29 Jun 2017

எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனாகிய நான்...


எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனாகிய நான்...
            எஸ்.கே. எனும் தமிழ் எழுத்தாளனாகிய நான் சொல்வதெல்லாம் சத்திய பிரமாணமான உண்மை. இனி தொடர்ந்து படியுங்கள்.
            சோம்பேறித்தனம் நல்லது. அது இருந்தால்தான் ஒத்திப்போட்டு ஓய்வெடுக்க முடிகிறது. இல்லையென்றால் சதா வேலை வேலையென்று ஓடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது.
            குறைவாகப் படித்ததற்கும், எழுதியதற்கும் அது ஒரு காரணமாக இருந்திருக்கிறது. இல்லாது போனால்... நிலைமையை நினைக்கவே சங்கடமாக இருக்கிறது. நான்கு சாகித்திய அகாதெமிகளும், ரெண்டு புலிட்சரும், ஒரு நோபெலும் மடியில் வந்து விழுந்து எத்தனை எழுத்தாளர்களின் வயிற்றெரிச்சலைச் சம்பாதிக்க நேர்ந்திருக்கும்!
            அது எப்படி ஒரு எழுத்தாளன் சோம்பேறித்தனத்தை ஆதரிக்கலாம்? அதை ஆதரித்து எழுதலாம்? என்று நீங்கள் கேட்கலாம். இந்தச் சோம்பேறித்தனம் இல்லாவிட்டால் நீங்கள் படிக்க வேண்டிய எழுத்துகள் கூடிப் போயிருக்கும். அது உங்களுக்கு சம்மதந்தானா என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.
            அது எப்படியோ? சுறுசுறுப்பாகத் தோன்றும் வேளையில் எழுந்து, நடந்து சாப்பாட்டு வேளைகளை முடித்து விடுவேன். அதற்குள் சோம்பேறித்தனம் தோன்றி விட்டால் அப்புறம் நாள் முழுவதும் பட்டினியில் முடிந்து விடும். நல்ல வேளையாக சோம்பேறித்தனம் மனதுக்குள் சம்பவிப்பதற்குள் எழுத உட்கார்ந்து விடுவேன். தூக்கம் தானாக வந்து விடும். ஒரு தூக்கம் போட்டு எழுந்தால், நிச்சயம் மறுநாள் எழுதி முடித்து விடலாம் என்று மனதுக்குள் எழும் நம்பிக்கை இருக்கிறதே, அந்த இடம்தான் ஒரு எழுத்தாளனாக தன்னம்பிக்கையோடு நான் இருப்பதற்குக் காரணம்.
                                                (குறிப்புகள் அவ்வபோது விட்டு விட்டுத் தொடரும்...)
*****

No comments:

Post a Comment

What if the scale itself is wrong?

What if the scale itself is wrong? The period between 2000 and 2024 can be referred to as the period in which many changes took place in s...