30 Jun 2017

ஒரு புதிய எழுத்தாளன் புறப்பட்டு விட்டான் என்பதற்கானப் பாராட்டுக் கூட்டம்!


ஒரு புதிய எழுத்தாளன் புறப்பட்டு விட்டான் என்பதற்கானப் பாராட்டுக் கூட்டம்!
            தமிழ் எழுத்தாளனான எஸ்.கே. ஆகிய எனக்கு ஒரு பாராட்டு விழா கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. அது பற்றி லோக்கல் சேனல்களிலோ, நாளிதழின் மாவட்ட மற்றும் வட்டாரச் செய்திகள் பகுதியிலோ எந்த செய்தியும் வரவில்லை.
            எழுத்தாளர்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விழா அது. விழா ஐந்து மணிக்கு எனப் போட்டு, ஏழு மணிக்கு ஆரம்பித்ததால் வாசகர்கள் அனைவரும் சென்று விட்டார்கள்.
            பாராட்டுவதற்காக அழைக்கப்பட்ட என்னைப் போன்ற பத்து பதினைந்து எழுத்தாளர்கள் மட்டுமே இருந்தோம். விழாவை அறிவித்து விட்டு விலக்கிக் கொள்ளவோ, நிறுத்திக் கொள்ளவோ முடியாததால் வேறு வழியின்றி நடத்த வேண்டியதாகி விட்டது.
            பத்து பதினைந்து எழுத்தாளர்களும் எங்களுக்குள் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக் கொண்டோம். என் பெயரை எந்தப் பத்திரிகையிலும் பார்த்ததில்லை என்று அனைத்து எழுத்தாளர்களும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.
            நான் ப்ளாக்கில் எழுதுகிறேன் என்றேன். அப்படி ஒரு பத்திரிகையை அவர்கள் பார்த்ததில்லை என்றார்கள். நல்லதாகப் போய் விட்டது.
            விடைபெறும் போது, எக்காரணம் கொண்டும் எழுதுவதை மட்டும் நிறுத்தி விட வேண்டாம் என்றார்கள். நான் ஏன் நிறுத்தப் போகிறேன்? காலையில் தொடங்கி மாலை வரை அடமானம் மற்றும் வட்டிக் கணக்குகளைத் தொகுத்து எழுதினால்தான் பஜன்லால் சேட்டு பேட்டாவோடு சம்பளம் நூற்று எண்பதை எடுத்து வைப்பார்.
            அப்புறம் அந்த விழாவில் ஒரு செர்டிபிக்கேட்டும், ஒரு புத்தகமும் கொடுத்தார்கள். அதைப் புகைப்படம் எடுத்து ப்ளாக்கில் போட வேண்டும் என்று ஆசை. ஒரு நல்ல கேமிரா மொபைல் இல்லாததால் சாத்தியப்படவில்லை. காலம் வரட்டும், பார்த்துக் கொள்வோம்.
                                                (எஸ்.கே.யின் பயோபிக்கல் குறிப்புகள் ஒலிக்கும்...)
*****

No comments:

Post a Comment

வாழ்க்கை முறையை மாற்றும் போது கிடைக்கும் தீர்வுகள்!

வாழ்க்கை முறையை மாற்றும் போது கிடைக்கும் தீர்வுகள்! சமுத்திரா பள்ளிக்கு எடுத்துச் செல்லும் தண்ணீர் புட்டியில் பாதி தண்ணீரைத்தான் குடித்திர...