23 Nov 2022

மழை நினைவுகள்

மழை நினைவுகள்

மழைகள் பல விதம். மழையைப் பற்றி அறிந்த போது இரண்டு விதமான மழைகள் இருப்பதாக அறிந்தது நினைவு இருக்கிறது. ஒன்று கோடைக்கால மழை. மற்றொன்று மழைக்கால மழை.

படிக்க நேர்ந்த போது இருவகை மழைகளைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தது ஞாபகம் இருக்கிறது. ஒன்று தென்மேற்குப் பருவமழை. மற்றொன்று வடகிழக்குப் பருவமழை.

இப்போது பெய்து கொண்டிருக்கின்ற மழைகளை இப்படி இரண்டு விதமாகச் சொல்கிறார்கள். ஒன்று வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியினால் பெய்யும் மழை. மற்றொன்று பருவநிலை மாற்றத்தினால் பெய்யும் மழை.

எப்போதும் மழை இப்படி இரண்டு வகையாகத்தான் பிரிந்து பெய்யுமா?

திருவள்ளுவரும் மழையை இரண்டாகப் பிரித்துதான் சொல்கிறார். ஒன்று பெய்யாமல் கெடுக்கும் மழை. இரண்டு பெய்து காக்கும் மழை.

எனக்கு வறட்சியையும் வெள்ளத்தையும் பார்க்கும் போது மழை இரண்டாகத்தான் தெரிகிறது. ஒன்று பெய்யாமல் இருந்து விட்ட மழை. மற்றொன்று பெய்து கொண்டே இருந்து விட்ட மழை.

வெறொன்றும் மழையைப் பற்றிச் சொல்ல இருக்கிறது. அதுவும் இரண்டு இருக்கிறது. ஒன்று, அப்போது மழை பெய்தால் காகிதத்தில் கப்பல் செய்து விட்டு வேடிக்கைப் பார்ப்பது. இரண்டு, இப்போது மழையைப் பார்த்து விடுமுறை விட்டு விடுவதால் மழையைப் பார்க்காமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பது. 

தொலைக்காட்சியில் மழை பெய்வதை நன்றாகக் காட்டுகிறார்கள்.

*****

No comments:

Post a Comment

கருமங்களின் போலிகள்!

கருமங்களின் போலிகள்! கருமம்டா இதெல்லாம்! இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்கிறீர்கள்? நான் எங்கள் ஊரில் ஒருவரைப் பார்க்கும் போதெல்லாம் இ...