31 Dec 2018

2018 இன் மோசடிகள் மற்றும் முறைகேடுகள்


2018 இன் மோசடிகள் மற்றும் முறைகேடுகள்
முதலில் வங்கி மோசடிகள்
விஜய் மல்லையா இந்திய வங்கிகளுக்கு இருபதாயிரம் கோடிக்கு பட்டை நாமம் சாத்தி விட்டு இங்கிலாந்தில் இருக்கிறார். அவரை இந்தியா திருப்பி அனுப்ப இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பிட்டப் பின் மனிதர் உத்தமராகப் பேசியிருக்கிறார். வாங்கியக் கடனைத் திருப்பிச் செலுத்த தயார் என்று. அவரை இந்தியா தவறாகச் சித்தரித்திருப்பதாக வேறு பீதி கிளப்பியிருக்கிறார். திருடாதவனுக்கு இருட்டில் என்ன வேலை என்று கேட்கக் கூடாது போலிருக்கிறது.
பஞ்சாப் நேஷனல் பேங்க் கடன் முறைகேட்டில் விஜய் மல்லையா அளவுக்கு இருபதாயிரம் கோடியை வழித்து எடுத்துக் கொண்டு அவர் பாணியிலேயே வெளிநாட்டுக்கு ஓடியிருக்கிறார் நீரவ் மோடி.
ஐ.டி.பி.ஐ. வங்கி மோசடியில் ஏர்செல் சிவசங்கரன் அதே பாணியில் வெளிநாடு தப்பி ஓடியிருக்கிறார்.
இதில் வெளிநாடு தப்பாமல் மாட்டியிருப்பவர், ரோட்டோமேக் பேனா நிறுவனர் விக்ரம் கோதாரி ஒருவரே.கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஹைதராபாத்தில் டோடம் இன்ப்ராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனம் ஒன்றல்ல இரண்டல்ல எட்டு வங்கிகளில் 1394 கோடிக்கு மோசடி செய்திருக்கிறது.
வங்கி மோசடி விசயங்களில் ஒரு தண்டனைக்கான தீர்ப்பும் வெளிவந்து இருக்கிறது. இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட மூன்று பேருக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
நமக்கெல்லாம் பாஸ் பேங்கில் ஒரு பெர்சனல் லோன் வாங்குவதற்குள் நாக்குத் தள்ளி, கடைசி நேரத்தில் அதுவும் கேன்சலாகி விடுகிறது. மோசடி செய்பவர்களுக்கு மட்டும் எப்படி வங்கிகள் வாரி வாரி வழங்குகின்றன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இதில் ரிசர்வ் வங்கி கவர்னராக இருந்த உர்ஜித் பட்டேல் ராஜினாமாவை எப்படிப் புரிந்து கொள்வது மேலதிகமான புரியாதப் புதிர்.
முறைகேடுகள் என்று பார்த்தால்... அதற்கு ஒரு தனிப்பகுதி ஒதுக்கி எழுத வேண்டும் என்றாலும் இதிலே எழுதி விடுவோம்.
குட்கா ஊழல், சத்துணவு கொள்முதல் முறைகேடுகள், நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடுகள் ஆகியன தமிழகத்தைப் பொருத்த வரையில் விசாரணையில் இருக்கின்றன.
இது ஒருவகை என்றால் பல்கலைக் கழக முறைகேடுகள் பயங்கரமானவை.
நிர்மலா தேவி சம்பந்தப்பட்ட பாலியல் விவகாரம்,
சென்னை அண்ணாப் பல்கலைக் கழக தேர்வு முறைகேடுகள் எனத் தொடங்கி
அண்ணா, அம்பேத்கர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் மேல் வழக்கே பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக கவர்னரே தமிழக பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனங்களில் கோடிகளில் பணம் புரண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார்.
பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சி செய்வார்கள் என்பதைக் கேள்விபட்டிருக்கிறோம். நடக்கும் முறைகேடுகளைப் பார்த்தால் பல்கலைக்கழக முறைகேடுகளையே தனி ஆராய்ச்சி செய்ய வேண்டும் போலிருக்கிறதே மக்கா!
அதற்காக நீதிமன்றங்களும் சும்மா இருக்கவில்லை. முறைகேடுகளுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றியிருக்கிறது.
கால்நடைத் தீவன ஊழலில் லாலுவுக்கு 14 ஆண்டு சிறை,
மான்வேட்டை ஹீரோ சல்மான்கானுக்கு 5 ஆண்டு சிறை,
சிறுமி பலாத்கார வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை என்று நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்கியிருக்கின்றன.
வங்கதேச நீதிமன்றமும் ஊழலுக்கு எதிராக முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருக்கிறது.
பத்தி கொஞ்சம் பெரிதாகி விட்டதுதான். என்ன செய்வது அந்த அளவுக்கு நாட்டில் மோசடிகளும், முறைகேடுகளும் தலைவிரித்து ஆடுகின்றன. ஆகவே, களமும் பெரிதாகி விட்டது.
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...