எளிமையான தன்னிறைவின் தேவை
வழக்கமாக டெல்டா மாவட்டங்கள் வெள்ளம் எனும்
பெருநீர் வடிவத்தால் பாதிக்கப்படும். இந்த வருடம் புயல் எனும் பெருங்காற்று வடிவத்தால்
பாதிக்கப்பட்டு இருக்கிறது.
1978 க்குப் பிறகு டெல்டா மாவட்டங்கள்
எதிர்கொண்ட மிகப்பெரிய புயல்பாதிப்பு என்று கஜா புயலின் பாதிப்புகளைக் குறிப்பிடலாம்.
1978 களில் புயல் அடித்த பின்பு அதை எதிர்கொண்ட
சிரமங்களிலிருந்து தற்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் மாறுபட்டவை.
1978 களில் இல்லாத தொழில்நுட்ப வசதிகள்
இப்போது உள்ளன. அப்போது செய்ய முடியாத முன்னெச்சரிக்கை, முன்னறிவிப்பு நடிவடிக்கைகளை
இப்போது செய்ய முடிகிறது.
ஆனால் இந்தப் புயலில் மனிதர்கள் குடிநீருக்கு
அலைந்ததும், அதை பன்மடங்கு விலையேற்றத்தில் வாங்கியதும் கால மாற்றத்தின் கோர சாட்சியம்.
புயல் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் உறிஞ்சி
எடுத்தது போல டெல்டா மாவட்டங்களின் புயல் பாதித்தப் பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன.
வெளிச்சைத்தைப் பிடுங்கி இருளில் தள்ளிய அதே மின்சாரம்தான் நீரைப் பெறுவதில் பேரிடர்
காலங்களில் நம்மைப் பின்னோக்கித் தள்ளுகிறது.
மின்சாரம் இல்லாவிட்டால் நீரைப் பெற முடியாது
என்ற சூழலில் இந்தப் புயலில்... வீடுகளில் அடிபம்பு இருந்தவர்கள் மட்டுமே தப்பித்தார்கள்.
மற்றவர்கள் அனைவரும் மேல்நிலைத் தொட்டியில் தண்ணீரை நிரப்ப ஜெனரேட்டர்களைத் தேடி ஓடிக்
கொண்டிருந்தார்கள்.
இந்த நவீன யுகத்தில்,
இந்த விஞ்ஞான யுகத்தில்,
இந்தத் தொழில்நுட்ப யுகத்தில்...
யார் கைகளால் அடித்து தண்ணீரைத் தூக்கிக்
கொண்டிருப்பார்கள் என்று சொன்ன எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.
மின்மோட்டார் இருந்தாலும் கையால் அடித்து
நீர் பிடிக்கும் பம்பும் இருக்க வேண்டும் என்று அதற்கான அமைப்புகளைச் செய்தவர்களையும்
பார்த்திருக்கிறேன்.
இந்தப் புயலுக்குப் பின் எனக்கு காந்தியடிகளின்
கிராமத் தன்னிறைவு என்ற கருத்தாக்கம்தான் மீண்டும் மீண்டும் மனதில் தோன்றி நிழலாடியது.
கை பம்புகளோடு, பத்தாயத்தில் நெல்லைச்
சேமித்து வைத்து, இந்த மாதத்துக்கு வேண்டிய அரிசிக்காக நெல்லை ஆவாட்டி அரைத்து வைத்து,
மழைக்காலத்துக்காக கோடைக்காலத்திலே வற்றல்களைப் போட்டு வைத்திருந்தவர்கள் எதற்கும்
அலட்டிக் கொள்ளவில்லை. கடைகளைத் தேடி ஓடவில்லை. அரிசி கிடைக்கவில்லையே என்று நிலைக்கு
ஆளாகவில்லை. புயலுக்குப் பின்னான நிலையை படு எதார்த்தமாக எதிர்கொண்டார்கள்.
டெல்டா மாவட்டங்களில் எவ்வளவு வறியவர்களின்
வீடாக இருந்தாலும் பத்தாயமோ, குதிரோ இல்லாத வீடுகளை அந்நாளில் பார்க்க முடியாது.
இன்று எவ்வளவு வசதியான வீடாக இருந்தாலும் அவைகளை அந்த வீடுகளில் பார்க்க முடியவில்லை.
ஒரு சில பெரியவர்கள் வாழும் வீடுகளில்
மட்டுமே அவர்களின் வசவுகளைச் சுமக்க முடியாமல் பத்தாயங்கள் மட்டும் கிராமங்களின் ஒரு
சில வீடுகளில் இருக்கின்றன. அநேகமாக அவர்களின் மறைவுக்குப் பிறகு அப்பத்தாயங்களும்
காலி செய்யப்பட்டு விடும்.
மழைக்காலம் தொடங்கி விட்டால் வேலிக்கால்களின்
கிளைகளைக் கழித்து விடுபவர்கள், மர மட்டைகளை ஒரு சில கிளைகள் மட்டும் விட்டு விட்டு
கழித்து விடுபவர்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள். அவர்களின் வீடுகளில் மரங்கள்
கூட அதிகச் சேதாரமில்லை.
எங்கள் வீட்டில் அப்படி ஒரு வேப்பமரமும்,
புளியமரமும் கழிக்கப்பட்டதில் படுபயங்கர புயல்காற்றைச் சந்தித்தும் விழாமல் அப்படியே
கம்பீரமாக நிற்கிறது. மற்றவைகளைக் கழித்து விடக் காட்டிய அஜாக்கிரதையால் அவைகள் எல்லாம்
விழுந்து கிடக்கின்றன.
எவ்வளவு தொழில்நுட்பங்கள் வந்தாலும் அடிப்படைத்
தேவைகள் மாறி விடப் போவதில்லை.
நமது அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் மின்சாரத்திடம்
அடகு வைக்கும் போது மின்சாரம் இல்லாத ஒரு சூழ்நிலையில் அதை எதிர்கொள்வது மிகக் கடினமாகிறது.
மின்சாரத் தேவை தவிர்க்க முடியாத அத்தியாவசியத்
தேவைதான். அதே நேரத்தில் மின்சாரம் இல்லாமல் போனால்...
கை பம்பு,
பேட்டரி லைட்,
பேட்டரி ரேடியோ
இவைகள் எல்லாம் எவ்வளவு உதவுகின்றன என்பதை
அறிய நீங்கள் நிச்சயம் ஒரு பேரிடரைச் சந்திக்க வேண்டும்.
அதே போல...
பத்தாயம்,
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னே ஆவாட்டி
அரைத்த அரிசி,
மழைக்காலத்திற்கு என்றே கோடைக்காலத்தில்
போடப்பட்ட வற்றல்,
மழைக்காலம் தொடங்கும் அறிகுறியை வைத்தே
கிளைகளைக் கழித்து விடப்படும் மரங்கள் இவைகள் எல்லாம் அந்தக் காலத்து மனிதர்கள் என்று
சொல்லப்படும் பெரியவர்கள் இருக்கும் வீடுகளில் இருக்கிறது மற்றும் நிகழ்கிறது.
நம் வீடுகளோ அந்தக் காலத்து மனிதர்கள்
எனப்படும் பெரியவர்கள் இல்லாத இந்தக் காலத்து வீடுகளாக அல்லவா இருக்கிறது. எனவே நம்
வீடுகள் இந்தக் காலத்தை எதிர்கொள்ளும் வகையில் இருக்கிறது. ஆனால் பேரிடர்கள் இந்தக்
காலத்தை அந்தக் காலத்துக்கு அல்லவா தள்ளி விடுகிறது. ஒரு பேரிடர்க்குப் பின் நிச்சயம்
நாம் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக தள்ளிவிடப் படுகிறோம் என்பதுதான் உண்மை.
நிலைமை சகஜமாகும் வரை அதுதான் நிலைமை. அதுவரை அந்தக் காலத்தில்தான் நாம் வாழ நேரிடும்.
அந்தக் கால நிலைமைகளைக் கொண்டு இந்தக் காலத்தில் வாழ முடியும். ஆனால் இந்தக் கால நிலைமைகளைக்
கொண்டு அந்தக் காலத்தில் வாழ முடியாது.
அடிப்படை விசயங்களில் நாம் எளிமையான தன்னிறைவு
எனும் கோட்பாட்டை எப்போதும் கைவிட்டு விடக் கூடாது. தன்னிறைவு எனும் இக்கோட்பாடு
எளிமையாக இருக்கலாம். அதுதான் பேரிடர் போன்ற காலங்களிலும் அதை எதிர்கொள்ள வலிமையான
ஒன்றாக இருக்கக் கூடியதாக இருக்கிறது.
*****
No comments:
Post a Comment