செய்யு - 316
சேத்து வெச்சிருந்த காசு, அங்க இங்க கடன
உடன வாங்குன காசுன்னு ரெண்டு வெதமா பணத்தப் பொரட்டி சுப்பு வாத்தியாரு எண்பதினாயிரம்
பணத்தெ விகடுவோட கையில கொடுத்தாரு. ஆபீஸைப் போடுறதுக்காக ஆகக் கூடிய மித்த மித்த
செலவுக்காக அவரு கொடுத்த பணம் அது. பெரும்பாலும் செலவு எதுவுமே இல்லாமலே ஆபிஸைப் போடுறதுக்கு
மாலிக் உதவி பண்ணுனாரு. அவரு வூட்டுல இருந்த ரெண்டு ஏ.சி.யில ஒண்ண ஆபீஸூ போடுறதுக்காக
எடுத்துக் கொடுத்தாரு. வெளிநாட்டுல இருக்குற மருமவன்களோடயும், மகள்களோடயும் ஸ்கைப்புல
பேசுறதுக்காக வெச்சிருந்த ஒத்த கம்பியூட்டர தூக்கி ஆபீஸூக்காகக் கொடுத்தாரு. அவரோட
மருமவ்வேன்ல ஒருத்தரு அப்போ அவருக்கு நோக்கியா 1100 மொபைலு ஒண்ண அவருக்கு அனுப்பியிருந்தாரு.
அதெ அப்படியே தூக்கி விகடு கையில கொடுத்துட்டாரு. இதெ ஆபீசுக்காக வெச்சிக்கோன்னுட்டாரு.
அவரு பண்ண ஒத்தாசை உதவி பொருட்கள் எல்லாமும்
ஆபீஸோட தொடர்பா இருந்தாலும் இந்த மொபைல் அப்போ பெரிய சமாச்சாரம். மொபைல் அப்போத்தாம்
எல்லாருடைய கையில வர ஆரம்பிச்ச நேரம். பெரும்பாலும் எல்லாரு கையிலயும் மொபைல் வர ஆரம்பிச்சிடுச்சி.
அதிலயும் நோக்கியோவோட 1100 மொபைலுக்கு அந்த நேரத்துல தனி மெளசே இருந்துச்சு. மாலிக்
தந்த பொருட்கள்ல இத்து ஒண்ணுத்தாம் ஆபீஸத் தாண்டி விகடுவோட கையில வூடு வரைக்கும்
வர்ற மாதிரி இருந்ததால இந்த ஒண்ணுக்கு மட்டுமாவது பணத்தைக் கொடுத்துப்புடறது நல்லதுன்னு
நெனைச்சாம் விகடு. அந்தப்படியே சுப்பு வாத்தியாரு தந்த எண்பதினாயிரம் பணத்துல மொத
முறையா மூவாயிரத்த எடுத்து மாலிக் அய்யாகிட்ட கொடுத்தாம். மாலிக் அய்யா அதெ வாங்கிக்க
முடியாதுன்னுட்டாரு. "இந்தாருடா! நீயி ஆபீஸூ ஆரம்பிக்கிறதுக்கு என்னோட கிப்ட்டுன்னு
வெச்சுக்கோடா!" அப்பிடின்னுட்டாரு. இருந்தாலும் வெகடு தலைகீழா நின்னு அந்தப்
பணத்தெ அவர்ர வாங்கிக்க வெச்சாம். அதிலேந்து அவரு ரண்டாயிரத்த மட்டும் எடுத்துக்கிட்டு
ஆயிரத்தெ விகடுகிட்டயே திருப்பிக் கொடுத்துட்டாரு.
அந்த நேரத்துல கூத்தாநல்லூரு சுத்துப்பட்டின்னு
ஹட்ச் மொபைல்தாம் நல்லா டவர் கிடைச்சி வேலை செஞ்சுகிட்டு இருந்ததால ஹட்ச் கம்பெனியோட
சிம் கார்ட ஒண்ண வாங்கி அந்த மொபைல்ல போட்டுக்கிட்டாம் விகடு. அப்போ ஹட்ச் கம்பெனிகாரங்க
அவுங்களோட மொபைல் நெட்வொர்க்க பிரபலம் பண்றதுக்காக இதுக்குனே ஒரு நாய்க்குட்டியப்
விளம்பரத்துக்காகப் பயன்படுத்துனாங்க. அந்த நாய்க்குட்டிய பாக்குறப்பவே விகடுவுக்குப்
பிடிச்சிப் போயிடுச்சி. அந்த நாய்குட்டிக்காகவும்தாம் அந்த கம்பெனியோட சிம்கார்ட
வாங்குனாங்றதையும் சொல்லித்தாம் ஆவணும். பிற்பாடு அந்த ஹட்ச்த்தாம் வோடாபோனா மாறிச்சு.
தனி ஆபீசுப் போடுறதுன்னு முடிவான மறுநாளே
விகடு திருவாரூ ஆபீஸூக்குப் போறதெ நிப்பாட்டிக்கிட்டு அபீஸூ போடுற வேலையில மும்மரமாயிட்டாம்.
லெனின் இந்த விசயத்துல ரொம்பவே ஒதவிப் பண்ணுனாரு. தொண்டாமுத்தூரு ஹெட் ஆபீஸ்ல பேசி
பிரான்சைஸ் வாங்கித் தர்றதுல நிறைய மெனக்கெட்டாரு. ஆபீஸூக்குன்னு தனி அக்கெளண்ட் ஆரம்பிக்கிறதிலேந்து
எல்லா வெதத்துலயும் லெனின் முன்னாடி நின்னாரு. விகடு அதுக்கான அக்கெளண்ட் எல்லாத்தையும்
அவனோட அம்மா வெங்கு பேர்ல பண்ணிக்கிட்டாம்.
அப்போ கரூர் வைஸ்யா பேங்கோட புது கிளை
ஒண்ணை கூத்தாநல்லூர்ல ஆரம்பிச்சிங்க. அதுல லெனினுக்குத் தெரிஞ்ச குப்தா இருந்தாரு.
திருவாரூ பிராஞ்சுல வேலையில இருந்தவர கூத்தாநல்லூர்ல ஆரம்பிச்ச புது பிராஞ்ச்சுக்கு
அனுப்பியிருந்தாங்க. அவரு பல விசயங்கள்ல ரொம்ப உபயோகமா இருந்தாரு. வெங்குவோட பேருக்கு
பான் கார்டு வாங்கி, ஆபிஸ் குறித்த அக்ரிமெண்ட் எல்லாத்தையும் வெங்குவோட பேர்லயே வெச்சி
முடிச்சிக்கிட்டாம் விகடு. இந்த வேலையையெல்லாம் ஆரம்பிச்சி முடிக்க பதினெட்டு நாளுக்கு
மேல ஆயிடுச்சி. சரியா இருபத்தோராவது நாளு அன்னிக்கு அதாவது ரெண்டாயிரத்து ஆறுல ஜூன்
மாசம் மூணாவது நாள் அன்னிக்கு ஆபீஸ் ஆரம்பமாயிடுச்சு.
ஆபீஸூ ஆரம்பிச்சதெ சின்ன அளவுல ஒரு விழாவத்தாம்
ஏற்பாடு ஆயிடுச்சு. அதுக்கான செலவையும் மாலிக் அய்யாவே பாத்துக்கிட்டாரு. விழாவுக்கு
வந்தவங்களுக்கு டிபன், காபின்னு உபசரிப்புன்னு அதுக்கு ஆன செலவையும் அவரே பண்ணாரு.
துவக்க விழாவுக்கு தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட மொதலாளி குஞ்சு கவுண்டரு வந்திருந்தாரு.
தொண்டாமுத்தூரு கேப்பிட்டலோட ஆலோசகரும், பங்குச் சந்தை நிபுணருமான டாக்டர் ரித்தேஸ்
அகர்வால் வந்திருந்தாரு.
குஞ்சு கவுண்டர்ர மொத மொதலா இந்த துவக்க
விழாவுலத்தாம் விகடு பார்த்தாம். ஆளு நல்ல கம்பீரமாவும், மாநிறத்துலயும் இருந்தாரு.
கஞ்சிப் போட்ட வெடைச்சி நிக்குறாப்புல வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையுமா இருந்தாரு.
தலையில நல்லா எண்ணெயைத் தடவி படிய வாரியிருந்தாரு. முடி கருகருன்னு இருந்துச்சு. முடியில
டை அடிச்சிருந்தது தெரியலன்னாலும் மீசையில அடிச்சிருந்த டை அதெ காட்டிக் கொடுத்துச்சி.
மீசையில அடிச்சிருந்த டையில அவரு பூசியிருந்ததெ அதெ காட்டிக் கொடுத்திடுச்சி. கெளம்புற
அவசரத்துல வேக வேமாக அடிச்சிட்டு வந்தாரோ என்னவோ.
நாப்பது வயசு வரைக்கும் ரொம்ப வறுமையில
கஷ்டப்பட்டு ஆடு, மாடுகள மேய்ச்சிக்கிட்டுத்தாம் கெடந்திருக்காரு குஞ்சு கவுண்டரு.
அதுல சேர்த்த பணத்துல கொஞ்சம் கொஞ்சமா மாடுகள சொந்தமா வாங்கி மாட்டு பண்ணைய ஆரம்பிச்சி
அதுல முன்னுக்கு வந்தவரு அவரு. மாட்டுப் பண்ணை அவரோட முன்னேத்த தூக்கி விட ஆரம்பிச்சிடுச்சி.
மாட்டுப் பண்ணையோட ஆட்டுக்குப் பண்ணை, கோழிக்குப் பண்ணைன்னு ஆரம்பிச்சி பணம் பொரள
ஆரம்பிச்சதும் அதெ என்ன பண்ணுறதுன்னு தவிச்சுக்கிட்டு நின்னவரு பங்குச் சந்தைப் பத்தின
ஒரு மீட்டுக்கு போயிருந்திருக்காரு. அங்க அவுங்க பேசுன எதுவும் இவருக்குப் புரியல.
அங்க அறிமுகம் ஆனவர்தாம் ரித்தேஸ் அகர்வால்.
வடமாநிலத்துக்காரரு. அந்த அறிமுகம் எப்படி ஆயிடுச்சுன்னா, குஞ்சு கவுண்டரு பக்கத்துல
உக்காந்துக்கிட்டு இருந்த ரித்தேஸூ ஏதோ இந்திக்கார ஆளுன்னு நெனைச்சுக்கிட்டு நாம்ம
தமிழ்ல பொலம்புறது இவருக்கு என்னா புரியப் போவுதுன்னு கவுண்டரு "இத்து என்னடே
ஒரு மண்ணும் புரியலயே. கண்ணு மண்ணு தெரியாததுல பணத்தெ போட்டுப்புட்டு மணியக் காணும்,
மசுரக் காணும்னு நின்னா எப்பிடி? வெவரம் தெரியாதவங்கிட்ட பணத்தெப் போட்டு செக்கைக்
கொடுன்னா அவ்வேம் பாட்டுக்கு எடுத்துக்கிட்டு ஓடுனா நாம்ம ன்னா நடுத்தெருவுலயா நிக்கறதாடே?"
அப்பிடின்னு பொலம்பியிருக்காரு.
"செரி! என்ன பண்ணலாம்னு?" இவரோட
பொலம்பல கேட்டுட்டு ரித்தேஸூ தமிழ்ல கேட்டதும் ஆடிப் போயிருக்காரு குஞ்சு கவுண்டரு.
"என்னடே பாக்குறதுக்கு இந்திக்கார
ஆளு போல இருந்துக்கிட்டு தமிழுல பேசுதீரே? நம்மட நாட்டுல இந்தியக் கத்துக்கக் கூடாதுன்னு
போராட்டம் பண்ணி நிறுத்தி வெச்சா, நீயி இந்திக்கார ஆளு தமிழ கத்துக்கிட்டு நம்மகிட்ட
பேசிட்டு நிக்குதீயே?"ன்னுருக்காரு.
"அதெ வுடுங்க. என்னா பண்ணா நீங்க
நம்புவீங்க?"ன்னு கேட்டுருக்காரு ரித்தேஸ்.
"அத்து என்னத்தெ கருமம்! எதா இருந்தாலும்
அத்து நம்ம பேர்ல இருக்கோணும். நாம்மத்தாம் நேரடியா வாங்கோணும், விக்கோணும். எல்லாம்
நம்ம கன்ட்ரோல்ல இருக்கோணும் ஆம்மா!" அப்பிடின்னிருக்காரு.
"அப்போ ஒங்க பேர்லயே ஆபீஸ ஆரம்பிச்சி
வாங்குனா ஒங்களுக்கு ஓ.கே.வா?"ன்னுருக்காரு ரித்தேஸூ.
"அத்து எப்டி நம்ம பேர்ல ஆரம்பிக்கிறது?
நாம்ம ன்னா அம்மாம் பெரிய ஆளா ன்னா? நம்ம ஊர்ல்லா நமக்கு எல்லாத்தியும் தந்திச்சி.
நம்ம ஊரு பேர்லல்லா ஆரம்பிக்கோணும். நம்ம ஊரு தொண்டாமுத்தூரு அல்லோ!" அப்பிடின்னுருக்காரு
குஞ்சு கவுண்டரு.
"செரி அப்பிடியே ஆரம்பிச்சிடுவோமா?"
அப்பிடின்னிருக்காரு ரித்தேஸூ.
"இத்து நல்ல கூத்தா இருக்கே? நீயி
வடநாட்டு ஆளு. நீயி பாட்டுக்குப் பணத்தெ சுருட்டிக்கிட்டு வடநாடு ஓடுனா நாம்ம ஒம்மள
அங்க எங்கண போயி தேடுறதோ? நம்மள ன்னா கேன கிறுக்கன்னு நெனைச்சிக்கிட்டியாக்கும்?"
அப்பிடின்னிருக்காரு குஞ்சு கவுண்டரு.
"எல்லாத்தியும் நீங்க சொல்ற எடத்துல
நீங்க சொல்ற பேங்க்ல ஒங்க பேர்லயே ஆரம்பிச்சுத் தர்றேன். வர்ற லாபத்துல அதுவும் லாபம்
வந்தா மட்டும் அதுல முப்பது பர்சென்டேஜ் தந்தா போதும்!"ன்னுருக்காரு ரித்தேஸ்.
"அப்பிடின்னா நம்மளோட தொண்டாமுத்தூரு
வா. அத்து கிராமந்தாம். அங்க ஆரம்பிப்பியோ?"ன்னுருக்காரு குஞ்சு கவுண்டரு.
"எங்க வேணாலும் ஆரம்பிக்கலாம். நோ
பிராப்ளம்!"ன்னுருக்காரு ரித்தேஸ்.
"இந்தாருப்பா! நமக்கு இதெல்லாம் ஒண்ணும்
தெரியாதுங்கோ. எழுதப் படிக்கவும் ரொம்பவும் புரியாதுங்கோ. ஏமாத்திட்டு ஓடணும்னு
நெனைச்சாக்கா இந்த குஞ்சுக் கவுண்டன் கத்திய எடுத்து ஒரு போடு போட்டுடுவோங்கோ!"
அப்பிடின்னிருக்காரு குஞ்சு கவுண்டரு.
ரித்தேஸ் சிரிச்சிக்கிட்டே, "பக்கா
பிசினஸ் இது. பாடுபடாமலே உக்காந்துட்டே சம்பாதிக்கலாம். என்னை நீங்க நம்பலாம்."ன்னுருக்காரு.
"ஒம்மட பாத்தா நம்பலாம்னுத்தாம் தோணுது.
இருந்தாலும் தொண்டாமுத்தூரு ஆளுங்க ஒரு மாதிரி. ஏமாத்தணும்னு நெனைச்சா மாறுகாலு மாறுகையி
வாங்கிப்புடுவாங்கப்பா!" அப்பிடின்னிருக்காரு குஞ்சு கவுண்டரு.
அதுக்கு ரித்தேஸூ ரொம்ப பெரிசா சிரிச்சதோட,
"தாராளமா!" அப்பிடின்னிருக்காரு. ரித்தேஸோட அந்த சிரிப்புல விழுந்தாரோ,
யில்ல அந்த தெகிரியமான பேச்சுல வுழுந்தாரோ குஞ்சு கவுண்டரு அப்படியே சாஞ்சுப்புட்டாரு.
ரித்தேஸ் சொன்னதுல நம்பி எறங்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு. அப்படி ஆரம்பிச்ச தொண்டாமுத்தூரு
கேப்பிட்டலுக்கு தமிழ்நாடு முழுக்க நுத்து ஏழு பிராஞ்சுகள் இருந்திச்சு. விகடு ஆரம்பிச்சது
நூத்தி எட்டாவது பிராஞ்சு. குஞ்சு கவுண்டரு
ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவருங்றதால ரொம்ப செலவில்லாம சின்னதா பிராஞ்சு ஆரம்பிக்கிறோம்னு
யாரு போயி நின்னாலும் போதும் கண்ண மூடிக்கிட்டு, "ஆரம்பிடே பாத்துப்போப்போம்"னு
சொல்லிப்புடுவாரு. ஆபீஸூப் போடுறதுக்கு பண உதவியிலேந்து, பேங்க்ல சொல்லி விட்டு
லோனுக்கு ஏற்பாடு பண்ணி வுடறது வரைக்கும் எல்லாத்தையும் ரொம்பவே ரிஸ்க் எடுத்துச்
செய்வாரு.
இவ்ளோ ஸ்மார்ட்டா பிசினஸை ஆரம்பிச்ச பின்னாடியும்
குஞ்சு கவுண்டரு இன்னும் மாட்டுப் பண்ணையையும், ஆட்டுப் பண்ணையையும், கோழிப் பண்ணையையும்
ஒரு தொழிலாளி போலத்தாம் பாத்துக்கிட்டுக் கெடக்கறாரு. அங்க போனாக்க குஞ்சு கவுண்டர்ர
இப்பிடி வெள்ளையும் சொள்ளையுமா பாக்க முடியாது. நீல நிறத்துல தைச்ச தொளாம் தொளாம்ங்ற
காலு சட்டையப் போட்டுக்கிட்டு தலையில அதே நீல நிறத்துல ஒரு துண்ட கட்டிக்கிட்டு ஒரு
பாட்டாளியப் போலத்தாம் நீங்கப் பாக்க முடியும்.
என்னாங்க கவுண்டரே இப்பிடின்னா,
"ஏம்டே! ஒங்க யேவாராம் ஒரு நாளு நின்னுப் போவும். இத்து நிக்குமாளே? நாட்டுல
பாலு குடிக்கிறவனும், கறியத் திங்குறவனும் ஒரு நாளும் கொறைய மாட்டாம்டே! மாட்ட மேய்ச்சு
மனுஷனானவேம் இந்தக் குஞ்சுக் கவுண்டன்! ஆட்ட மேய்ச்சு ஆளானாவேம் இந்தக் குஞ்சுக் கவுண்டன்!"
அப்பிடிம்பாரு.
*****
No comments:
Post a Comment