28 Dec 2018

மரணம் ஒரு நிறைவு


மரணத்துக்குப் பின்பான வாழ்வு குறித்து ஆன்மீகம் பேசுகிறது.
அப்படி ஒரு வாழ்வே இல்லையென அடித்துப் பேசுகிறது நாத்திகம்.
இறப்புக்குப் பின்னான வாழ்வு கடவுளை அடைதல் என்று ஆத்திகம் வழிமொழிந்தால், இறப்பிற்குப் பின் எதையும் அடைய முடியாது என்று நாத்திகம் வழிமொழிகிறது.
சுருக்கமாகச் சொன்னால், மரணத்திற்கு அப்பால் சிந்தித்துக் கொண்டே போனால் அவர்கள் ஆன்மீகவாதிகள். மரணத்திற்கு அப்பால் சிந்திக்க எதுவுமில்லை என்றால் நாத்திகவாதிகள் எனலாம்.
இறப்புக்குப் பின் என்றால்... நிரூபிக்க முடியாத வாதங்கள்தான். நிரூபிக்க முடியாத வாதங்களை நம்பினால் ஆத்திகம். நிரூபிக்க முடிகின்ற வாதங்களை மட்டுமே நம்புகிறது நாத்திகம்.
மரணம் என்பதை எப்படி ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் ஆத்திகமும், நாத்திகமும்.
இப்படி மரணத்துக்குப் பின், மரணத்துக்கு அப்பால் சிந்தித்து ஆத்திகம் உருவாக்கியவைகளே பேய், பிசாசு, சொர்க்கம், நரகம் என்பதெல்லாம். அவைகள் எல்லாம் மரணத்துக்கு அப்பாலான கருத்தியல்களே.
அப்படியே மரணத்துக்குப் பின்னான வாழ்வை வரையறுப்பதற்காகப் பாவம், புண்ணியம் என்றெல்லாம் ஆத்திகம் காய் நகர்த்திக் கொண்டே செல்கிறது. அதைச் சாத்தான், கடவுள் என்ற சொற்களில் கடத்துகிறது.
மரணத்துக்குப் பயந்து ஆத்திகவாதிகள் ஆனவர்கள் இருக்கிறார்கள். மரணத்தை தைரியமாக அதை ஓர் இயற்கையான நிகழ்வாகப் பார்க்கும் நாத்திகவாதிகள் இருக்கிறார்கள்.
எப்படிப் பார்த்தாலும், மரணம் என்ற இயற்கை நிகழ்வு ஆத்திகம், நாத்திகம் என்ற பிரிவை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
நீங்கள் ஆவியுலக ஆராய்ச்சிகளைப் பார்த்தால் அசந்து விடுவீர்கள். இதை விட முற்பிறப்பு பற்றி, இப்பிறப்பின் அடுத்தடுத்தக் கட்டங்களைப் பேசும் ஜோதிடத்தைக் கேட்டால் இன்னும் அசந்து விடுவீர்கள்.
மரணத்துக்குப் பின் என்ன இருக்க முடியும். மரணம் ஒரு நிறைவு. நிறைவான அந்த இடத்தில் என்ன தொடக்கம் இருக்க முடியும். தொடக்கம் இருக்குமானால் அது நிறைவு ஆக முடியாது அல்லவா!
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...