11 Mar 2025

அகராதியெனும் அற்புத காவிய நூல்!

அகராதியெனும் அற்புத காவிய நூல்!

உலகிலேயே சிறந்த புத்தகம் எது என்று கேட்டால், என்னைப் பொருத்த வரையில் அகராதிதான். இந்த ஒரு புத்தகத்தைத்தான் வாங்கினீர்களே, படித்தீர்களா என்று யாரும் கேட்க முடியாது.

ஆனால், நான் அப்படியல்லன். நான் அகராதியின் தீவிர வாசகன். அதிலும் ஆங்கிலம் –தமிழாக அச்சிடப்பட்டிருக்கும் இருமொழி (பைலிங்குவல்) அகராதியின் பரம ரசிகன். இருமொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்ட நம் தமிழகத்துக்கு ஏற்றாற்போல ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சிடப்பட்டிருக்கும் அதன் அழகில் மயங்கிப் போய் விடுவேன்.

மற்றவர்களைப் போல நான் அகராதியை எப்போதாவது பார்ப்பவன் அல்லன், தினமும் பார்ப்பவன்; படிப்பவன்.

பல நவீன கவிதைகள் படித்துச் சலித்துப் போன எனக்கு, ஆங்கில – தமிழ் அகராதியே புத்துணர்ச்சி தந்திருக்கிறது. லிப்கோ அகராதி எனக்கு ரொம்ப பெரிய விருப்பம். சிறிய அளவிலிருந்து தலையணை அளவிலான பெரிய அளவு வரை பல விதங்களில் வைத்திருக்கிறேன்.

சிறிய கவிதைப் புத்தகம் படிக்க வேண்டும் எனத் தோன்றும் போது சிறிய லிப்போ. பெரிய கவிதைப் புத்தகம் படிக்க வேண்டும் என்று நினைக்கும் போது பெரிய லிப்கோ.

புத்தகக் காட்சிக்குப் பிள்ளைகளை அழைத்து வரும் பெற்றோர்களிடம் எனக்கு பெருமதிப்பு ஏற்படக் காரணமாக இருந்ததும் இந்த அகராதிதான். எனக்குப் பிடித்ததும் அகராதிதானே. அத்துடன், நான் அகராதித்தனமாக எழுதுவதற்கும் பேசுவதற்கும் காரணம் அகராதிதானே.

பிள்ளைகள் ஒரு கதைப் புத்தகத்தை வாங்கினாலோ, அறிவியல் புத்தகத்தை வாங்கினாலோ காசைப் போட்டுக் கரியாக்காதே என பாலபாடம் எடுக்கும் பெற்றோர்கள் அகராதி வாங்கினால் மட்டும் ஆனந்தப்படுகிறார்கள். அவர்களின் ஆனந்தம் நியாயமானது. ஆமாம் இந்த அகராதியில் இருக்கும் சொற்கள்தானே கதைப் புத்தகங்களிலும், அறிவியல் புத்தகங்களிலும் இருக்கின்றன. பிறகெதற்குப் பல்வேறு புத்தங்கள்? அகராதி ஒன்றே போதும்.

அகராதியில் எனக்குப் பிடித்த அம்சங்கள் பல இருக்கின்றன. மோனை வரிசை முறைப்படி, எதுகை வரிசைப்படி, சில இடங்களில் தொடை நயப்படி எனப் பலவிதமாகச் சொற்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன. இதை விட சிறந்த சொல்லடுக்குக் கவிதையை இனிவரும் எந்தப் பிறவியிலும் யார் எழுதி விட முடியும் சொல்லுங்கள்.

சில இடங்களில் படங்களும் போட்டிருக்கிறார்கள். ஓவியம் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வீட்டு விலங்குகள் என்ற தலைப்பில் அகர வரிசைப்படி எழுதப்பட்டிருந்த சொல்லடுக்குக் கவிதையைப் பார்த்து நான் அசந்து போய் விட்டேன். அவ்வளவு விலங்குகளைப் பிடித்து எப்படி சில பக்கங்களில் கட்டிப் போட்டார்கள்? அடுத்துக் காட்டு விலங்குகளின் சொல்லடுக்குப் பட்டியலைப் பார்த்து மயக்கமே போட்டு விட்டேன். புலியையும் சிங்கத்தையும் கரடியையும் காண்டாமிருகத்தையும் அடுத்தடுத்துக் கட்டிப் போடுவது சாதாரண வேலையா?

அகராதியில் நீங்கள் படிப்பதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதைப் படித்து விட்டுத்தான் ஷேக்ஸ்பியர் அவ்வளவு காவியங்களை எழுதியிருக்கிறார். என்னைக் கேட்டால் அனைவரும் அகராதியை ஒரு முறை முழுமையாகப் படிக்க வேண்டும். உலகில் அதிகம் அச்சிடப்பட்டதும், அச்சிடப்பட்டுக் கொண்டிருப்பதும் அகராதியாகத்தான் இருக்கும். படிக்காதவர்கள் வீட்டிலும் அகராதி இருக்க வேண்டும். அகராதி இல்லாமல் அகராதியைப் படிக்க முடியாது.

அகராதியைப் படிக்கும் போது நான் பலமுறைகளைக் கையாளுகிறேன். ஒரு நாவலைப் படிப்பதைப் போலத்தான் நான் அதைப் படிக்கிறேன். தற்போதைய நாவல்களில் சம்பவங்கள் நான் லீனியர் முறையில் சொல்லப்பட்டிருப்பதைப் போலத்தான், அகராதியினது சொற்களை நான் லீனியர் முறையில் கையாண்டு ஒரு பெரு நாவலை எழுதுகிறது அகராதி. உங்களால் சொற்களை நான் லீனியர் முறையில் கையாண்டு அகராதியைப் படிக்க முடியுமானால், நீங்கள் அகராதியைப் படித்தால் மட்டும் போதும். வேறு நாவல்களைப் படிக்க வேண்டியதில்லை.

இவ்வளவு சிறப்புடைய அகராதிக்கு ஏன் இன்னும் நோபல் பரிசு கொடுக்காமல் இருக்கிறார்கள்? நோபலை விடுங்கள், ஒரு சாகித்திய அகாதமி விருதாவது கொடுக்கலாம். அதையும் விடுங்கள் வீரமா முனிவர் விருது கொடுத்தால் குறைந்து போய் விடுகிறது?

நான் இருமொழிக் கொள்கையை ஆதரிப்பதால், தமிழ் மொழியில் பற்றில்லாதவன் என நினைத்து விடக் கூடாது.

காலையில் எழுந்ததும் கழகத் தமிழ் அகராதி படிப்பதும், மாலை முழுவதும் கிரியா தற்கால தமிழ் அகராதி படிப்பதும் வழக்கில் உள்ளது. பாரம்பரியத்தை விட்டு விடக் கூடாது என நிகண்டுகளும் படிப்பதுண்டு. வீரமா முனிவரின் சதுர் அகராதியும் சிறப்பு.

என்னைக் கேட்டால் எனக்குப் பிடித்த ஐம்பெரும் காப்பியங்கள் கழக அகராதி, கிரியா அகராதி, திவாகர நிகண்டு, சதுர் அகராதி, லிப்கோ அகராதிதான்.

தற்போது கதிரைவேற்பிள்ளை தமிழ் அகராதியில் தஸ்தாவெஸ்கியின் கரமசோவ் சகோதர்ரகளை ஒத்த நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருக்கிறேன். படித்து முடித்ததும் விமர்சனம் எழுதுகிறேன்.

படிப்பதற்கும், படித்து முடித்ததும் படுப்பதற்குத் தலையணையாகவும் பயன்படும் அகராதி குறித்து இவ்வளவு நாளாக எழுதாமல், தற்போது எழுதுவது குறித்துக் குற்றவுணர்வு இருந்தாலும், இப்போதாவது முடிந்ததே என்பதில் ஓர் அல்ப சந்தோசம் இருக்கத்தான் செய்கிறது.

அனைவரும் அகராதி படிப்போம்! வாழ்நாளில் ஓர் அகராதியையாவது எழுதுவோம்! பல்கிப் பெருகட்டும் அகராதிகள்! அகராதி தந்த தமிழ்நாடு என்ற பெயர் உண்டாகட்டும்! அகராதி தன்னை உலகினுக்குத் தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்ற பெயர் நிலைக்கட்டும்!

*****

No comments:

Post a Comment

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை!

ஜென் தமிழன் தயாரித்த ஒரு கோப்பை கவிதை அனுபவம்! “கவிதை எழுதி நீண்ட நாளாயிற்றே?” என்றார் நண்பர். காற்றில் பறந்த காகிதம் ஒன்றைக் கப்பெனப் ப...