2 Jan 2020

தீராத சஞ்சலம்



செய்யு - 315

            வானம் மசங்கத் தொடங்கிடுச்சி. கொஞ்சம் கொஞ்சமா வானத்துலேந்து இருட்டைக் கொட்டுறாப்புல வானம் பூமியை இருட்டாக்கத் தொடங்குது. விகடு சைக்கிள்ல வெளிச்சத்துல வராப்புல விநாயகம் வாத்தியாரு மேக்ஸ் ஹண்ட்ரட் ஆர் பைக்கை அவன் சைக்கிளு வுடுறதுக்குத் தகுந்தாப்புல மொல்லமா ஓட்டிட்டு வர்றாரு. கூத்தாநல்லூரு கடைத்தெரு ஜெகஜோதியா இருக்கு. குட்டிச் சிங்கப்பூரு இல்லையா! அதெ உண்மைன்னு சொல்றாப்புல அங்கங்கயும் விளக்கு வெளிச்சம் வெத வெதமா இருக்கு. எல்லா வெளிச்சமும் கூத்தாநல்லூர்ர கடந்து வர்ற வரைக்கும்தாம். பெறவு பாத்தாக்கா ரோட்டுல அப்பிக் கெடக்குற தாரோட போட்டிப் போடுறாப்புல  ரோட்டுக்கு மேலயும் கருப்பா இருட்டு அப்பிக் கெடக்குது. பண்டுதகுடி பாலம் வர்ற வரைக்கும் அப்படித்தாம் இருக்குது.
            பண்டுதகுடிப் பாலத்துல இருக்குற கடைத்தெருவு வெளிச்சமா இருக்கு. அதைக் கடந்துப் போனாக்கா திரும்பவும் இருட்டு அப்பிக்கிது. அதெ கடந்து காடுவெட்டியக் கடந்தாத்தாம் பெறவு அங்கங்க கிராமங்கள் இருக்கு. வெளிச்சத்தெ கண்ணால பாக்கலாம். விகடுவுக்கு இருட்டுங்ற பிரச்சனை இல்லாத அளவுக்கு விநாயகம் வாத்தியாரு தோதா வண்டிய ஓட்டிக்கிட்டு வர்றாரு. இருந்தாலும் காடுவெட்டியில ஒரு இசட் மாதிரியான வளைவு இருக்குப் பாருங்க. அது பயங்கரமான வளைவு. அந்த வளைவுக்கு அந்தப் பக்கமும், இந்தப் பக்கமும் சரித்தாம் ஒரே காடு. ஒரு ஆள அடிச்சிப் போட்டாக்கக் கூட அடையாளம் கண்டுபிடிக்கிறது செரமந்தாம். ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் என்னென்னவோ செடிங்களும், மரங்களும் கண்டமேனிக்கு வளந்து கெடக்குதுங்க.
            அந்த வளைவ வந்து திரும்புனா ரோட்டோட வெண்ணாறும் சேந்துக்கும். அதுக்குப் பெறவு ரோட்டுல மனுஷங்களும், ஆத்துல தண்ணியும் ஒண்ணாத்தாம் பயணம் பண்ணுவாங்க. அந்த ரோட்டுக்கு வெண்ணாறு தொணையா, வெண்ணாத்துக்கு ரோடு தொணையான்னு தெரியாத அளவுக்கு ஆறும், ரோடும் ரெட்டைப் புள்ளைங்க கணக்கா கைகோத்துக்கிட்டுத்தாம் திட்டை வரைக்கும் ஏம் மணமங்கலம் வரைக்கும் ஒண்ணாவே வரும். பெறவு சில எடங்களல்ல அங்கங்க பிரிஞ்சிக்கிட்டாலும் ரோடும் வெண்ணாறும் பல எடங்கள்ல ஒண்ணா சேந்துக்கும்.
            காடுவெட்டி வளைவு திரும்பியாச்சி. வளைவு திரும்பி ஒரு பர்லாங் போனாக்கா ஆத்துக்கரை பக்கமா இருக்குற அரசமரம் காத்துல இலைகள சிலுசிலுப்பிக்கிட்டு பேயப் போல கூச்சல போடுது. நெஜமாவே அந்த அரசமரத்துக்கு பேயோடல்லாம் சகவாசம் இருக்குறதா சனங்கப் பேசிக்கிறது உண்டு. அந்த அரசமரத்தடிக்குக் கீழே சின்ன கொட்டாயி இருக்கு. அந்தக் கொட்டாயிக்கு உள்ளார ஒரு சமாதி இருக்குது. ஒரு காலத்துல சாதி விட்டு சாதி மாறி காதலிச்ச பொண்ணொருத்திய ஊரு சனமும், சாதிக்கார சனமும் ஏத்துக்காமப் போயிருக்காங்க. அதுல மனசொடிஞ்சிப் போன பொண்ணு அந்த அரசமரத்துலத்தாம் தூக்குல தொங்கிடுச்சு. இப்பிடி ஆயிப் போகுமுன்னு தெரிஞ்சா அவுங்க காதல தடுத்திருக்காம இருந்திருக்கலாமுன்னு சனங்க நொம்பலப் பட்டுப் போயி அந்தப் பொண்ண அங்கேயே அடக்கம் பண்ணி, அங்கேயே ஒரு சமாதியையும் கட்டி வெச்சி அந்த எடத்துல ஒரு கொட்டாயையும் போட்டு சனங்க அந்த எடத்த ஒரு குறிக் கேக்குற எடமா மாத்தி வெச்சிட்டுங்க.
            அந்த எடத்துல பகல் நேரத்துல ஒரு சாமியாடி குறிச் சொல்றாரு. அவரோட வூடு அந்த சமாதிக்கு எதுத்தாப்புல நாலு பர்லாங் தூரத்துல வயலுப் பக்கமா வயலுக்குள்ள ஒத்த வூடா ஒரு ஓட்டு வூடா இருக்குது. பகல்ல அந்த சமாதிப் பக்கமா வந்து குறி சொல்லுற அந்தச் சாமியாரு ராப்பொழுது ஆனாக்காப் போதும் அந்த எடத்த வுட்டு துண்டக் காணும், துணியக் காணும்னு ஓடிப் போயி வூட்டுக்குள்ளார அடைஞ்சிக்கிறாரு. என்னிக்காவது யாராவது வந்து பிடிக்காதவங்களுக்குக் காப்புக் கட்டணும், தகடு வைக்கணும்னு சொன்னாத்தாம் அவுங்க தொணையோட வர்ற சாமியாடி அந்த வேலைய முடிச்சதும் ஓடி ஒளிஞ்சிக்கிறாரு. மித்தபடி அந்த எடத்தக் கடந்து போற வாகனங்களும், மனுஷங்களும் அந்த எடத்த பார்க்க விரும்பாதது போல கடந்துப் போயிடுறாங்க.
            பகல் நேரத்துல வர்ற மனுஷங்க அந்த எடத்தப் பத்தி எந்தப் பயமோ நடுக்கமோ கொள்றதில்ல. அந்த எடத்துல உக்காந்துக்கிறாங்க. கதை பேசுறாங்க. அரட்டை அடிக்கிறாங்க. ராத்திரி நேரந்தாம் அந்த எடத்தப் பொருத்த மட்டில் அவுங்களுக்குப் பயம். அதுக்கு ஏத்தாப்புல அரச மரமும் காத்தோடு சேந்துக்கிட்டு காட்டுக்கத்தலா பேய்க்கூச்சலு போடுறதும், காத்தோட காத்தா சேந்துகிட்டு பிசாசு போல இலைகள, கெளைகள ஆடடி ஆட்டம் போடுறதும் நடந்துக்கிட்டுத்தாம் இருக்கு. அதோட வேருக ஒவ்வொண்ணும் வெண்ணாத்துல சூனியக்காரியோட கால் நகங்கள போல பயங்கரமா நீட்டிக்கிட்டுக் கெடக்குது. ஆத்துல போற தண்ணி கரைய அரிச்சதுல அரச மரத்தோட வேர்ற அரிக்க முடியாம போயி அந்த மரத்தோட வேருங்க அப்படி நீட்டிக்கிட்டுக் கெடக்குது. அந்த வேர பிடிச்சிக்கிட்டு பகல் நேரத்துல துடிப்பான கோட்டிக்கார வாலிபப் பசங்க ஆத்துல ஆட்டம் போடுறதும் நடக்குது. எல்லா வாலிபப் பசங்களும் அப்பிடிப் பண்றதுல்ல. ஒரு சில பசங்கத்தாம் அதெ ஒரு கெத்தா நெனைச்சுக்கிட்டு அப்பிடிப் பண்ணுதுங்க. இருந்தாலும் அதுக்கும் ஒரு தெகிரியம் வேணும். இல்லேன்னா அதுல குளிச்சா சன்னிக் கண்டு போயி வெலவெலத்துப் போயிடுவாங்க.
            அந்த எடத்துக்கு வர்றப்பத்தாம் விநாயகம் வாத்தியாரு வண்டிய முன்னாடிக் கொண்டாந்து விகடுவோட சைக்கிளு மின்னாடி நிறுத்துறாரு. அவனும் கால ஊனிக்கிட்டு சைக்கிள நிப்பாட்டுறாம்.

            "ஒங் கூட கொஞ்சம் பேசணும்!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            அட பேசுறதுக்கு இன்னுமா விசயம் இருக்குங்ற மாதிரி விகடு அவர்ரப் பாக்குறாம். விநாயகம் வாத்தியாரு ஆரம்பிக்கிறாரு, "ஒண்ணுமில்லே! ஒம்மட புரபஸர்ட்ட பேசுறப்ப நாமளே தெகைச்சிப் போய்ட்டேம். யேவாரங்றது லட்சம், கோடின்னுல்லாம் சொல்றாரு. யப்பாடி நாம்ம நடுத்தரக் குடும்பம். எதாச்சிம் ஒண்ணுகெடக்க ஒண்ணு ஆயிப் போச்சுன்னா சமாளிக்கிறது செரமமமா போயிடுமோன்னு அசந்துப் போயிட்டேம். அந்த தெகைப்ப நாம்ம ஒஞ்ஞ அப்பாட்ட காட்டிக்கிடல. ஒஞ்ஞ அப்பாவுக்கு ஒண்ணுன்னா அதெ நம்மால தாங்க முடியாது. அப்பிடிப் பழகியாச்சி, அப்பிடியே இருந்தாச்சி. எறங்கியாச்சி இதுல இனுமே யோஜிக்கிறதுக்கு விசயமில்லன்னாலும் நமக்கு லட்சம், கோடின்னு கேட்ட அந்த நடுக்கும் இன்னும் தீரல பாத்துக்கோ!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            விகடு பேசாம மறுபடியும் மெளனமா இருக்காம். இப்பயாவது அவனோட வாயிலேந்து கடைசியா இந்த யேவாரம் வேணாங்கய்யா விட்டுடுறேம்னு சொல்வானோன்னு எதிர்பாக்குறாரு அவரு. ஆனா அவனோ இந்த எடத்துல நிறுத்துனது ரொம்ப எதமா இருக்குற நினைப்புல அரச மரத்தோட சிலுசிலு காத்தெ அனுபவிச்சிக்கிட்டு நிக்குறாம்.
            "இப்பிடி ஒண்ணுஞ் சொல்லாம நின்னா எப்பிடி? எதாச்சிலும் சொல்லலாமே!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "மலையிலேந்து வுழுந்து பொழைச்சவனும் இருக்காம். புல்லு தடுக்கி வுழுந்து செத்தவனும் இருக்காம். வாழ்க்கையில எதுலத்தாம் ரிஸ்க்கு இல்ல. வூட்ட வுட்டு வெளியில கெளம்பிட்டா எதுக்கு உத்தரவாதம் இருக்குங்க. ஏம் வூட்டுக்குள்ளயே ன்னா உத்தரவாதம் இருக்கு சொல்லுங்க. மனுஷப் பயெ ரொம்ப திமிரு பிடிச்சவேம். இன்னிக்கு இருக்குற அவ்வேம் நாளைக்கும் இருப்பேங்ற திமிருலத்தான்ன அதெயும் இதெயும் பேசிக்கிட்டு அலையுறாம், திரியுறாம். நாளைக்கு எதுவும் நிச்சயமில்ல. அதுக்காக எதுக்கும் பயப்படணும்னு அர்த்தமில்ல. நமக்குத் தெரியாத ஒண்ணுல எறங்குறப்ப பயம் இருக்குறது ஞாயம்தாம். நமக்கு இதுல தெரியாததுன்னு ஒண்ணுமில்ல. நாம்ம மண்டெ கனத்தோட சொல்றதா நெனைச்சிடக் கூடாது. இந்த யேவாரத்தப் பத்தி ஒங்களுக்கு அதிகெம் தெரியாது. அதால நீஞ்ஞ பயப்படறதுல ஞாயம் இருக்கு. இந்த யேவாரத்தப் பத்தி நமக்குத் தெரியாதது ஒண்ணுமில்ல. அதால நாம்ம இதுல பயப்படுறதுக்கே வேலயில்ல. ஒலகம் பல தெசையில போயிட்டு இருக்கு. ஒரு காலத்துல வேலயக் கொடுத்த துறைங்கல்லாம் இன்னிய தேதிக்க வேலயக் கொடுக்க முடியாம அல்லாடிட்டு இருக்குது. அதாங் நெலமை. ஏன்னா காலம் வெவ்வேறு வெதமா போயிட்டு இருக்கு. ஒங்கக் காலத்துல வேல பாத்துச் சம்பாதிச்ச மேரியே இந்தக் காலத்துலயும் வேலயப் பாத்துச் சம்பாதிக்க முடியுமுன்னு எதிர்பாக்க முடியாது. இப்போ உள்ள நெலமைக்குத் தகுந்தாப்புலத்தாம் வேலயும் சம்பளமும். இதெ மாத்த முடியாது. எந்நேரம் இதுல புகுந்து தொழில கத்துக்குறாப்புல ஆயிப் போயிடுச்சி. நமக்குத் தெரிஞ்ச தொழில்லத்தாம் யய்யா நாம்ம தொழில பண்ண முடியும். ஆனா நீஞ்ஞ ன்னா நெனைக்குறீங்கன்னா ஒஞ்ஞளுக்குத் தெரிஞ்ச அதெ தொழில்ல எஞ்ஞளயும் எறக்கி அதுல வேலயப் பாத்துச் சம்பாதிக்கச் சொல்லுதீங்க. அதாம் ஒங்களுக்கு சேப்டி ஸோனா இருக்குது. அந்தச் சேப்டி சோன்லல்லாம் இன்னிக்கு வேல வாய்ப்பே கொறைஞ்சிப் போய்ட்டு இருக்கு. ஒரு காலத்துல பின்னாடி அது ஒரு வேலையாவோ, அதுல வேலை வாய்ப்போ இருக்கப் போறதில்ல. பங்குச் சந்தைங்றது ஒங்களுக்குப் புதுசா இருக்கலாம். டவுன்ல உள்ளவங்களுக்கோ, சிட்டியில உள்ளவங்களுக்கோ இது ஒரு விசயமே இல்ல. அவுங்க பாட்டுக்கு இதுல மொதலீடு பண்ணிட்டு அசால்ட்டா சம்பாதிச்சிட்டுப் போயிட்டு இருக்காம்!"ங்றான் விகடு.
            "நீயி ஏத்தோ சொல்றே! அத்து நமக்குப் புரிஞ்ச மாதிரியும் புரியாத மாதிரியும் இருக்குது. ஆனா மொத்தத்துல எத்து வாணாலும் வாழ்க்கையிலயும், யேவாரத்துலயும் மாறலாம். ஆனா யேவாரத்துல லாவமும், நட்டமும்ங்றது மாறாது. அத்தே மாத்த முடியாது. எந்த யேவாரமா இருந்தாலும் லாவத்தோட வந்தாத்தாம் மருவாதி, அந்தஸ்து எல்லாம். அந்த ஒத்த விசயத்துக்காத்தாம் எல்லாம் கெடந்து அடிச்சிக்கிறேம். யேவாரம் ஒருத்தன ஒரே அடியா தூக்கியும் வுடும். ஒரே அடியா கொடையும் சாய்ச்சி வுட்டுப்புடும். ரண்டுப் பக்கம் இருக்கு யேவாரத்துக்கு. அதெல்லாம் புரிஞ்சித்தாம் இதுல நீயி எறங்குறீயான்னு தெரிஞ்சிக்கிறதுக்குத்தாம் கேக்குறேம். ஏன்னாக்கா யேவாரங்றதெ எல்லாத்தாலயும் செஞ்சிட முடியாது."ங்றாரு விநாயகம் வாத்தியாரு.
            "யய்யா! நமக்கு சாமி மேலயும் நம்பிக்கெ கெடையாது. இந்தப் பேயி பிசாசு இதுக மேலயும் நம்பிக்கெ கெடையாது. ஆனாக்க சனங்க இந்த அரச மரத்துல என்னென்வோ இருக்குன்னுப் பேசிக்கிறாரங்க. இந்த எடத்துல சாமியாடி குறிச் சொல்லி ஆடுனா அத்து நடக்கும்னு நம்புறாங்க. நாம்ம இப்போ சொல்றேம்யா இந்த மரத்துல பேயி இருந்தா அது மேல சத்தியம், இந்த மரத்து பிசாசு இருந்தா அத்து மேல சத்தியம், இந்த எடத்துல சொல்றதெல்லாம் நடக்கும்ங்றது உண்மையினா அத்து மேல சத்தியம். நாம்ம செய்யப் போற இந்த யேவாரத்துல நட்டங்ற வார்த்தைக்கே வேல கெடையாது. அத்து எப்பிடின்னா அத்துதாம் தொழிலு நேக்கு. அத்துதாம் தொழிலு ரகசியம். அத்த நம்மால செய்ய முடியும்யா!"ங்றான் விகடு.
            "ஒண்ணுக்கு நாலு மொறையா கேக்குறேம்னு தப்பா நெனைச்சிக்கக் கூடாது. இதெல்லாம் நாம்ம அறியாதது இல்லையா!"ங்றாரு விநாயகம் வாத்தியாரு. அதுக்குப் பெறவு அவரு பேசல. வண்டிய கெளப்புறாரு. விகடுவ மின்னாடிப் போக வுட்டுப்புட்டு அவர பின்னாடி விளக்க வெளிச்சத்த காமிச்சிக்கிட்டு வண்டியில வர்றாரு. விகடு போற பாதைக்கு மின்னாடி வெளிச்சம் வெள்ளத்தப் போல பாய்ஞ்சி முன்னால போவுது. அந்த வெளிச்சத்துல நீஞ்சிப் போறாப்புல போறான் விகடு.
*****


No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...