29 Nov 2018

காமெடி கீமெடி


காமெடி கீமெடி
இடுக்கண் வருங்கால் நகுக என்கிறார் வள்ளுவர்.
துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்று வள்ளுவரும் சொல்லி வைத்தார் சரிங்க என்று இதை கண்ணதாசனும் பாடல் படுத்தியிருக்கிறார்.
கஜா புயலின் கோர தாண்டவத்தை அவ்வாறு எடுத்துக் கொண்டு சிரிக்க முடியாது என்பதால் அந்தக் குறையைப் போக்கும் விதமாக நாளிதழ்களில் வெளியாகும் செய்திகளைப் பார்க்கும் போது சிரிக்காமல் இருக்க முடிவது கடினமாக இருக்கிறது.
மின்கம்பங்கள் நடும் பணியைப் பார்வையிட்ட மக்கள் பிரதிநிதிகளில் ஒருவர் மிக வேகமாக விமானங்களைப் பயன்படுத்தி மின்கம்பங்களை நடுமாறு கூறியிருக்கிறார்.
புயல் சேதங்களைப் பார்வையிட்ட மதிப்பீட்டுக் குழுவில் இருந்த ஒருவர் விழுந்து கிடந்த தேங்காய்களைப் பார்த்து தென்னை மரத்தின் முட்டைகள் என்று கூறியிருக்கிறார்.
புயலால் மக்கள் அடைந்த துன்பங்களையும், துயரங்களையும் மறக்கடிக்க இவர்கள் இப்படி காமெடி செய்கிறார்கள் என்று இவைகளை எடுத்துக் கொள்வதா? அல்லது மக்களை வைத்து இவர்கள் காமெடி கீமெடி செய்கிறார்கள் என்று எடுத்துக் கொள்வதா? என்பதுதான் குழப்பமாக இருக்கிறது.
*****

நப்பாசை பிடித்துத் தேடாதே!


நப்பாசை பிடித்துத் தேடாதே!
உங்களிடம் சொல்லும் விடயங்களைக்
கைவிட்டு விட்டேன்
நீங்கள் அதைப் பரிசீலித்து இருக்கலாம்
உங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய
பாராட்டுகள் அதிகமாயிருக்கும்
உங்களை அடைய வேண்டிய புகழ் கூடியிருக்கும்
அல்பத் தனமான காசுக் கணக்கில்
அதை வீணடித்து விட்டீர்கள்
திறனும் உற்சாகமும் பெற்றிருந்தால்
உங்கள் செல்வம் கூடியிருக்கும்
உங்களின் சிந்தையோ
நீங்கள் வாங்கும் மனநல மருத்துகளுக்கான
பட்ஜெட் சிக்கலில் திணறி நூலறுந்து விட்டது
இப்போதிருக்கும் நிலையே
உங்களுக்குப் பிடித்தமானது
நீங்கள் அதை மாற்ற விரும்பவில்லை
நன்றி நான் செல்கிறேன்
நாளை பணத்தாசையாலோ
பைத்தியமாகும் முன் தடுத்தாண்டு கொண்டு விடலாம்
என்ற நப்பாசையாலோ
என்னைத் தேடிக் கொண்டு இருக்காதீர்கள்
*****

28 Nov 2018

சந்தோஷமான மனிதர்


சந்தோஷமான மனிதர்
            வரவில்லை என்பதில்லை. வருகிறது. வருவது பிறரால் ஏற்றுக்கொள்ளப்படுமா? அங்கீகரிக்கப்படுமா? என்ற சந்தேகம்தான் பிரச்சனை. ஒருவேளை சந்தேகப்பட்ட மாதிரியே ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால்... அங்கீகரிக்கப்படாவிட்டால்... அந்த பயம்தான் மனதையும், வாழ்வையும் ஒரு சேர ஆட்டிப் படைப்பது.

            வாழ்க்கையில் மனநிறைவைத்தான் தேடிக் கொண்டிருப்போம். தேடிக் கிடைக்கும் பொருளா அது? தேடுவதை நிறுத்தும் போதுதான் கிடைப்பது அது.

            மனநிறைவு என்பது நாம் எங்கிருந்தோமோ, அங்குதான் இருக்கிறது.

            வாழ்க்கையின் அனுபவங்கள் ஒவ்வொன்றும் நமக்கானப் பாடங்கள். முடிவுகளைச் சாத்தியபாடு என்ற நிலையிலிருந்துதான் எடுக்க முடியும். நல்லதே நடக்கும் என்ற நிலையின் அடிப்படையில் எடுப்பதில் நிறைய சங்கடங்கள் இருக்கின்றன.

            கிடைக்கவில்லை என்பதற்காக சந்தோசப்படத் தெரிந்தால் உங்களை விட சந்தோஷமான ஒரு ஆள் இந்த உலகில் இல்லை.
*****

காலத்தைக் கொல்லும் முடிவு


காலத்தைக் கொல்லும் முடிவு
இந்தக் காலத்தைக் கொன்று போடலாம்
என்று முடிவெடுத்து இருக்கிறேன்
நொடிப் பொழுதில் முடிவுக்கு வரும்
மேலாளர் என்னைக் கொல்கிறார்
ஐந்து நிமிடத்தில் வேலை நீக்கக் கடிதத்தைத்
தயார் செய்யும் அலுவலர் பயமுறுத்துகிறார்
அடுத்த சில மணி நேரங்களில் பரவி விடும்
வதந்தி பீதியைக் கிளப்புகிறது
அடுத்தடுத்த நாள்களில் முகங்களை
எதிர்கொள்ள முடியாத மனம் கனக்கிறது
வாரங்கள் கொஞ்சம் நல்லவைகள்
வேறொரு வதந்தி கட்டிக் கொள்கிறது
மாதங்கள் இன்னும் சற்றே நல்லன
முன்னாள் பரபரப்பை மறக்கடித்து விடுகிறது
ஆண்டுகள் மிக மிக இனியன
எதுவும் இப்போது நினைவில் இல்லை
காலத்தைக் கொன்று போடலாம் என்ற முடிவை
தள்ளிப் போடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன்
என் முடிவுக்கு என்னை வாழ்த்துவீர்களா
அதையும் காலம் கடந்துதான் செய்வீர்களா
காலமே தப்பித்து ஓடிக் கொள்
*****

26 Nov 2018

மிக உயர்ந்த பாதை


மிக உயர்ந்த பாதை
வார்த்தைகள் உருவான பிறகு வார்த்தைகளே ஆயுதங்களாயின.

கருவிகளை, எந்திரங்களை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வாழ்வை எளிமையாக்கிக் கொள்வதாக நினைக்கிறோம். வெறொரு புறத்திலிருந்து வாழ்வைக் கடினமாக்கிக் கொள்கிறோம்.

மிக உயர்ந்த பாதையில் செல்பவர் கீழானப் பாதையைத் தேர்வதில்லை. மிக உயர்ந்த பாதை என்பது பாதையற்ற பாதை.

தண்ணீருக்குப் பள்ளம்தான் பிடிக்கும்.
மேடுகளை விரும்பாது.
ஞானம் இன்மையில்தான் நிரம்புகிறது.
இருப்பு என்றும் நிரம்புவதில்லை.

குவளை, கிண்ணம், பாத்திரம் உள்ளீடற்றதே பயன்.
வாழ்க்கையும் அப்படித்தான்.
ஆசை உள்ளீடு. ஞானம் உள்ளீடற்றது.
*****

கூண்டில் சுருளும் வானம்


கூண்டில் சுருளும் வானம்
விரிந்த வானை கூண்டுக்குள் தேடும் சிறுபறவை
அளந்து பார்க்கிறது
இவ்வளவு பெரிதா வானம்
அளக்க அளக்க கூண்டுக்குள்ளே மடங்கிச்
சுருண்டு கொள்கிறது வானம்
மடக்கி வைக்கப்பட்ட வானில்
ஏதோ ஒரு மடிப்பில்
சக பறவைகள் இருக்கக் கூடும்
ஏதோ ஒரு மடிப்பில்
மரமொன்று இருக்கும்
மற்றுமொரு மடிப்பில்
கனிகள் குலுங்கிக் கொண்டிருக்கும்
பூச்சிகள் பறந்து கொண்டிருக்கும்
விரித்துப் பார்க்கும் ஏதோ ஒரு மடிப்பில்
கூண்டுக்குள் அடைபட்ட வானின்
விரிந்து கொள்ளும் கூண்டின் திறவுகோல் இருக்கும்
வெட்டப்பட்டால் வளரும் சிறகுகளுக்கு
நம்பிக்கை எனப் பெயர் சூட்டி
அடிக்கடி சிறகடித்துக் கொள்ளும் சிறுபறவை
*****

23 Nov 2018

எளிமையான தன்னிறைவின் தேவை


எளிமையான தன்னிறைவின் தேவை
            வழக்கமாக டெல்டா மாவட்டங்கள் வெள்ளம் எனும் பெருநீர் வடிவத்தால் பாதிக்கப்படும். இந்த வருடம் புயல் எனும் பெருங்காற்று வடிவத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
            1978 க்குப் பிறகு டெல்டா மாவட்டங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய புயல்பாதிப்பு என்று கஜா புயலின் பாதிப்புகளைக் குறிப்பிடலாம்.
            1978 களில் புயல் அடித்த பின்பு அதை எதிர்கொண்ட சிரமங்களிலிருந்து தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் மாறுபட்டவை.
            1978 களில் இல்லாத தொழில்நுட்ப வசதிகள் இப்போது உள்ளன. அப்போது செய்ய முடியாத முன்னெச்சரிக்கை, முன்னறிவிப்பு நடிவடிக்கைகளை இப்போது செய்ய முடிகிறது.
            ஆனால் இந்தப் புயலில் மனிதர்கள் குடிநீருக்கு அலைந்ததும், அதை பன்மடங்கு விலையேற்றத்தில் வாங்கியதும் கால மாற்றத்தின் கோர சாட்சியம்.
            புயல் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் உறிஞ்சி எடுத்தது போல டெல்டா மாவட்டங்களின் புயல் பாதித்தப் பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன. வெளிச்சைத்தைப் பிடுங்கி இருளில் தள்ளிய அதே மின்சாரம்தான் நீரைப் பெறுவதில் பேரிடர் காலங்களில் நம்மைப் பின்னோக்கித் தள்ளுகிறது.
            மின்சாரம் இல்லாவிட்டால் நீரைப் பெற முடியாது என்ற சூழலில் இந்தப் புயலில்... வீடுகளில் அடிபம்பு இருந்தவர்கள் மட்டுமே தப்பித்தார்கள். மற்றவர்கள் அனைவரும் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரை நிரப்ப ஜெனரேட்டர்களைத் தேடி ஓடிக் கொண்டிருந்தார்கள்.
            இந்த நவீன யுகத்தில்,
            இந்த விஞ்ஞான யுகத்தில்,
            இந்தத் தொழில்நுட்ப யுகத்தில்...
            யார் கைகளால் அடித்து தண்ணீரைத் தூக்கிக் கொண்டிருப்பார்கள் என்று சொன்ன எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.
            மின்மோட்டார் இருந்தாலும் கையால் அடித்து நீர் பிடிக்கும் பம்பும் இருக்க வேண்டும் என்று அதற்கான அமைப்புகளைச் செய்தவர்களையும் பார்த்திருக்கிறேன்.
            இந்தப் புயலுக்குப் பின் எனக்கு காந்தியடிகளின் கிராமத் தன்னிறைவு என்ற கருத்தாக்கம்தான் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி நிழலாடியது.
            கை பம்புகளோடு, பத்தாயத்தில் நெல்லைச் சேமித்து வைத்து, இந்த மாதத்துக்கு வேண்டிய அரிசிக்காக நெல்லை ஆவாட்டி அரைத்து வைத்து, மழைக்காலத்துக்காக கோடைக்காலத்திலே வற்றல்களைப் போட்டு வைத்திருந்தவர்கள் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. கடைகளைத் தேடி ஓடவில்லை. அரிசி கிடைக்கவில்லையே என்று நிலைக்கு ஆளாகவில்லை. புயலுக்குப் பின்னான நிலையை படு எதார்த்தமாக எதிர்கொண்டார்கள்.
            டெல்டா மாவட்டங்களில் எவ்வளவு வறியவர்களின் வீடாக இருந்தாலும் பத்தாயமோ, குதிரோ இல்லாத வீடுகளை அந்நாளில் பார்க்க முடியாது. இன்று எவ்வளவு வசதியான வீடாக இருந்தாலும் அவைகளை அந்த வீடுகளில் பார்க்க முடியவில்லை.
            ஒரு சில பெரியவர்கள் வாழும் வீடுகளில் மட்டுமே அவர்களின் வசவுகளைச் சுமக்க முடியாமல் பத்தாயங்கள் மட்டும் கிராமங்களின் ஒரு சில வீடுகளில் இருக்கின்றன. அநேகமாக அவர்களின் மறைவுக்குப் பிறகு அப்பத்தாயங்களும் காலி செய்யப்பட்டு விடும்.
            மழைக்காலம் தொடங்கி விட்டால் வேலிக்கால்களின் கிளைகளைக் கழித்து விடுபவர்கள், மர மட்டைகளை ஒரு சில கிளைகள் மட்டும் விட்டு விட்டு கழித்து விடுபவர்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் மரங்கள் கூட அதிகச் சேதாரமில்லை.
            எங்கள் வீட்டில் அப்படி ஒரு வேப்பமரமும், புளியமரமும் கழிக்கப்பட்டதில் படுபயங்கர புயல்காற்றைச் சந்தித்தும் விழாமல் அப்படியே கம்பீரமாக நிற்கிறது. மற்றவைகளைக் கழித்து விடக் காட்டிய அஜாக்கிரதையால் அவைகள் எல்லாம் விழுந்து கிடக்கின்றன.
            எவ்வளவு தொழில்நுட்பங்கள் வந்தாலும் அடிப்படைத் தேவைகள் மாறி விடப் போவதில்லை.
            நமது அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மின்சாரத்திடம் அடகு வைக்கும் போது மின்சாரம் இல்லாத ஒரு சூழ்நிலையில் அதை எதிர்கொள்வது மிகக் கடினமாகிறது.
            மின்சாரத் ‍தேவை தவிர்க்க முடியாத அத்தியாவசியத் தேவைதான். அதே நேரத்தில் மின்சாரம் இல்லாமல் போனால்...
            கை பம்பு,
            பேட்டரி லைட்,
            பேட்டரி ரேடியோ
            இவைகள் எல்லாம் எவ்வளவு உதவுகின்றன என்பதை அறிய நீங்கள் நிச்சயம் ஒரு பேரிடரைச் சந்திக்க வேண்டும்.
            அதே போல...
            பத்தாயம்,
            மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னே ஆவாட்டி அரைத்த அரிசி,
            மழைக்காலத்திற்கு என்றே கோடைக்காலத்தில் போடப்பட்ட வற்றல்,
            மழைக்காலம் தொடங்கும் அறிகுறியை வைத்தே கிளைகளைக் கழித்து விடப்படும் மரங்கள் இவைகள் எல்லாம் அந்தக் காலத்து மனிதர்கள் என்று சொல்லப்படும் பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் இருக்கிறது மற்றும் நிகழ்கிறது.
            நம் வீடுகளோ அந்தக் காலத்து மனிதர்கள் எனப்படும் பெரியவர்கள் இல்லாத இந்தக் காலத்து வீடுகளாக அல்லவா இருக்கிறது. எனவே நம் வீடுகள் இந்தக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆனால் பேரிடர்கள் இந்தக் காலத்தை அந்தக் காலத்துக்கு அல்லவா தள்ளி விடுகிறது. ஒரு பேரிடர்க்குப் பின் நிச்சயம் நாம் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தள்ளிவிடப் படுகிறோம் என்பதுதான் உண்மை. நிலைமை சகஜமாகும் வரை அதுதான் நிலைமை. அதுவரை அந்தக் காலத்தில்தான் நாம் வாழ நேரிடும். அந்தக் கால நிலைமைகளைக் கொண்டு இந்தக் காலத்தில் வாழ முடியும். ஆனால் இந்தக் கால நிலைமைகளைக் கொண்டு அந்தக் காலத்தில் வாழ முடியாது.
            அடிப்படை விசயங்களில் நாம் எளிமையான தன்னிறைவு எனும் கோட்பாட்டை எப்போதும் கைவிட்டு விடக் கூடாது. தன்னிறைவு எனும் இக்கோட்பாடு எளிமையாக இருக்கலாம். அதுதான் பேரிடர் போன்ற காலங்களிலும் அதை எதிர்கொள்ள வலிமையான ஒன்றாக இருக்கக் கூடியதாக இருக்கிறது.
*****

புயலைப் பின்தொடரும் பேரிடர்கள்


புயலைப் பின்தொடரும் பேரிடர்கள்
கஜா புயலை விடவும் கஜா புயல் குறித்து வெளிவரும் கருத்துகள் பயங்கரமாக இருக்கின்றன.
கஜா புயலையே கூஜாவில் அடைத்து விட்டோம் என்கிறார்கள்.
புயல் அடித்தால்தான் குடிக்க குடிநீர் கிடைக்கும் என்கிறார்கள்.
புயல் அடித்தப் பகுதிகளில் எல்லாம் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அல்லாடுகிறார்கள். 25 ரூபாய்க்கு விற்ற குடிநீர் கலன்களை 250 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஓவர்டேங்கில் நீர் நிரப்ப ஜெனரேட்டர்களுக்கு ஐநூறு, ஆயிரம் என்று செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். செல்பேசியைச் சார்ஜ் செய்ய ஒரு மணி நேரத்துக்கு நாற்பது ரூபாய் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கஜா பாதித்த பார்வையிடாப் பகுதிகள் நிறைய இருக்கின்றன. கஜா சீரழித்த கவனத்துக்கு வராத நிறைய பகுதிகளும் இருக்கின்றன.
மக்கள் தங்களுக்குத் தாங்களே தங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
அவ்வபோது வருகை தரும் ஒரு சில தன்னார்வலர்கள்தான் ஒரே ஆறுதல்.
பாதிப்பு நிறையதான். அழிவு அதிகம்தான். ஆனால் அவைகள் அதிவேக நடவடிக்கைகளால் சரிசெய்ய முடியாதவைகள் அல்ல.
போர்க்கால நடவடிக்கை என்று சொல்வார்களே! அதுதான் தற்போது தேவைப்படுகிறது.
நிகழ்ந்திருப்பது ஒரு போர்தான்.
இயற்கை மனிதன் மேல் நிகழ்த்திய போர்.
இயற்கை மரங்களின் நிகழ்த்திய போர்.
இயற்கை அடிப்படைத் தேவைகள் என்று சொல்லப்படும் உறைவிடம், மின்சாரம், தகவல்தொடர்பு ஆகியவற்றின் மீது நிகழ்த்திய போர்.
போரை நிகழ்த்திய இயற்கை அதிலிருந்து மீண்டு வர சில நாட்கள் மழையாய் மீண்டும் படையெடுக்காமல் இருந்தது. இப்போது மழையாய் அது தொடர ஆரம்பித்து இருக்கிறது.
*****

21 Nov 2018

கஜா புயல் முறித்தெடுத்த மின்கம்பங்கள்


கஜா புயல் முறித்தெடுத்த மின்கம்பங்கள்
            கஜா புயலால் மிக அதிகம் பாதிக்கப்பட்டவைகள் மரங்கள். டெல்டா மாவட்டங்களின் மரங்கள் அனைத்தும் கஜா புயலால் சூறையாடப்பட்டு இருக்கிறது.
            கஜா புயலின் பாதிப்புக்கு மரங்களுக்கு அடுத்து அதிக பாதிப்புகளுக்கு உள்ளானவை போஸ்ட் மரங்கள் என்று இப்பகுதியில் சொல்லப்படும் மின் கம்பங்கள். ஒவ்வொரு மின்கம்பமும் இரும்புக் கம்பிகள் உள்ளீடப்பட்ட காங்கிரீட் கலவையால் ஆனவைகள்.
            வெகு அரிதாக சில இடங்களில் மின் கம்பங்களில் தந்திக் மரங்கள் என்று இப்பகுதியில் சொல்லப்படும் இரும்புக் கம்பங்களும் உள்ளன. இவைகளில் இரும்புக் கம்பங்களில் அதிக பாதிப்புகளில்லை. அவைகளில் பெரும்பாலானவை நிமிர்ந்து நிற்கின்றன. அப்படியே சாய்ந்திருந்தாலும் ஓரளவே சாய்ந்திருக்கின்றன.
            காங்கிரீட் போஸ்ட்டுகள் மிக அதிக அளவில் முறிந்து கிடக்கின்றன. அதிலும் பழைய காங்கிரீட் போஸ்டுகளைக் காட்டிலும் புதிய காங்கிரீட் போஸ்ட்கள் அதிக அளவில் முறிந்து கிடக்கின்றன.
            ஒவ்வொரு ஊராட்சிக்கும் குறைந்த பட்சம் ஐம்பதோ அல்லது அதற்கு அதிகமாகவோ மின் கம்பங்கள் தேவைப்படும்.
            இவைகளை எவ்வளவு விரைவாகக் கட்டமைக்கிறார்களோ அவ்வளவு விரைவாக ஊராட்சிகள் ஒளிபெறும்.
            டெல்டா மாவட்டங்கள் பலவும் குக்கிராமங்களை அதிகம் கொண்டவை. அந்த வகையில் குக்கிராமங்கள் ஒளிபெற இருபது நாட்களுக்கு மேல் ஆகலாம். ஒரு மாதத்துக்கும் மேல் ஆகலாம் என்றே பலரும் பேசிக் கொள்வதைப் பார்க்கையில் டெல்டா மாவட்டங்கள் மின்சார ஒளியைத் தரிசிக்க ஒரு மாதம் காத்திருக்கத்தான் வேண்டும்.
*****

கஜா புயல் - சீர் செய்யப்பட வேண்டிய மூன்று


கஜா புயல் - சீர் செய்யப்பட வேண்டிய மூன்று
            கஜா புயலால் அதிக அளவு பாதிப்புக்குள்ளானவை,
                        1. போக்குவரத்து,
                        2. மின்சாரம்,
                        3. தகவல் தொடர்பு.
            கஜா புயலால் பாதிப்புக்கு உள்ளான போக்குவரத்தைச் சரி செய்வதில் பொது மக்களின் முன்னெடுப்பும், உழைப்பும் அபாரமானவை. தாங்களாகவே முன்வந்து சாலைகளில் விழுந்து கிடந்த மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அகற்றுவதில் முனைப்பாக ஈடுபட்டனர். வெகுவிரைவாகப் போக்குவரத்துச் சீராவதில் அவர்கள் கொடுத்த உழைப்பு அதிகம்.
            மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய இரண்டிலும் ஏற்பட்ட பாதிப்புகளை மின்சார வாரியமும், தகவல் தொடர்பு நிறுவனங்கள் மட்டுமே சரி செய்ய முடியும்.
            மின்சார வசதி எவ்வளவு விரைவாகச் சீர் செய்யப்படுகிறதோ அவ்வளவு விரைவாக மக்களின் குடிநீர்த் தேவைகள் போன்ற அடிப்படைத் தேவைகளும், இரவில் தேவையாக இருக்கும் வெளிச்சம் போன்ற அத்தியாவசியத் தேவைகளும், அலைபேசித் தொடர்பு போன்ற தகவல் தொடர்பு தேவைகளும் சீராகும்.
            தகவல் தொடர்பு சீராவது மின்சார வசதி சீராவதன் கைகளில் இருக்கிறது. அதனால் மின்சார வசதியைச் சீர் செய்வது என்பது மின்னல் வேகத்தில் சீர் செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
*****

19 Nov 2018

கஜா புயல் - பேரழிவின் பாதை


கஜா புயல் - பேரழிவின் பாதை
            அநேகமாக எல்லாரும் இந்தக் கஜா புயலைக் காமெடியாக்கிப் போட்டு வறுத்துத் தள்ளினார்கள். தலைவர்கள், பிரபலங்கள், நடிகர்களுக்குச் செய்யும் மீம்ஸை கஜா புயலுக்கும் செய்தார்கள்.
            கஜா என்று ஆண் பெயரை வைத்ததால்தான் நின்று நிதானமாக வருவதாகவும், சுஜா என்று பெண் பெயரை வைத்திருந்தால் ஸ்ட்ரெய்ட்டாக வந்து சங்கு ஊதியிருக்கும் என்றார்கள்.
            கஜா என்றால் யானை என்ற பொருளுக்கு ஏற்ப அது யானையைப் போல கடல் பகுதியில் மெதுவாக நடந்து கரையைக் கடந்த போது மதங்கொண்ட யானையைப் போல சூறையாடி விட்டது.
            கஜா யானையைப் போல மரங்களின் தலையைக் கிள்ளி எறிந்திருக்கிறது. யானையைப் போலவே மின்கம்பங்களை முறித்துப் போட்டிருக்கிறது. செல்போன் கோபுரங்களை தலைகீழாகத் தொங்க விட்டிருக்கிறது. கூரைகளை, தகர சீட்டுகளைப் பறக்க விட்டிருக்கிறது. கஜாவின் பேரழிவின் பாதையை நோக்கும் போது இது கஜா போட்ட மீம்ஸ் என்று சொல்வது அழுது கொண்டே சிரிப்பதைப் போல இருக்கிறது.
*****

களவாடியப் பொழுதுகளின் கனங்கள்


களவாடியப் பொழுதுகளின் கனங்கள்
            வேலுச்சாமி ஐயாவுக்கு கொல்லையைப் பார்க்க மனசில்லை. அவரது நாற்பது வருஷ உழைப்பை கஜா புயல் கந்தக் கோலம் செய்திருந்தது. வேங்கை, தென்னை மரங்களைப் பாதிப் பாதியாக முறித்து போட்டு விட்டது. வாழை மரங்கள் சர்வ நாசம்.

            "எண்ணம் சரியில்லடா மனுசனுக்கு. இப்படிப் புயல் வரத்தான்டா செய்யும்!" என்கிறார் மாணிக்கம் தாத்தா.

            புயலுக்கு முந்தைய மாலைப் பொழுதில் பறவைகள் எதுவும் காணவில்லை. புயலுக்கு பிந்தைய இந்த மாலைப் பொழுதில் பறவைகளின் கீச்சொலிகள் எங்கும். காணாத வண்ணப் பறவைகள் மற்றும் சிறு சிறு பறவைகள் பல. எங்கிருந்து வந்தன இவைகள்? இவைகளின் கூடடையும் மரங்கள் எங்கேயோ முறிந்து கிடக்கக் கூடும்.

            புயலுக்குப் பின்னே நடந்த ஒரு நல்லது, பாட்டி - பேத்திச் சண்டையில் பேத்தி திட்டியதால் ஓராண்டுக்கு முன் கோபித்துக் கொண்டு போன வால்குருவி திரும்ப வந்தது.
*****

புயல் - மரங்களின் ராட்சசன்


புயல் - மரங்களின் ராட்சசன்
            "1978 புயல்ல அவனவனும் விழுந்த மரங்களையெல்லாம் வெட்டிகிட்டு வந்து வூட்டுல போட்டுகிட்டான். தேங்கான்னா தேங்கா வூடெல்லாம் தேங்கா. அதுல செல்வாக்கா இருந்தவங்களும், அரசியல்வாதிய இருந்தவங்களும் வெட்டிகிட்டதும் கொட்டிகிட்டதும் அதிகம்டா. அவ்வளவு நாட்டுத் தேக்குங்க. எல்லாம் பொறம்போக்கு நிலத்திலேயும், ஆத்தங்கரையோரத்திலயும் இருந்ததுவுங்க. நெலை, சன்னலு, கதவு, பீரோவுன்னு எல்லாத்தையும் தேக்குலயே பண்ணிகிட்டானுங்கன்னா பார்த்துக்கோயேன்" என்றார் வடிவேலு பெரியப்பா.
            "அதுல்ல பெரியப்பா. இன்னும் இந்த வருஷத்துக்கு அஞ்சுப் புயல் இருக்குது" என்றதும்,
            "இனிமே புயலடிச்சா விழுறதுக்கு எங்கடா மரமிருக்கு?" என்றார் பெரியப்பா.
*****

ஓயாது ஒலிக்கும் புயலின் தீனக் குரல்


ஓயாது ஒலிக்கும் புயலின் தீனக் குரல்
            எல்லாருக்கும் இந்தப் புயலைப் பற்றி யாரிடமாவது எதையாவது சொல்ல விசயம் இருக்கிறது. நெட்வொர்க் இல்லை. அவ்வபோது கிடைக்கும் நெட்வொர்க் எமர்ஜென்ஸி கால்ஸ் ஒன்லி என்கிறது. 100 க்கோ, 101 க்கோ, 108 க்கோ கால் போட்டு அதைப் பேசிக் கொண்டிருக்க முடியாது.

            1977 புயலை விட கடுமையாக இருந்தது என்றால் பூசாரி பொன்னம்பலம்.
            இல்லை கஜா புயல்தான் கடுமை என்றால் ஆசாரி ஆண்டியப்பன்.
            அது 1977 இல்ல, 1978 டா என்றார் சம்புலிங்க கோனார்.

            வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள். வீடருகே மரம் வளர்க்கக் கூடாது என்பது கஜா புயலைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

            "அப்போ நான் அறிஞ்ச வரைக்கும் அதாவது 1960 லிருந்து 1978 வரை, வாழக்காவெட்டி மதகிலிருந்து இராமலிங்க சாமி மடம் வரை போக முடியுமா? அவ்வளவு மரம்டா ரொட்டுக்கு ரெண்டு பக்கமும். பகலே இருட்டாத்தான் இருக்கும்.1978 ல அடிச்ச புயல்ல எல்லாம் வேரோட சாஞ்சிருச்சு. அதுக்கப்புறம் ரோடே வெட்டவெளிப் போலாச்சு. இருந்த மரமெல்லாம் குறைஞ்சுப் போச்சு. இப்போ இந்த வருஷ புயல்ல இருந்த கொஞ்ச நஞ்ச மரமும் குறைஞ்சுப் போயிடுச்சு. மனுஷன் பாதி வெட்டுறான். புயல் பாதி உடைச்சுப் போட்டு முறிச்சுப் போட்டுடுச்சு." முத்துசாமி தாத்தா சொல்ல அவர் குரலை புயல் முறித்துப் போட்டது போல இருக்கிறது.

            வரிசையாக மரங்களை வெட்டிக் கொண்டு வந்தவர்கள், அந்த ஒருவரின் வீடருகே வந்த போது 'எனக்கு வூட்டுல வெட்ட நிறைய மரம் இருக்கு' என்று கலைந்து சென்றார்கள். அதுதான் கிராமம். நல்லது இருப்பது போல கிராமத்தில் சில கெட்டதும் இருக்கிறது.
*****

கஜா புயல் - ஓயாது கேட்கும் பேரிரைச்சல்


கஜா புயல் - ஓயாது கேட்கும் பேரிரைச்சல்
            அந்தத் தெருவில் பீதாம்பரம் வீடு மட்டும் மாறாமல் இருக்கிறது. பாக்கி கூரை வீடுகள் ஓட்டு வீடுகள் ஆகி விட்டன. ஓட்டு வீடுகள் மாடி வீடுகள் ஆகி விட்டன. தெருவின் அமைப்பே மாறி இருக்கிறது. பதினைந்து ஆண்டுகளிலிருந்து முன்னோக்கிப் பார்த்தால் ஊரின் உருவமே மாறியிருக்கிறது, திடீரென மீசை முளைத்த உருவத்தைப் பார்ப்பதைப் போல.
            இந்தக் கஜா புயலிலிருந்து முன்னோக்கியும், பின்னோக்கியும் பார்க்கும் போது மனிதர்களின் மனநிலையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
            சசி அக்கா மாமரக் கிளைகள் அவர்களின் வீட்டு வேலியில் விழுந்திருப்பதாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குச் சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்துவது முக்கியமாகப் பட்டது. சசி அக்காவின் வசவுச் சொற்கள் அதிகரித்தத் தொடங்கியது. வேறு வழியில்லாமல் நான் சென்று பார்த்த போது சசி அக்காவின் மாமரக் கிளைகள்தான் அவர்களின் வீட்டு வேலியில் விழுந்து கிடந்தது. சசி அக்காவிடம் உண்மையை எடுத்துக் காட்டிய போது அது வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்துக் கொண்டே உள்ளே ஓடி விட்டது. ஏன் சசி அக்கா அப்படித் திட்டியது என்று எனக்குப் புரியவில்லை.
            சசி அக்கா இப்படி என்றால்... குமாரி அக்கா நிமிர்ந்து நிற்கும் மரக்கிளைகளையெல்லாம் சாய்ந்து இருப்பதாகச் சொல்லி அவைகளையெல்லாம் வெட்டு என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. சாய்ந்தும், விழுந்தும் கிடக்கும் மரங்களையே வெட்டியெடுப்பது இப்போதைக்கு ஆகும் கதையில்லை. நன்றாக நிமிர்ந்து நிற்கும் மரங்களை எப்போது வெட்டுவது? குமாரி அக்காவுக்கு நன்றாக நிமிர்ந்து நிற்கும் சிறுகாற்று அடித்தால் விழுந்து விடுமோ என்ற பயம் இருந்தது. அதனால் எந்த மரமாக இருந்தாலும் அதை வெட்டச் சொல்லிச் சத்தம் போட்டது.
            வாழையெல்லாம் எப்படி இருக்குது? என்றது அன்னம்மா அக்கா. அவருக்குத் தெரியும் தென்னை மரங்களே முறிந்து விழும் போது வாழை என்ன செய்யும் என்று. ஆனால் கேட்கிறது அக்கா. அக்காவால் எதையாவது கேட்காமல் இருக்க முடியாது.
*****

15 Nov 2018

கஜா


கஜா 
அரசியல்வாதியாக எல்லாரும் முடியாது. குழப்பவாதியாக எல்லாராலும் முடியும். அதாவது தாங்க முடியலடா சாமி பேட்டிகள் மொமண்ட்!
*****
கஜா புயல் பற்றிக் கேட்கிறார்கள். இப்படி ஒரு குழப்பமானப் புயலைச் சந்தித்து நாளாகி விட்டது.
பொதுவாக குழப்பம்தான் புயல். காற்று எந்த திசையில் வீசுவது என்று குழம்பிப் போய் நான்கு திசையிலும் மாறி மாறி வீசும். அதிசயமாக இந்தப் புயலுக்கு நான்கு திசைகளிலிருந்தும் நானா விதமான கணிப்புகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
அது கடலூருக்கு அருகே கரையைக் கடக்கும் என்கிறார்கள்.
மறுநாள் நாகைக்கு அருகே கரையைக் கடக்கும் என்கிறார்கள்.
நாகையை நோக்கிய பை பாஸ் ரோடுகள் சரியில்லாததால் அவ்வழியே கரையைக் கடக்க வாய்ப்பில்லை என்ற வாட்ஸ் அப் பார்வேர்டு ஒன்றைக் கூட பார்த்தேன்.
போகிறப் போக்கைப் பார்த்தால் காவிரியாற்றின் வெண்ணாற்றாங்கரையின் வழியாக கரையைக் கடக்கும் என்று கூட செய்திகள் வரும் போலிருக்கிறது. எங்கள் ஊரின் கம்மாக் கரையில் உட்கார்ந்து இதை யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
புயலை இவ்வளவு காமெடியாக ஆக்கக் கூடாதுதான்.
இயற்கை எப்போதும் மனிதக் கணிப்பை மீறிச் செயல்படக் கூடியது. மனிதன் கணிக்கக் கூடிய இடங்களில் அது தன்னுடைய சக்தியை வெளிப்படுத்துவதை விட, மனிதன் கோட்டை விடும் இடங்களில் தன் சக்தியை பிரமாண்டமாக வெளிப்படுத்துகிறது.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...