31 May 2018

பேச்சு நாடகம்


பேச்சு நாடகம்
            பேசுவதை ஓர் அபத்த நாடகம் ஆக்குகிறார்கள். அவரவர் மனநிலைக்குத் தகுந்தாற் போல் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அதை நோக்கிப் பேச்சின் போக்கையும் இழுக்கிறார்கள். அதற்காக உணர்வு ரீதியாகப் புகுந்து நெருக்கடிகளை உருவாக்கி நிர்பந்திக்கிறார்கள். இல்லையென்றால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்கிறார்கள். அதிருப்தியான முக பாவனைகள் காட்டுகிறார்கள். கோபத்தை எரிச்சலை உதிர்க்கிறார்கள். உணர்வு ரீரியாக சித்திரவதைச் செய்வதில் ஈடுபடத் துவங்குகிறார்கள்.
            உலகம் ஒரு நாடகமேடை என்கிறார் ஷேக்ஸ்பியர். ஓர் அபத்த நாடக மேடை.
            மற்றொரு வகை,
            சில பேர் இருக்கிறார்கள்! பேசிப் பேசியே வன்முறை செய்பவர்கள். இடைநிறுத்தம் இல்லாமல் மணிக் கணக்கில் பேசுவார்கள். இடையிடையே அவ்வபோது கேள்வி கேட்டு ஆழம் பார்த்து வேறு கொள்வார்கள். எல்லாம் நாடகம்தான். ஒரு கஷ்டம் என்னவென்றால் இப்போது நடந்து கொண்டிருக்கும் செத்தவர்கள் அடுத்த முறை அதே நாடகம் போடப்படும் போது அதிலும் சாக வேண்டும்.
*****
தொற்றாமல் தொற்றும் தொற்றா வியாதிகள்
            தினம் பத்து முறை முயலுங்கள் என்பார்கள். எவ்வளவு முயன்றாலும் மாதத்துக்கு ஒன்றில் தேறுவது அபூர்வம். தினம் பத்து முயற்சிகள் என்று வைத்துக் கொண்டால் மாதத்துக்கு முந்நூறு முயற்சிகள். முந்நூறுக்கு ஒன்று தேறுவது என்பது உண்மையில் பயங்கரமானதுதான். அவர்கள் அப்படித்தான் பயமுறுத்துகிறார்கள்.
            இப்படி முயன்று முயன்று சலித்துப் போக வேண்டியதுதான். நான்கு மாதங்களுக்குப் பிறகு அதை அப்படியே பின்பற்றிக் கொண்டிருந்தால் முயல்வது என்பது ஒரு வியாதியாகி விடும்.
            இது முயற்சிக்கு எதிரானதா என்றால், நமக்குப் பிடித்தமானவற்றுக்கு முயலவே வேண்டாம் என்ற உண்மைக்கு ஆதரவானது.
            இது ஒரு வகை வியாதி என்றால், மற்றொரு வகையாக, மனநிறைவு இல்லாமல் இருப்பதை மிகப் பெரிய வியாதியாகச் சொல்கிறார்கள். அதிலிருந்து உடல் வியாதிகள் தொடங்கி, சமூக வியாதிகள் வரை அனைத்து வியாதிகளும் உண்டாகின்றன என்று பிரஸ்தாபிக்கிறார்கள்.
            எளிமையான செயல்பாடு, எளிமையான எதிர்பார்ப்பு இவைகளே மனநிறைவுக்கான வழிகள். இதைச் சுருக்கமாக எளிமை என்று சொல்லலாம். விரிவாகச் சொன்னாலும் எளிமை என்றுதான் சொல்லலாம்.
            இதற்காக நிறைய செய்ய வேண்டும் என்பதில்லை, குறைவாகச் செய்தாலும் போதுமானது. அதில் மனநிறைவு என்பது முக்கியமானது. இதையெல்லாம் கணக்கிட்டு மனநிறைவோடு இருப்பதாக தோன்றுவதாக ஒருவர் கூறினால் அவர் மனநிறைவோடு இல்லை என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம். மனநிறைவோடு இருப்பவர்களுக்கு அப்படியெல்லாம் தோன்றாது. அது குறித்து எதுவும் தெரியாது. மனநிறைவோடு இருப்பவரிடம் மனநிறைவு பற்றிப் பேசினால் அவர் மனநிறைவற்றவராகி விடுவார். வியாதி அப்படி!
*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...