19 Nov 2018

கஜா புயல் - ஓயாது கேட்கும் பேரிரைச்சல்


கஜா புயல் - ஓயாது கேட்கும் பேரிரைச்சல்
            அந்தத் தெருவில் பீதாம்பரம் வீடு மட்டும் மாறாமல் இருக்கிறது. பாக்கி கூரை வீடுகள் ஓட்டு வீடுகள் ஆகி விட்டன. ஓட்டு வீடுகள் மாடி வீடுகள் ஆகி விட்டன. தெருவின் அமைப்பே மாறி இருக்கிறது. பதினைந்து ஆண்டுகளிலிருந்து முன்னோக்கிப் பார்த்தால் ஊரின் உருவமே மாறியிருக்கிறது, திடீரென மீசை முளைத்த உருவத்தைப் பார்ப்பதைப் போல.
            இந்தக் கஜா புயலிலிருந்து முன்னோக்கியும், பின்னோக்கியும் பார்க்கும் போது மனிதர்களின் மனநிலையிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறது.
            சசி அக்கா மாமரக் கிளைகள் அவர்களின் வீட்டு வேலியில் விழுந்திருப்பதாகத் திட்டிக் கொண்டிருந்தார். எனக்குச் சாலையில் கிடந்த மரங்களை அப்புறப்படுத்துவது முக்கியமாகப் பட்டது. சசி அக்காவின் வசவுச் சொற்கள் அதிகரித்தத் தொடங்கியது. வேறு வழியில்லாமல் நான் சென்று பார்த்த போது சசி அக்காவின் மாமரக் கிளைகள்தான் அவர்களின் வீட்டு வேலியில் விழுந்து கிடந்தது. சசி அக்காவிடம் உண்மையை எடுத்துக் காட்டிய போது அது வெட்கப்பட்டுக் கொண்டே சிரித்துக் கொண்டே உள்ளே ஓடி விட்டது. ஏன் சசி அக்கா அப்படித் திட்டியது என்று எனக்குப் புரியவில்லை.
            சசி அக்கா இப்படி என்றால்... குமாரி அக்கா நிமிர்ந்து நிற்கும் மரக்கிளைகளையெல்லாம் சாய்ந்து இருப்பதாகச் சொல்லி அவைகளையெல்லாம் வெட்டு என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தது. சாய்ந்தும், விழுந்தும் கிடக்கும் மரங்களையே வெட்டியெடுப்பது இப்போதைக்கு ஆகும் கதையில்லை. நன்றாக நிமிர்ந்து நிற்கும் மரங்களை எப்போது வெட்டுவது? குமாரி அக்காவுக்கு நன்றாக நிமிர்ந்து நிற்கும் சிறுகாற்று அடித்தால் விழுந்து விடுமோ என்ற பயம் இருந்தது. அதனால் எந்த மரமாக இருந்தாலும் அதை வெட்டச் சொல்லிச் சத்தம் போட்டது.
            வாழையெல்லாம் எப்படி இருக்குது? என்றது அன்னம்மா அக்கா. அவருக்குத் தெரியும் தென்னை மரங்களே முறிந்து விழும் போது வாழை என்ன செய்யும் என்று. ஆனால் கேட்கிறது அக்கா. அக்காவால் எதையாவது கேட்காமல் இருக்க முடியாது.
*****

No comments:

Post a Comment

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...