30 Jun 2017

ஒரு புதிய எழுத்தாளன் புறப்பட்டு விட்டான் என்பதற்கானப் பாராட்டுக் கூட்டம்!


ஒரு புதிய எழுத்தாளன் புறப்பட்டு விட்டான் என்பதற்கானப் பாராட்டுக் கூட்டம்!
            தமிழ் எழுத்தாளனான எஸ்.கே. ஆகிய எனக்கு ஒரு பாராட்டு விழா கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. அது பற்றி லோக்கல் சேனல்களிலோ, நாளிதழின் மாவட்ட மற்றும் வட்டாரச் செய்திகள் பகுதியிலோ எந்த செய்தியும் வரவில்லை.
            எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா அது. விழா ஐந்து மணிக்கு எனப் போட்டு, ஏழு மணிக்கு ஆரம்பித்ததால் வாசகர்கள் அனைவரும் சென்று விட்டார்கள்.
            பாராட்டுவதற்காக அழைக்கப்பட்ட என்னைப் போன்ற பத்து பதினைந்து எழுத்தாளர்கள் மட்டுமே இருந்தோம். விழாவை அறிவித்து விட்டு விலக்கிக் கொள்ளவோ, நிறுத்திக் கொள்ளவோ முடியாததால் வேறு வழியின்றி நடத்த வேண்டியதாகி விட்டது.
            பத்து பதினைந்து எழுத்தாளர்களும் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் பெயரை எந்தப் பத்திரிகையிலும் பார்த்ததில்லை என்று அனைத்து எழுத்தாளர்களும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
            நான் ப்ளாக்கில் எழுதுகிறேன் என்றேன். அப்படி ஒரு பத்திரிகையை அவர்கள் பார்த்ததில்லை என்றார்கள். நல்லதாகப் போய் விட்டது.
            விடைபெறும் போது, எக்காரணம் கொண்டும் எழுதுவதை மட்டும் நிறுத்தி விட வேண்டாம் என்றார்கள். நான் ஏன் நிறுத்தப் போகிறேன்? காலையில் தொடங்கி மாலை வரை அடமானம் மற்றும் வட்டிக் கணக்குகளைத் தொகுத்து எழுதினால்தான் பஜன்லால் சேட்டு பேட்டாவோடு சம்பளம் நூற்று எண்பதை எடுத்து வைப்பார்.
            அப்புறம் அந்த விழாவில் ஒரு செர்டிபிக்கேட்டும், ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். அதைப் புகைப்படம் எடுத்து ப்ளாக்கில் போட வேண்டும் என்று ஆசை. ஒரு நல்ல கேமிரா மொபைல் இல்லாததால் சாத்தியப்படவில்லை. காலம் வரட்டும், பார்த்துக் கொள்வோம்.
                                                (எஸ்.கே.யின் பயோபிக்கல் குறிப்புகள் ஒலிக்கும்...)
*****

அரிசியில் போடும் அரசியல் கணக்கு


அரிசியில் போடும் அரசியல் கணக்கு
பசித்தால் புலி
புல்லைக் கூட தின்னும்!
பசித்தால்
புழு என்ன
அரிசி என்ன
இரண்டையும் தின்பார்கள்
ஏழை மக்கள்
சிரித்துக் கொள்ளும்
ரேஷன் அரிசி!
*****

உண்மைதான்


உண்மைதான்
நாங்கள் திருடினோம் என்பது
உண்மைதான்!
ஒரு ரெளடியாகவோ
ஒரு அரசியல் கட்சிக்காரனாகவோ
ஒரு கடத்தல்காரனாகவோ
ஒரு பதுக்கல்காரனாகவோ
வருவதற்கு முன்னே
அவசரப்பட்டு திருடினோம் என்பதும்
அதனாலே மாட்டிக் கொண்டோம் என்பதும்
நீங்கள் கேள்விப்பட்ட வரையில்
உண்மைதான்!
*****

வாஞ்சை


வாஞ்சை
            பை பாஸ் சர்ஜரியைச் செய்த ரோபோவை வாஞ்சையோடு தடவிக் கொடுத்தார் ராஜநாராயணன் தாத்தா.
*****
தேவை
            மேட்ரிமோனியல் ஸைட் நடத்தும் கார்த்திக்கின் விவரம் மணமகள் தேவை விளம்பரத்தில் இருந்தது.
*****

அப்பாய்ன்மெண்ட்


அப்பாய்ன்மெண்ட்
அப்பாய்ன்மெண்ட் வாங்குவது
அவ்வளவு எளிதல்ல
என்கிறார்கள்
கடவுளைக் காண்பதற்காக
கோயிலுக்குக் செல்பவர்கள்!
*****

29 Jun 2017

எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனாகிய நான்...


எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனாகிய நான்...
            எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனாகிய நான் சொல்வதெல்லாம் சத்திய பிரமாணமான உண்மை. இனி தொடர்ந்து படியுங்கள்.
            சோம்பேறித்தனம் நல்லது. அது இருந்தால்தான் ஒத்திப்போட்டு ஓய்வெடுக்க முடிகிறது. இல்லையென்றால் சதா வேலை வேலையென்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
            குறைவாகப் படித்ததற்கும், எழுதியதற்கும் அது ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இல்லாது போனால்... நிலைமையை நினைக்கவே சங்கடமாக இருக்கிறது. நான்கு சாகித்திய அகாதெமிகளும், ரெண்டு புலிட்சரும், ஒரு நோபெலும் மடியில் வந்து விழுந்து எத்தனை எழுத்தாளர்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதிக்க நேர்ந்திருக்கும்!
            அது எப்படி ஒரு எழுத்தாளன் சோம்பேறித்தனத்தை ஆதரிக்கலாம்? அதை ஆதரித்து எழுதலாம்? என்று நீங்கள் கேட்கலாம். இந்தச் சோம்பேறித்தனம் இல்லாவிட்டால் நீங்கள் படிக்க வேண்டிய எழுத்துகள் கூடிப் போயிருக்கும். அது உங்களுக்கு சம்மதந்தானா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
            அது எப்படியோ? சுறுசுறுப்பாகத் தோன்றும் வேளையில் எழுந்து, நடந்து சாப்பாட்டு வேளைகளை முடித்து விடுவேன். அதற்குள் சோம்பேறித்தனம் தோன்றி விட்டால் அப்புறம் நாள் முழுவதும் பட்டினியில் முடிந்து விடும். நல்ல வேளையாக சோம்பேறித்தனம் மனதுக்குள் சம்பவிப்பதற்குள் எழுத உட்கார்ந்து விடுவேன். தூக்கம் தானாக வந்து விடும். ஒரு தூக்கம் போட்டு எழுந்தால், நிச்சயம் மறுநாள் எழுதி முடித்து விடலாம் என்று மனதுக்குள் எழும் நம்பிக்கை இருக்கிறதே, அந்த இடம்தான் ஒரு எழுத்தாளனாக தன்னம்பிக்கையோடு நான் இருப்பதற்குக் காரணம்.
                                                (குறிப்புகள் அவ்வபோது விட்டு விட்டுத் தொடரும்...)
*****

இரு கைகள்


இரு கைகள்
இரு கைகளின் பயனை
அப்போதுதான் புரிந்து கொண்டான்
காதலைச் சொல்ல
ஒரு கையில் ரோஜாவையும்
இன்னொரு கையில் ஆசிட் பாட்டிலையும்
வாங்கிய அவன்!
*****

சுடும்


சுடும்
வெயில் சுடும் என்பது
ஏசி காரில் செல்பவனுக்குப் புரியாது
நெருப்பைப் பற்ற வைப்பது
குறித்து இன்டக்சன் ஸ்டவ்வில்
சமைப்பவளுக்கு எப்படித் தெரியும்?
சாக்கடை நீரில் விளைந்த நெல்லை
அவித்து பட்டைத் தீட்டிக் கொடு
நா ருசிக்க தின்று விட்டு
இன்னும் வேண்டும் என்று கேட்பார்கள்!
காவிரித் தண்ணீரைப் பற்றி
மூச்சு விடாதே
மேலிடத்தில் இருப்பவர்கள் கோபப்பட்டால்
வாடிப் பொசுங்கும் உன் பயிர் போல்
போசுங்கிப் போய் விடுவாய்!
*****

கடலை மன்னன்


உள்ளிருப்பு
            "இப்போல்லாம் அடிக்கடி வெளியில பார்க்க முடியலியே!" என்று விசாரித்த ரகுபதியிடம், சிரித்துக் கொண்டே சொன்னார் வெங்கடாச்சலம், "இப்போ சுகர் கொஞ்சம் கன்ட்ரோல்ல வந்துடுத்து அதான்!"
*****
கடலை மன்னன்
            மனைவியிடம் பேச நேரமில்லை என்று அவசர அவசரமாகக் கிளம்பிய கதிர் வாட்ஸ் அப்பில் யார் யாரோடு கடலை போட்டுக் கொண்டிருந்தான்.
*****
எலினேஷன்
            "சீக்கிரமே எலிமினேட் ஆனா தேவல. ஓவர் ஆக்டிங் பண்ண முடியல!" சோர்ந்து போனாள் சூப்பர் உமன் புரோகிராமில் கலந்து கொண்ட உமா.
*****

நூறு ரூபாய் நோட்டு


நூறு ரூபாய் நோட்டு
அவரைப் பற்றித்
தவறான செய்தியைச் சொல்லி விட்டு
இளித்தவன் எதிர்பார்த்தது
ஒரு நூறு ரூபாய் நோட்டு!
******

28 Jun 2017

எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனின் நாட்குறிப்பிலிருந்து...


எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனின் நாட்குறிப்பிலிருந்து...
            ஒரு தமிழ் எழுத்தாளனின் இருப்பு அவனை அளவுக்கதிமாக புகழ்ந்து தள்ளும் நான்கைந்து பேர்களால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தப் புகழ்ச்சியில் அதுவரை அவனைக் கண்டுகொள்ளாத நானூறு பேர்களின் புறக்கணிப்பும், இகழ்ச்சியும் மறைந்து போய் விடுகிறது.
            அவன் மறைவுக்குப் பின் ஏழெட்டுப்  பேர்கள் மிகையாகப் புகழ்ந்து கவிதை பாடுவார்கள். அத்தோடு அவன் ஆன்மா அமைதி கொள்ள வேண்டும்.
            தமிழ்நாட்டில் பிறந்த எழுத்தாளனுக்கு பசி, பட்டினி, வறுமை ஆகியன விடிமோட்சமாகி அவைகள் அவனுக்கு கபால மோட்சம் வழங்கிய பிறகுதான் சாஷ்டாங்கமாய் கிடைப்பன கிடைக்கும். அவன் ஆவியாய் அலைந்து திரிந்து அந்தப் பலன்களை அனுபவித்துக் கொள்ள வேண்டியதுதான்.
                                                (குறிப்புகள் அவ்வபோது விட்டு விட்டுத் தொடரும்...)
*****

வெளியெங்கும்... காணினும்...


வெளியெங்கும்... காணினும்...
பிரிவதற்கு முன்
எடுத்துக் கொண்டு செல்பி
அத்தனை கண்ணீரையும்
உடைத்துக் கொண்டு வெளியே வந்தது!
கடைசி வாட்ஸ் அப் மெசேஜ்
அவன் தற்கொலை செய்து கொள்வான் என்பதை
அவ்வளவு உறுதியாகச் சொல்லவில்லை!
பேஸ்புக்கில் பதிவிட்டப் பின்
காண்டம் வாங்கச் சென்றவன்
வீரிய மருந்துகள் பற்றி
கூகுளில் தேடியிருந்தான்!
அவளை டிவிட்டரில் பாலோ செய்தவன்
முகத்தில் ஆசிட் வீசி முடித்தான்!
ஐபேடில் பாட்டுக் கேட்டுக் கொண்டு
செல்பவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கிறார்கள்!
டாஸ்மாக்கில் குடித்து விட்டு
எலைட் பாரை ஏக்கமோடு பார்த்துக் கொண்டிருந்தவன்
குறுஞ்செய்தி அனுப்பியிருந்த
மொபைல் கம்பெனிக்காரனை கன்னாபின்னாவென்று
திட்டிக் கொண்டிருந்தான்!
இவைகள் ஏதும் அற்ற ஒருவன்
வீடுகள் மூடுவதற்கு முன்
இரவு நேர பிச்சையைப் பெற்று விடும்
துடிப்பில் விரைந்து கொண்டிருந்தான்!
******

கீழும் மேலும்


கீழும் மேலும்
காடு கீழே இருந்தது
வெட்டித் தீர்த்தார்கள்!
நல்ல வேளை வானம் மேலே இருந்தது
எதுவும் செய்யாமல்
விட்டு விட்டார்கள் மேகத்தை!
******

அடி தாங்குதல்


உண்மை
            "நாட்டுல நல்லவங்க இருந்தாத்தானேடா மழை பெய்யும்!" உண்மையைப் பொட்டென்று போட்டு உடைத்து மெளனமானார் தலைவர் வீரபாண்டியன்.
*****
காத்திருப்பு
            "பத்து நிமிஷத்துல வந்திடறேன்!" என்று காத்திருக்கச் சொல்லி விட்டுச் சென்ற ஆதவனுக்காக பத்து வருடங்களாக காத்திருக்கிறாள் கார்த்தியாயினி.
*****
அடி தாங்குதல்
            ஹோம் ஒர்க் செய்யவில்லை என்று ஆசிரியர் அடித்த அத்தனை அடிகளையும் அசால்ட்டாக தாங்கிக் கொண்டான் ஸ்டன்ட் மாஸ்டரின் மகன்.
*****

அழுக்காக்கும் பொழுதுபோக்கு!


அழுக்காக்கும் பொழுதுபோக்கு!
கூவம் இப்படி ஆகும் என்று
அவர்களுக்குத் தெரியும் என்றார்கள்!
அவர்களுக்கென்ன?
அவர்கள் விவசாயம் செய்யப் போவதில்லை
தின்று தின்று பிதுக்கத்தான் போகிறார்கள்
அவர்களின் தாகம் தீர்க்க
தண்ணீர் ரயிலிலும் வரும், கப்பலிலும் வரும்!
மாசுபடும் நீரை சுத்தமாக்கிக் கொள்வார்கள்!
குண்டி கழுவும் நீரும்
சுத்தகரிக்கப்பட்டால் குடிநீராகி விடும்!
நாம்தான் நதிகளைப் பாதுகாக்க வேண்டும்
நல்ல நீரில் விவசாயம் செய்து
நல்ல நெல்லை அவர்களுக்கு அளிக்க வேண்டும்!
நல்லது என்பது அவர்களுக்குப் புரியாது என்பதால்
நாம் அவர்களிடம் அது குறித்துப் பேச வேண்டாம்!
சுத்தகரித்து சுத்தகரித்து அழுக்காக்குவது
அவர்களுக்கு அலாதியான பொழுதுபோக்கு!
******

27 Jun 2017

மார்க்ஸூக்குப் பிடித்த குறள்


மார்க்ஸூக்குப் பிடித்த குறள்
            அன்புத் தம்பி பிரபாகரனிடம் பேசிக் கொண்டிருந்தேன். திருக்குறளில் கம்யூனிசக் கருத்துகள் இருக்கின்றன என்றார்.
            எனக்கு ஆர்வம் தொற்றிக் கொண்டு விட்டது. "எந்த இடத்தில்?" என்றேன்.
            "எந்த இடத்துலன்னு தெரியல, கேள்விப் பட்டிருக்கிறேன்!" என்றார் பிரபாகரன்.
            "சரி! கண்டுபிடித்து சொல்லுங்க!" என்றேன்.
            அவருக்கு முன் நான் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு.
            அநேகமாக, அது,
            "பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
            தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"         - 322
                        என்ற குறளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். பிரபாகரன் கண்டுபிடித்துச் சொன்னால் அதையும் பதிவிடுகிறேன்.
            எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற கருத்தைச் சொல்லும் இக்குறள் கார்ல் மார்க்ஸூக்கு உவப்பான குறளாக இருப்பதோடு, பல்லுயிர் பெருக்கம் பேசும் சூழலியல்வாதிகளுக்கும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் நெருக்கமான குறளாகவும் இருக்கும் என்று நினைக்கிறேன்.
            உங்கள் கருத்துகளையும் நீங்கள் பதியலாம்!
*****

வீக்கத்தின் வளர்ச்சி


பிரக்ஞை
இறந்துப் போன தாத்தாவுக்காக
அழும் பிரக்ஞையில் இல்லை
பாட்டி!
******

வீக்கத்தின் வளர்ச்சி
வளர்ந்த நகரத்தின் அடையாளம்
சுரங்கப் பாதை என்றார்கள்!
அங்கும் நான்கு பிச்சைக்காரர்கள்
மூலைக்கு ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்!
கண்ணில்லாதவர்கள் பட்ஸ்களும்
கால் இல்லாதவர்கள் ஊக்குகளும்
விற்றுக் கொண்டிருந்தார்கள்!
நகரம் வளர்ந்து விட்டதுதான்
பெரிய மாளிகையில் இடம் இல்லாமல்
ப்ளாட்பாரம் வரை மக்கள் வசிக்கும் அளவிற்கு!
******

ஆற்றாயோ தலைவி!


ஆற்றாயோ தலைவி!
தந்தையும் தாயும் வெளியில் சென்று விட்ட
தலைவி தனித்திருந்த இல்லத்தின்
ஒரு பொழுதில்
பசும்பாசிகள் அப்பிக் கிடந்த
ஏறிக் குதித்த சுவரைக் காறி உமிழ்ந்து விட்டு
சப்போட்டா பழம் போல்
துரு பிடித்துக் கிடந்த முன்கேட்டின் வழியே
பித்த நரையின் நிறமொத்த
மல்லிகையோடு சென்ற தலைவனை
காண்டம் வாங்கி வராததற்காய்த்
திட்டித் தீர்த்தாள்
நெடுநாளாய் மாயத்திரையில்
களவு வளர்த்து கனவு கண்டு
காக்கையைச் சுடும் குறவன் போல்
காலம் பார்த்திருந்த தலைவி
தன் ஆற்றாமை தீராதவளாய்!
******

நீதி மனு


நீதி மனு
            நீதி வேண்டும் என்று வழக்குத் தொடங்க வழக்கறிஞர் உருவாக்கிய மனு முழுவதும் பொய்யாக இருந்தது.
*****
தண்ணீர்! தண்ணீர்!
            தண்ணீர் லாரி வந்து விட்டதென்று நான்கைந்து குடங்களோடு அடித்துப் பிடித்து ஓடினாள் மினரல் வாட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் நாகம்மா.
*****
தண்ணிப் பஞ்சம்
            "தட்டுபாடில்லாம தண்ணி விநியோகம் பண்ணுவேன்னு, சொல்லியே கவுன்சிலர் ஆகிடலாம்!" என்று விஷமமாய்ச் சொல்லி கண் சிமிட்டினார் குவார்ட்டர் பாட்டிலை ஆளுக்கொன்றாய் எடுத்துக் கொடுத்த சாரங்கபாணி.
*****

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...