19 Nov 2018

ஓயாது ஒலிக்கும் புயலின் தீனக் குரல்


ஓயாது ஒலிக்கும் புயலின் தீனக் குரல்
            எல்லாருக்கும் இந்தப் புயலைப் பற்றி யாரிடமாவது எதையாவது சொல்ல விசயம் இருக்கிறது. நெட்வொர்க் இல்லை. அவ்வபோது கிடைக்கும் நெட்வொர்க் எமர்ஜென்ஸி கால்ஸ் ஒன்லி என்கிறது. 100 க்கோ, 101 க்கோ, 108 க்கோ கால் போட்டு அதைப் பேசிக் கொண்டிருக்க முடியாது.

            1977 புயலை விட கடுமையாக இருந்தது என்றால் பூசாரி பொன்னம்பலம்.
            இல்லை கஜா புயல்தான் கடுமை என்றால் ஆசாரி ஆண்டியப்பன்.
            அது 1977 இல்ல, 1978 டா என்றார் சம்புலிங்க கோனார்.

            வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்கிறார்கள். வீடருகே மரம் வளர்க்கக் கூடாது என்பது கஜா புயலைப் பார்த்தவர்களுக்குத்தான் தெரியும்.

            "அப்போ நான் அறிஞ்ச வரைக்கும் அதாவது 1960 லிருந்து 1978 வரை, வாழக்காவெட்டி மதகிலிருந்து இராமலிங்க சாமி மடம் வரை போக முடியுமா? அவ்வளவு மரம்டா ரொட்டுக்கு ரெண்டு பக்கமும். பகலே இருட்டாத்தான் இருக்கும்.1978 ல அடிச்ச புயல்ல எல்லாம் வேரோட சாஞ்சிருச்சு. அதுக்கப்புறம் ரோடே வெட்டவெளிப் போலாச்சு. இருந்த மரமெல்லாம் குறைஞ்சுப் போச்சு. இப்போ இந்த வருஷ புயல்ல இருந்த கொஞ்ச நஞ்ச மரமும் குறைஞ்சுப் போயிடுச்சு. மனுஷன் பாதி வெட்டுறான். புயல் பாதி உடைச்சுப் போட்டு முறிச்சுப் போட்டுடுச்சு." முத்துசாமி தாத்தா சொல்ல அவர் குரலை புயல் முறித்துப் போட்டது போல இருக்கிறது.

            வரிசையாக மரங்களை வெட்டிக் கொண்டு வந்தவர்கள், அந்த ஒருவரின் வீடருகே வந்த போது 'எனக்கு வூட்டுல வெட்ட நிறைய மரம் இருக்கு' என்று கலைந்து சென்றார்கள். அதுதான் கிராமம். நல்லது இருப்பது போல கிராமத்தில் சில கெட்டதும் இருக்கிறது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...