா நூறு தடவெ சொன்ன
மாதிரி. இந்த எடத்தெ விட்டு ஓடுறீயா? இல்லே தூக்கிப் போட்டு மிதிக்கவா!”
அதற்கு மேல் அந்தப் புண்ணிய
பிரதேசத்தில் நிற்கவும் முடியுமோ?
வாடிய மனிதரைக் கண்ட போதெல்லாம்
ஓடினேனே என்று ஓடுகிறேன், ஓடுகிறேன், ஓடிக் கொண்டிருக்கிறேன்.
என் ஓட்டத்தை நிறுத்தியிருக்க
வேண்டும். என் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும்.
யாராவது செய்தார்களா?
விளைவு?
நான் வேகமாக ஓடி ஓடி ஒலிம்பிக்
வரை ஓடி ஒலிம்பிக் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வாங்கும் படியாகி விட்டது.
*****
No comments:
Post a Comment