ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு புதுமை தேவைப்படுகிறது.
புதுமையற்ற ஒன்றை மக்கள் சமூகமாய் நின்று ஓரணியில் திரண்டு நிராகரித்து விடுகிறார்கள்.
அகல் இலக்கியக் கூடலின் ஒவ்வொரு மாதாந்திரக்
கூட்டத்துக்கும் ஒரு புதிய ஆளைத் தேடிக் கொணர்வது சிரமமாகவும், சுவாரசியம் நிரம்பியதாக
இருக்கிறது. ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு புதிய ஆள் தேடிக் கொணரப்படுகிறதா? அல்லது
தேடி வருகிறார்களா? என்கிற இரு நிலை சாத்தியப்பாட்டுக்கும் அகல் இலக்கியக் கூடலால்
ஒரு சார்பு நிலையிலான பதிலை தந்து விட முடியாது என நாவலாசிரியர் நினைக்கிறார்.
உலகின் சுவாரசியமான மனிதர்கள் நிறைய இருக்கிறார்கள்.
அது ஒரு பிரச்சனையில்லை. அவர்கள் அகல் இலக்கியக் கூட்டத்துக்காகப் பேச சம்மதிக்க வேண்டியிப்பது
அவ்வபோது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. இப்போது அந்தப் பிரச்சனையைத் தூக்கித் தூர
வைத்து விடலாம். இல்லையெனில் அதைப் பற்றிப் பேசி இன்னும் கொஞ்சம் நேரம் வீணாக நேரிடலாம்.
அகலின் ஐந்தாவது இலக்கியக் கூடலுக்காக
விகடு, 'தமிழ்ப் பேசும் தங்கத் தமிழன்' என்று அடைமொழிச் சூடிக் கொடுத்த சுடர்முரசு
எஸ்.கே.வைக் கொணர்கிறான்.
எஸ்.கே.வைப் பற்றிப் பார்ப்பதற்கு முன்
அவர் பேசியதைக் கேட்க வேண்டியதாக இருக்கிறது. இவர் நமது வலைப்பூ வாசகர்களுக்கு விகடுவால்
நன்று அறிமுகமானவர் என்பதால் கூடுதல் அறிமுகம் தேவைப்படாது என நாவலாசிரியர் நினைக்கிறார்.
எனினும் அப்படி தடலாடியாக அறிமுகத்தை நிராகரிக்கக் கூடியவர் அல்லர் எஸ்.கே. அதை அவர்
மிகவும் எதிர்பார்ப்பவராக இருக்கிறார். அவர் குறித்த இன்னபிற மற்றும் கூடுதல் தகவல்களுக்கு
முன் அவர் பேசியதாவது,
"...என்னால் முன்பு போல எழுத முடியவில்லை.
எதுவும் தோன்றவில்லை. இந்த நிலையை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் எழுத
வேண்டும் என்று எவ்வளவு ஆசையாக இருக்கிறது தெரியுமா? அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்வது
அவ்வளவு கொடுமையாக இருக்கிறது.
நான் என் இஷ்டத்துக்கு எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இன்று எப்படியாவது எழுத வேண்டும் என்று நினைத்தும் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதாமல்
இருந்து இந்த நேரத்தை என்னால் வீணாக்க முடியாது. எதையாவது எழுதித்தான் ஆக வேண்டும்.
எதுவும் தோன்றாவிட்டால் இன்று செய்தவைகளையாவது எழுதிப் பார்க்க வேண்டும். அதில் எந்த
சிரமும் இல்லை. எழுதிப் பார்க்கலாம். ஆனால் இன்று செய்ததில் என்ன சிறப்பு இருக்கிறது?
எதுவுமில்லை. வெறுமனே கழிந்து விட்டது இன்று. ஆகா! அருமை! அந்த வெறுமையை எழுத வேண்டும்.
இப்படி வெறுமையை அநேகமாக யாரும் எழுதியிருக்க மாட்டார்கள். எனக்கு இன்னொன்றும் தோன்றுகிறது.
நீங்கள் நினைப்பதும் சரிதான். வெறுமையை எழுதினால் அது எப்படி வெறுமையாகும் சொல்லுங்கள்!
எழுத்தின் கஷ்டங்கள் இவைகள் எல்லாம். நான் உங்களை எழுத்தாளன் ஆக வேண்டாம் என்று சொன்னால்
அதற்காக கோபப்பட்டு விடாதீர்கள். இவ்வளவு குஷ்டங்களும், கஷ்டங்களும் எழுதுவதில் இருக்கின்றன
என்பதற்காகத்தான் நான் வேண்டாம் என்று சொல்கிறேன்.
எதுவும் எழுத முடியாத நேரத்தில் நான் செய்யும்
ஒன்று என்னவென்றால் யாருக்காவது குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்து விடுவேன். நலம் விசாரித்தோ,
காலை வணக்கம் சொல்லியோ, சாப்பிட்டு ஆகி விட்டதா என்றோ அனுப்பிக் கொண்டிருப்பேன்.
வாட்ஸ் அப் அந்த நேரத்தில் வறுபடும். எனக்கு
செய்தி அனுப்பிய அனைவருக்கும் பதில் அனுப்பிக் கொண்டிருப்பேன். அது பார்வேர்டு மேசேஜ்
என்றாலும் அதைச் சிலாகித்து அதை அனுப்பியதற்காக அதற்கு நன்றி சொல்லி அனுப்பிக் கொண்டிருப்பேன்.
இவைகள் எல்லாம் அந்த நேரத்தில் மட்டும்தான். அதற்கப்புறம் அந்த மனநிலை மாறி விட்டால்
யார் என்ன செய்தி அனுப்பினாலும் அதற்குப் பதில் கிடையாது. குறிப்பாக அவசரமாக ஓ நெகடிவ்
ரத்தம் தேவை, உடனே அணுகவும் என்று செய்தி வந்தாலும் கண்டு கொள்ள மாட்டேன்.
எழுதுவதில் ஒரு வசதி என்னவென்றால் இயல்பை,
இருப்பை எழுதுவது அவ்வளவு எளிது. அதை எழுத முடியாத அளவுக்கு மனம் எங்கும் கற்பனைக்
குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதுதான் எழுத்து என்ற மாயையை - இதற்கு முன்பு எழுதிச்
சென்றிருக்கின்ற எழுத்தாளப் பெருமக்கள் உருவாக்கிப் போய் விட்டார்கள். என்ன செய்வது
சொல்லுங்கள். அதையெல்லாம் வெளியேற்றி விட்டு உருப்படியாக ஒன்றை யோசிப்பதற்குள் பிராணன்
போய் விடும்.
எழுதுவதற்கு ஏதாவது வருகிறதுதான். இல்லையென்று
சொல்ல முடியாது. எதை எழுத வேண்டும் எதிர்பார்க்கிறேனோ அது வருகிறதா என்றால் அங்குதான்
பிரச்சனை. அது வராது. அதற்காக மெனக்கெட வேண்டியிருக்கும். மெனக்கெட்டு என்ன பிரயோஜனம்?
அதில் கொஞ்சம் கூட இயல்பே இருக்காது பாருங்கள். அதனால் எழுதுவதில் மெனக்கெடல் என்பது
எனக்கு அறவே பிடிக்காது. ஆனால் மெனக்கெடாமல் என்ன எழுத முடிகிறது சொல்லுங்கள்.
ஒரு தேர்ந்த கதையை எழுதி முடித்த விட்டது
போன்ற சோர்வு அவ்வபோது வந்து விடுகிறது. அந்தக் கதையை இன்னும் எழுதவேயில்லை என்பது
வேறு பிரச்சனை. ஆனால் தேர்ந்த கதையை எழுதி முடித்து விட்டதாகத்தான் தோன்றுகிறது. அழகான
அந்த மனநிலையிலேயே வாழ்ந்து விட்டுப் போய் விடலாம். இந்த உலகுக்கு என் எழுத்து கிடைக்காமல்
போய் விடுமே. என்ன செய்வது? அதற்காகவே எழுத வேண்டியிருக்கிறது..."
*****
No comments:
Post a Comment