31 Dec 2018

2018 இன் மோசடிகள் மற்றும் முறைகேடுகள்


2018 இன் மோசடிகள் மற்றும் முறைகேடுகள்
முதலில் வங்கி மோசடிகள்
விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு இருபதாயிரம் கோடிக்கு பட்டை நாமம் சாத்தி விட்டு இங்கிலாந்தில் இருக்கிறார். அவரை இந்தியா திருப்பி அனுப்ப இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பிட்டப் பின் மனிதர் உத்தமராகப் பேசியிருக்கிறார். வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த தயார் என்று. அவரை இந்தியா தவறாகச் சித்தரித்திருப்பதாக வேறு பீதி கிளப்பியிருக்கிறார். திருடாதவனுக்கு இருட்டில் என்ன வேலை என்று கேட்கக் கூடாது போலிருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் கடன் முறைகேட்டில் விஜய் மல்லையா அளவுக்கு இருபதாயிரம் கோடியை வழித்து எடுத்துக் கொண்டு அவர் பாணியிலேயே வெளிநாட்டுக்கு ஓடியிருக்கிறார் நீரவ் மோடி.
ஐ.டி.பி.ஐ. வங்கி மோசடியில் ஏர்செல் சிவசங்கரன் அதே பாணியில் வெளிநாடு தப்பி ஓடியிருக்கிறார்.
இதில் வெளிநாடு தப்பாமல் மாட்டியிருப்பவர், ரோட்டோமேக் பேனா நிறுவனர் விக்ரம் கோதாரி ஒருவரே.கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஹைதராபாத்தில் டோடம் இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் ஒன்றல்ல இரண்டல்ல எட்டு வங்கிகளில் 1394 கோடிக்கு மோசடி செய்திருக்கிறது.
வங்கி மோசடி விசயங்களில் ஒரு தண்டனைக்கான தீர்ப்பும் வெளிவந்து இருக்கிறது. இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட மூன்று பேருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
நமக்கெல்லாம் பாஸ் பேங்கில் ஒரு பெர்சனல் லோன் வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி, கடைசி நேரத்தில் அதுவும் கேன்சலாகி விடுகிறது. மோசடி செய்பவர்களுக்கு மட்டும் எப்படி வங்கிகள் வாரி வாரி வழங்குகின்றன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இதில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை எப்படிப் புரிந்து கொள்வது மேலதிகமான புரியாதப் புதிர்.
முறைகேடுகள் என்று பார்த்தால்... அதற்கு ஒரு தனிப்பகுதி ஒதுக்கி எழுத வேண்டும் என்றாலும் இதிலே எழுதி விடுவோம்.
குட்கா ஊழல், சத்துணவு கொள்முதல் முறைகேடுகள், நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடுகள் ஆகியன தமிழகத்தைப் பொருத்த வரையில் விசாரணையில் இருக்கின்றன.
இது ஒருவகை என்றால் பல்கலைக் கழக முறைகேடுகள் பயங்கரமானவை.
நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட பாலியல் விவகாரம்,
சென்னை அண்ணாப் பல்கலைக் கழக தேர்வு முறைகேடுகள் எனத் தொடங்கி
அண்ணா, அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் மேல் வழக்கே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக கவர்னரே தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் கோடிகளில் பணம் புரண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி செய்வார்கள் என்பதைக் கேள்விபட்டிருக்கிறோம். நடக்கும் முறைகேடுகளைப் பார்த்தால் பல்கலைக்கழக முறைகேடுகளையே தனி ஆராய்ச்சி செய்ய வேண்டும் போலிருக்கிறதே மக்கா!
அதற்காக நீதிமன்றங்களும் சும்மா இருக்கவில்லை. முறைகேடுகளுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றியிருக்கிறது.
கால்நடைத் தீவன ஊழலில் லாலுவுக்கு 14 ஆண்டு சிறை,
மான்வேட்டை ஹீரோ சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை,
சிறுமி பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை என்று நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன.
வங்கதேச நீதிமன்றமும் ஊழலுக்கு எதிராக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது.
பத்தி கொஞ்சம் பெரிதாகி விட்டதுதான். என்ன செய்வது அந்த அளவுக்கு நாட்டில் மோசடிகளும், முறைகேடுகளும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆகவே, களமும் பெரிதாகி விட்டது.
*****

2018 இன் மரணங்கள்


2018 இன் மரணங்கள்
2019 பிறக்கப் போகும் வேளையில் உலகமே 2018 ஐ திரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
2018 மறைய இருக்கிறது. 2019 பிறக்க இருக்கிறது.
2018 இல் நிகழ்ந்த மரணங்களைத் திரும்பிப் பார்க்கும் போது நாம் எவ்வளவு இழந்திருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கலைஞர் கருணாநிதி நம்மை விட்டு மறைந்து விட்டார்.
இந்திய அளவில் முன்னாள் பிரதமர் வாஜ்பேய் மறைந்து விட்டார்.
உலக அளவில் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கை இழந்து இருக்கிறோம்.
 நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி எழுத்தாளர் நைபால் இந்த ஆண்டுதான் இறந்திருக்கிறார்.
சாகித்திய அகாதமி விருது பெற்ற நம் தமிழ் எழுத்தாளர் பிரபஞ்சனும் இந்த ஆண்டுதான் மறைந்திருக்கிறார்.
ஐ.நா.பொதுச் செயலாளராக இருந்த கோபி அன்னான் மறைந்திருக்கிறார்.
பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரும் மரணித்திருக்கிறார்.
சுராங்கனி பாடல் மூலம் அறியப்பட்ட சிலோன் மனோகர் இறந்திருக்கிறார்.
துபாயில் மாரடைப்பால் மரணமடைந்த ஸ்ரீதேவியின் மரணமும் இந்த ஆண்டுதான் நிகழ்ந்தது.
சசிகலாவின் கணவர் நடராஜன், காஞ்சி மடம் ஜெயேந்திரர் ஆகியோரும் இந்த ஆண்டுதான் மரணமடைந்தனர்.
இவைகள் தவிர இன்னும் சில மரணங்களையும் ஆறாத் துயரோடு நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேர்,
கேரளாவில் நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவரை அழைத்துச் சென்ற தந்தையின் மாரடைப்பு மரணம்,
நீட் தேர்வு தோல்வியால் விஷம் குடித்த விழுப்புரம் மாணவி, தற்கொலை செய்து கொண்ட திருச்சி மாணவி,
தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சங்கர் ஐ.ஏ.எஸ்.அகாடமியின் சங்கரன்,
இந்தோனிஷிய விமானம் கடலில் விழுந்து பலியான 189 பேர்,
எரிமலை வெடித்ததில் சுனாமி ஏற்பட்டு பலியான ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தோனிஷிய மக்கள்,
ஹெல்மெட் போடவில்லை என்று துரத்திச் சென்று இன்ஸ்பெக்டர் உதைத்ததில் பைக்கிலிருந்து கீழே விழுந்து பலியான கர்ப்பிணி,
ஒரு தலைக் காதலால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட அஸ்வினி,
தமிழகத்தில் கஜா புயல் பலிகொண்ட 51 பேர் (அரசின் கணக்குப்படி)
என்று நிறைய மரணங்களை, தற்கொலைகளை, உயிரிழப்புகளை 2018 காட்டியிருக்கிறது.
மரணங்கள் வாயிலாக ஓர் ஆண்டைப் பின்னோக்கிப் பார்ப்பது என்ன வகைப் பார்வை எனக் கேட்கலாம்.
மரணங்கள் ஒவ்வொன்றிலும் நாம் கவனித்துத் தெரிந்து கொள்ள வேண்டியவை நிறையவே இருக்கின்றன. கர்ப்பிணி பலி என்றால் வயிற்றில் இருந்த கருவும் பலியாகியிருக்கிறது என்ற செய்தியும் அதன் உள்ளே இருக்கிறதுதானே! மரண கணக்குகளை ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் அதிகமாகவே இருக்கிறது.
*****

நாட்டு நடப்பு ரொம்ப முக்கியம்


நாட்டு நடப்பு ரொம்ப முக்கியம் பாஸ்! அதை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது அதை விட ரொம்ப முக்கியம் பாஸ்!
நடப்பும் நடக்க வேண்டியதும் - 1
மாற்றம் என்பது மாறாத தத்துவம் என்று மார்க்ஸ் சொன்னது உண்மையானால் இந்த வருடமாவது ரஜினி கட்சி ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பம் ஆக வேண்டும் கட்சி ரஜினியாலே! அவர் ரசிகர்கள் ஆடி அடங்குவது அவரது ஸ்டைலுக்குள்ளே!
நடப்பும் நடக்க வேண்டியதும் - 2
தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை ஆடு, மாடுகளைப் பேச வைக்கப் போவதாக அந்த மாதிரியானக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சாமியார் கூறியிருப்பதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன். தமிழைத் தமிழர்களே பேசுவதில்லை. பிள்ளைகள் இங்லிபீஸ் பேசுவதைக் கேட்டுக் கேட்டுப் புளங்காகிதம் அடைகின்றனர். சமஸ்கிருதம் பேச்சு வழக்கில் இல்லை. என்னைக் கேட்டால் தமிழைத் தமிழர்கள் பேச வைக்க முயற்சி எடுப்பதாக அல்லவா சொல்லியிருக்க வேண்டும். மாடுகள் அம்மா என்று தமிழ் பேசுகின்றன. ஆடுகள் ம்மே... ம்ம்மே... அம்மே என்று ஓரளவு தமிழ் பேசி விடுகின்றன. தமிழ்ப் பிள்ளைகள்தான் மம்மி என்று பேசிக் கொண்டு இருக்கின்றன.
நடப்பும் நடக்க வேண்டியதும் - 3
உள்ளாட்சித் தேர்தல் ஏன் இன்னும் நடக்கவில்லை என்று யோசித்து இருக்கிறீர்களா? இங்கே வார்டு கெளன்சிலரே வெற லெவல்ல சம்பாதிக்கிறான்பா என்று பெரிசுகள் சொல்ல... அதனால்தாம்பா உள்ளாட்சித் தேர்தல் நடக்காம இருக்கு என்று அதற்கு நமக்கு ஒரு விளக்கம் கிடைத்து அதை நாம் வழிமொழிந்தால்... சத்தியமாக நாம் ஜனநாயகத்தை நோக்கி நடக்க வேண்டிய தூரம் ரொம்பவே இருக்கிறது. நடப்போம்!
நடப்பும் நடக்க வேண்டியதும் - 4
இந்த 2.0 டீமே தமிழ் ராக்கர்ஸ்கிட்ட சரண் அடையுற மாதிரி இணையத்தில் வெளியிட தடை விதிக்கணும்னு போய் நின்னா... அந்த டீம் ஏன் அதுக்கு எதிரா ரோபோக்களை உருவாக்கக் கூடாது? சினிமாங்க்றது டெக்னாலஜி கப்ஸான்னு சொன்னா யார் ஏத்துகிறாங்க மக்களே? அதுல வர்ற ஏதோ ஒரு சில விசயம்நடந்துடுச்சுன்னா போதும், அப்பவே எச்சரிக்கை மணி அடிச்சாம்லேம்பீங்களே! அது அவங்க பிசினஸ் பாஸ்! எச்சரிக்கை மணி அடிக்கிறேன்னு தண்டமால்லாம் பைசா செலவு பண்ணிகிட்டு இருக்க மாட்டாங்க! சினிமாவைச் சினிமாவா பார்த்து நடந்துக்க தெரிந்தால் நன்றாகத்தான் இருக்கும் என்று கனா காணத்தான் முடியும். நடக்கணுமே!
*****

குழல் ஊதா கண்ணன்


குழல் ஊதா கண்ணன்
பாதியில் அடைத்துக் கொண்டு
பிரச்சனை செய்த
புல்லாங்குழலைத் திருப்பி திருப்பிப் பார்த்த
மாயக் கண்ணனின்
மாயக் கண்களுக்கு மாயமாய் மின்னி மறைந்தது
குழலின் கடைசியில் பொறிக்கப்பட்டிருந்த
மேட் இன் சைனா
*****
விஷய விஷம்
விஷம் வாங்கச் சென்றவனுக்கு
தெரியாது
விலையேறிய விஷயம்
*****

30 Dec 2018

சமகாலத்தைப் பேச


எழுத்து என்பது சமகாலத்தைப் பேச வேண்டும் என்கிறார்கள். அதனால் சமகாலத்தைப் பேசுவதற்கு நாம் அதிக முக்கியதுவத்தைக் கொடுக்க வேண்டியதாகிறது.
முதலில் நெரிசலான ஒரு பேருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் பேருந்தில் மனுசங்க கால் வைக்கவே இடம் இருக்காது. ஒருத்தர் கால் இன்னொருத்தர் மேல் இருக்கும். அப்புறம் அங்கே எப்படி இடம் இருக்கும். இடமே இல்லாத அந்த இடத்தில் எப்படி பாதை இருக்கும்? ஆனால் அதில் கண்டக்டர் அதில் பாதையைக் கண்டுபிடித்து போவார் பாருங்கள். ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள். கண்டக்டராக இருந்தால் எள் விழ முடியாத இடத்திலும் பாதை இருக்கும்.
பிள்ளைகளை அரசுப் பள்ளிகளை விட்டு தனியார் பள்ளிகளில் சேர்ப்பது ஒரு டிரெண்ட்டாக ஆகி விட்டது. இப்போது அந்த டிரெண்டும் போய் வெளிமாநிலங்களில் சேர்ப்பது பேஷனாக ஆகி விட்டது. அப்படி அனுப்பிய பிள்ளைகள் சில பிணமாகத் திரும்பிய கதைகள் திரும்பத் திரும்ப உலாவிய போதும் பிள்ளைகளை வெளிமாநிலத்துக்கு அனுப்புவது குறைந்தபாடில்லை. கிளையில் தொங்குற பலாக்காயை விட, கையில இருக்கற களாக்காய் மேல் என்பார்கள். உள்ளூரில் உயிரோடு படிப்பதை விட இந்தப் பெற்ற மனசுகளுக்கு வெளிமாநிலம் போய் பிணமாவது படிப்பது முக்கியமா இருக்கே.
ஆய்வு என்று அப்பாஸ் கழிவறைக்குள் நுழைந்த போதே ஆரம்பித்து விட்டது தமிழ்நாட்டைப் பிடித்த சோதனைக் காலம். அப்புறம் ஆய்வு என்று குளியலறைக்குள் நுழைந்ததெல்லாம் வரலாற்றுப் பதிவுகள். இனி ஆய்வுகள், சோதனைகள் என்பதெல்லாம் தமிழ்நாட்டின் ஆல் டைம் அட்ராசிட்டிகளுள் ஒன்றாகி விட்டது. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று சொல்வதற்குக் கூட முடியாமல் அந்த சாமி சிலையைக் கடத்துறாங்க பாருங்க பாஸ் அங்க நிற்குது நம்ம தமிழ்நாடு.
*****

தம்பி எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்!


புத்தாண்டுக்கு கேக் வெட்டிக் கொண்டாடுவது பற்றி என்ன நினைக்கிறீங்கண்ணே? என்றார் அன்புத் தம்பிகளுள் ஒருவர்.
நினைப்பதற்கு என்ன இருக்கிறது தம்பி! தன் பிறந்த நாளுக்கு அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டினாரே ரெளடி ஒருவர். அவரை ஞாபம் இருக்கிறதா தம்பி! என்றேன்.
பீதியைக் கிளப்பாதீங்கண்ணே! என்றார் அந்த அன்புத் தம்பி.
சர்க்கார் பட வெற்றியைக் கூட கேக் வெட்டிக் கொண்டாடினார்களே தம்பி! என்றேன்.
புத்தாண்டுக்கு கேக் வெட்டுவோமா வேண்டாமா? அதை மட்டும் சொல்லுங்கண்ணே! என்றார் கடைசியாக.
வெட்டுவோம் தம்பி! அப்படியே அந்த இரவில் ஒரு புத்தக வாசிப்புக்கும் ஏற்பாடு செய்தால் எப்படி இருக்கும்! என்று நான் கேட்டதுதான் தாமதம். தம்பி எஸ்ஸ்ஸ்கேப்ப்ப்!
*****

விசித்திர காசுகள்


விசித்திர காசுகள்
கட்டணம் உயர்த்தப்பட்டது அறியாமல்
கையில் இருக்கும் காசுக்கு
பயணச்சீட்டு கேட்டுக் கொண்டிருப்பவரும்
கடந்த முறை கட்டண ஞாபகத்தில்
சமையல் எரிவாயு உருளையை
இறக்கிக் கொண்டிருப்பவரும்
நள்ளிரவில் ஏறிய விலை அறியாமல்
வாகன எரிபொருள்
நிரப்பிக் கொண்டிருப்பவரும்
தூக்கத்தில் கண்ட கனவிலிருந்து
விழித்தெழுந்து வீறிட்டு அழும் குழந்தையென
இல்லாத காசுக்குப் புலம்பியழுதுச் செல்கின்றனர்
பொக்கிஷத்தைப் புதைத்து வைப்பது போல
பிச்சைக்காரர்கள் தங்கள் திருவோட்டை
கக்கத்தில் வைத்து மறைத்துக் கொள்கின்றனர்
ஆயிரம் பேரைக் கொன்ற அரை வைத்தியன் போல்
கசப்பு மருந்தைக் கொடுத்ததாகக் கூறி
தலைவர்கள் தூக்க மாத்திரையின்றி
உறங்கிப் போகின்றனர்
சுவிஸ் வங்கியின் கருப்புப் பணத்தைக்
கனவு காணும் மக்கள் பெருங்கூட்டத்துக்கு
கையிலிருக்கும் காசுகள் காணாமல் போவது
விசித்திரமாகத்தான் இருக்கின்றது
*****

ஹைபிரிட் பிரச்சனைகள்


நாட்டில் நடக்கும் ஹைபிரிட் பிரச்சனைகள் தொடங்கி, இட்லி சட்டினி பிரச்சனைகள் வரை, பணப் பிரச்சனைகள் தொடங்கி, வெற்றித் தோல்வி பிரச்சனைகள் வரை நிறைய ஆராய வேண்டியிருக்கிறது. இங்கே சுருக்கமாக ஆராயலாம் என்று நினைக்கிறேன். பயம் என்றால் எனக்கு என்னவென்று தெரியாது என்பவர்கள் மட்டும் தைரியமாகப் படிக்கலாம். மற்றவர்கள் கொஞ்சம் யோசித்துப் படிப்பதே நல்லது.
1. பருத்தி, கத்திரி என துவங்கி மனிதரில் மரபணு மாற்றம் செய்வதுதான் விஞ்ஞானம் அல்லது அரசாங்கத்தின் அடுத்த முயற்சியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
2. ஹோட்டல்கள் சுடும் இட்டிலிகள் விலை மலிவாக இருக்க, ஹாஸ்பிட்டல்கள் சுடும் இட்லிகள் செம காஸ்ட்லியாக இருக்கின்றன. அடங் கொய்யாலே! ட்ரீட்மெண்டும் காஸ்ட்லி! இட்லியும் காஸ்ட்லி! காஸ்ட்லி இட்லி சாப்பிட ஹாஸ்பிட்டலுக்குப் போங்க! என்ன இருந்தாலும் கோடி ரூபாய் இட்லி என்றால் எடுக்கின்ற விக்கலுக்கு கடலை அள்ளிக் குடித்தால்தான் தீரும் போலிருக்கு தெய்வமே!
3. திரும்பத் திரும்பக் கொடுத்தும் அன்பு மட்டும்தான் குறையாமல் இருக்கு. அதுக்கு என்ன இப்போ என்கிறீர்களா? அன்பு எவ்வளவு வேண்டுமானாலும் ஸ்டாக் இருப்பதால் அன்பை எவ்வளவு வேண்டுமானால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்! பணம் மட்டும் ப்ளீஸ் வேண்டாம்!
4. வெற்றி ஒரு பெரிய விசயமில்லை. காசு கொடுத்து கூட வாங்கி விடலாம். தோல்விதான் பெரிய விசயம். தோற்றாலும் துவளாமல் இருப்பதற்கு பெரிய மனசு வேண்டியிருக்கிறது. பெரிய மனசு என்பது ஜஸ்ட் லைக் தட் கடந்து விடுவதுதான். எளிமையாகச் சொன்னால் போனால் போகட்டும் போடா! போடா என்று ஆண்களுக்கான வாசகம் போல இருப்பதாக நினைக்க வேண்டாம். பெண்களுக்குப் போனால் போகட்டும் போடி!
*****

29 Dec 2018

ஒரு ஆப் பாயில் பிரச்சனை


இட்லி மாவு அரைக்க விலையில்லா கிரைண்டர் கொடுத்தவர் ஜெயலலிதா. அதுவும் போதாது என்று அம்மா உணவகம் மூலம் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி கொடுத்தவர் அவர். அவருக்கே ஒரு கோடிக்கு இட்லி வித்திருக்கிறார்கள் என்றால்... அந்த இட்லி பல டெஸ்டுகளுக்கு உட்பட்ட லேபரட்டரியில் தயாரான இட்லியாகத்தான் இருக்கும். நம் நாட்டில் மருந்துகளும் விலை கூடுதல். மருத்துவமனையில் தயாராகும் இட்லிகளும் விலை கூடுதல்.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யுங்க அய்யா என்றால்... விவசாயத்தையே தள்ளுபடி பண்ணிடுவாங்க போலிருக்க மக்கா!
விவசாயத்தை அழிச்சுபுட்டு ப்ளாஸ்டிக் சோற்றைத் தின்ன வெச்சு புடுவாங்க போலிருக்க என் ஆத்தே!
ஆத்தே! நீ ப்ளாஸ்டிக் பீடிங் பாட்டில்ல ஊட்டுன பால் எல்லாம் ப்ளாஸ்டிக் சோற்றை அள்ளிப் போட்டு திங்கத்தானா ஆத்தே!

கட்சி ஆரம்பித்த பிறகு புயல் பாதித்த இடங்களுக்குச் செல்வேன்னு சொல்றாரே சாமியோவ்! இவர் கட்சி ஆரம்பித்த உடனே புயல் அடிக்கணும்னு சொல்ற மாதிரில்லா இருக்கு!

ஒரு ஆப் பாயில் பிரச்சனைதான். சிலிர்த்து எழுந்து போலீஸாக இருக்கும் விஷ்ணு விஷால் பல நாட்கள் தண்ணி காட்டிக் கொண்டிருக்கும் பிரபல ரெளடியை அரெஸ்ட் செய்து விடுகிறார். இந்த ஆப் பாயில் பிரச்சனை நன்றாக இருக்கிறது. இப்படி நிறைய ஆப் பாயில் பிரச்சனைகள் வந்து தமிழ்நாட்டில் பிரபல ரெளடிகள் அரெஸ்ட் ஆனால் நல்லதுதான். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல இருக்கா? இந்தப் பிரச்சனையை நீங்கள் விரிவாகப் புரிந்து கொள்ள சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் என்ற திரைப்படத்தைப் பாருங்கள். மேலும் இந்தப் பிரச்சனையை இன்னும் விரிவாகப் புரிந்து கொள்ள வாட்ஸ் அப்பில் அள்ளு விட்ட ரெளடிகளின் சரித்திரங்களையெல்லாம் பார்க்க வேண்டும்.
*****

அறிவுரைகள் செத்து விடுகின்றன


வர்கள் நம் அன்புக்கும், உறவுக்கும் அப்புறம் நட்புக்கும் விதிக்கும் நிபந்தனை என்னவென்றால்... அவர்களின் அநியாயத்தை, அக்கிரமத்தை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதாக இருக்கிறது. முடியுமா மக்களே!
எந்த இருவருக்கும் இடையே சமாதானத்தை உருவாக்குவது மிகக் கடினமானதாக இருக்கிறது. இருவரும் தங்கள் தரப்பே சரி என்கிறார்கள். ஒரு பேரழிவே இருவரையும் சமாதானப்படுத்துகிறது. அறிவுரைகள் செத்து விடுகின்றன. அறிவுரைகள் மட்டும் சொல்லாதீங்க மக்களே!
அமைதியற்ற மனம்தான் கோபப்படுகிறது. ருத்ர தாண்டவமும் ஆடுகிறது. இதை மாற்று, அதை மாற்று என்று அல்லாடுகிறது. அமைதியான மனம் அதையெல்லாம் கண்டு கொள்வதே இல்லை. ஆகவே, அமைதியான மனம்தான் முக்கியம் மக்களே!
கட்டாயப்படுத்துவதற்கு எதுவும் இல்லை. வலியுறுத்த என்ன இருக்கிறது? அநேக விசயங்கள் அதுவாக உணர்ந்து கொள்ளப்பட வேண்டியவைகள். உணர்த்துவதற்கு ஏதுவுமில்லாதவைகள். ஆகவே, அப்படியே விட்டு விடுங்கள் மக்களே!
மழை பெய்வதை நம்மால் தடுக்க முடியாவிட்டாலும், குடை வைத்துக் கொள்வதை எந்த மழையும் வந்து தடுக்கப் போவதில்லை. எனவே, புரிந்து கொள்வீர்களாக மக்களே!
*****

ஒரு நாள் செய்தித்தாள்


அன்று ஒரு நாள் செய்தித்தாள் பார்த்தேன்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு சம்மன்
44 பேரை உயிரோடு எரித்த வெண்மணித் தியாகிகள் தினம்
நிலுவைத் தொகைக் கேட்டு கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்
ஆசிரியர்கள் நீர் அருந்தாப் போராட்டம்
சிலை கடத்தல் வழக்குகளில் மறு விசாரணைக்கு உத்தரவு
கொலை வழக்குக் குற்றவாளிகளைச் சுட்டுத் தள்ளுங்கள் என கர்நாடக முதல்வர் பேச்சு
பேஸ்புக் காதலருக்காக தாயைக் கொன்ற காதலர்
200 டன் குப்பைகளுக்கு அடியில் மீட்டெடுக்கப்பட்ட அரசியல் பிரமுகரின் எலும்புக் கூடு
நீங்களும் பார்த்திருப்பீர்கள்.
இரத்தக் கவிச்சி அடிக்காததுதான் பாக்கி.
இனி செய்தித்தாள் பார்ப்பதா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என்ன முடிவு எடுத்து இருக்கிறீர்கள்?
கமெண்ட் பாக்ஸில் போடுங்கள்.
சேர்ந்தே ஒரு முடிவு எடுப்போம்.
*****

மரணத்தின் ருசி பிடித்த மலர்


மரணத்தின் ருசி பிடித்த மலர்
நிசப்தத்தில் பூத்த மலர்
இரைச்சலில் கிழிந்து தொங்குகிறது
டெசிபல் அதிகரித்தால் இப்படித்தான் என்று
அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்திருக்கிறார்கள்
இப்படி ஒரு மலர் பிறக்கும் என்று அறியாது
காப்பீடு செய்யாமல் விட்டதற்காக
கடிந்து கொள்ளப்படுவதாகிறது
லட்சங்களை விழுங்கப் போகிறது
உயிர் பிழைக்கப் போகும் மலர்
அதிசயமாய்க் காப்பாற்றப்படும் மலர்
சிகிச்சை பலனின்றி இறந்த ஒருவனின்
இறுதி அஞ்சலியில் வைக்கப்பட்ட போது
இறந்தவன் கண்களில் வழிந்த கண்ணீரைத்
தொட்டுச் சுவைத்துக் கொண்டது
பசியோடிருந்த மலர் சொன்னது
மரணத்தின் ருசி மிக பிடித்திருப்பதாக
*****

28 Dec 2018

சாந்தம் என்று சொல்கிறார்கள்


ஒரு தீமை இன்னொரு தீமையைத்தான் உருவாக்கும் என்பதால் தீமைக்கும் நன்மை செய்ய வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகிறது.
ஒரு கொடுமையைத் தடுக்க இன்னொரு கொடுமையைக் கையில் எடுப்பது மேலும் பல கொடுமைகளை உண்டாக்கி விடும் என்பதால் கொடுமைகளை மன்னிக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது ஆகி விடுகிறது.
தண்டனைகள் எந்தக் காலத்திலும் எதையும் திருத்துவதில்லை என்பதால் தண்டனைகளுக்குப் பதில் அன்பையே மீண்டும் மீண்டும் தருவதும் தவிர்க்கவே முடியாதது ஆகிறது.
இதையெல்லாம் கடைபிடிக்கும் போதுதான் அநியாயத்துக்கு கோபப்படுத்துவார்கள். ஆனால், கோபப்படாமல் இருக்க வேண்டும்.
என்ன செய்வது அவர்களின் மனது அப்படி இருக்கிறது. அவர்களைப் போய் கோபப்படாமல் இருங்கள் என்று சொல்ல முடியாது. ஆகவே அவர்கள் கோபப்படுத்தினாலும் கோபப்படாமல் இருக்க வேண்டியதும் தவிர்க்க முடியாதது ஆகிறது.
அதைத்தான் சாந்தம் என்று சொல்கிறார்கள். அது மனதுக்குள் வருவதற்குதான் நிறைய்ய்ய்ய்ய்ய பண்ண வேண்டியிருக்கிறது.
என்ன நிறைய பண்ண வேண்டியிருக்கிறது என்றால்...
அதைத் தவம் என்று தவசிகள் சொல்வார்கள்.
பொறுமை என்று சம்சாரிகள் சொல்வார்கள்.
*****

நரைத்த முடிக்கு டை அடிப்பார்கள்!


கருப்பு பிடிக்காது என்பவர்கள் நரைத்த தலைமுடிக்கு டை அடிப்பார்கள்!
*****
இப்போது நாம் பொருளாதாரம், சினிமா, அரசியல் சார்ந்த மூன்று எதார்த்தங்களைப் பார்க்கப் போகிறோம். ஏன் இந்த மூன்று என்றால், இந்த மூன்றுக்கும் அப்படி ஒரு நெருங்கிய கள்ளத்தொடர்பு இருக்கிறது. படித்துப் பார்த்தால் நீங்களே புரிந்து கொள்வீர்கள். மூன்றும் மக்களின் உளவியலை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.
ஏழைகள் நிறைய உள்ள நாட்டில் எப்படி ஏழைகள் நிறைய பணம் கட்டி படிக்க வைக்கின்றனர் என்று நிறைய முறைகள் யோசித்து இருக்கிறேன். மற்றும், இப்படி பணம் கட்டிக் கட்டி ஏழையானவர்கள் குறித்தும் நிறைய யோசித்து இருக்கிறேன். பணம் கட்டி படிக்க வைக்க வேண்டும் என்பதை ஒரு விளம்பரமாகவே ஆக்கி விட்டார்கள்!
நம் ஹீரோக்களுக்கு மட்டும் டெக்னாலஜி பிரெய்ன் எங்கிருந்து வருகிறதோ? ஒரு லேப் டாப்பை கையில் வைத்துக் கொண்டு உலகையே ஹேக் செய்வார்கள். செல்போன் டவர்களையெல்லாம் தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வருவார்கள். அதைப் பயன்படுத்தி அவர்களின் ரிலீஸ் படங்களை நெட்டில் ரிலீஸ் ஆவதை, திருட்டு டிவிடி வெளிவருவதை எப்படியெல்லாம் தடுக்கலாம்! ம்ஹூம்! அது மட்டும் அவர்களின் டெக்னாலஜி பிரெய்னுக்கு அகப்படாது!
பாவம் தொண்டர்கள் என்னதான் செய்வார்கள்? தங்கள் தலைவரின் ஸ்டேட்மெண்டுக்காக மன்னிப்புக் கேட்கிறோம் என்று ஆங்காங்கே ப்ளக்ஸ் வைக்காத குறைதான். இப்படி ஒரு தலைவரையெல்லாம் தமிழகம்தான் தாங்க முடியும்! அவர் எந்தத் தலைவர்? யார் அவர்? என்றெல்லாம் கேள்வி எழுப்பாமல் நீங்களே கண்டுபிடிப்பீர்களாக! அப்புறம், கண்டுபிடித்து விட்டேன் என்று அவர் பெயரை பின்னூட்டம் இடாது இருப்பீர்களாக!
*****

மரணம் ஒரு நிறைவு


மரணத்துக்குப் பின்பான வாழ்வு குறித்து ஆன்மீகம் பேசுகிறது.
அப்படி ஒரு வாழ்வே இல்லையென அடித்துப் பேசுகிறது நாத்திகம்.
இறப்புக்குப் பின்னான வாழ்வு கடவுளை அடைதல் என்று ஆத்திகம் வழிமொழிந்தால், இறப்பிற்குப் பின் எதையும் அடைய முடியாது என்று நாத்திகம் வழிமொழிகிறது.
சுருக்கமாகச் சொன்னால், மரணத்திற்கு அப்பால் சிந்தித்துக் கொண்டே போனால் அவர்கள் ஆன்மீகவாதிகள். மரணத்திற்கு அப்பால் சிந்திக்க எதுவுமில்லை என்றால் நாத்திகவாதிகள் எனலாம்.
இறப்புக்குப் பின் என்றால்... நிரூபிக்க முடியாத வாதங்கள்தான். நிரூபிக்க முடியாத வாதங்களை நம்பினால் ஆத்திகம். நிரூபிக்க முடிகின்ற வாதங்களை மட்டுமே நம்புகிறது நாத்திகம்.
மரணம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் ஆத்திகமும், நாத்திகமும்.
இப்படி மரணத்துக்குப் பின், மரணத்துக்கு அப்பால் சிந்தித்து ஆத்திகம் உருவாக்கியவைகளே பேய், பிசாசு, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம். அவைகள் எல்லாம் மரணத்துக்கு அப்பாலான கருத்தியல்களே.
அப்படியே மரணத்துக்குப் பின்னான வாழ்வை வரையறுப்பதற்காகப் பாவம், புண்ணியம் என்றெல்லாம் ஆத்திகம் காய் நகர்த்திக் கொண்டே செல்கிறது. அதைச் சாத்தான், கடவுள் என்ற சொற்களில் கடத்துகிறது.
மரணத்துக்குப் பயந்து ஆத்திகவாதிகள் ஆனவர்கள் இருக்கிறார்கள். மரணத்தை தைரியமாக அதை ஓர் இயற்கையான நிகழ்வாகப் பார்க்கும் நாத்திகவாதிகள் இருக்கிறார்கள்.
எப்படிப் பார்த்தாலும், மரணம் என்ற இயற்கை நிகழ்வு ஆத்திகம், நாத்திகம் என்ற பிரிவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நீங்கள் ஆவியுலக ஆராய்ச்சிகளைப் பார்த்தால் அசந்து விடுவீர்கள். இதை விட முற்பிறப்பு பற்றி, இப்பிறப்பின் அடுத்தடுத்தக் கட்டங்களைப் பேசும் ஜோதிடத்தைக் கேட்டால் இன்னும் அசந்து விடுவீர்கள்.
மரணத்துக்குப் பின் என்ன இருக்க முடியும். மரணம் ஒரு நிறைவு. நிறைவான அந்த இடத்தில் என்ன தொடக்கம் இருக்க முடியும். தொடக்கம் இருக்குமானால் அது நிறைவு ஆக முடியாது அல்லவா!
*****

செய்யாதன திருந்தச் செய்


செய்யாதன திருந்தச் செய்
ஒன்பதாவது திசையொன்று உதித்த போது
எட்டு வண்ண வானவில்லை
சுருட்டி எடுத்துக் கொண்டவர்கள்
தெற்கில் மறைந்த சூரியனை
வடக்கில் தேடிக் கொண்டு சென்றார்கள்
சுற்றி வந்தால் சுற்றிப் பார்த்தால்
எல்லாம் ஒன்றாகி விடும்
பத்தாவது திசையொன்றும் உதிக்கக் கூடும்
ஒன்பது வண்ணத்திலும் வானவில் தோன்றக் கூடும்
கேள்வி என்பது என்ன
இருக்கின்ற ஏழு வண்ண வானவில்லை என்ன செய்வது
இருக்கின்ற எட்டுத் திசைகளை என்ன செய்வது
பழக்க தோஷத்தில் கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும்
சூரியனை என்ன செய்வது
இல்லாதவைகளைத் தேடும் வாழ்க்கையில்
இருப்பவைகளை என்ன செய்வது
கேள்வி கடினமானதாக இருப்பின்
நீட் தேர்வுக்கோ ஏதேனும் போட்டித் தேர்வுக்கோ
தயார் செய்யுங்கள்
கேள்விகள் எளிதாகி விடும்
பதில்கள் கடினமாகி விடும்
*****

27 Dec 2018

செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10


செங்காந்தள் அறிவுத் திருவிழா - 10
செங்காந்தள் அறிவுத் திருவிழா என்பது மாணவர்களுக்கானப் புத்தகக் கண்காட்சியாகும்.
பள்ளிகள்தோறும் நடைபெறும் இப்புத்தகக் கண்காட்சி புத்தக ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பொது வெளிகளிலும் நடத்தப்படுவதுண்டு. அவ்வகையில் 25.12.2018 அன்று கச்சனம், ஏ.வி.வணிக வளாகத்தில் கலைநிலவு கட்டடக் கலை வரைகலை மையத்தால் நடத்தப்பட்ட கட்டடக்கலைக் கண்காட்சியில் செங்காந்தளின் பத்தாவது அறிவுத்திருவிழா அனைவருக்குமானப் புத்தகக் கண்காட்சியாக நடத்தப்பட்டது.
ஒரு கட்டடக்கலைக் கண்காட்சியில் நடத்தப்பட்ட முதல் அறிவுத்திருவிழா இதுவேயாகும். புத்தகக் கண்காட்சியோடு மூலிகைக் கண்காட்சியும், ஓவியக் கண்காட்சியும் இணைந்த அரங்காக அறிவுத் திருவிழா அரங்கு அமைக்கப்பட்டிருந்தது.
மூலிகைக் கண்காட்சியைச் செங்காந்தள் ஏற்பாடு செய்ய, ஓவியக் கண்காட்சிக்கான ஓவியங்களை செங்காந்தளின் அங்கங்களில் ஒருவரான திருநெய்ப்பேறு ஓவியர் கலைவாணன் அவர்கள் வரைந்திருந்தார்.
2018 ஆம் ஆண்டான இவ்வாண்டில் நவம்பர் மாதத்தில் கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் செங்காந்தளின் அறிவுத் திருவிழா நடத்த இயலாமல் போனது. அதன் தாக்கம் காரணமாக அதே நிலை டிசம்பர் மாதத்துக்கும் ஏற்பட்டு விடுமோ என  ஐயுற்று இருந்த வேளையில் கஜா புயலிலிருந்து மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் கலைநிலவு கட்டடக் கலை வரைகலை மையம் ஏற்பாடு செய்திருந்து கட்டடக் கலை கண்காட்சியில் செங்காந்தளின் அறிவுத் திருவிழா நடத்த வாய்ப்பு கிடைத்தமை மீண்டெழுதலில் இலக்கியமும், புத்தகமும் முக்கிய பங்கு வகிக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தது.
இக்கண்காட்சியில் 55 புத்தகங்களைப் புத்தக ஆர்வலர்கள் வாங்கிச் சென்றுள்ளனர். ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பது என்ற செங்காந்தளின் இலக்கில் 97,376 புத்தகங்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய நிலையில் இக்கண்காட்சி மூலம் நாம் கொண்டு சேர்த்த 55 புத்தகங்களைக் கழித்துக் கொண்டால் இன்னும் நாம் அடைய வேண்டிய இலக்கு 97,321 புத்தகங்கள் ஆகும்.
இலக்கை அடைய கை கோர்ப்போம்! புத்தகங்களை இல்லங்கள்தோறும் கொண்டு சேர்ப்போம்!
*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...