31 Mar 2025

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு

அவசரப்பட முடியாது

நிதானமாகச் செல்ல வேண்டும்

பல நேரங்களில் பிடிபடிவதற்குப்

பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்

அதிகம் அடைய வேண்டும் என்று

ஆசை கொண்டு விட முடியாது

கிடைப்பது கொஞ்சமானாலும் அதில்

மகிழத் தெரிந்திருக்க வேண்டும்

எதிர்பார்க்கக் கூடாது என்பதல்ல

அது எவ்வளவு அளவோடு இருக்க வேண்டும் என்பதை

எப்போதும் புரிந்திருக்க வேண்டும்

கிடைக்கும் வெற்றிகளுக்காக மட்டுமல்லாது

தோல்விகள் கொண்டு வரும் அனுபவங்களுக்காகவும்

மகிழத் தெரிந்திருக்க வேண்டும்

சாதனைகளோ வேதனைகளோ

நம் கைகளில் கொஞ்சம் இருப்பது போக

நம் கைகளில் மட்டுமே எல்லாம் இல்லை என்கிற

தெளிவு எப்போதும் இருக்க வேண்டும்

நம்மளவில் நாம் முழுமையாக இருந்தாலும்

மொத்தத்தில் நாம் ஒரு பாகம் என்பதை மறந்து விடக் கூடாது

நாம் எதைக் கொண்டு வந்து சேர்ப்போம்

நம்மிடம் எது கொண்டு வந்து சேர்க்கப்படும் என்பது

எப்போதும் புதிரானது

எதற்காக நாம் எப்படி வினை புரிவோம் என்பது

நம்மால் அறிய முடியாது

அறிய வேண்டும் என்று பிரியப்படும் நாம்

காத்திருக்க வேண்டும்

ஒரு நாள் எல்லாம் தெரிய வரும்

நாம் அவ்வளவு துடித்திருக்க வேண்டாம் என்பது புரிய வரும்

காலத்தின் முன்னர் சென்று

இனி நாம் எதை மாற்ற முடியும்

வேறு வழி இல்லாத போது

நாம் நம் ஞானத்தை எல்லாருக்கும் அளிக்கலாம்

அதை எத்தனை பேர் எடுத்துக் கொள்வார்கள்

எத்தனை பேர் கண்டு கொள்ளாமல் இருப்பார்கள் என்பதல்ல

எடுத்துக் கொள்ள ஒருவர் நினைக்கும் போது

அது அங்கிருக்க வேண்டும்

அதைத் தவிர உங்கள் ஞானத்தால்

இந்த உலகை எதுவும் செய்ய முடியாது

அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கும்

*****

22 Mar 2025

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு!

நம்பியோர் நன்றாக இருந்ததில்லை! ஐந்து வருட தீர்ப்பு!

“ஐயா அரச லிமிடெட் ஊழியர்கள் மற்றும் வாத்தியார்கள் வந்திருக்கிறார்கள்.”

“என்னவாம்?”

“எதாவது செய்ய வேண்டுமாம்.”

“நான்கு வருடத்தில் என்ன செய்திருக்கிறோம்.”

“ஒன்றுமில்லை.”

“பிறகு என்ன நம்பிக்கையில் வந்தார்களாம்?”

“ஐந்தாவது வருடத்திலாவது எதாவது

“நான்கு வருடமாக என்ன செய்தோமோ அதுதான் இந்த வருடத்திற்கும் என்று போய் சொல்லுங்கள்.”

“ஐயா”

“என்னய்யா அய்யா கொய்யாவென்று. ஆட்சியில் இருக்கும் வரை எப்போதும் இப்படித்தான் என்று போய்ச் சொல்லுங்கள். ஆட்சியில் இல்லாவிட்டால் வேண்டுமானால் கொடுப்பது பற்றிப் பரிசீலிப்போம் என்று சொல்லுங்கள்.”

*****

21 Mar 2025

புரிதல்

புரிதல்

உங்களைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை என்கிறாள் மனைவி.

உனக்குமா என்கிறேன்.

உனக்குமா என்றால் என்ன அர்த்தம் என்று முறைக்கிறாள்.

எனக்கும்தான் என்கிறேன்.

புன்முறுவல் பூக்கிறாள்.

*****

“என்னய்யா எழுதுகிறீர்கள். ஒன்று கூட புரிய மாட்டேன்கிறது.”

“உங்களுக்குமா?”

“எனக்கும்தான். என்ன செய்வது? ஒன்றாம் வகுப்பில் எழுத ஆரம்பித்த போது அதைப் பார்த்த ஆசிரியர் தலைதெறிக்க ஓடியவர்தான். அவரைப் பார்க்கும் பாக்கியமே இல்லாமல் போய் விட்டது. 

நீங்கள் பரவாயில்லை வாசித்துப் பார்த்திருக்கிறீர்கள். புரியாமல் போவதற்கு யார் என்ன செய்ய முடியும்? கடவுள் விட்ட வழி.

கடவுள் மேல் பாரத்தைப் போட்டு அடுத்த பத்திக்குச் செல்லுங்கள். அதுவாவது புரிகிறதா என்று பாருங்கள். இப்படியே போய்க் கொண்டிருங்கள். பத்து நாட்களுக்குள் பழகி விடும்.”

*****

எளிமையாக எழுதினால்

எளிமையாகப் புரிந்து கொள்ள முடியும்

என்றா நினைக்கிறீர்கள்

அது

எளிமையாகப் புரிந்து கொள்வதில் இருக்கிறது

எழுத்தாளர்களை எளிமையை நோக்கி

வரச் சொல்லக் கூடாது

வாசகர்கள்தான்

தங்களைச் சுலபமாக்கிக் கொள்ள வேண்டும்

*****

20 Mar 2025

நூற்றாண்டு தமிழ் சினிமா!

நூற்றாண்டு தமிழ் சினிமா!

அப்பன் ஆத்தாளுக்கு அடங்காத பிள்ளைகள் தமிழ் சினிமாவில் அதிகம்

அந்தப் பிள்ளைதான் கதை நாயகன்.

அந்த நாயகன் மீது அழகான பெண்ணுக்குக் காதல் வருவதுதான் தமிழ் சினிமா.

அந்தத் தமிழ் சினிமா இப்படி ஆரம்பித்து இப்படி தொடரும்.

செருப்பு பிய்ந்து விடும் என்பது முதல் வசனம்

பிய்ந்த செருப்பையா போட்டிருக்கிறாய் என்பது இரண்டாவது வசனம்

அதற்கு மேல் பாட்டு வந்து விடும், ஒட்டிக்கவா கட்டிக்கவா என்று

ஏது பிய்ந்த செருப்பையா என்று புலம்பிக் கொண்டே கேட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

*****

19 Mar 2025

சிங்கத்திற்கு நேர்ந்த அசிங்கம் – நவீன பஞ்ச தந்திரக் கதை

சிங்கத்திற்கு நேர்ந்த அசிங்கம் – நவீன பஞ்ச தந்திரக் கதை

ஒரு சிங்கத்தின் போதாத காலம்.

பேச்சாளனைக் கொன்று தின்ன பார்த்தது.

கடைசி ஆசையென அந்தப் பேச்சாளன் அதனிடம் ஒரு மணி நேரம் பேச அனுமதி கேட்டான்.

தொலைந்து போகிறான் என சிங்கமும் அனுமதித்தது. அதுதான் அதன் போதாத காலம்.

பேச்சாளன் பேச ஆரம்பித்தான்.

பத்து நிமிடத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் மண்டையைப் போட்டது சிங்கம்.

இதிலிருந்து அறியப்படும் நீதி :

ஒருவரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முயலும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் உயிர்போகும் அளவுக்கு அவஸ்தையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் உயிரும் போனாலும் போய் விடும்.

*****

18 Mar 2025

விண்ணை முட்டிய மரங்களின் ஆர்ப்பாட்ட முழக்கம்!

விண்ணை முட்டிய மரங்களின் ஆர்ப்பாட்ட முழக்கம்!

நல்ல வெயில்.

சாலையில் நடந்து கொண்டிருந்தேன்.

அவ்வளவு வெப்பத்தையும் பாவம் காலணி வாங்கிக் கொண்டு வெந்து போய் துடித்துக் கொண்டிருந்தது. காலணியை நினைக்கப் பாவமாக இருந்தது.  அடுத்த முறையாவது காலணிக்கு ஒரு காலணி வாங்கிப் போட வேண்டும். பாவம் அதுதான் எத்தனை நாட்கள் வெயிலிலேயே நடந்து கொண்டிருக்கும்?

தாளாத வெயிலிலும் சாலையோரம் இருந்த மரங்கள் பச்சையத்தைப் பயன்படுத்தி, சூரிய வெப்பம் வீணாகாதவாறு உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தன.

நூறு நாள் வேலையைப் பத்து நிமிடம் பார்த்த அசதியில் வீரதீரப் பணியாளர்கள் மரங்களின் அடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கான மதிய உணவை குப்ளான் மளிகைக் கடையில் வாங்கிய பொருட்களைப் பயன்படுத்தி திரவாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி – இண்டேன் பிரிவு) வீணாகாத வண்ணம் ஒண்டியப்பன் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் பணியாளர் நஞ்சப்ப தம்புரான் தயாரித்துக் கொண்டிருந்தார்.

திடீரென மரங்களின் அடியில் தங்கள் கடமையை இம்மிப் பிசகாமல் செய்து கொண்டிருந்த முன்களப் பணியாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். சாலையோரங்களில் இருந்த மரங்கள் நடுசாலையில் நகர்ந்து வந்து சாலை மறியல் செய்து கொண்டிருந்தன.

எங்களுக்கும் விலையில்லா உணவுப்பொருள் வழங்க வேண்டும். மரங்களின் முழக்கம் விண்ணை முட்டியது.

*****

17 Mar 2025

வீரப்ப தக்கம்!

வீரப்ப தக்கம்!

சப்பாத்தி எப்படி என்கிறாள் மனைவி.

நன்றாக இல்லை என்றா சொல்ல முடியும்.

பிரமாதம் என்கிறேன்.

இன்னொரு சப்பாத்தி வந்து விழுகிறது தட்டில்.

இப்படியாகத் தலையில் வந்து விழ வேண்டிய சப்பாத்தி அல்லது பூரிக் கட்டையிலிருந்து தப்பிக்கிறேன்.

பர்மிய ராணுவம் என் வீர தீர சாகசச் செயலுக்காக மார்பில் வீரப்பதக்கம் அணிவிக்கிறார்கள்.

அவ்வபோது தூக்கம் வராத இரவுகளில் அந்த வீரப்பதக்கத்தை ரகசியமாக எடுத்துப் பார்த்து கொண்டு சந்தோசப்படுகிறேன்.

இன்னும் தூங்கவில்லையா என்ற மனைவியின் அதட்டல் கேட்கிறது.

கனவில் விழித்து விட்டேன் என்று பணிவுடன் தூங்கத் தயாராகிறேன்.

கொசு ஒன்று கடித்துக் குதறி விட்டுப் போகிறது.

ஓசைபடமால் ஒரு கையில் அடித்ததில் ரத்தம் கக்சிச் சாகிறது கொசு.

கொசுவுக்கு வீர மரணம்.

அடுத்த வீரப்ப தக்கம் கொசுவுக்குத்தான்.

அட வீரப்ப தக்கம் தெரியாதா உங்களுக்கு?

வீரப்பதக்கம் என்பதை வீரப்பதக்கம் என்றும் சொல்லாம், வீரப்ப தக்கம் என்றும் சொல்லாம்.

*****

16 Mar 2025

மழையைக் கண்டு ஓடும் மனிதர்கள்!

மழையைக் கண்டு ஓடும் மனிதர்கள்!

மழையென்பது என்ன?

தண்ணீர்த் துளிகளின் கூட்டம்.

கூட்டமாக வந்தால் மதிப்பு இருக்கிறது.

மழையைப் பார்த்த்தும் மக்கள் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

சாலையில் ஓடிய மக்களை விரட்டி விட்டு, இப்போது மழைநீர் ஓடுகிறது.

இன்னும் கொஞ்சம் தண்ணீர்க் கூட்டம் ஜாஸ்தி என்றால் அதை வெள்ளம் என்கிறார்கள்.

தண்ணீர்த் துளிகளின் வெள்ளக் கூட்டம் வீடு தேடி வந்தால் மக்கள் வீட்டை விட்டே ஓடுகிறார்கள்.

படகுகளில் ஏறி தண்ணீர் கூட்டத்தின் தலை மேல் சவாரி செய்து, தண்ணீர் கூட்டம் தட்டுப்படாத மேட்டுப்பகுதிக்கு ஓடுகிறார்கள்.

நாம் கடலுக்குப் பயப்படுவதேன்? அங்கு தண்ணீர் துளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

ஏரியிலும் குளத்திலும் கூட தண்ணீர் துளிகளின் கூட்டம் உள்ளது.

கூட்டம் என்றாலே மானுட சமூகத்துக்குப் பயம் உள்ளது.

அதனால்தான் தண்ணீர்த் துளிகளின் கூட்டத்தைக் குறைத்துத் தம்பளரிலோ, கூஜாவிலோ வைத்துப் பருகுகிறோம். அதில் ஓர் ஆனந்தம். “மழையாய், வெள்ளமாய் வந்து பயமுறுத்தல் செய்தாயே! பார்த்தாயா இப்போது உன்னைச் சீசாவில் அடைத்து விழுங்குகிறேன்” என்று.

தலைக்கு மேல் தண்ணீர்த் துளிகளின் கூட்டம் போனால் சாணென்ன? முழமென்ன? என்பாள் என் எள்ளுப் பாட்டி, கொள்ளுப்பாட்டிக் காலத்திலிருந்து தற்போது உள்ள பாட்டி வரை.

ஊழிக்காலம் என்பது தண்ணீர்த் துளிகளின் பெருங்கூட்டம் என்கிறார்கள். அந்தக் கூட்டம் வரும் போது அதற்குள் மானுட சமூகத்தின் கூட்டம் அடங்கிப் போய் விடுமாம்.

நிலவுக்கோ, பிற கிரகத்துக்கோ ஊழிக்காலம் வரப்போவதில்லை. அங்கு தண்ணீர் இல்லை.

இந்தத் தண்ணீர்த் துளிகளின் புரட்சிக் கூட்டத்தை எதிர்த்துதான் கருப்புக் குடை பிடித்து சிலர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

தண்ணீர்த் துளிகளின் கூட்டம் காற்றோடு கூட்டணி சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றோடு கூட்டணி அமைந்து விட்டால் வானிலை ஆய்வு மையம்தான் அந்தக் கூட்டணி குறித்த கருத்துக் கணிப்புகளைக் கூற முடியும்.

காற்றோடு கூட்டணி அமைக்கும் தண்ணீர்த்துளிகளின் கூட்டணிக்குப் புயல், சூறாவளி என பல நாமகரணங்கள்.

ராணுவம், துப்பாக்கிகள், பீரங்கிகள் இருந்தாலும் காற்று மற்றும் தண்ணீர்த் துளிகளின் கூட்டணிக்கு அடிபணியத்தான் வேண்டியிருக்கிறது. பேரிடர் மீட்புப் படை என்று வைத்திருக்கிறோமே, அதைக் கொண்டு துப்பாக்கிச் சூட்டையெல்லாம் நடத்தி விட முடியாது.

தண்ணீர்த்துளிகளின் கூட்டம் மிகுந்த ஜனநாயகத் தன்மையோடு அகிம்சை வழிமுறையோடு போராடும். அதன் போராட்டத்துக்கு ஒதுங்கிச் செல்வது அல்லது விலகி ஓடுவதுதான் நல்லது.

நம்மை விட வலிமை குறைந்த்து என்றாலும் மீன்கள் தண்ணீர்த்துளிகளின் கூட்டத்தைச் சமாளிக்கும். மீனுக்கு இருக்கும் கொடுப்பினை மனிதப் பிறவிகளுக்கு இல்லை.  

தண்ணீர்த்துளிகளின் கூட்டம் மீன்களைத் தன்னுடைய பிரஜையாகச் சேர்த்துக் கொள்கிறது. மனிதர்களைச் சேர்த்துக் கொள்வதில்லை. மனிதன் பாவம். கோபம் வந்தால் ஒரு பாட்டில் தண்ணீர் குடித்து அகந்தையை அகற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் பிரியாவிட்டால் டயாலிஸிஸ் என்பதெல்லாம் ரொம்ப கஷ்டம்.

*****

15 Mar 2025

2X வீரிய கவிதை!

2X வீரிய கவிதை!

ஐயா உங்கள் கவிதையைத் ‘தினப்புயலில்’ பார்த்தேன்.

‘தினப்புயல்’ ஒரு நாளிதழ்.

வாய்ப்பில்லையே என்றேன்.

பிறகெப்படி என் கண்களில் பட்டது என்றார்.

எங்கே கவிதையைச் சொல்லுங்கள் என்றேன்.

‘குண்டுவீச்சில் 12 பேர் பலி’ என்ற தலைப்புச் செய்தியை ஒவ்வொரு வார்த்தையாகச் சொன்னார்.

அவர் கையைக் குலுக்கினேன்.

நன்றி என்று சொல்லி விட்டு நகர்ந்து விட்டேன்.

‘குண்டுவீச்சில் 12 பேர் பலி’ என்பது நான் எழுதிய கவிதை என்று அவர் எப்படி அவ்வளவு உறுதியாக நம்புகிறார்?

கவிதையைக் குண்டாகக் குழப்பிக் கொள்பவர்கள் நாட்டில் அதிகம் என்ற முடிவுக்கு வந்தேன்.

இதை ஒரு கவிஞர்தான் எழுதியிருக்க முடியும் என்ற முடிவுக்கு அவர் எப்படி வந்தார் என்ற கேள்விக்கு மட்டும் விடை காண முடியாமல் போய் விட்டது.

கவிஞர்கள் இரங்கற்பா எழுதுவார்கள். மரணத்தையுமா எழுதுவார்கள்?

இருந்தாலும் ஒரு வாசகனின் நம்பிக்கையைப் பொய்யாக்கக் கூடாது என்று, அதை விட இரண்டு மடங்கு சக்திவாய்ந்த வீரிய கவிதை வந்தனம் எழுத ஆரம்பித்தேன்.

“கவிதை

படித்து

24 பேர்

பலி.”

*****

புத்தரின் ஞானமும் அவரது இரு சங்கங்களும்!

புத்தரின் ஞானமும் அவரது இரு சங்கங்களும்!

ஆசையே துன்பங்களுக்குக் காரணம் என்பதை கௌதம சித்தார்த்த புத்தர் அரச லிமிடெட் நிறுவன ஊழியராய் இருந்த கி.மு. 2520 ஆவது காலத்தில் ஒரு பட்ஜெட் நாளில் அறிந்து ஞானமடைந்தார்.

மேலும் அவர் அரச லிமிடெட் நிறுவன ஊழியராய் இருந்து மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழ எண்வகை மார்க்கங்களை உபதேசித்தார்.

அவையாவன,

1.  எந்த ஓய்வூதியத் திட்டமாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளல்

2.  சரண் விடுப்பு போனாலும் சரண்டர் ஆதல்

3.  அகவிலைப்படி அறிவிக்கப்படாவிட்டாலும் அக மகிழ்வோடு இருத்தல்

4.  காலிப் பணியிடங்களைக் கண்டு கலங்காது இருத்தல்

5.  ஊதிய முரண்பாடுகளை உற்றுநோக்காது இருத்தல்

6.  தற்காலிக நியமனங்கள் தற்செயலானவை எனப் புரிந்து கொள்ளல்

7.  உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை எதிர்பாராமல் உயர் கல்வி பெறுதல்

8.  பதவி உயர்வுகளை எதிர்பாராமல் பணியாற்றுதல்

இந்த எண்வகை மார்க்கங்களை ஏற்ற சங்கங்கள் பிற்காலத்தில் சாக்டோ என்றும் சியோ என்றும் இரண்டாகப் பிரந்தன. சியோ தொடர்ந்து வந்த காலத்தில் கும்பானியின் நிறுவனமாகவும் சாக்டோ வாட்டர்டெல்லின் நிறுவனமாகவும் வளர்ந்தன.

*****

14 Mar 2025

தமிழ் வாசிப்புச் சூழல் மற்றும் எழுத்தாள பரிதாபங்கள்!

தமிழ் வாசிப்புச் சூழல் மற்றும் எழுத்தாள பரிதாபங்கள்!

இந்தப் புத்தகக் காட்சியில் என் புத்தகம்தான் அதிகம் விற்பனையானதாகச் சொன்னார்கள். அதிகம் படிக்கப்பட்ட புத்தகமும்தான் என் புத்தகம்தான் என்றார்கள். அப்படியானால் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு பாடப்புத்தகங்களின் கதி?

அவற்றிற்கு வெளியிடப்படும் குறிப்புரைகள் (நோட்ஸ்கள்) அதிகம் வாசிக்கப்படுவதே இல்லையா?

பிறகெப்படி என் புத்தகம் அதிகம் வாசிக்கப்பட்டிருக்கும்?

அதுவும் நான் இதுவரை புத்தகமே வெளியிடாத போது.

இவர்கள்தான் நம் இலக்கிய வாசகர்கள்.

நிலைமை கொஞ்சமல்ல, ரொம்பவே கஷ்டம்தான்.

இப்படியே போனால், அடுத்த ஆண்டில் எழுதப் படிக்கவே தெரியாத என் பாட்டி எழுதிய புத்தகம்தான் அதிகம் விற்பனையாகியிருக்கும்.

புத்தகக் காட்சியின் நிலைமையும் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. போகிறப் போக்கைப் பார்த்தால் ஒன்றாம் வகுப்பு புத்தகம், கோலப்புத்தகம், சமையல் புத்தகம், பாடப்புத்தகங்களுக்கான குறிப்புரை ஏடுகள் (நோட்ஸ்கள்), வாய்பாடு, அகராதிகள், திருக்குறள், பாரதியார் கவிதைகள் தவிர வேறு எதுவும் விற்பனை ஆகாது போலிருக்கிறது.

*****

சில எழுத்தாளர்கள் ஆலோசனை கேட்கிறார்கள்.

ஒரே ஆலோசனைதான்.

நிறைய எழுதுங்கள்.

கொஞ்சமாக எழுதுங்கள் என்றால் கேட்கவா போகிறார்கள்.

*****

ஓர் எழுத்தாளன் என்றால் பெயர் வைக்கவெல்லாம் கூப்பிடுகிறார்கள்.

போனால், மாச்சில் (பிஸ்கெட்), குளம்பி (காப்பி), இனிப்பப்பம் (கேக்) கிடைக்கும் என்று போனேன்.

நாய்க்குட்டிக்குப் பெயர் வைக்கச் சொன்னார்கள்.

நாய்க்குட்டி என்று வைத்து விட்டு, பிஸ்கெட், காப்பி, கேக் (மாச்சில், குளம்பி, இனிப்பப்பம்) சகிதம் திரும்பி விட்டேன்.

இனி யாராவது பெயர் வைக்கக் கூப்பிடுவார்கள்?

கூப்பிட்டாலும் பெயர்களைப் பட்டியலிட்டு நாட்குறிப்பில் (டயரியில்) எழுதிக் கொண்டேன்.

ஆண் குழந்தைக்குப் பெயர் ஆண் குழந்தை.

பெண் குழந்தைக்குப் பெயர் பெண் குழந்தை.

பூனைக்குப் பெயர் பூனை.

மாட்டிற்குப் பெயர் மாடு.

ஆட்டிற்குப் பெயர் ஆடு.

கழுதைக்குப் பெயர் கழுதை.

குதிரைக்குப் பெய குதிரை.

எனக்குப் பெயர் நான்.

உனக்குப் பெயர் நீ.

யாருக்கு வேண்டுமானலும் பெயர் வைக்க தயார்.

உங்கள் அழைப்புகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

*****

13 Mar 2025

தாளில் எழுதா எழுத்தாளன்!

தாளில் எழுதா எழுத்தாளன்!

உங்களால் எப்படி இவ்வளவு எழுத முடிகிறது என்று கேட்கிறார்கள்.

அவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் எழுதுவதே இல்லை. எல்லாம் தட்டச்சுதான்.

விசைப்பலகையைத் (கீபோர்டு – மியூசிக்கல் கீபோர்டு அல்ல – கணிப்பொறிக்கானது) தொட்டேன் என்றால் கலைந்து கிடக்கும் ஆங்கில எழுத்துகளின் மீது அடங்காத மோகம் கொண்டு அடித்துத் தள்ளி விடுவேன். அவையென்னவோ தமிழ் எழுத்துகளாகத் தோன்றி மறையும்.

நல்லவேளை, விசைப்பலகையின் எழுத்து தமிழில் இல்லை. தமிழில் இருந்து ஆங்கிலத்தில் தோன்றி மறைந்தால், என் கஷ்டகாலம் நான் நோபலுக்கு விண்ணப்பிக்க வரிசையில் (கியூவில்) நின்று தொலைக்க வேண்டும். தமிழுக்கு அந்தக் கஷ்ட காலம் இன்னும் வரவில்லை.

எழுத்துகளை தூவலின் (பேனாவின்) முனைகளுக்குத் தின்னக் கொடுத்து நாட்களாகி விட்டன. தவிரவும் A4 தாளின் விலை சொல்லிக் கொள்ளும்படி இல்லை. நாளுக்கொரு விலை. நமக்குக் கட்டுபடியாகாது.

ரோக்காசீட்டுக் காகிதங்கள் ஒரு கட்டு வாங்கி வந்து வைத்திருக்கிறேன். அது எழுதுவதற்காக அல்ல. டிஷ்யூ தாளின் விலை கட்டுப்படி ஆகாததாலும், வீட்டிற்கு வருவோர் போவோருக்குப் பஜ்ஜி, போண்டா வைத்துக் கொடுப்பதற்காகவும்.

எப்போது ஐந்து ரூபாய் பேனாக்களை ஏழு ரூபாய் பேனாக்களாக்காக விலை உயர்த்தினார்களோ, அதற்கு ஜிஎஸ்டியைக் காரணம் சொன்னார்களோ, அன்றே எழுதக் கூடாது என்றெல்லாம் கங்கணம் கட்டிக் கொள்ளவில்லை.

பேனாவில் எழுத இதென்ன பரீட்சையா? பேனாவில் எழுதப் பிடிக்காமல் பரீட்சையில் தேர்ச்சி மதிப்பெண்களுக்கு (பாஸ் மார்க்) அதிகம் எழுதாத அந்த பால்யப் பிரயாங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

கண்ணை மூடிக் கொண்டு திருத்தும் புண்ணியவான்களால் அப்போதும் 35க்கு 70 மதிப்பெண்கள் வாங்கிய அதிசயங்கள் நடந்த அந்தக் காலத்தில், மையூற்றுத் தூவல்களுக்கு (இங்க் பேனாக்கள்) அப்படி ஒரு மதிப்பு.

முடி வெளுத்த மனிதர்கள் அவ்வபோது ஒழுகிய மையைத் தலையில் தடவியதைப் பார்த்த போது, முதல் தலைச்சாய முயற்சி இந்த மையூற்றுப் பேனாக்களிலிருந்துதான் துவங்கியது என்பதை ஆதாரப்பூர்வமாக நிறுவி, ஒரு கருத்தரங்கில் கட்டுரை சமர்பித்து முதல் பரிசு வாங்கியதைச் சொன்னால் குறைந்தபட்சம் நீங்கள் மூக்கில் விரல் வைத்துதான் ஆக வேண்டும். நீங்கள் இப்போது வைக்காவிட்டாலும், அப்போது நான் வைத்தேன், ஜலதோசம் பிடித்திருந்ததாக ஞாபகம்.

பந்து முனைப் பேனாக்கள் (பால்பாய்ண்ட் பேனாக்கள்) மீது ஏங்கி, அவற்றைக் காதலித்த அந்த வாலிப பிராயத்தில்,பந்து முனைப் பேனாக்களில் எழுதியதற்காக அடித்த ஆசிரியர்கள் எத்தனை பேர் தெரியுமா? காதலிப்பது எந்த ஆசிரியருக்குப் பிடிக்கும்? அவர்கள் அடித்தாலும் நான் பந்து முனை பேனாக்களைக் காதலித்தேன். அதிலும் குறிப்பாக பிரான்சின் ரெனால்ட்ஸ் மீது அப்படியொரு காதல்.

தலைக்கு மட்டும் நீலச் சாயம் அடித்து, உடலெல்லாம் வெள்ளையாக, அப்படியே திறந்தால் தனுஷ் போல உடம்போடு நீலமாக ஒரு மை உருளை (ரீபிள்). என்ன அழகு தெரியுமா? அளவு சுழியமாக (சைஸ் சீரோ) ஒல்லி தேகத்தோடு அப்படி ஒரு அழகு. கட்டழகு என்றால் அதுதான் கட்டழகு. மையூற்றுத் தூவல் குண்டுகளுக்கு மத்தியில் அந்த ஒல்லியழகு ஆசிரியர்களை எப்படிக் கவராமல் போனதோ, எனக்குத் தெரியவில்லை. அதுதான் ரெனால்ட்ஸ்ன் காதல் (ரொமான்ஸ்) ரகசியத்திற்கான காரணம்.

அந்தக் கதையை விடுங்கள். எழுத்துக் கதைக்கு வருவோம்.

இப்போது தட்டச்சு கூட அதிகம்தான். பேசினாலே அலைபேசி எழுதி விடுகிறது. அது பேனாவை உள்ளே மறைத்து வைத்திருக்க வேண்டும் என்று அமெரிக்கா புலனாய்வு நிறுவனம் சொல்லும் உளவுத் தகவலில் உண்மை இல்லாமல் இல்லை.

எழுதுவது என்பது பெரிய பிரச்சனையில்லை. அந்தக் கருமத்தை யாரையாவது படிக்க வைக்க வேண்டும். எனக்குத் தெரியும், அதற்காகத்தான் பலர் எழுதுவதில்லை. நான் அப்படி இருக்க முடியுமா? எல்லாரும் அப்படி இருந்து விட்டால், ஆன்னா, ஆவன்னா எழுத கூட ஆளில்லாமல், அதைச் சொல்லிக் கொடுக்க யாரும் இல்லாமல் போனால் நினைத்துப் பார்க்கவே எவ்வளவு பயங்கரமாக இருக்கிறது.

எழுதுங்கள். யாராவது படிக்காவிட்டாலும் பரவாயில்லை எழுதுங்கள். எழுதுவதெல்லாம் படிக்கப்பட வேண்டும் என்றால், தமிழில் இவ்வளவு புத்தகங்களே வெளிவராது. அச்சகங்களுக்கும் புத்தகக் கண்காட்சிகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்றே இவ்வளவு புத்தகங்கள் வருகின்றன. நூலகங்களில் அடுக்கி வைக்கவும் எதாவது எழுதப்பட்ட புத்தகங்கள் தேவையாக இருக்கின்றன.

பெரிய அறிவாளி என்று காட்டிக் கொள்வதற்கு ஆயிரத்து ஐநூறு பக்கங்கள் எழுதப்பட்ட புத்தகங்கள் தேவையாக இருக்கின்றன. 1500ஐயும் சும்மா விட்டு விட முடியுமா? எழுத்துகளால் நிரப்ப வேண்டுமே.

பின்னொரு காலத்தில் யாராவது படிக்க வேண்டும் என்று நினைத்தால் எதையாவது எழுதி வைத்திருப்பது என ஏதாவது இருக்க வேண்டும்.

பஜ்ஜி, போன்டா சாப்பிடும் போது கூட, எழுதிய தாளில் வைத்துச் சாப்பிடும் போது அதன் சுவை கூடுதலாக இருக்கிறது. வெற்றுத்தாளில் வைத்துச் சாப்பிடும் தின்பண்டங்கள் சுவைப்பது இல்லை. அதற்காகவேனும் எழுதப்பட வேண்டும்.

என் எழுத்துகளை அப்படி நீங்கள் பஜ்ஜி, போண்டா வைத்துச் சாப்பிட்டு விட்டு முடியாது.

எல்லாம் எண்ம வடிவில் (டிஜிட்டல் வடிவில்) இருப்பதால், அலைபேசியில் அல்லது கணினித் திரையில் வைத்துச் சாப்பிட்டு அதை எண்ணெய்யாக்கி வீணாக்கிக் கொள்வது உசிதப்படாது.

*****

12 Mar 2025

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை!

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை அனுபவம்!

“கவிதை எழுதி நீண்ட நாளாயிற்றே?” என்றார் நண்பர்.

காற்றில் பறந்த காகிதம் ஒன்றைக் கப்பெனப் பிடித்து பையில் இருந்த இரண்டு ரூபாய் ஒரு முறை உபயோகித்துத் தூக்கி எறியும் (யூஸ் அன்ட் த்ரோ) பேனாவை எடுத்து ‘கவிதை’ என்று எழுதிக் கொடுத்தேன்.

நண்பர் மெய்சிலிர்த்துப் போனார்.

சமீப காலங்களில் நான் எழுதிய கவிதைகளில் மிகச் சிறந்த கவிதை இதுவென்றார்.

“அப்படியா!” என்றேன் நான்.

“ஆம் கவிஞரே! இந்தக் கவிதையில் தற்குறிப்பேற்ற அணி பயின்று வந்திருக்கிறது.” என்றார்.

“இதென்ன புதுகரடி? காட்டில் இருப்பதெல்லாம் கவிதையைப் புகழ்வதில் களம் இறங்கி விட்டதே?”

“இந்தக் கவிதை என்ற சொல் வாசகர்களிடம் உங்களுக்கான கவிதையை நீங்களே எழுதிக் கொள்ளுங்கள். ஒரு கவிஞனை வேலை வாங்கி எழுத வைக்காதீர்கள் என்கிறது. மேலும் நீங்கள் கவிதை எழுதச் சொல்லும் கவிஞனுக்கு நாள் சம்பளமோ, வாரச் சம்பளமோ, மாதச் சம்பளமோ எதுவும் போட்டுக் கொடுப்பதில்லை என்பதை வலியுறுத்துகிறது.” என்றார்.

“அட என்ன ஆச்சரியம்!”

“கவிதையில் மட்டும் காந்தியக் கொள்கையைப் பின்பற்றியிருந்தால் நம் நாடு எப்பவோ முன்னேறியிருக்கும்.” என்றார் நண்பர்.

“அடடா! இதைக் கேட்கும் போது இன்பத்தேன் வந்து மூக்கிலே அல்லவா பாய்கிறது. பொறை ஏறுகிறது பாருங்கள்!”

“காந்தி என்ன சொன்னார்? தற்சார்பு வாழ்வு குறித்துச் சொன்னார். எந்தக் கவிஞன் இதைப் பின்பற்றினான்? எல்லாருக்கும் சேர்த்து தானே கவிதை எழுதுவதாக நினைத்துக் கொண்டு கவிதை எழுதினான். இதனால் பலர் சோம்பேறியானார்கள். பலரது உழைப்பில் கவிதைகள் பெருகிப் பல்க வேண்டியிருந்த நிலையில், முதலாளித்துவ இயந்திர முறையில் சிக்கி, ஒரு சில கவிஞர்களின் கைப்பாவையாகவே கவிதை இருந்து விட்டது.

“அதிலும் கம்பர் பத்தாயிரத்தைக் கடந்திருக்கிறார். ஹைக்கூ கவிஞர்கள் சொல்லி மாளாத அளவுக்கு எழுதி தள்ளியிருக்கிறார்கள்.

“நீங்கள் நல்லவேளையாக கவிதை என்பதோடு நிறுத்திக் கொண்டீர்கள். இது அவரவர்க்கான கவிதைகளை அவரவரே எழுத வேண்டும் என்பதற்கான தற்குறிப்பேற்றம் ஆகும். அத்துடன் இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த உலகக் கவிதை இதுவே!” என்றார்.

இப்படியாக இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதையை எழுதும் பெரும் பாக்கியத்தை நண்பர் மூலமாகப் பெற்றேன். இதற்கான பெருமையினைப் புகழினை எனக்கு முன்னால் இருந்த கவிஞர்களுக்கும் தமிழ் மக்களுக்கும் காணிக்கையாக்குகிறேன். அவர்களின்றி இது சாத்தியமாயிருக்காது.

இந்தக் கவிதை என்பது தமிழ்ப்புலவர்களின் டிஎன்ஏ மரபின் தொடர்ச்சிதான். கபாடபுரம், தென்மதுரை தொப்புள்கொடியின் உறவுதான். பண்டுதமிழ் அறுவைச் சிகிச்சையில் பெற்றெடுத்த நவீன குழந்தைதான்.

நெருப்பு என்று எழுதினால் சுடுமோ, சுடாதோ? கவிதை என்று எழுதினால் அது சுடாவிட்டாலும், சுட்டு விட்டாலும் கவிதைதான். கவிதை இல்லை என்று யாராவது சொல்லி விட முடியுமா?

குறிப்பாக எழுத்துக் கூட்டி எழுத கற்றுக் கொடுத்து க – வி – தை என எழுத எழுத்தறிவித்த ஆசிரியருக்கு இந்த உலக மகா கவிதை சமர்ப்பணம். இக்கவிதைக்கு நோபல் பரிசோ, உலகக்கோப்பை பரிசோ அல்லது ஒலிம்பிக் வெண்கலப் பரிசோ கிடைக்குமானால் பாதித் தொகையினை ஆசிரியரோடு பகிர்ந்து கொள்ள சித்தம். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்ற நக்கீரரை ஆட்கொண்ட ஆண்டவன் அருள் புரியட்டும்.

நீங்களும் உங்களுக்கான கவிதையை எழுதிக் கொள்ளுங்கள்.

எந்தக் கவிதை உங்களை கவிதை எழுதச் செய்கிறதோ அதுவே சிறந்த கவிதை.

என் ‘கவிதை’ உங்களை கவிதை எழுத வைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

உங்கள் கவிதையை நீங்கள் கருத்துப்பெட்டியில் (கமென்ட் பாக்ஸ்) பதிவிடலாம். ஆவலோடு காத்திருக்கிறேன். சன்மானம் வழங்க வாய்ப்பில்லை. தமிழ்க்கவிதைகள் விலைமதிக்க முடியாதவை; விலை போகாதவை என்பதைப் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

*****

11 Mar 2025

அகராதியெனும் அற்புத காவிய நூல்!

அகராதியெனும் அற்புத காவிய நூல்!

உலகிலேயே சிறந்த புத்தகம் எது என்று கேட்டால், என்னைப் பொருத்த வரையில் அகராதிதான். இந்த ஒரு புத்தகத்தைத்தான் வாங்கினீர்களே, படித்தீர்களா என்று யாரும் கேட்க முடியாது.

ஆனால், நான் அப்படியல்லன். நான் அகராதியின் தீவிர வாசகன். அதிலும் ஆங்கிலம் –தமிழாக அச்சிடப்பட்டிருக்கும் இருமொழி (பைலிங்குவல்) அகராதியின் பரம ரசிகன். இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நம் தமிழகத்துக்கு ஏற்றாற்போல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்டிருக்கும் அதன் அழகில் மயங்கிப் போய் விடுவேன்.

மற்றவர்களைப் போல நான் அகராதியை எப்போதாவது பார்ப்பவன் அல்லன், தினமும் பார்ப்பவன்; படிப்பவன்.

பல நவீன கவிதைகள் படித்துச் சலித்துப் போன எனக்கு, ஆங்கில – தமிழ் அகராதியே புத்துணர்ச்சி தந்திருக்கிறது. லிப்கோ அகராதி எனக்கு ரொம்ப பெரிய விருப்பம். சிறிய அளவிலிருந்து தலையணை அளவிலான பெரிய அளவு வரை பல விதங்களில் வைத்திருக்கிறேன்.

சிறிய கவிதைப் புத்தகம் படிக்க வேண்டும் எனத் தோன்றும் போது சிறிய லிப்போ. பெரிய கவிதைப் புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைக்கும் போது பெரிய லிப்கோ.

புத்தகக் காட்சிக்குப் பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களிடம் எனக்கு பெருமதிப்பு ஏற்படக் காரணமாக இருந்ததும் இந்த அகராதிதான். எனக்குப் பிடித்ததும் அகராதிதானே. அத்துடன், நான் அகராதித்தனமாக எழுதுவதற்கும் பேசுவதற்கும் காரணம் அகராதிதானே.

பிள்ளைகள் ஒரு கதைப் புத்தகத்தை வாங்கினாலோ, அறிவியல் புத்தகத்தை வாங்கினாலோ காசைப் போட்டுக் கரியாக்காதே என பாலபாடம் எடுக்கும் பெற்றோர்கள் அகராதி வாங்கினால் மட்டும் ஆனந்தப்படுகிறார்கள். அவர்களின் ஆனந்தம் நியாயமானது. ஆமாம் இந்த அகராதியில் இருக்கும் சொற்கள்தானே கதைப் புத்தகங்களிலும், அறிவியல் புத்தகங்களிலும் இருக்கின்றன. பிறகெதற்குப் பல்வேறு புத்தங்கள்? அகராதி ஒன்றே போதும்.

அகராதியில் எனக்குப் பிடித்த அம்சங்கள் பல இருக்கின்றன. மோனை வரிசை முறைப்படி, எதுகை வரிசைப்படி, சில இடங்களில் தொடை நயப்படி எனப் பலவிதமாகச் சொற்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இதை விட சிறந்த சொல்லடுக்குக் கவிதையை இனிவரும் எந்தப் பிறவியிலும் யார் எழுதி விட முடியும் சொல்லுங்கள்.

சில இடங்களில் படங்களும் போட்டிருக்கிறார்கள். ஓவியம் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டு விலங்குகள் என்ற தலைப்பில் அகர வரிசைப்படி எழுதப்பட்டிருந்த சொல்லடுக்குக் கவிதையைப் பார்த்து நான் அசந்து போய் விட்டேன். அவ்வளவு விலங்குகளைப் பிடித்து எப்படி சில பக்கங்களில் கட்டிப் போட்டார்கள்? அடுத்துக் காட்டு விலங்குகளின் சொல்லடுக்குப் பட்டியலைப் பார்த்து மயக்கமே போட்டு விட்டேன். புலியையும் சிங்கத்தையும் கரடியையும் காண்டாமிருகத்தையும் அடுத்தடுத்துக் கட்டிப் போடுவது சாதாரண வேலையா?

அகராதியில் நீங்கள் படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதைப் படித்து விட்டுத்தான் ஷேக்ஸ்பியர் அவ்வளவு காவியங்களை எழுதியிருக்கிறார். என்னைக் கேட்டால் அனைவரும் அகராதியை ஒரு முறை முழுமையாகப் படிக்க வேண்டும். உலகில் அதிகம் அச்சிடப்பட்டதும், அச்சிடப்பட்டுக் கொண்டிருப்பதும் அகராதியாகத்தான் இருக்கும். படிக்காதவர்கள் வீட்டிலும் அகராதி இருக்க வேண்டும். அகராதி இல்லாமல் அகராதியைப் படிக்க முடியாது.

அகராதியைப் படிக்கும் போது நான் பலமுறைகளைக் கையாளுகிறேன். ஒரு நாவலைப் படிப்பதைப் போலத்தான் நான் அதைப் படிக்கிறேன். தற்போதைய நாவல்களில் சம்பவங்கள் நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருப்பதைப் போலத்தான், அகராதியினது சொற்களை நான் லீனியர் முறையில் கையாண்டு ஒரு பெரு நாவலை எழுதுகிறது அகராதி. உங்களால் சொற்களை நான் லீனியர் முறையில் கையாண்டு அகராதியைப் படிக்க முடியுமானால், நீங்கள் அகராதியைப் படித்தால் மட்டும் போதும். வேறு நாவல்களைப் படிக்க வேண்டியதில்லை.

இவ்வளவு சிறப்புடைய அகராதிக்கு ஏன் இன்னும் நோபல் பரிசு கொடுக்காமல் இருக்கிறார்கள்? நோபலை விடுங்கள், ஒரு சாகித்திய அகாதமி விருதாவது கொடுக்கலாம். அதையும் விடுங்கள் வீரமா முனிவர் விருது கொடுத்தால் குறைந்து போய் விடுகிறது?

நான் இருமொழிக் கொள்கையை ஆதரிப்பதால், தமிழ் மொழியில் பற்றில்லாதவன் என நினைத்து விடக் கூடாது.

காலையில் எழுந்ததும் கழகத் தமிழ் அகராதி படிப்பதும், மாலை முழுவதும் கிரியா தற்கால தமிழ் அகராதி படிப்பதும் வழக்கில் உள்ளது. பாரம்பரியத்தை விட்டு விடக் கூடாது என நிகண்டுகளும் படிப்பதுண்டு. வீரமா முனிவரின் சதுர் அகராதியும் சிறப்பு.

என்னைக் கேட்டால் எனக்குப் பிடித்த ஐம்பெரும் காப்பியங்கள் கழக அகராதி, கிரியா அகராதி, திவாகர நிகண்டு, சதுர் அகராதி, லிப்கோ அகராதிதான்.

தற்போது கதிரைவேற்பிள்ளை தமிழ் அகராதியில் தஸ்தாவெஸ்கியின் கரமசோவ் சகோதர்ரகளை ஒத்த நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்ததும் விமர்சனம் எழுதுகிறேன்.

படிப்பதற்கும், படித்து முடித்ததும் படுப்பதற்குத் தலையணையாகவும் பயன்படும் அகராதி குறித்து இவ்வளவு நாளாக எழுதாமல், தற்போது எழுதுவது குறித்துக் குற்றவுணர்வு இருந்தாலும், இப்போதாவது முடிந்ததே என்பதில் ஓர் அல்ப சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.

அனைவரும் அகராதி படிப்போம்! வாழ்நாளில் ஓர் அகராதியையாவது எழுதுவோம்! பல்கிப் பெருகட்டும் அகராதிகள்! அகராதி தந்த தமிழ்நாடு என்ற பெயர் உண்டாகட்டும்! அகராதி தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பெயர் நிலைக்கட்டும்!

*****

ஞானத்தின் பாட்டு

ஞானத்தின் பாட்டு அவசரப்பட முடியாது நிதானமாகச் செல்ல வேண்டும் பல நேரங்களில் பிடிபடிவதற்குப் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும் அதிகம்...