பல நேரங்களில் பல மனிதர்கள்
மாற்றம் என்பது மாறாததுதான், ஆனால் யாரையும்
அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது. எவரும் தங்கள் மனநிலையை அவ்வளவு எளிதாக மாற்றிக்
கொள்ள தயாராக இருக்க மாட்டார்கள்.
தங்கள் மனநிலையே உயர்வானது என்று நினைத்துக்
கொண்டிருப்பவர்களை அவ்வளவு எளிதில் மாற்றி விட முடியாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள்
மனநிலைகளால் இந்த உலகில் ஏற்படுத்தும் பிரச்சனைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அதனால் நேரும்
சிக்கல்களும் கணக்கில் அடங்காதவை.
அப்படிப்பட்டவர்களை நம்பி எந்த ஒன்றையும்
செய்து விட முடியாது. அப்படி எதையாவது செய்தால் அவர்கள் அதற்கு எதிராக மாறி விடுவார்கள்.
அவர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்லது செய்யப் போவதாக நினைத்துக்
கெடுதலில் மாட்டிக் கொண்ட நிகழ்வுகள் அநேகமாகி விடும்.
அவர்களிடம் எதையும் சொல்ல வேண்டியதில்லை.
சொன்னாலும் அவர்கள் எதையும் நம்பப் போவதில்லை. உண்மையைச் சொன்னால் பொய் என்பார்கள்.
உள்ளுணர்வால் எழுவதைச் சொன்னாலும் சந்தேகப்படுவார்கள். அவர்களிடம் நல்லது எதையாவது
சொல்லி முட்டாள்பட்டம் வாங்குவது தேவையில்லாதது. அதனால் ஏற்படும் பிரச்சனைகளும் அர்த்தமில்லாதது.
அவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் நினைப்பதுதான் சரியானது. அவர்கள் அப்படியே இருந்து
கொள்ளட்டும்.
அவர்கள் எமோஷனலாக ப்ளாக்மெயில் செய்யும்
ஒவ்வொரு முறையும் தங்களின் சுய உருவத்தை நிர்சலனமாகக் காட்டுவார்கள். அதுபோன்ற நிலைமைகளில்
அவர்களைச் சமாதானப்படுத்துவது பிரச்சனைகளின் உச்சகட்டம். அப்படி ஏதேனும் நிகழ்வுகள்
நடக்குமானால் அவைகள் அபத்தத்தின் உச்சக்கட்டம். அதே போன்ற முட்டாள்தனத்தை அடுத்தடுத்தும்
வழக்கம் போல நிகழ்த்தும் முட்டாள்தனமும் நிகழவே செய்யும். எப்படியாவது சமாதானப்படுத்தி
விடலாம் என்ற நம்பிக்கைதான் அதற்குக் காரணமாக இருக்கும். கடந்த காலத்தில் பாடம் கற்றுக்
கொள்ளாத முட்டாள்தனமே அது. அது போன்று உணர்ச்சிகரமான மிரட்டுபவர்களிடம் எச்சரிக்கையாக
நடந்து கொள்ள வேண்டுமே தவிர, முட்டாள்தனமாக அல்ல. அவர்களை அவர்களின் போக்கில் விட்டு
விடுவதுதான் அதற்குச் சிறந்த வழி. சரியான வழியும் கூட. சமயங்களில் அழுது கூட ஆர்ப்பாட்டம்
செய்து விடுவார்கள். அது வெள்ளந்தியாக இருப்பது போலக் காட்டி அவர்கள் செய்த வன்முறை
என்பது புரியவே நாளாகும்.
இப்படி அவர்கள் செய்வது சரியில்லைதான்.
அவைகளைச் சரியாக்க முயன்றால் அதன் பின் எதுவும் சரியில்லாமல் போய் விடும் என்பதன்
சூட்சமம் புரிந்து கொள்ளப்பட வேண்டியது. அப்படிப்பட்டவர்களிடம் போய் யாராவது உள்ளார்ந்த
விருப்பங்களைத் தெரிவிப்பார்களா? அப்படி ஒரு பேதைத்தனமும் சில நேரங்களில் நடந்து விடும்.
அதற்கு அந்த உள்ளார்ந்த விருப்பத்தையே துறந்து விட்டு கம்பீரமாக இருப்பது மேலானது.
கம்பீரமாக இருப்பது தனி அழகு, தனி இன்பமும் கூட. கொஞ்சம் அவசரப்படுபவர்களுக்கு இது
புரிவது சற்று நாள் எடுக்கும் சமாச்சாரம்.
நுட்பமாக யோசித்துப் பார்த்தால் அப்படிப்பட்டவர்கள்
எல்லாவற்றிலும் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து
கொண்டு இருப்பார்கள். இது புரியாமல் அவர்களை அணுகுவது என்பது நரியொன்றிடம் கோழி
ஒன்று பிராது கொடுப்பதைப் போலாகி விடும்.
அவர்கள் கோழையாக, பயந்தாங்கொள்ளியாக
இருப்பது போல நடிக்கவும் செய்வார்கள். அந்த நடிப்பின் மூலம் நுட்பமான ஆதிக்கத்தை ஏற்படுத்த
முனைவார்கள். இது புரியாமல் அவர்களின் பயந்தாங்கொள்ளித்தனத்திற்கு ஆறுதல் சொல்வதோ,
தைரியப்படுத்துவதாக முயல்வதோ மற்றுமொரு அபத்தத்தின் உச்சக்கட்டம்.
அவர்கள் மற்றவர்கள் செயலாற்ற வேண்டும்
என்று தாங்கள் செயலாற்றாமல் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அது அவர்களுக்கு அவசியம்.
அப்போதுதானே அதில் புழுதி வாரி தூற்ற முடியும். குற்றம் குறைகளைச் சொல்ல முடியும்.
செயலாற்றாமல் இருப்பதை எதுவும் செய்யவில்லை என்ற ஒரு வகையில்தான் குறை கூற முடியும்,
வேறு எந்த வகையிலும் குறை கூற முடியாது என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பவர்கள் அவர்கள்.
சிலரிடம் நல்லது என நினைத்துச் செய்து
அது தனிப்பட்ட முறையில் கெடுதலாக முடிவதன் காரணம் என்ன? என்று கேள்வி கேட்டால் அதற்கானப்
பதில்தான் மேலே விலாவாரியாக இருப்பது.
அவர்கள் மனதளவில் ஒரு முடிவு எடுத்து விட்டவர்கள்.
அவர்களிடம் எதையும் எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க முடியாதது ஒரு துர்பாக்கிய நிலைதான்.
உலகின் பிரச்சனைகளே இப்படித்தான். ஒரு மனநிலைக்கும், உண்மையான, நியாயமான வேண்டுகோளுக்கும்
இடையே நிகழும் போராட்டம்தான்.
*****